Sunday, July 29, 2018

கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம் இந்தியாவில் ஈழ அகதி என்னவாகலாம்?

கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம்
இந்தியாவில் ஈழ அகதி என்னவாகலாம்?
கனடாவில் ஈழ அகதி எம்.பி யாகலாம்.
இந்தியாவில் மிஞ்சிப் போனால் ஈழ அகதி 
சுப்பர் சிங்கர் போட்டியில் பாட்டுப் பாடலாம்.
அதுவும் சட்டச் சிக்கல் வரும் என்று கூறி
பரிசு தருவதை தவிர்த்து விடுவார்கள்.
இதுதானே இந்தியாவில் ஈழ அகதி நிலை?
இதை யாராலும் மறுக்க முடியுமா?
கனடாவில் அண்மையில் நடந்த தேர்தலில்
இரண்டு தமிழர்கள் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அகதியாக கனடாவுக்குச் சென்ற அந்த இரு ஈழத்தமிழர்களும்
குடியுரிமை பெற்றதோடு எம்.பி யாகவும் ஆகியுள்ளனர்.
ஆனால்,
அதே காலப்பகுதியில் இந்தியாவுக்கு அகதியாக சென்றவர்கள்
இன்னும் அகதியாகத்தானே வாழ்கின்றனர்.
பொதுவாக ஒருவர் எந்த நாட்டில் பிறக்கின்றாரோ
அவருக்கு அந்த நாடு குடியுரிமை வழங்குவது மரபு.
ஆனால் இந்தியாவில் பிறந்த அகதி குழந்தைகளுக்கும்கூட
குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது.
அதேவேளை,
பாகிஸ்தானில் இருந்துவந்த இந்து அகதிகளுக்கு
இந்திய குடியுரிமை வழங்கப்படுகின்றது.
ஈழ அகதிகளும் பெரும்பாலானவர்கள் இந்து அகதிகள்தான்.
ஆனால் ஈழ இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை.
இங்கு ஆச்சரியம் என்னவெனில்,
இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகளுக்கு
இலங்கைக் குடியுரிமை இலங்கை அரசால் வழங்கப்படுகிறது.
சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம்கூட
இந்திய அரசுக்கு ஈழ தமிழ் அகதிகள் மேல் இல்லை..
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்காவிட்டாலும் பரவாயில்லை,
அதிகாரிகளினால் அவர்களுக்கு இருக்கும் தொந்தரவுகளையாவது நீக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
கனடாவில் ஒரு அகதி தமிழன் எம்.பி யாக வரமுடிகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமை விட்டே
சுதந்திரமாக வெளியே வர முடியவில்லை.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் கணக்கெடுப்பில்
அகதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இல்லையேல் பதிவு ரத்து செய்யப்படும்.
இந்த கணக்கு எடுக்கும் தாசில்தார் அதிகாரிகளின்
தொந்தரவு பொறுக்காமல் மதுரை அகதிமுகாமில் ஒருவர்
கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார்.
ஏழு பிள்ளைகளின் தந்தை மின்சாரக் கம்பியை பிடித்து தற்கொலை செய்கின்றார் எனில்,
அகதிகளுக்கு அதிகாரிகளின் தொல்லை எந்தளவு இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நியாயம் கேட்டு கண்ணகி மதுரையை எரித்ததாக சிலப்பதிகாரம் படிக்கிறோம்.
ஆனால் அதே மதுரையில் ஈழ அகதி தமிழ் அதிகாரியின் தொல்லை தாங்காமல் தன்னையே எரித்து செத்தார் என்றுதான் எதிர்கால வரலாறு படிக்கப் போகிறோம்.

No comments:

Post a Comment