Sunday, July 29, 2018

இன்று புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமாகும்.

இன்று புளட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமாகும்.
முகுந்தன் என்று அழைக்கப்பட்ட உமா மகேஸ்வரன் நில அளவையிலாளர் உத்தியோகத்தை உதறிவிட்டு போராட்டத்திற்கு வந்தவர்.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தெரிந்தவர். பாலஸ்தீனத்தில் பயிற்சி பெற்றவர்.
புலிகளின் இயக்கத்தின் தலைவராக இருந்தவர்.
ஊர்மிளா என்ற முதல் முழுநேரப் பெண் போராளியுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் வெளியேற்றப்பட்டார்.
அப்பொது உமா மகேஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதை நிறைவேற்றும் பொறுப்பு போராளி சுந்தரத்திடம் வழங்கப்பட்டது.
இதனால் உமா மகேஸ்வரன் சிறிது காலம் தமிழ்நாட்டில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் புலிகள் இயக்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை பாதைக்கு மாற்றாக புதிய மக்கள் பாதை வேண்டும் என கூறி அமைப்பு இரண்டாக உடைந்தது.
சுந்தரம் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரு பிரிவாக இயங்கினர். இவர்கள் புதியபாதை என்னும் பேப்பர் வெளியிட்டமையினால் இவர்கள் புதிய பாதை பிரிவினர் என அழைக்கப்பட்டனர்.
இந்த புதியபாதை பிரிவிற்கு தலைமறைவாக இருந்துவந்த உமாமகேஸ்வரன் அழைத்து வரப்பட்டு தலைவராக்கப்பட்டார். பின்னர் இவ் அமைப்பு புளட் இயக்கம் என அழைக்கப்பட்டது.
இந்த புதியபாதை அமைப்பு உமாமகேஸ்வரன் தலைமைக்கு பின்னர் மீண்டும் பழைய புலிப் பாதையில் இயங்கியதால் அதனை விமர்சித்து சிலர் விலகி சென்றனர்.
அத்துடன் போராளி சுந்தரமும் யாழ்ப்பாணத்தில் சித்ரா அச்சகம் முன்றலில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதன் பின்னர் சுதந்தரம் கொலைக்கு பழி வாங்குவதாக கூறி புளட் அமைப்பினால் புலிகளின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் பாண்டிபஜாரில் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் நேரிடையாக சுட்டுக்கொண்டனர். இதனால் தமிழக பொலிஸ் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.
இவர்களுக்கிடையில் நடந்த சகோதர படுகொலைகள் ஓரளவு மக்கள் அறிந்திருந்தாலும் புளட் இயக்தில் நடந்த உட் கொலைகள் விபரம் மக்களுக்கு தெரியவில்லை.
இந்த உட் கொலைகள் உமாமகேஸ்வரனின் கையால் நடக்கவில்லை என்றாலும் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அவருக்கு பொறுப்பு இருக்கிறது.
குறிப்பாக அமைப்பின் அடுத்த தலைவராக இருந்த சந்ததியாரின் கொலைக்கு உமாமகேஸ்வரனே பொறுப்பு என்று டேவிட் அய்யா தமிழக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அப்பொது உமாமகேஸ்வரனும் புளட் இயக்கமும் தமிழக முதல்வாரன எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக இருந்ததால் பொலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கிடையேயான சகோதரப் படுகொலைகள் நடத்தியிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று கருணாநிதி 2009ல் கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நினைத்திருந்தால் சகோதரப் படுகொலைகளை ஓரளவு நிறுத்தியிருக்க முடியும்.
அவர்கள் இருவரும் தமக்கு சார்பாக இயக்கங்களை வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினரே யொழிய இயக்கங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என விரும்பவில்லை.
இந்நிiயில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை யடுத்து புளட் தலைவர் உமா மகேஸ்வரன் இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்து செயற்பட்டார்.
அவர் கொழும்பில் இருந்து செயற்பட்டபோது 16.07.1989 யன்று சில புளட் இயக்க போராளிகளாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
உமா மகேஸ்வரன் தனது இறுதிக் காலங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக குறிப்பாக இந்திய உளவு அமைப்பினருடன் சேர்ந்து இயங்க மறுத்து விட்டதாகவும் அதனாலேயே அவர் இந்திய உளவுப்படையினரால் கொல்லப்பட்டார் எனவும் கூறுகிறார்கள்.
உமா மகேஸ்வரனைக் கொன்ற கொலையாளிகளை இந்திய உளவுப்பிரிவினர் பாதுகாத்து வந்தது உமா மகேஸ்வரன் கொலையில் இந்திய உளவுப் பிரிவிற்கு பங்கு உள்ளது என்பதை உண்மை என உணர வைக்கிறது.
வங்க தந்த பாடத்தை தமிழில் வெளியிட்டு இந்திய அரசு பற்றி தமிழ் மக்களுக்கு உணர வைத்த புளட் அமைப்பின் தலைவர் இறுதியில் அதே இந்திய அரசால் அழிந்தது ஆச்சரியம் தான்!

No comments:

Post a Comment