•இந்தியாவுக்கு வழங்கப்படும் பலாலி விமானநிலையம்!
எதிர்வரும் 10ம் திகதி அபிவிருத்தி என்னும் பெயரில் பலாலி விமான நிலையம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்தியாவுக்கு வழங்கப்படவிருக்கிறது.
இந்த பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய உதவியை தானே கேட்டுப் பெற்றதாக முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவிக்கிறார்.
ஆனால் இந்தியா என்ன அடிப்படையில் இந்த உதவியை வழங்கிறது என்ற விபரம் எதனையும் முதல்வர் தெரிவிக்கவில்லை.
ஏனெனில் இதே பலாலி விமானநிலைய அபிவிருத்திக்கு 2002ல் இந்தியா நிபந்தனை விதித்திருந்தது.
(1) பலாலி விமான நிலையத்தில் இந்தியாவைத் தவிர வேறு எந்த விமானமும் வரக்கூடாது.
(2) இந்தியா கோரும் பட்சத்தில் விமானநிலையத்தை இந்தியாவுக்கு தந்து உதவ வேண்டும்.
இவ்வாறு இந்தியா நிபந்தனை விதித்ததாக இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்த திரு .ஒஸ்ரின் பெர்ணாந்து என்பவர் தனது" My Belt is White" என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிபந்தனைகள் பலாலி விமானநிலையம் ஒரு காலத்தில் சர்வதேச விமானநிலையமாக மாறும் என்ற தமிழர் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மயிலிட்டி வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் பல ஏக்கர் நிலங்கள் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக சுவீகரிக்கப்படவுள்ளன.
இதனால் 1500க்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் நிரந்தரமாக அகதிகளாகப் போகின்றனர்.
பலாலி விமான நிலையம் தற்போது 996 ஏக்கர் நிலப்பரப்பையும் 2305 மீற்றர் ஓடுபாதையையும் கொண்டுள்ளது. இது ஒப்பீட்டளவில் இரத்மலானை சர்வதேச விமானநிலையத்தைவிட பெரியது.
எனவே மக்களின் நிலங்களை அபகரிக்காமலே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
ஆனால் இந்தியாவின் நலனுக்காக தமிழர் நலன் மட்டுமல்ல தமிழர் நிலமும் தரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.
கொழும்பிலும் அம்பாந்தோட்டையிலும் சீனாவுக்கு நிலம் வழங்கப்பட்டது குறித்து ஒப்பாரி வைத்த ஆய்வாளர்கள் தமிழர் நிலம் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து மௌனம் காக்கின்றனர்.
இதில் மிகப் பெரிய கவலை என்னவெனில் தமிழருக்காக குரல் கொடுப்பதாக கூறிவரும் முதல்வர் விக்கினேஸ்வரன் மூலமாகவே இந்தியா, பலாலி விமான நிலையத்தையும் தமிழர் நிலங்களையும் ஆக்கிரமிக்கின்றது.
இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஜேவிபி கூட பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து மௌனம் காப்பது வழங்கப்படுவது தமிழர் நிலம் என்பதாலா?
No comments:
Post a Comment