•என்னே கொடுமை இது?
தனது நாட்டில் பிணத்தை கொண்டு செல்லக்கூட அம்புலன்ஸ் வண்டி வழங்காத இந்திய அரசு, எதற்காக இலங்கைக்கு 200 அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கிறது?
அந்தளவுக்கு ஈழத் தமிழர்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இருப்பதாக சிலர் பதில் தர முயலுகின்றனர்.
நல்லது. உங்கள் கதையை நாங்கள் நம்புகிறோம். ஆனால் அதற்கு முன் உங்களுக்கு ஒரு சின்ன கதை சொல்கிறோம். அதற்கு முடிந்தால் பதில் தாருங்கள்.
அண்மையில் மோடி அரசின் சுற்றுலாத்துறை ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு “சீதாதேவி சுற்றுலா திட்டம்” என்று பெயர்.
அதாவது ராமரின் மனைவி சீதை வாழ்ந்ததாக கருதப்படும் இடங்களுக்கு பக்தர்களை அழைத்துச் சென்று காண்பிப்பது அத் திட்டத்தின் நோக்கம்.
அத் திட்டத்தின் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கை சென்று சீதை வைக்கப்பட்டிருந்த இடங்களை பார்வையிடுவது திட்டமாக உள்ளது.
அதாவது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இலங்கை செல்ல விரும்பும் அச் சுற்றுலா பக்தர்களுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கப்பல் வசதியை செய்துகொடுக்க இந்திய அரசு தயாராக உள்ளது.
ஆனால் இலங்கை திரும்ப விரும்பும் ஈழ தமிழ் அகதிகள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் இந்திய அரசு கப்பல் வசதி செய்து கொடுக்க மறுத்துவிட்டது.
இதுவரை 2500 க்கு மேற்பட்ட ஈழ அகதிகள் வேறு வழியின்றி தமது சொந்த செலவில் விமான மூலம் இலங்கை திரும்பியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன் ஒரு நபர் வெறும் 20 கிலோ பொருட்களையே தம்முடன் எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை.
இதனால் ஒரு அகதி குடும்பம் கடந்த மாதம் களவாக படகு மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது.
உடனே சட்டவிரோதமாக வந்ததாக கூறி எமது கடமை தவறாத காங்கேசன்துறை பொலிசார் அவர்களை கைது செய்தனர்.
அவ் அகதிகள் வரும்போது தாங்கள் ஆசையாக வளர்த்த நாயையும் தம்முடன் கொண்டு வந்திருந்தனர்.
எமது கடமை தவறாக பொலிசார் அந்த நாயையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் கட்டி வைத்திருந்தனர்.
நல்லவேளை எமது பொலிசார் அந்த நாயை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவில்லை.
இல்லையேல் எமது கடமை தவறாக நீதிபதிகள் அந்த நாயையும் 14 நாட்கள் றிமாண்டில் வைக்கவும் என உத்தரவிட்டிருப்பார்கள்.
எமது பொலிசார் இந்தியாவில் இருந்து கஞ்சா வந்தால் பிடிக்க மாட்டார்கள். ஆனால் அகதிகள் திரும்பி வந்தால் ஈவு இரக்கம் இன்றி பிடித்து அடைப்பார்கள்.
இங்கு எமது கேள்வி என்னவெனில் சுற்றுலா பக்தர்களுக்கு கப்பல் ஒழுங்கு செய்ய முடிந்த இந்திய அரசால் ஏன் அகதிகளுக்கு கப்பல் ஒழுங்கு செய்ய முடியவில்லை?
ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருப்பதால்தான் 200 அம்புலன்ஸ் வண்டிகளை; இந்திய அரசு வழங்கியது என்று கூறுவோர் ஈழ அகதிகள் மீது ஏன் இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதற்கு என்ன பதில் கூறுவார்கள்?
No comments:
Post a Comment