Saturday, May 25, 2024

முந்திரிக்காடு

• முந்திரிக்காடு நான் பார்க்க விரும்பிய படம். இன்றுதான் பார்க்க முடிந்தது. இயக்குனர் களஞ்சியம். மற்றும் சீமான் நடிக்கும் படம். எனவே இது தோழர் தமிழரசன் கதையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இது ஒரு சாதிப் பிரச்சனையை மையப்படுத்திய காதல் கதை. ஆனாலும் முந்திரிக் காடுகளை காணும்போது தோழர் தமிழரசனை அங்கு சந்தித்த நினைவுகள் வந்தன. தோழர் தமிழரசனின் ஆதரவாளர் ஒருவர் விருத்தாச்சலம் சென்னை பஸ்ஸில் கண்டக்ராக பணிபுரிந்தார். அவர் ஒருநாள் தோழர் தமிழரசன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என்னை விருதாச்சலத்திற்கு அழைத்துச் சென்றார். தனது பணி முடித்து வரும்வரை பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த தியேட்டரில் சிறிது நேரம் என்னை தங்க வைத்தார். அந்த தியேட்டரில் ரீல் மிசின் ஓட்டுனராக இருந்தவர் தோழர் தமிழரசனின் ஆதரவாளர். அப்போது அங்கு “மெல்ல திறந்த கதவு” படம் ஓடிக் கொண்டிருந்தது. நான் அவருடன் சேர்ந்து மிசின் ரூமுக்குள் இருந்து அந்த படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் என்னை அழைத்துச்சென்று ஜெயங்கொண்டத்தில் ஒரு தோழரிடம் ஒப்படைத்தார். அந்த தோழர் என்னை சயிக்கிளில் முந்திரிக்காடுகளினுடாக தோழர் தமிழரசனிடம் அழைத்துச் சென்றார். இந்த முந்திரிக்காடு பற்றி ஏற்கனவே தோழர் தமிழரசன் மற்றும் அவருடைய தோழர்கள் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்றுதான் அதை நேரில் பார்த்தேன். உண்மையில் வழி தெரியாதவர்கள் சென்றால் திரும்பி வருவது கஸ்டம். ஆனால் இந்த காடுதான் தோழர் தமிழரசன் மரணத்திற்கும் காரணமாக இருக்கப் போகின்றது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. தோழர் தமிழரசன் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பிற்கு சென்றபோது காரில் செல்லாமல் சயிக்கிளில் சென்றமைக்கு இந்த முந்திரிக்காடே காரணம். அருகில் முந்திரிக்காடு இருக்கிறது. அதனுள் சென்றுவிட்டால் அப்புறம் பொலிசார் யாரும் தம்மை பிடிக்க முடியாது என நினைத்தபடியால்தான் அவர்கள் சயிக்கிளில் சென்றனர்.

No comments:

Post a Comment