•போராட்டம் எமக்கு எதுவுமே தரவில்லையா?
போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இலங்கையில் சிலர் போராட்டத்தால் வெறும் அழிவுதான். இன்னொரு போராட்டம் தேவையில்லை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
முதலில் ஒரு விடயத்தை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். வாழ்க்கையே போராட்டம்தான். போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. இதுவரை நாம் பெற்ற உரிமைகள், அனுபவிக்கும் சலுகைகள் எல்லாம் போராடிப் பெற்றவையே. எனவே இனியும் எதையும் பெற வேண்டுமானால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.
மலையகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் “போராட்டத்தால் பல உயிர்களை இழந்துவிட்டோம் எனவே இனியும் போராட்டம் வேண்டாம்” என என் பதிவு ஒன்றின் கீழ் எழுதியுள்ளார்.
பாவம் அந்த பெண்மணி. அவருக்கு மலையகத்தை சேர்ந்த தமிழர்களுக்கு எப்படி குடியுரிமை கிடைத்தது என்பதுகூட தெரியவில்லை போலும்.
போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் முதன்முதலாக திம்புவில் 1984ல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட போராளி இயக்கங்கள் அனைத்தும் ஒருமித்து கோரிக்கை வைத்திருந்தன. அதில் ஒரு கோரிக்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது. அதன் பின்னரே வேறு வழியின்றி ஜே.ஆர் ஜெயவர்த்தனா மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கினார்.
இந்த பெண்மணி போன்றே சில புலம்பெயர் தமிழர்களும் “போராட்டம் தேவையற்றது அதனால் ஒரு பயனும் கிட்டவில்லை” என்று எழுதுகிறார்கள்.
போராட்டம் நடந்ததால்தானே 5 லட்சம் தமிழர்கள் வெளி நாடுகளுக்கு சென்று அகதி அந்தஸ்து பெற முடிந்தது. அதனால்தானே அவர்களால் உயர் கல்வி கற்கவும் நல்ல வேலைகளைப் பெறவும் முடிந்தது.
லைக்கா முதலாளி அகதியாக சென்றதால்தானே அவரால் 500 கோடி ரூபாவிற்கு படம் தயாரிக்கும் அளவிற்கு முதலாளியாக வளர முடிந்தது.
ஐபிசி முதலாளி கூட ---- ( வேண்டாம். அவரைப் பற்றி எழுதினால் அப்புறம் என் மகள் காப்பிலியுடன் ஓடி விட்டாள் என்று வீடியோ விடுவார்கள்)
எல்லாவற்றையும்விட முள்ளிவாய்க்காலில் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட பின்பும் தமிழ் மக்கள் மீண்டும் எழுந்து நிற்கிறார்கள் என்றால் அதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் மகத்தான அர்ப்பணிப்பு தானே காரணம்.
இப்படி பல விடயங்களை கூறிக்கொண்டே போகலாம். இப்படி உண்மைகள் இருக்கும்போது இவர்களால் எப்படி போராட்டம் எதுவும் தரவில்லை என்று கூறமுடிகிறது?
இப்படி கூறுபவர்களை நன்கு அவதானித்தால் அவர்கள் ஒருபோதும் போராடியவர்கள் இல்லை. மாறாக மற்றவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை அனுபவிப்பவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் தமிழ் இனத்தில் மட்டுமல்ல உலகில் எல்லா இனங்களிலும் இருக்கிறார்கள். அது அவர்களின் வர்க்க பாசம்!
No comments:
Post a Comment