Saturday, September 26, 2020

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றமை தொடர்பில் கொழும்பு கொகுவெல இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இராணுவ கோப்ரல் ஒருவரும், லான்ஸ் கோப்ரல்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் சில தவறுகள் நடைபெற்றன. மற்றும்படி இலங்கை ராணுவம் மிகவும் புனிதமானது என்று கூறிவருபவர்கள் இந்த சம்பவம் குறித்து என்ன கூறப்போகிறார்கள்? அதுவும் சிங்கள பிரதேசத்தில் தமது சிங்கள பெண்களையே அச்சுறுத்தும் இந்த சிங்கள ராணுவம் தமிழ் பகுதிகளில் தமிழ் பெண்கள் மீது எப்படி நடந்துகொள்ளும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள். 1971ம் ஆண்டு மன்னம்பெரி என்ற சிங்கள பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து எந்த சிங்கள ராணுவம் கொன்றதோ அதே சிங்கள ராணுவம்தான் கைதடியில் கிருசாந்தி என்ற தமிழ் மாணவியை கொன்று புதைத்தது. கிருசாந்திகளை எந்த ராணுவம் கொன்று புதைத்தோ அதே சிங்கள ராணுவம்தான் முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாக்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றன. அதே சிங்கள ராணுவம்தான் இப்போதும் பெண்களை பாலியல்ரீதியாக அச்சுறுத்தியும் துன்புறுத்தியும் வருகிறது. இலங்கை அரசு இதனைக் கண்டிக்காமலும் தண்டிக்காமலும் தொடர்ந்தும் தன் ராணுவத்தை பாதுகாத்து வருவதாலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற இந்த நிலை தொடர்கிறது. அது மட்டுமன்றி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் கௌரவிக்கிறது இலங்கை அரசு. இங்கு வேதனை என்னவென்றால் பெண் விடுதலைக்காக முகநூல்களில் பொங்குபவர்கள் மறந்தும்கூட ராணுவத்தின் இந்த பாலியல் வல்லுறவுகளை கண்டித்து ஒரு வரிகூட எழுத மாட்டார்கள். ஒவ்வொரு எழுத்தின் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்று லெனின் சரியாகவே கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment