Wednesday, September 30, 2020
மோடி - மகிந்தா உரையாடல் உண்மை விபரம் என்ன?
மோடி - மகிந்தா உரையாடல்
உண்மை விபரம் என்ன?
மோடி மகிந்தா உரையாடலின் பின் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக பௌத்த மத மேம்பாட்டிற்காக 15 மில்லியன் டாலர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக 13வது திருத்தம் நீக்கப்படாமல் தமிழருக்கு தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் மோடி பேசிய விடயங்கள் என்ன? அவை வருமாறு,
•2019 ஆம் ஆண்டில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான கொழும்பு துறைமுகத்தில் ECT திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இலங்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த திட்டங்களை செயல்படுத்த புதிய அரசாங்கம் ஆரம்பகால மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார்.
•சில இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்பட வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
•உளவுத் தகவல் பகிர்வு, தீவிரவாத தடுப்பு, கடும்போக்குவாத மீளாய்வு, திறன் மேம்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றில் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் மோடி கேட்டுள்ளார்.
•இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் இனி அதிக அளவில் ஆலோசனைகள் நடத்தி, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி துறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காக மோடி வலியுறுத்திய இத்தனை விடயங்களுக்கும் மகிந்தா சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதே உண்மை.
ஈழத் தமிழ்த்தலைமைகளைப் பொறுத்தவரையில் இந்திய அரசு தம்மை தீர்வு தராமல் ஏமாற்றுவது குறித்து எந்த வருத்தமும் இல்லை.
இன்னும் சொல்லப்போனால் அவர்களின் முகத்தில் இந்திய அரசு ஓங்கிக் குத்தினாலும் சரி அல்லது காலில் போட்டு மிதித்தாலும் சரி சிரித்துக்கொண்டே இந்தியா தம்மை அரவணைக்கிறது என்று சொல்லிக் கொண்டிருப்பர்.
ஆனால் தமிழக மக்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலை செய்த மகிந்தாவுக்கு இந்திய அரசு தொடர்ந்து பண உதவி செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் இப்பவே “ பெத்த பிள்ளை பாலுக்கு அழுகிறது. ; ஆட்டக்காரிக்கு ரவிக்கையில் 500 ரூபா நோட்டைக் குத்துவதா?” என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கனிமொழி, டிஆர் பாலு போன்றவர்கள் கொழும்பில் முதலீடு செய்திருப்பதால் திமுக மௌனம் காக்கலாம். ஆனால் தமிழக மக்கள் மௌனமாக இனி இருக்க மாட்டார்கள்.
அதேபோல் சிங்கள மக்கள் மத்தியிலும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன.
இந்தியாவின் காலனித்துவாவிற்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்ய தயார் என்று மொதகொட அபயதிஸ்ஸ தேரர் என்ற சிங்கள பிக்கு தெரிவித்துள்ளார்.
பேராசிரியரான இவர் ஜனாதிபதி கோத்தாவின் அரசியற் செயற்திட்டங்களின் முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜாங்க அமைச்சரான சரத் வீரசேகர இலங்கையின் உள் விவகாரங்களில் இந்திய அரசும் அதன் தூதரகமும் தலையிடக்கூடாது என எச்சரித்திருக்கிறார்.
எப்போதும் இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிரான கருத்துக்கொண்ட ஜேவிபி யானது தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment