Saturday, September 26, 2020

மறக்க முடியாத “தட்டிவான்”!

மறக்க முடியாத “தட்டிவான்”! 1980களில் யாழ் குடாநாட்டில் படித்தவர்களுக்கு இந்த வாகனம் நன்கு நினைவில் இருக்கும். அந்தளவுக்கு அவர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்த வாகனம் என்றும் கூறலாம். அப்போது பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிக்கு டிக்கட் இருபது சதம். நாம் அரை டிக்கட் என்பதால் எமக்கு பத்து சதம் மட்டுமே. அந்த பத்து சதத்தைக்கூட கொடுக்காமல் டிமிக்கி விடவே நினைப்போம். ஏனெனில் ஒரு ஜஸ்பழம் ஐந்து சதம் மட்டுமே. மீதி ஐந்து சதத்திற்கு நாவற்பழம் சாப்பிடலாம். பருத்தித்துறையில் இருந்து வரும்போது பெரும்பாலும் தட்டிவானின் டிக்கியில் நின்றுவரவே நாம் விரும்புவோம். டிறைவர் “பொலிஸடா” என்று கத்தியதும் உடனே டிக்கியில் நிற்கும் நாம் எல்லோரும் தலையை மட்டும் வானுக்குள் செலுத்துவோம். ஆனால் மாணிக்கராசா என்ற பொலிஸ் சார்ஜன்ட் மட்டும் எப்படியாவது ஒளிந்து வந்து எங்களை பிடித்துவிடுவார். சிலவேளை ஜீப்பில் வருவார். சிலவேளை பஸ்சில் வருவார். சிலவேளை சயிக்கிளில் வருவார். எதில் வருவார்? எப்படி வருவார்? என்று கணிக்க முடியாது. எதோ ஒன்றில் வந்து எங்களை எப்படியும் பிடித்துவிடுவார். சிலவேளை கையால் கன்னத்தில் அடிப்பார். சிலவேளை பூவரசம் கட்டையால் அடிப்பார். சிலவேளை தோப்புக்கரணம் போட வைப்பார். ஒருமுறை இப்படித்தான் திடீரென வந்து மாலி சந்தியில் வைத்து எம்மை பிடித்துவிட்டார். தட்டிவானின் டிக்கியில் இருந்த எங்களை மாலிசந்தியில் இருந்து நெல்லியடி சந்திவரை நடந்துபோக விட்டார். எங்களுக்கு பயங்கர கோபம். அதனால் வழியில் இருந்த பிள்ளையார் கோவிலில் இந்த மாணிக்கராசா விரைவில் ஏதாவது வாகனத்தில் அடிபட்டு சாக வேண்டும் என்று நேர்த்தி வைத்தோம். அந்த கோவில் பிள்ளையார் ஏனோ எங்கள் நேர்த்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு எந்த விபத்தும் நடக்கவில்லை. பின்னாளில் அவர் இயக்கங்களுக்கு உதவியதால் இலங்கை அரசு அவரை கைது செய்ய முனைந்தது. இதனால் அவர் தப்பி இந்தியா செல்ல முயன்றார். இந்தியா செல்வதற்காக அவர் எமது இயக்கத்தின் உதவியை நாடினார். அவர் எமது வள்ளத்தில் ஏற வந்தபோது அவருக்கு எம்மை மாலிசந்தியில் இருந்து நடக்க வைத்த கதையைக் கூறினேன். இதைக்கேட்டதும் அவர் பயந்து விட்டார். ஏனெனில் எங்கே அந்த ஆத்திரத்தில் தன்னை கடற்கரை மணலில் உருள வைக்கப்போகிறேனோ என நினைத்துவிட்டார். நான் சிரித்துவிட்டு “பயப்படாதிர்கள். நீங்கள் எமது நன்மைக்காகத்தானே அவ்வாறு செய்தீர்கள். அப்போது அது எமக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது உணர்கிறேன்” என்றேன். அவருக்கு இதைக் கேட்டபின்பே முகத்தில் நிம்மதி பிறந்தது. சந்தோசமாக கையசைத்துவிட்டு இந்தியா சென்றார். இப்போது அவர் உலகில் எங்கேயாவது ஒரு மூலையில் இருக்கக்கூடும். அவருக்கு இந்த பதிவு சென்றடைந்தால் அவரும் அந்த நினைவுகளை ஒருமுறை மீட்டிப் பார்ப்பார்.

No comments:

Post a Comment