Saturday, September 26, 2020

தோழர் சோழன்; !

•தோழர் சோழன்; ! அரியலூர் மாவட்ட திமுக தலைவர் சிவசங்கர் எழுதியுள்ள நாவல் இது. தோழர் தமிழரசனின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நாவல் ஒன்றை படிக்கவும் அது குறித்து ஒரு சிறு குறிப்பை எழுதவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நான் 2003ல் “தோழர் பிள்ளையார்” என்று ஒரு நாவல் எழுதினேன். அதில் லண்டனுக்கு அகதியாக வரும் பிள்ளையார் அகதி நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பி தோழராகி போராடுவதாக எழுதியிருந்தேன். அதேபோல் இந்த நாவலில் சோழன் என்பவர் தோழராகி இயக்கத்தில் சேர்ந்து சம்பவம் செய்வதாக உள்ளதால் இயல்பாக இந்த நாவல் ஆர்வத்தை எற்படுத்தியுள்ளது. தோழர் தமிழரசன் சம்பந்தப்பட்ட மருதையாற்று பாலம் மீதான வெடிகுண்டு சம்பவம் மற்றும் பொன்பரப்பி வங்கி கொள்ளை முயற்சி ஆகிய இரு சம்பவங்களை வைத்து இந்த புனைவு நாவல் எழுதப்பட்டுள்ளது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் சிவசங்கர் அவர்கள் ஒரு முன்னாள் எம்எல்ஏ மட்டுமல்ல அரியலூர் மாவட்ட திமுக தலைவரும்கூட இருப்பினும் சம்பவங்களை நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக தோழர் தமிழரசன் மக்களால் அடித்துக் கொல்லப்படவில்லை,மாறாக பொலிஸ் சதி செய்து கொன்றதை தெளிவாக நேர்மையாக எழுதியுள்ளார். நான் அறிந்தவரையில் தோழர் தமிழரசன் குறித்து வெளிவந்திருக்கும் முதல் நாவல் இதுவென்றே கருதுகிறேன். அதுவும்கூட தோழர் தமிழரசனை கொச்சைப்படுத்தாமல் வந்திருப்பது உண்மையில் மகிழ்ச்சியே. இதுவரை வெறும் அரசியல் வடிவமாக இருந்துவந்த தோழர் தமிழரசன் தற்போது இலக்கிய வடிவங்களையும் பெறுவது இனி அவர் வரலாற்றில் நீண்டு நிலைபெறுவார் என்பதையே காட்டுகிறது. அந்தவகையில் சிவசங்கர் அவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment