இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் இருக்கும் தோழர் அருள் நாகமுத்து அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் வருமாறு,
"இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" என்ற தோழர் பாலன் அவர்களின் நூல் காலத்துக்கு தேவையான ஒன்றாகும். நூலை படித்து மிகவும் மகிழ்ந்தேன்.
காரணம் இந்தியா எம் முதன்மை எதிரி என உணராமல் இன்னமும் இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் இந்திய ஆக்கிரமிப்புக்கு இரையாகி கொண்டு இருக்கும் இக்காலத்தில் இந்த உண்மைகளை எடுத்து சொல்லும் மிகப் பெரிய கடனை இந்த நூல் ஆற்றி உள்ளது.
இந்நூலை தந்த பாலன் தோழர் இப்பணியை செய்ய வல்லவர் என்பதை அன்றே மார்க்சிய, லெனினிய, மாவோயிச ஆசானாக இருந்து இலங்கை வாழ் தமிழ் சிங்கள இடதுசாரி சிந்தனையாளர்களை ஒன்றிணைத்து வழி நடத்தி பல தேச புரட்சி சிந்தனையாளர்களும் போற்றும் தோழர் சண்முகதாசன் உணர்ந்திருந்தார் என உறுதியாக எண்ணுகின்றேன்.
இலங்கையில் நடைபெற்ற உழைக்கும் மக்களுக்கான பல போராட்டங்களை முன்னெடுத்த தோழர் சண்முகதாசன் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற தொழிற்சங்க போராட்ட காலங்களில் என்போன்ற உழைக்கும் மக்களை வெகுவாக ஈர்த்துக் கொண்டார்.
தோழர் சண்முகதாசனை அறிந்து அவர் சிந்தனைகள் பால் ஈர்க்கப்பட்டு அவர் வழியில் ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடும் தோழமைகளாக தமிழ் சிங்கள மக்களாக நாம் அக்காலத்தில் பெருமளவில் அணி திரண்டோம் .
இலங்கை தீவில் இந்திய ஆக்கிரமிப்பு பற்றி அக்காலத்தின் சிங்கள தமிழ் தலைவர்கள் பலர் மறுத்த அல்லது மறைத்த காலங்களில் அதை வலிமையாக அழுத்திச் சொன்னவர் தோழர் சண்முகதாசன் அவர்கள்.
பின்னாளில் நான் வெளி நாடு வந்தாலும் தோழரோடு தொடர்பில் இருந்தேன். நோய்வாய்ப்பட்ட நிலையிலும் மக்கள் நலனுக்காக இறுதி வரை சிந்தித்தவர் தோழர் சண்முகதாசன் அவர்கள்.
அக்காலங்களில் தோழர் சண்முகதாசனின் சிந்தனைகளை வலிமையாக எடுத்து செல்லும் தோழராக பாலன் தோழர் அவர்கள் இருப்பார் என்ற நம்பிக்கையை அவர் பலரோடு நம்பிக்கையாக பகிர்ந்து கொண்டார் என புரட்ச்சிகர தோழமைகளிடம் இருந்து அறிந்து கொண்டேன்.
நான் நேரில் சண்முகதாசன் அவர்களை சென்று பார்த்த பொழுது கூட தனக்கு தன் பணிகளுக்கு பாலன் தோழர் உறுதுணையாக இருக்கின்றார் என சொன்னார். ஆனாலும் அவரை சந்திக்கும் வாய்ப்பு அப்பொழுது எனக்கு கிட்டவில்லை.
இந்த நூலில் தோழர் பாலன் அவர்களின் உறுதியான வலிமையான இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான சிந்தனை அன்று அந்த ஒப்பற்ற ஆசான் தோழர் சண் அவர்களிடமிருந்து இவருக்குள் விதைக்கப்பட்டவையோ என எனக்குள் உறுதியாக தோன்றுகின்றது.
இலங்கையில் இனங்களுக்கிடையே பிரிவினைகள் தோன்றி இன அழிப்பு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட போது அரசுக்கு எதிரான தமிழ் இளைஞர்களின் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலத்தில் தோழர் சண்முகதாசன் சிந்தனைப்படியே கம்யூனிச பாதையில் கொள்கைகள் வகுத்து இயங்கிய தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட அமைப்பு என்றால் அது தமிழ்மக்கள்பாதுகாப்புபேரவை மட்டுமே. அதில் முதன்மைத் தோழராக பாலன் தோழர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய அரசால் கைதாகி தமிழக சிறைகளிலும் சிறப்பு முகாம்களிலும் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வதைபட்ட பின்னாலும் கூட அவர் தனது ஒடுக்கப்படும் மக்களுக்கான குரல் கொடுப்புகளையும் போராட்டங்களையும் கை விடவில்லை.
இன்று முகநூலில,பொதுத்தளங்களில் அவரின் எழுத்துக்கள் பலரையும் உலகப் பரப்பெங்கும் சென்றடைந்து செப்பனிட்டு போராடும் மக்களை ஒன்றிணைப்பவையாக இருக்கின்றன.
இந்தியா எம் முதன்மை எதிரி என்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான இலங்கை மக்களின் போராட்டத்தின் அவசியம் உடன் அவசிய தேவை என்பதும் இந்த நூலூடாக முதன்முதலாக மிக வலிமையாக அவர் உணர்த்தியமைக்கு பாராட்டுகள்.
இந்திய ஆக்கிரமிப்பு பற்றி இதற்கு முன்பு வெளிவந்த தமிழ் நூல்கள் என பார்த்தால்
1. புளொட் அமைப்பினர் முதன் முதலாக 1983 இல் சந்ததியாரின் காலத்தில் "வங்கம் தந்த பாடம்" என்ற நூலை வெளியிட்டு இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கத்தை அம்பலப்படுத்தினார்கள்.
2. அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாக செயல்பட்டவரும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவரும் தற்போது இந்திய முகாமில் வசித்து வருபவருமான பேராசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய "தமிழீழ வீடுதலைப் போராட்டமும் இந்தியாவும”; என்ற நூல் 1985ல் வெளிவந்தது.
3.தோழர் பாலனின் "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" என்ற நூல் இந்திய ஆக்கிரமிப்பு பற்றி கூறும் 3 வது நூலாக இருந்தாலும் இலங்கை மீதான இந்தியாவின் அனைத்து ஆக்கிரமிப்புகள் பற்றியும் முழுமையாக சுட்டி காட்டும் நூல் என பார்த்தால் இதுவே இந்திய ஆக்கிரமிப்பின் பல்வேறு உண்மைகளை முழுமையாக புள்ளிவிபரவியல் அடிப்படையில் சொல்லும் முதல் நூல் எனும் பாராட்டுக்குரியதாக திகழ்கின்றது.
இனி இந்த இந்நூலை இன்னும் விரித்து எழுத பல்வேறு எழுத்துக்கள் வரும் என நான் நம்புகின்றேன். காலத்தின் இந்த தேவையை இன்றைய எழுத்தாளர்கள் பாலன் தோழர் போல் பொறுப்போடு எழுத்துப் பணி ஆற்ற முன் வர வேண்டும்.
அதே போல் புரட்;சிகர சக்திகள் தமக்குள் ஒன்றிணைந்து அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக போராட முன்வர வேண்டும்.
இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்கள் தமக்குள் ஒருங்கிணைந்து கம்யூனிச சிந்தனை கோட்பாட்டில் புரட்;சிகர போராளிகளாக மாறி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அனைத்து மக்களுக்குமான விடுதலையை முன்னெடுத்து போராடி "பொது எதிரிகளிடம்" இருந்து விடுதலையை வென்றெடுப்பதே அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே வழியாகும்
No comments:
Post a Comment