இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் இருக்கும் ஆனந்தராம் Villa Anandaram அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இலங்கையில் இந்தியாவின் தலையீடு என்பது அரசியல் அவதானிகளுக்கு புதிய விடயமல்ல. அந்த தலையீடு எவ்வகையானது என்பதும் எவ்வெவ் காலகட்டங்களில் அதன் தோற்றம் எப்படியானதாக இருந்தது என்பதுபற்றியும் ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடிருக்கலாம்.
பாலன் தோழரின் இச்சிறு நூல் இந்த தலையீட்டை புள்ளி விபரங்களுடன் தந்திருப்பது மட்டுமல்லாமல் அதை எளிமையாக அரசியல், பொருளாதாரம், ராணுவம் என்று வகைப்படுத்தலின் மூலம் வாசிப்பை இலகுவாக்கித்தந்துள்ளார்.
இங்கு அவர் கலாச்சார ஆதிக்கம் பற்றியும் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
இந்த கலாச்சாரத்தின் தாக்கம், மத, சம்பிரதாய, நம்பிக்கை சார்ந்த , நுண்கலை, இலக்கியம் போன்றவற்றால் மூளை சலவை செய்யப்பட்ட சமூகம் இந்தியாவை தம் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும் போது வியாபார, ராணுவ, அரசியல் ரீதியாக தாம் கட்டுப் பட்டுத்தப்பட்டிருப்பதை உணரவோ அப்படி உணர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தாழ்வு எண்ணத்துடனோ தான் இருக்கும்.
இந்த ஆய்வு கலோனிய ஆட்ச்சிக்கு பின்னான இந்திய நிலைப்பாடு பற்றியது. ஆனால் இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்பு முடியாட்ச்சி காலத்திலிருந்து தொடர்வது. அதுவும் பண்டை தமிழரசர்களால் சிங்கள மக்கள் மீது தொடரப்பட்டது. இது தமிழ் தேசீயவாதிகளால் பெருமையாகவும் சிங்கள மக்களால் வெறுப்புடனும் கருதப்படும் உண்மை. இதன் இன, மத, அரசியல் காரணங்கள் வேறு தளத்தில் ஆராயப்படலாம். ஆனால் இந்தியாவில் இருந்து பிரிவினை கோரும் தமிழ் தேசீய போராட்டத்திற்க்கு அது இடதுசாரி போராட்டமாயினும் சிங்கள மக்களிடையே எந்த அளவு ஆதரவு இருக்க முடியும்?
இது போன்ற வரலாறு சார்ந்த ஆய்வு சமர்பிக்கையில் தரவுகள் சரியாகவும் பூரணமாகவும் இருக்கவேண்டும். பாலன் தோழர் சில இடங்களில் அதை தன் கருத்தை மட்டும் வலியுறுத்தும் நோக்கில் தவறவிட்டுள்ளார் என்று நினைக்கி றேன். உதாரணத்திற்க்கு சேர். ஜோன் கொத்தலாவலவின் பேச்சும், நேருவின் எதிர்வினையும். நேரு மட்டுமல்ல சீன பிரதமர் சூ.என்.லாயும் அப்பேச்சினால் ஆத்திரமடைந்தார்கள்.
சேர். ஜோன் பேச்சு கம்யூனிஸ எதிர்ப்பு பேச்சாக அமைந்தது. அவர் கலோனியத்தின் கையாள். அவரது நோக்கமே ஏகாதிபத்தியத்தின் ஏஜண்டாக பாண்டுங் மகாநாட்டை குழப்புவது. இக்கூட்டம் முடிந்தபின் இலங்கை பாராளுமன்றத்தில் அவருக்கெதிராக எதிர்கட்சியினரால் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றும் கொண்டுவரப்பட்டது.
மற்றயது தென் இந்திய படையெடுப்பும் அதற்கெதிரான சிறீலங்கா மக்களின் போராட்டமும் பற்றியகுறிப்பு. இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் தமிழரசுகள் என்பதையும் எதிர்த்து போராடிய சிங்களவர்கள் தம் தனித்தன்மையை (சிங்கள பௌத்த) அடையாளத்தை பாதுகாத்தார்கள் என்பதையும் தெளிவாக சொல்ல தவறிவிட்டார்.
இது போன்ற சில குறை களுக்கப்பால் பாலன் தோழரின் நிலைப்பாட்டுடன் சித்தாந்த ரீதியாக எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடுதான், இலங்கை தமிழருக்கு விமோசனம் சக சிங்கள தொழிளாளி வர்க்கத்துடன் இணைந்த போராட்டத்தின் மூலமே சாத்தியம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது.
இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை 4 காலகட்டங்களில் பார்க்கலாம்.
1) அந்நியர் வருகைக்கு முன். இக்காலத்தில் இந்தியா என்றொரு நாடு இல்லை. தமிழ் நாட்டின் ஆக்கிரமிப்பு தான். அதன் வடிவம் மன்னர்களால் நடத்தப்படும் கொள்ளை, மத, கலாச்சார ஆதிக்கம்.
2) அந்நியர் ஆட்சியின் போது. ஆபிரிக்காவில் ஒரு பழமொழியுண்டு."எங்கு ஐரோப்பிய முதளாளி போகிறாரோ அங்கு அவர் கோட்டு பைக்குள் ஒரு இந்தியனும் இருப்பான்" இது இலங்கைக்கும் பொருந்தும். இக்கால கட்டத்தில் இந்திய சிறு வியாபாரிகளும் வட்டிக்கடைகாரரும் இந்திய தோட்டத்தொழிளாளருடன் இலங்கைக்கு வந்தனர்.
3) ஆரம்ப கால சுதந்திர இந்தியா. இக்காலத்தில் உலகம் பூராகவும் சோஸலிசப்புரட்சியும், ஜனநாயகத்திற்கான போராட்டங்களும் இருந்த காலம். இந்தியாவும் தன்னை நடுநிலை நாடாகவும் ஏகாதிபத்திய எதிர்பாளராகவும் சொஸலிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடாகவும் காட்டிக்கொண்டது. அண்டை நாடுகளில் இந்தியாவின் தலையீடு பெரும்பாலும் அதன் பாதுகாப்பினை கருதியே நிகழ்த்தியது.
4) உலகமயமாக்கலும், தாராள பொருளாதார கொள்கையும் கொண்ட இந்தியா. தற்போதைய இந்த இந்தியா மற்றய ஏகாதிபத்திய நாடுகளைப்போல, அண்டை நாடுகளை பொருளார ரீதியாக சுரண்டவும் அதன் பெருமுதளாளிகளின் நன்மைக்கேற்ப்ப அண்டை நாடுகளை ராணுவ ரீதியாக கட்டியாளவும் செய்கிறது.
இந்த இந்தியாவிலிருந்து சில இன உணவாளர்கள் சொல்ல முற்படுவது போல் நாம் தமிழ் நாட்டை பிரித்து பார்க்க முடியாது.இந்தியா ஒரு நாடு. அங்கே ஒரு மாநிலம் தான் தமிழ்நாடு. அவர்களும் தமிழ் பேசுகிறார்கள் என்பதை தவிர எமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிற்க்கும் மலேசிய, சிங்கபூரிய, ஃபிஜி தீவு தமிழருடனும் எமக்கு உள்ள உறவிற்க்கும் என்ன வித்தியாசம்?
தொப்புள் கொடி உறவு என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. வர்க்க நிலைப்பாட்டை மீறி அப்படி ஒரு உணர்வு காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது தான் கடந்த கால உண்மை.
இது உண்மையாயின் இலங்கை தோட்டத்தொழிளாளிகளிடம் யாழ் சமூகத்திற்க்கு அப்படி ஒரு உணர்வு இல்லாமல் போனதேன்?
ஏகாதிபத்தியத்திற்கும் அதில் முதன்மையாக இந்தியாவிற்கும் எதிராக போராடவரவேண்டும் என்ற அறைகூவலில் உள்ள நடை முறை சிக்கல்களை இங்கு அவர் விவாதிக்கவில்லை.
அது பற்றி தோழர் தொடர்ந்தும் எழுதுவார் என எதிர் பார்க்கலாம்.
60 களிலும் 70 களிலும் உலக தொழிளாளரே ஒன்று படுங்கள் என்ற கோஷம் யதார்த்தமாக தோன்றிய காலகட்டம். அதுவும் அக்காலங்களில் சிறந்த மாக்ஸீய சிந்தனாவாதிகள் சிங்கள, தமிழரிடையே இருந்தனர்.
அப்படியிருந்தபோதும் ஒன்றுபட்ட வர்க்க போராட்டத்தை முந்நெடுக்கமுடியாமல் போனதும் அதற்கான முதிராத பருவத்தில் ஜெ.வி.பி யினால் எடுக்கப்பட்ட நடுத்தர வர்க்க அவசர போராட்டத்தாலும் 30 வருட இனவாத போராட்டத்தாலும் எதிரி பலமடைந்த இந்த வேளையில், அதுவும் உலகம் பூராவும் சொஸலிஸ நம்பிக்கை நாடுகளே திசை மாறி போயிருக்கும் வேளையில் இலங்கையில் ஒரு சொஸலிஸ புரட்சியின் சாத்திய கூறுகள் என்ன?
அப்படி ஒரு நீண்ட கால லட்சியத்திற்க்கு இப்போதைய குறைந்த பட்ச வேலைத்திட்டம் என்ன?
முதல் கட்ட நடவடிக்கை இன ஒற்றுமை, வர்க்க உணர்வை கட்டி எழுப்புதல், உண்மையான வரலாற்றை மக்களிடையே எடுத்து செல்லல் என்பவற்றை கருத்தில் கொள்ளலாம்.
தோழரின் இந்த நூல் அதற்கான முதல் படியாக இருக்கட்டும்
No comments:
Post a Comment