இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவர் தோழர் தம்பிராசா அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் எழுதியுள்ள "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" என்ற இச்சிறு நூல் இன்று இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் மிக மோசமான அச்சுறுத்தலான இந்திய விஸ்தரிப்பை மையமாகக் கொண்டு சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட நூலாகும்.
இலங்கையின் இறையாண்மையையும் சமூக அமைப்பையும் அடி முதல் முடி வரை மாற்றி அமைக்கும் சாத்தியம் படும் உடன்படிக்கைகள் மக்கள் கண்களுக்கு அப்பால் இருட்டறையில் கையெழுத்திடப் படுகின்றன என்பதை ஆதாரங்களோடு பதிவு செய்யும் ஓர் முக்கிய ஆவணமாகவும் அமைந்துள்ளது.
இலங்கை மீது இந்தியாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்து வந்துள்ளமையை பலரும் அறிவார்கள். மிகப் பெரிய துணைக்கண்டம் ஒன்றின் அண்மையில் உள்ள தீவு ஒன்றுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடி என்ற அளவிலேயே இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற காலத்தில் இது கணிக்கப்பட்டது. எனவே, அந்தக் காலத்தில் இந்திய இலங்கை உறவு பெரும் கவனம் பெறவில்லை. ஆனாலும் இரு முற்றிலும் மாறுட்ட சக்திகள் இந்தியாவை எப்போதும் சந்தேகக் கண்களோடு நோக்கி வந்துள்ளன. ஒன்று சிங்கள வகுப்பு வாத சக்திகள், மற்றது தூய மரபில் வந்த இடதுசாரிகள்.
சிங்களவருக்கு பொதுவாகவே இந்தியா பற்றிய, குறிப்பாக தமிழ்நாடு பற்றிய, அச்ச உணர்வு அடிமனதில் பதிந்து உள்ள ஒன்று. இவர்கள் இலங்கைத் தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் பிரித்துப் பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்கள் ஒன்றரை கோடி சிங்களவர்கள் வாழும் இலங்கையை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சுறுத்தல் சிங்களவர் பொதுப் புத்தியில் ஆழ உறைந்துபோய் உள்ளது என்பதை சிங்கள ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சிறுபான்மை இன மனப்பான்மையே இருந்துவருகிறது.
இந்த பயத்தை அரசியல் ஆதாயத்துக்காக சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். பண்டாரநாயகா முதல் விஜயவீர வரை சிங்களவர்களிடையே இனவாதத்தை மூட்டி வளர்த்து அதில் குளிர் காயந்தவர்களே. ரோஹன விஜயவீர நடத்திய பத்து "அரசியல்" வகுப்புகளில் ஒன்று இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றியது. அதில் எம். ஜி. ஆர். நடித்த 'அரசிளங் குமரி' என்ற படத்தில் தமிழ் அரசன் ஒருவன் இலங்கையைக் கைப்பற்றுவதாக சித்தரிக்கப்பட்டதை உதாரணமாக எடுத்துக் காட்டி இனவாதத்தைத் தூண்டி சிங்கள இளைஞர்களை அணிதிரட்டினார்.
இதே சமயம் மரபுசார் இடதுசாரிகளும் இந்திய ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கையை சீற்றத்துடன் எதிர்த்து வந்தார்கள். இதில் குறிப்பிடத் தக்கவர் தோழர் சண்முகதாசன். அவர் இந்திய ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கை பற்றி 1960 களிலேயே நிறையவே பேசியும் எழுதியும் வந்தார். தோழர் பாலனின் இந்த நூலை இன்றைய நிலமைகளுக்கு இசைவான இதன் விரிவாக்கம் என்று கூறலாம்.
நூல் சிறிதானாலும் இலங்கையில் கால் பதிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இப் புத்தகம் புட்டுப் புட்டாக போட்டுடைத்து உண்மைகளை வெளிப்படுத்துகிறது. இந்த பட்டியல் நீளமானது:
இந்தியாவின் உதவியுடனும் உந்துதலாலும் நடைபெறும் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு, பொருளாதார வலையம் என்ற பெயரில் திரிகோணமலையில் இலங்கையர்கள் புக முடியாதவாறு இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 675 சதுர கிலோமீட்டர் நிலம், சம்பூரில் இந்தியா அமைக்கும் சர்ச்சைக்குரிய அனல்மின் நிலையம், உள்நாட்டு வளங்களைப் புறந்தள்ளி இந்தியாவில் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்ள கையெழுத்திடப்படும் மின்சார ஒப்பந்தம், பெருகிவரும் இந்திய எண்ணை விநியோக நிலையங்கள், காங்கேசந்துறை சீமந்து தொழிற்சாலையும் அதன் சுற்றுப்புறமும் இந்தியாவின் பிர்லா நிறுவனத்துக்கு தாரைவார்த்தமை, யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள திக்கம் வடிசாலையை இந்திய தனியார் நிறுவனத்துக்கு விற்பதற்கு மேற்கொள்ளப்படும் கமுக்கமான நடவடிக்ககைகள்....
இவ்வாறு இதுவரை பொது வெளியில் பேசாப் பொருளாய் இருந்துவந்த இந்திய பொருளாதார ஊடுருவலை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.
இவ்வாறு இதுவரை பொது வெளியில் பேசாப் பொருளாய் இருந்துவந்த இந்திய பொருளாதார ஊடுருவலை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.
ஆனால் ஆசிரியரின் கணைகள் தற்சமயம் அமுலுக்கு வரவுள்ள எட்கா ஒப்பந்தத்தையே (ETCA; Economic and Technological Cooperation Agreement) முதன்மைப் படுத்தி குறிவைக்கின்றன. இலங்கயுடன் முழுமையான வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள இந்தியா 2000ம் ஆண்டு முதல் முயற்சித்து வந்துள்ளது. சீபா (Comprehensive Economic Partnership Agreement; CEPA) என்ற ஒப்பந்தத்தை 2000ம் ஆண்டு முன்வைத்தது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.
இப்போது, இந்தியா விடுதலைப் புலிகளை அழிக்க செய்த உதவிக்கு கைமாறாக எட்கா ஒப்பந்தத்தை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கிறது. மகிந்த ராஜபக்சவை புறந்தள்ளி தற்போதைய ரணில்-சிறிசேன கூட்டத்தை அரியாசனத்தில் அமர்த்தியதில் இந்தியாவுக்குப் பெரும் பங்குண்டு. எனவே எந்த அரசாங்கம் எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது. நன்றி செலுத்துவது ரணில்- சிறிசேன கும்பலாக இருந்தாலும் அதற்கு பலியாகப் போகிறவர்கள் சாதாரண இலங்கை மக்களே.
இதை ஆசிரியர் விரிவாகவே ஆராய்ந்து எழுதியுள்ளார். இலங்கயில் இது போதிய கவனம் பெறவில்லை என்பதையும் இதற்கு எதிரான பிரசாரத்தை தமிழ்க் கட்சிகள் உட்பட ஏனைய கட்சிகளும் ஊடகங்களும் கையில் எடுக்கவில்லை, மாறாக ஜேவிபி மட்டுமே பிரசாரம் பண்ணுகிறது என்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
எட்கா ஒப்பந்தம் அமுலுக்கு வந்தால் அதனால் ஏற்படப்போகும் அவலங்களை வலியுறுத் துகிறார். இந்திய மருத்துவ மனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் போன்றவை இலங்கையில் காலூன்ற இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
இதனால்தான் இந்த ஒப்பந்தத்தை இலங்கை மருத்துவர் சங்கமும் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பும் வன்மையாகக் கண்டிக்கின்றன. ஏற்கனவே இலங்கையின் அம்புலன்ஸ் சேவையை இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்தியா எடுத்து நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்துக்கு இது இனாமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்? இது போன்ற ஊடுருவல்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்கு முன்னரே நடைபெற்று வருகின்றன.
இலங்கை இந்தியா என்ற இரு நாடுகளின் வளர்ச்சிப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் மரண விகிதம் , சேய் நலம், தாய் நலம், படிப்பறிவு போன்ற சமூகக் வளர்ச்சி அளவு கோள்களிலும் குறியீடுகளிலும் இலங்கை (இருபத்தைந்து ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னும்) இந்தியாவை விட பல படிகள் அதிக முன்னேற்றம் கொண்டுள்ளது என்பது தெரிய வரும். காரணம் என்ன? சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை மேற்கொண்ட இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற சமூகநலத் திட்டங்களே. C.W கன்னங்கர 1942ல் கொண்டுவந்த இலவசக் கல்வியால் பயன் அடையாத (தமிழர்கள் உட்பட) இலங்கையர்கள் இல்லை என்றே கூறலாம். அதேபோல இலங்கையில் மருத்துவ சேவைகள் இலவசமாக கிராமங்கள் நகரங்கள் என்ற பாகுபாடு இன்றி வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் மருத்துவ சேவைகளில் 75% தனியார் துறையிடமே உள்ளது. அதேபோல, உயர் கல்வியில் 75% தனியார் பல்கலைக் கழகங்களின் கையில் உள்ளது. இலங்கையில் இது நேர் எதிரான நிலையில் உள்ளது. இந்த இந்திய தனியார் மருத்துவ மனைகளும் தனியார் பல்கலைக் கழகங்களும் இலங்கைச் சந்தையை குறி வைத்து தங்கள் ஆதிக்கத்தை விரிவடையச் செய்வது எட்கா ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய குறிக்கோள்.
இதனால் இதுவரை கல்விப் புலனிலும் சுகாதாரத் துறையில் இலங்கையில் இருந்துவந்த ஓரளவு சமுதாய சமத்துவம் கூட இப்போது பெரும் சரிவை சந்திக்கும் என்பதில் ஐயம் இல்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இலங்கை மக்களுக்கு இன்றியையாத சேவைகளான கல்வியையும் மருத்துவத்தையும் வர்த்தகமயப்படுத்த இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு வழி சமைத்துக் கொடுக்கிறது. இது நவதாராளவாதக் கொள்கையை வீச்சோடு செயல்படுத்த இந்தியா இலங்கைக்கு நல்கும் கொடை! ஆனால் இதனால் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களே.
பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்: “கடந்த இருபது ஆண்டுகளாக ஜி.டி.பி என்று அனைவராலும் அழைக்கப்படும் உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மேலை நாடுகளை விட அதிகரித்து வந்துள்ளது என்ற போதிலும் 50 சதவிகித இந்தியர்களுக்கு கழிப்பறை வசதிகள் கிடையாது". வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
தற்சமயம் (2016) இந்தியாவில் பிலியன் டாலர் செல்வந்தர்கள், அதாவது நூறு கோடிக்கு (100,00,00,00) மேல் உள்ளவர்கள், 111 பேர் உள்ளார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதே சமயம் ஒரு வேளை உணவுக்குக்கூட திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர்வாழ் மக்களில் 35% வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்பதை இந்திய ஆய்வுகளே எடுத்துக்காட்டுகின்றன.
முதலாளித்துவத்தின் சித்தாந்தமே ஒரு நாட்டின் (முதலாளித்துவ) பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது அது சொட்டு சொட்டாக கீழ் மட்டத்தில் உள்ளவர்களையும் சென்றடையும் என்பதுதான். ஆனால் இது நடைபெறுவதாகத் தெரியவில்லை. செல்வந்தர்கள் மேலும் செல்வம் குவிப்பதும் எழை எளியவர்கள் ஓட்டாண்டிகளாக கெட்டழிவதும்தான் யதார்த்தமாக உள்ளது. இதுதான் இந்திய-இலங்கை கூட்டு ஒப்பந்தம் இலங்கை மக்களுக்கு வழங்கவிருக்கும் கொடை!
இம்மாதிரியான "ஒப்பந்தங்களில்" மக்கள் செல்வம் எவ்வாறு சூறையாடப்படுகின்றது என்பதை விளக்க ஒரு சிறு உதாரணம். போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 65 000 வீடுகள் கட்டிக் கொடுப்பது என்ற ஒரு தீர்மானம் அமைச்சரவையால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பணி மிட்டால் என்ற இந்திய கோடீசுவரரின் நிறுவனமான ஆர்செலோர் மிட்டால் (Arcelor Mittal) என்ற நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. இதன்படி கட்டப்படும் வீடுகள் எஃக்கிலால் ஆன முன்புனைவு வீடுகள் (prefabricated steel housesp).
உலகச் சந்தையில் எஃக்கின் விலை சரிந்துள்ளதால் இந்த நிறுவனம் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. ஆர்செலோர் மிட்டால் கட்டும் வீடு ஒன்றுக்கு 2.1 மிலியன் ரூபாய்கள் செலவாகும் என்று அது மதிப்பிடுகிறது. எனவே, அரசாங்கம் ஏறத்தாள ஒரு பிலியன் டொலர் அந்நிய நாட்டுக் கடனாகப் பெற வேண்டும். ஆனால், செங்கல் சீமந்து கொண்டு 550 சதுர அடி அளவில் தரமான ஒரு வீட்டை கட்டிமுடிக்க 80 000 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் மட்டுமே போகும் என்பது நிபுணர்களின் கணிப்பு.
இதன்படி, 40 000 வீடுகள் கட்ட 500 மில்லியன் டொலர் மட்டுமே செலவாகும். இன்னொரு விதமாக கூறுவதானால் அரசாங்கம் வீடுகளுக்காக ஒதுக்கி இருக்கும் ஒரு பில்லியன் டொலரில் 137,000 செங்கல் வீடுகள் கட்ட இயலும். இதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முழுமையான வதிப்பிட தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். மேலும் கட்டிட தொழில் வாய்ப்புகள் அப்பகுதி மக்களுக்கு பணிவாய்ப்பாக அமையும். எஃகினால் கட்டப்பட்ட வீடுகள் இலங்கயின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றதுதானா என்ற கேள்வியும் உண்டு.
இத்தனை வலுவான காரணங்கள் இருந்தும் ஏன் இந்த ஒப்பந்தம் ஆர்செலோர் மிட்டாலுக்கு வழங்கப்படுகிறது? இதில் இந்தியாவின் கரம் செயல்படுவதை அறிந்துகொள்ள நாம் ஐன்ஸ்டைனாக இருக்கத் வேண்டியதில்லை. இதில் இடைத்தரகர்களும் ஊழல் பேர்வழிகளும் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? இவ்வாறாக மக்கள் செல்வம் கொள்ளையடிக்கப் படுகிறது என்பதே இங்கே நாம் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி. எட்கா ஒப்பந்தம் ஆயிரக்கணக்கான இம்மாதிரி செயல்பாடுகளை உள்ளடக்கும்.
ஆனால் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாதி இல்லை என்பதுதான் நம் கெடுவாய்ப்பு . இதை உரக்கக் கூறுவதால் தோழர் பாலன் இலங்கை வாழ் சிங்கள, தமிழ்.முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள இருக்கும் ஒரு அபாயத்தை கோடிட்டுக் காட்டுகிறார். இந்த நூல் ஆற்றும் முக்கிய பணி வரவிருக்கும் இந்த அவலத்தை பற்றி முன்கூட்டியே எச்சரிப்பதுதான்.
அடுத்து, முனைப்புடன் நடைபெற்று வரும் பொருளாதார ஊடுருவலை ஆக்கிரமிப்பு என்று கூறுவது முறையா? என்ற கேள்வி எழுகிறது. இதில் தோழர் பாலன் தெளிவாக இருக்கிறார். பொருளாதாரம் என்ற அடித்தளத்தின் மேல் அமைந்தவைதான் அரசியல், மதம், கலை கலாச்சாரம் போன்ற மேற்றளங்கள் என்ற ஆசான் கார்ல் மார்க்சின் கூற்றை இங்கே நினைவு படுத்திக்கொண்டால் நாம் ஏன் அந்நிய பொருளாதார ஊடுருவலை எதிர்க்க வேண்டும் என்பது புலனாகும். உரலுக்குள் தலையை விட்ட கதைதான்.
மேலும், இந்த நூல் சுட்டிக்காட்டியுள்ள படி, இந்தியா அதைச்சற்றி உள்ள அனைத்து அண்டை நாடுகளிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகிது என்தையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நூலின் அட்டைப்படமே இதை அழகாக காட்சிப்படுத்துகிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு தன் மேலாதிக்கத்தை பாக்கிஸ்தான், பங்களாதேசம் முதல் மாலத் தீவு, ஆப்கனிஸ்தான் வரை நிறுவ இந்தியா மேற்கொண்டு வரும் முன்னெடுப்பின் ஒரு சிறு துளியே இலங்கையோடு செய்துகொள்ளப்படும் எட்கா ஒப்பந்தமும் மற்ற எழுத்தில் இல்லாத உடன்பாடுகளும்.
இலங்கையில் இராணுவ ரீதியாக தலையிட்டு சூடு வாங்கிய பூனையாய் பின்வாங்கிய இந்தியா இப்போது பொருளாதார ரீதியாக இலங்கையை ஆக்கிரமிக்கும் தந்திரத்தைக் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளது.
எவ்வளவு தூரம் இந்தியா அதன் அண்டை நாடுகளில் மறைமுகமாகத் தலையிடுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் ரோ (RAW) என்று அழைக்கப்படும் இந்திய உளவுத் துறை மியன்மாரில் நடாத்திய ஒரு தலையீடு. மியன்மாரில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அங்கே செயல்பட்டு வந்த சிறுபான்மை இனமான கச்சின் மக்களின் விடுதலை முன்னணி ((KIA) என்ற இயக்கத்துக்கு ஆரம்பத்தில் ரா பயிற்சியும் இராணுவ உதவியும் நல்கி வந்தது. ஆனால், அது பலம் பெற்று மியன்மாரின் வடகிழக்குப் பிராந்தியத்தில் வேறு விடுதைலை இயக்கங்களோடு ஒன்றுபட்டு செயல்படத் தொடங்கியதும், நிலமை தன் கைமீறிப் போவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 1998ல் அதன் தலைவரையும் ஆறு உயர்மட்ட இராணுவத் தலைவர்களை சுட்டுக் கொன்றதும் மற்றவர்களைக் காட்டிக் கொடுத்ததும் இப்போது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மியன்மாரில் கூட இந்தியா தலையிடுகிறது என்பதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் படிப்பினை என்ன? இந்தியா தனது அண்டை நாடுகளை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர எவ்வளவு தூரம் எத்தனிக்கிறது என்பதே.
எனவே, இந்தியாவின் பொருளாதார ஊடுருவலுக்கு வலுவான அரசியல்- இராணுவ காரணங்கள் உள்ளன. இதை இலங்கை மக்கள் அறிந்துகொள்வதன் அவசியத்தை வலியுறுத்துவது முக்கியமாகிறது.இதில் இந்த நூல் வெற்றி பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.
இந்த நூல் நுட்பமாக தெரிவிக்கும் ஒரு செய்தியும் உண்டு. இந்தியா முழு மூச்சோடும் பெரும் வீச்சோடும் நடத்திவரும் ஆக்கிரமிப்பை எதிர்க்க சிங்கள, தமிழ். முஸ்லிம் மக்கள் யாவரும் ஒன்றுபட்டு போராட முன்வருவது அவசியம் என்பதை இந்த நூல் கூறாமல் கூறுகிறது.
இந்த நூல் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற வேண்டும். காலத்தின் தேவை இது.
No comments:
Post a Comment