•கரும்புலி தினத்தை முன்னிட்டு!
ஈழத் தமிழர்களே!
1983ம் ஆண்டு அன்டன் பாலசிங்கமும் சந்திரகாசனும் இந்திய அரசால் வெளியேற்றப்பட்டபோது முழு தமிழகமே கிளர்ந்து எழுந்தது. வேறு வழியின்றி இந்திய அரசு அவர்களை திருப்பி அழைத்துக்கொண்டது. உலகில் ஒரு அரசு வெளியேற்றியவர்களை மக்கள் போராட்டம் காரணமாக திருப்பி அழைத்துக்கொண்ட இந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள் தமிழக மக்களே.
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது 5000ற்கு மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது ஒரு ஈழத் தமிழன்கூட கொல்லப்படவில்லை. அவ்வேளை தமிழ்நாட்டில் இருந்த 3லட்சம் ஈழ அகதிகள் மீது ஒரு கீறல்கூட விழாமல் பாதுகாத்தவர்கள் தமிழக மக்களே.
பல மரண தண்டனைகளை நிறைவேற்றிய இந்திய அரசு, ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கில் இட்டுக் கொல்லவிடாமல் தடுத்து நிறுத்தியவர்கள் செங்கொடியும் தமிழக மக்களுமே.
தமிழக மக்கள் எமக்கு பயிற்சி செய்ய நிலம் தந்தார்கள். தங்க வீடு தந்தார்கள். ஏன் வாகனம் கூட தந்து உதவினார்கள். தாங்கள் உண்ணவில்லை என்றாலும்கூட நாங்கள் சாப்பிட்டோமா என்று அக்கறையாக விசாரித்தவர்கள் பலர். இதை நானே என் கண்ணால் கண்டிருக்கிறேன்.
ஆனால் அகதியாக சென்ற எம்மவர்கள் சிலர் பஸ்சில் தாலி அறுத்தார்கள். சிலர் கொள்ளையடித்தார்கள். சிலர் கொலைகூட செய்தார்கள். இன்னும் சிலர் போதைப் பொருள் கடத்தினார்கள். ஆனால் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களை வெறுக்கவும் இல்லை. அவர்களை வெளியேற்றும்படி ஒருபோதும் கோரவும் இல்லை.
ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை என்று இந்திய அரச ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. ஆனால் அதன் பின்னரே முத்துக்குமார் தொடக்கம் இதுவரை 16 தமிழக இளைஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்கள்.
தோழர் தமிழரசன், தோழர் மாறன், தோழர் லெனின் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தமையும் தமது உயிர்களை அர்ப்பணித்தமையும் மறக்க முடியாதவை.
எல்லாவற்றுக்கும் மேலாக, சிவகாசியைச் சேர்ந்த தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்( செங்கண்ணன்) என்ற இளைஞன் கரும்புலியாய் தாக்குதல் செய்து மாவீரன் ஆகியுள்ளான். இவனது இந்த தியாகம் எத்தனை ஈழத் தமிழர்களுக்கு தெரியும்?
தொப்புள்கொடி உறவுகள் என்பதற்காக தாய்த் தமிழகம் இத்தனையும் செய்துள்ளது. உலக வரலாற்றில் வேறு எந்த இனமாவது இப்படி தமது உறவுகளுக்கு செய்திருக்குமா என்று நான் அறியவில்லை.
தாய் தமிழகத்திடம் பட்ட இந்த கடன்களை எப்படி திருப்பி அடைக்கப்போகிறோம் என்று தெரியவில்லை.
ஆகக்குறைந்தது இதை மறவாது நன்றியுடனாவது இருப்போம்.
இப்படிக்கு
ஒரு ஈழத் தமிழன்.
No comments:
Post a Comment