•குமாரணண்ணையின் மரணச் செய்தி!
பருத்தித்துறை ஓராம்கட்டையடியை பிறப்பிடமாகவும் இறுதியாக சென்னை கொட்டிவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குமாரண்ணை என அழைக்கப்படும் சூரியகுமார் கடந்த 25.06.2016 யன்று சென்னையில் காலமானார்.
நீரிழிவு நோயினால் சிறுநீரகம் செயலற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு குமாரண்ணை காலமானர் என நண்பர்கள் மூலம் செய்தி வந்துள்ளது.
காட்லிக்கல்லூரியில் கல்வி கற்ற குமாரண்ணை தனது நண்பன் அழகன் என்று அழைக்கப்பட்ட சந்திரகுமார் 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட செய்தி அறிந்து தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பில் சேர்ந்தார்.
வடமராட்சிப் பகுதியில் பேரவை அமைப்பில் பல இளைஞர்கள் சேர்வதற்கும் அமைப்பு நல்ல வளர்ச்சி பெறுவதற்கும் குமாரண்ணையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் பேரவை அமைப்பின் வடமராட்சிப் பொறுப்பாளராக செயற்பட்டார். அதன் பின் 1985ம் ஆண்டளவில் சென்னை சென்று கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்தார்.
தோழர் சண்முகதாசன் அவர்களின் சுயசரிதை நூலான “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” புத்தகத்தை 1990ம் ஆண்டு சென்னையில் நான் அச்சடித்தபோது அதற்குரிய முழு செலவு தொகையான இருபதாயிரம் ரூபாவை குமாரண்ணையே தந்து உதவினார்.
அதன்பின்னர் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது எனக்கு உடுப்பு பணம் என்பன தந்து உதவியதோடு எனது விடுதலைக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தான் செய்வேன் என அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கிறது.
நான் எனது 8 வருட சிறைவாழ்வை முடித்து வெளியேறிய போது என்னுடன் தொடர்பு கொண்டு அவர் பண உதவி செய்திருந்தது மறக்க முடியாததாகும்.
அவர் மரணமடைவதற்கு சில நாட்களின் முன்னர்கூட கனடாவில் இருந்து சென்ற என் நண்பர் ஒருவரிடம் எனது நலம் குறித்து அக்கறையாக விசாரித்திருக்கிறார்.
பல்வேறு நெருக்கடிகள் சிரமங்களுக்கு மத்தியிலும் அவர் தன்னால் இயன்ற உதவிகளை எமக்கு செய்தே வந்திருக்கிறார்.
பழகுவதற்கு இனிமையானவர். அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அவருடைய மரண செய்தி வேதனையளிக்கிறது.
அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment