இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழக எழுத்தாளர் இரா .பாரதி நாதன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தெற்காசியாவில், ஒரு பேட்டை ரவுடியாகவே இந்தியா பல ஆண்டுகளாய் இருந்து வந்துள்ளது என்பதற்கு நமது தோழர் பாலன் எழுதிய இலங்கையின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்ற இந்த நூல் ஆதாரத்துடன் நமக்கு விளக்கிச் சொல்கிறது.
இந்தியா ஒரு ஆக்கிரமிப்பாளன். அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளில் அதன் எஜமான ஏகாதிபத்திய விசுவாசம் அடங்கியிருக்கிறது. அதற்கான பெரிய வாய்ப்பாய் அது கருதியது ஈழ விடுதலைப் போராட்டத்தை என்று சொன்னால் மிகையில்லை.
போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி தருகிறேன் பேர்வழி என்று அது இலங்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது. இந்த கெட்ட எண்ணத்தை முதலில் அறிந்துக் கொண்டவர்கள் விடுதலைப் புலிகள் தான்.
திம்பு பேச்சுவார்த்தையில் இந்தியா நடந்துக் கொண்ட விதம் பிரபாகரனுக்கு அதன் நோக்கம் தெளிவாய் தெரிந்து விட்டது. அதனால் தான் அவர் இந்தியாவின் சமரச முயற்சி நாடகத்துக்கு செவி சாய்க்க மறுத்தார்.
பிரபாகரனை மற்ற போராளிக் குழுக்களைப் போல சரிக் கட்டி விடலாம் என மனப்பால் குடித்த அன்றைய பிரதமர் ராசீவ் காந்திக்கு பிரபாகரனின் கொள்கை உறுதி இடியாய் தாக்கியது. அதன் விளைவே இந்திய அமைதிப்படை ஈழத்தில்நுழைந்து நூற்றுக் கணக்கில் ஈழ மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்தது.
ஆனால், தன் முயற்சியில் மூக்கறுபட்ட இந்தியா இலங்கை முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தது.
இதற்கு, வாய்ப்பாய் அமைந்ததுதான் முள்ளி வாய்க்கால் படுகொலையும், இறுதிப் போரில் புலிகளை தோற்கடிக்க அது இலங்கைக்கு கொடுத்த நாசகார ஆயுதங்களும்.
இன்று இலங்கையின் நிலமையென்ன?
தன் கனவு நனவான கொக்கரிப்பில் இருக்கிறது இந்தியா.
தடபுடலாய் இந்திய தரகு முதலாளிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிறது சிங்கள பேரினவாத அரசாங்கம்.
புதிதாய் புகையிரத வழி தடங்கள் அமைப்பதில் தொடங்கி பல்வேறு தொழில் முதலீடுகளை இலங்கையில் குறிப்பாய் வடகிழக்கு மாகாணத்தில் செய்கிறது இந்தியா.
இதையெல்லாம் அம் மக்கள் பல்வேறு சனநாயகப் போராட்டங்கள் மூலம் எதிர்த்து வந்தாலும், சிங்கள அரசின் ஆதரவால் தைரியமாய் தனது திட்டங்களை நிறைவேற்றுகிறது இந்தியா.
அவை என்னென்ன? என்பதை புள்ளி விவரங்களோடு இந்த நூலில் சொல்கிறார் தோழர் பாலன்.
அவருக்கு என் பாராட்டுக்கள்.
இந்த நூலைப் பற்றி என் விமர்சனம் என்னவெனில், இலங்கையில் தன் ஆக்டோபஸ் கரங்களை வைத்திருக்கும் சீனாவைப் பற்றியும் சொல்லியிருக்கலாம் என்பதே.
ஒருவேளை, அதை தனி நூலாய் கொண்டு வர, தோழர் பாலன் நினைத்திருக்கலாம்.
செவ்வணக்கதுடன்
இரா.பாரதிநாதன்
No comments:
Post a Comment