•இன்று உலக புத்தக தினம் (23.04.2018)
“புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார்.
உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான் எனில் அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா
அது உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள்.
எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் புத்தக தினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில்; நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை.
அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது.
நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம்.
இதனை அறிந்த கியூ பிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள்.
இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது.
எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன்.
ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.
குறிப்பு- கீழே உள்ள படம் துறையூர் சிறப்புமுகாமில் இருந்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்துச் சென்றபோது எடுக்கப்பட்டது.(1994)
No comments:
Post a Comment