•சயிக்கிளை மறக்க முடியுமா?
இன்று சயிக்கிள் தினம் என்கிறார்கள்.
சயிக்கிள் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது? யாரால் கண்டு பிடிக்கப்பட்டது? என்று எனக்கு தெரியவில்லை.
ஆனால் இந்த சயிக்கிளைக் கண்டு பிடித்தமை உண்மையில் பாராட்டுக்குரியதுதான்.
கார் இருந்தால் ஆடம்பரமாக வாழலாம். ஆனால் சயிக்கிள் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்பார்கள். அது உண்மைதான்.
அனால் இன்றைய இளைஞர்கள் சயிக்கிளில் செல்வதைவிட மோட்டார் சயிக்கிளில் செல்லவே அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.
எனது சயிக்கிள் பயணம் கரவெட்டியில் இருந்து பருத்தித்துறையில் உள்ள காட்லிக்கல்லூரிக்கு செல்வதற்கு ஆரம்பித்தது.
பின்னர் இயக்க காலத்தில் பல தடவைகள் சயிக்கிள் மூலமே பருத்தித்துறையில் இருந்து சுண்டிக்குளம் ஊடாக விஸ்வமடு சென்று பின்னர் அங்கிருந்து இரணைமடு ஊடாக முழங்காவில் சென்று அதன்பின் மன்னார் முள்ளிக்குளம் வரை சென்றுள்ளேன்.
மட்டக்களப்பில்கூட சயிக்கிள் மூலமே படுவான்கரை பிரதேசங்கள் யாவும் சென்றிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்த காலங்களில்கூட வாடகைக் சயிக்கிளில் மடிப்பாக்கம், கொட்டிவாக்கம், வளசரவாக்கம் பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன்.
ஒருமுறை தோழர் தமிழரசனுடன் சயிக்கிளில் திட்டக்குடி செல்லும்போது வழியில் ஆற்றில் குளித்தது இன்னும் பசுமையான நினைவுகளாக உள்ளது.
தோழர் மாறனுடன் சயிக்கிளில் திருச்சி வீதிகளில் பயணம் செய்தமை மறக்க முடியாத அனுபவம்.
தோழர் நெப்போலியனுடன் சயிக்கிளில் பயணம் செய்துகொண்டே அரசியல் விவாதங்கள் செய்வது இனியான அனுபவம்.
இவை எல்லாம் இனி கிடைக்குமா என்று தெரியவில்லை. இனி எதிர்காலத்தில் இந்த சயிக்கிள் இருக்குமா என்றும் தெரியவில்லை.
ஆனால் எமது காலத்தில் பிரிக்க முடியாமல் எம்முடன் இரண்டறக் கலந்திருந்தது இந்த சயிக்கிள் என்பது உண்மை.
No comments:
Post a Comment