தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க
தனக்கென்று வாழ்ந்து
தனக்கென்று உழைப்பவன்
மனிதன்!
தன் வாழ்க்கையையும்
தன் உழைப்பையும்
பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்
-மாமேதை காரல் மார்க்ஸ்
ஆம். அண்மையில் மறைந்த எமது தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்.
தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர். தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படை அமைத்து பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்.
உலகிலே மிகப்பெரிய பதவி எது என்று என்னைக் கேட்டால் அது கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பதவிதான் அது என்பேன் என்று மாபெரும் ஆசான் தோழர் லெனின் ஒருமுறை கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டதைப் போன்று தோழர் சுந்தரம் அவர்களும் அந்த உயர் பதவியை தன் வாழ்நாளில் பெற்றிருக்கிறார். அவர் தமிழ்நாடு கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ) ல் உறுப்பினராக மட்டுமல்ல உன்னதமான தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்.
தோழர் சுந்தரம் அவர்களை நான் முதன் முதலாக 1984ம் ஆண்டளவில் பெண்ணாடத்தில் சந்தித்தேன். அப்போது அந் நகரில் புலவர் கலியபெருமாள் மற்றும் தோழர் தமிழரசன் ஆகியோரால் தமிழீழ ஆதரவு மாநாடு நடைபெற்றிருந்தது. இம் மாநாட்டிற்காக பெண்ணாடத்தில் கட்சி அலுவலகம் அமைத்திருந்தார்கள். அங்கேதான் புலவர் கலியபெருமாளை சந்திக்க சென்ற போது தோழர் சுந்தரத்தை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த முதல் சந்திப்பிலும் சரி அதன்பின்பு நடந்த அத்தனை சந்திப்புகளிலும் சரி அவர் எப்போதும் ஈழத்து போராட்ட விபரங்களையே பெரிதும் விரும்பி என்னிடம் கேட்பார்.
எமது அமைப்பு கேட்டுக்கொண்டபடி எமது தோழர்களுக்கு மாக்சிய அரசியல் கல்வி போதிப்பதற்கு புலவர் கலியபெருமாளும் தோழர் தமிழரசனும் சம்மதித்திருந்தனர். ஆரம்பத்தில் சில வாரங்கள் புலவர் வீட்டிலேயே எமது தோழர்கள் தங்க வைக்கப்பட்டு அரசியல் வகுப்புகள் நடைபெற்றன. ஆனால் எங்களால் புலவர் குடும்பம் மிகுந்த சிரமப்படுவதைக் கண்ட நாங்கள் எமக்கு தனியாக ஒரு இடம் அமைத்து தரும்படி தோழர் தமிழரசனிடம் கேட்டோம்.
நாங்கள் கேட்டுக்கொண்டபடி பெரம்பலூருக்கு அருகில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் எமக்கென தனியாக ஒரு முகாமை தோழர் தமிழரசன் உருவாக்கி தந்தார். அங்கு தோழர் தமிழரசன், தோழர் சுந்தரம் போன்றவர்கள் எமது தோழர்களுடன் தங்கியிருந்து மாக்சிய அரசியல் கல்வியை போதித்தார்கள். எனக்கு மட்டுமன்றி எனது தோழர்கள் அனைவருக்கும் தோழர் சுந்தரத்திடம் கற்றுக்கொள்வது மிகவும் விருப்பமாக இருந்தது. ஏனெனில் அவர் எப்போதும் சுருக்;கமாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுக்கும் வல்லமை பெற்றிருந்தார். எத்தகைய கேள்வி கேட்டாலும் சினந்து கொள்ளமாட்டார். பொறுமையாக புரியும்வரை பதில் தருவார். மாக்சிய சிந்தாந்தங்களில் தெளிவும் அதனை எமக்கு இலகுவாக புரிய வைப்பதில் திறமையும் அவர் கொண்டிருந்தார்.
நானும் எமது தோழர்களும் தோழர் தமிழரசனை பெரியவர் அல்லது பெரிய தோழர் என்று அழைப்போம். அதேபோன்று தோழர் சுந்தரத்தை தோழர் சு என்று அழைப்போம். தோழர் சுந்தரத்தின் உண்மையான பெயர் அன்பழகன் என்பது அவர் இறக்கும்வரை நான் அறியவில்லை. அதேபோல் அவரது குடும்ப விபரங்கள் பின்னணி என்பனகூட எமக்கு தெரியாது. அவரும் ஒருநாள்கூட எமது குடும்ப விபரங்கள் கேட்டது கிடையாது. எப்போதும் புரட்சி பற்றியே அவரது சிந்தனையும் உரையாடலும் இருந்திருக்கிறது. தோழர் தமிழரசன் புலவர் கலியபெருமாள் போன்றவர்கள்கூட தோழர் சுந்தரம் அவர்களிடம் பெரிதும் மதிப்பு மரியாதையும் கொண்டிருந்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
தோழர் சுந்தரம் எமது தோழர்களுடன் ஒன்றாக தங்கியிருந்த வேளைகளில் எல்லாம் மிகவும் சகஜமாக பழகுவார். சமையல் வேலைகளில் தானும் பங்கெடுப்பார். தோழர்களை அருகில் இருந்த மலை உச்சிக்கு அழைத்து சென்று சமையலுக்கு தேவையான விறகுகள் சேகரித்து வருவார். அவரே தனது தோளில் சுமந்து வருவார். எமது தோழர்களை கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று வறிய நிலையில் இருக்கும் மக்களுடன் தங்கி பழகவும் வாய்ப்பு எற்படுத்தித் தந்திருக்கிறார். எமது தோழர்களுக்கு மாக்சிய கல்வியை கற்றுத் தந்த அதேவேளை எமது தோழர்களிடமிருந்து அவர் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.
இவ்வாறான ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தோழர் சுந்தரம் தமது அமைப்பில் இருந்து ஒதுங்கி சென்றுவிட்டார் என்று தோழர் தமிழரசன் என்னிடம் கூறியபோது நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். என்னால் அதை நம்ப முடியவில்லை. மிகுந்த வேதனையுடன் “உண்மையாகவா?” என பலமுறை கேட்டுக் கொண்டிருந்தேன். நடந்த விடயங்களை விபரமாக கூறிய தோழர் தமிழரசன் இறுதியாக “ தோழர் சுந்தரம் நிச்சயம் திரும்பி வருவார்” என்று நம்பிக்கையுடன் கூறினார். தோழர் தமிழரசன் தோழர் சுந்தரம் மீது வைத்திருந்த அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தோழர் தமிழரசன் மரணமடைந்த பின்னர் அவரது பாதையில் தோழர் சுந்தரம் பயணிக்கிறார் என்ற செய்தி நான் மதுரை சிறையில் இருந்தபோது தோழர்கள் மூலம் அறிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது “தோழர் சுந்தரம் நிச்சயம் திரும்பி வருவார்” என்று தோழர் தமிழரசன் நம்பிக்கையுடன் கூறிய வார்த்தைகளை நினைத்துப் பார்த்தேன்.
நான் சிறையில் இருந்த காலங்களில் என்மீதான வழக்கின் நிமித்தம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் தோழர்கள் மூலம் பல்வேறு அமைப்புகளின் அரசியல் பணிகள் குறித்த செய்திகளை அறியும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. தோழர் சுந்தரம் மற்றும் லெனின் ஆகியோரின் அமைப்பு பணிகள் மற்றும் தாக்குதல் செய்திகளையும் அவ்வாறுதான் அறிந்துகொண்டேன்.
1991ல் ராஜீவ்; காந்தி மரணத்தையடுத்து தமிழகத்தில் ஒரு இருண்டகாலம் இருந்தது. ஜெயா அம்மையாரின் கொடிய ஆட்சி நடைபெற்ற காலம் அது. ஒருபுறம் தமிழகத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவு நிலை இல்லை என்று சொல்லிக்கொண்டு மறுபுறத்தில் ஈழத் தமிழர்களை ஆதரித்தவர்களையெல்லாம் கைது செய்து தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துக் கொண்டிருந்த காலம் அது.
இவ்வேளையில்தான் 1992ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி தோழர் சுந்தரம் மற்றும் லெனின் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையினர் ராஜீவ் காந்தியைக் கொன்ற போராளி தானுவிற்கு வீரவணக்கம் செலுத்தினார்கள். அதுமட்டுமன்றி அதே நாளில் விடுதலைப் புலிகள் மீதான தடையைக் கண்டித்தும் இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தைக் கண்டித்தும் கும்பகோணத்தில் உள்ள இந்திய அரசின் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையத்தையும் வெடிகுண்டு வீசி தாக்கினார்கள். இந்த செய்தி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை உருவாக்கியது. ஏனெனில் இதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கான தமிழகத்தின் ஆதரவை அவர்கள் வெளிப்படுத்தியதோடு ஈழத் தமிழர்களுக்காக தாக்குதல் நடத்தவும் தாங்கள் தயங்கமாட்மோம் என்ற செய்தியையும் இந்த சம்பவத்தின் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு தெரிவித்திருந்தார்கள். ஈழத் தமிழர்களுக்கு குறிப்பாக ஈழ அகதிகளுக்கு மிகவும் மகிழ்சியைக் கொடுத்த செய்தி மட்டுமல்ல மிகவும் நன்றியுடன் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய செய்தி இது.
ஏனெனில் இந்த காலகட்டத்தில்தான் ஜெயா அம்மையார் ஈழத் தமிழர்களை எல்லாம் பயங்கரவாதிகள் என்றும் ஈழ அகதிகளை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பாக வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளையாவது அந்தமான் தீவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயா அம்மையார் மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.
தோழர் சுந்தரத்தின் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது அவரது ஆரம்ப காலத்தில் இருந்து வெளிப்பட்டு வந்திருக்கிறது. 1983ம் ஆண்டளவில் ஜெயங்கொண்டம் என்னும் இடத்தில் முற்போக்கு இளைஞர் அணி சார்பில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் ஒன்றை தோழர் சுந்தரம் நடத்தியிருந்தார். அதில் அவர் எழுதி வெளியிட்ட துண்டறிக்கையில் “உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே தமிழ்நாட்டிலும் அண்டையில் ஈழத்திலும் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இந்த தமிழர்களுக்கெல்லாம் தனியாக ஒரு நாடு கிடையாது. தற்போது ஈழத் தமிழர்கள் தமிழ் ஈழம் என்கிற தனிநாட்டுக் கோரிக்கைக்காக போராடுகிறார்கள். அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறே அவர் ஈழத் தமிழருக்கான ஆதரவை தெரிவிக்கும் கடமையை இறுதிவரை உறுதியாக ஆற்றி வந்திருக்கிறார்.
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பில் இந்திய காங்கிரஸ் கட்சி அரசின் பங்கு யாவரும் அறிந்ததே. இந்த தமிழின விரோத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தடை செய்வதாக கூறி 1993ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் சேலம் மாவட்டம் ஆத்தூர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஆகிய பகுதிகளில் இருந்த காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்தனர் தோழர் சுந்தரம் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையினர். அதுமட்டுமன்றி விழுப்புரத்தில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் இருந்த காந்தி சிலையையும் அவர்கள் குண்டு வைத்து தகர்த்தனர். இந்த குண்டு தாக்குதல் வழக்கில் தோழர் சுந்தரம் தடா சட்டத்தின் கீழ் ஜந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.
அடுத்து 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் நாள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தை குண்டு வீசித் தாக்கினார்கள் தமிழ்நாடு விடுதலைப் படையினர். இதில் ஒரு பொலிஸ்காரர் பலியானார். விசாரணைக்காக அழைத்துச் சென்ற இருவரை அடித்துக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து விட்டார்கள் என்று பொய் கூறி அராஜகம் புரிந்த குள்ளம்சாவடி காவல்துறைக்கு பாடம் புகட்டுவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் தோழர் சுந்தரம் அவர்களுக்கு பத்தாண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
அடுத்து 1994ம் ஆண்டு மார்ச்சு மாதம் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்தச் செல்லப்பட்ட வசந்தா என்ற பெண்ணை பொலிசார் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துவிட்டு அப் பெண் தற்கொலை செய்து விட்டதாக நாடகமாடினார்கள். இதற்கு பாடம் புகட்டுவதற்காக குள்ளஞ்சாவடி காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த தமிழ்நாடு விடுதலைப்படையினர் திட்ட மிட்டனர். இதற்காக குண்டுகளை தயாரித்து எடுத்தச் சென்ற வேளையில்தான் எதிர்பாராதவிதமாக குண்டுகள் வெடித்து அதில் தமிழ்நாடு விடுதலைப் படைத் தளபதி தோழர் லெனின் மரணமடைந்தார்.
தளபதி லெனின் மரணம் அடைந்தது தலைவர் தோழர் சுந்தரத்திற்கு ஒரு பேரிழப்பாகும். ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் சிந்திய அந்த ரத்தம் வீண் போகவில்லை. ஆம். அவரது மரணத்திற்கு பின்னர் பல தீர மிக்க இளைஞர்கள் தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அவர்கள் நடத்திய தாக்குதல்கள் சிலவற்றின் விபரங்கள் வருமறு,
1995ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்த மயிலாடுதுறை அருகில் பூம்புகாரில் இருந்த சிறீராம் இறால் பண்ணை குண்டு வீசி அழிக்கப்பட்டது.
1995ம் ஆண்டு செப்டெம்பர் 17ம் திகதி காவிரி தண்ணீர் உரிமையை மறுத்த கர்நாடக மாநில அரசைக் கண்டித்து தமிழக எல்லைப் பகுதியில் இருந்த மின்சாரக் கோபுரம் குண்டு வீசி தகர்க்கப்பட்டு தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு செல்லும் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
1996ம் ஆண்டு மே மாதத்தில், தேர்தல் பாதை மூலம் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை வெளிப்படுத்தியும் நடைபெறும் தேர்தலை கண்டித்தும் விழுப்புரம் அருகில் பேரணி ரயில்நிலையமும் மயிலாடுதுறை தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையமும் குண்டு வீசி தாக்கப்பட்டது.
1997ம் ஆண்டு ஆண்டிமடம் காவல் நிலையம் தாக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்கள் யாவும் கைப்பற்றப்பட்டன.
நான் 30.04.1998 யன்று எனது எட்டு வருட சிறைவாழ்வை முடித்துக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறினேன். அன்று காலை மேலூர் சிறப்புமுகாமில் இருந்து விமான நிலையத்திற்கு என்னை அழைத்துச் செல்வதற்காக பொலிசார் வந்திருந்தபோது எனக்கு ஒரு தந்தி வந்திருப்பதாக மேலூர் தாசில்தார் கூறினார். பயணம் போகும் இந்த நேரத்தில் என்ன தந்தியாக இருக்கும் என குழம்பிய நிலையில் தந்தியை பிரித்து பார்த்தேன். அதில் “உங்கள் பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.. இப்படிக்கு, திருச்சி சிறைவாசி தோழர் சுந்தரம்” என்று அதில் இருந்தது.; அண்மையில் தோழர் சுந்தரம் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பத்திரிகைகள் மூலம் அறிந்திருந்தேன். அவருடன் எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்று விரும்பியிருந்தேன். ஆனால் அவரே நான் பயணம் போகும் செய்தி அறிந்து எனக்கு வாழ்த்து தந்தி அனுப்புவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
நான் லண்டன் வந்தபின்பு அவருடன் தொடர்பு கொள்ள பல வழிகளில் முயன்றேன். ஆனால் முடியவில்லை. இறுதியாக அவர் சிறையில் இருந்து வெளியே வந்தபின்பு என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பல வருடங்களின் பின்பு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தபோது உண்மையில் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தோழர் தமிழரசன் பற்றி நான் எழுதும் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலுக்கு அவரிடமே அணிந்துரை வாங்கவும் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கிடையில் அவருடைய மரண செய்தி வரும் என்று நான் நினைக்கவேயில்லை.
கடந்த 09.06.17 யன்று வழக்கம்போல் காலையில் சிறிது நேரம் செய்திகள் படித்தக் கொண்டிருந்தேன். அப்போது முகநூலில் தோழர் ஒருவர் சுந்தரம் தோழரின் மரண செய்தியை பகிர்ந்திருந்தார். இது ஒரு தவறான செய்தியாக இருந்துவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் அதற்குள் பல தோழர்களும் இச் செய்தியை பகிர்ந்து அது உண்மைதான் என என என்னை உணர வைத்துவிட்டனர்.
புரட்சிகர பயணத்தில் இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான். ஆனால் தோழர் சுந்தரத்திற்கு இந்தளவு விரைவாக மரணம் எற்படும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவரது உழைப்பும் அனுபவமும் இன்னும் சில வருடங்களுக்காவது தமிழ் மக்களுக்கு பயன்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்தது.
உலகில் மிகவும் கொடியது எதுவென்று என்னிடம் கேட்டால் எம்முடன் பழகியவர்கள் பற்றி அவர்கள் இறந்தபின்பு அஞ்சலிக் குறிப்பு எழுத நேருடுவது என்றே நான் கூறுவேன். உண்மைதான். என்னுடன் நன்கு தோழமையுடன் பழகிய தோழர்கள் தமிழரசன், புலவர் கலியபெருமாள், மாறன். போன்றவர்கள் பற்றி எழுத நேர்ந்தபோதெல்லாம் இதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்போது தோழர் சுந்தரம் பற்றி எழுதும்போதும் அத்தகைய உணர்வையே பெறுகிறேன். ஒருபுறம் அவர்களுடன் பழகிய அனுபவங்கள் மகிழ்வையும் பெருமிதத்தையும் தரும் அதேவேளை மறுபுறம் அவர்களுடைய நினைவை எழுதுவது என்பது மனதிற்கு மிகவும் கொடுமையாக இருக்கிறது.
“வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல் கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறே இல்லை” என்றார் புரட்சியாளர் லெனின்.
“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்றார் தோழர் மாசேதுங்
“.அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்றார் தோழர் சண்முகதாசன்.
இந்த மாக்சிய ஆசான்கள் கூறியபடியே தோழர் சுந்தரம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப்பாதையை முன்னெடுத்தார். அதனால்தான் இந்திய மத்திய மாநில அரசுகள் அவரை நக்சலைட்டு பயங்கரவாதி என்று முத்திரை குத்தின. தங்களைத் தாங்களே மாக்சியவாதிகள் என்றழைத்த திரிபுவாதிகளும் சந்தர்ப்பவாதிகளும் அவரை “இடது தீவிரவாதி” என்றார்கள். ஆனால் தோழர் தமிழரசன், சுந்தரம் போன்றவர்கள் முன்னெடுத்த பாராளுமன்ற பாதையை நிராகரித்த ஆயுதப் போராட்ட பாதையே சரியென்பதை வரலாறு நிரூபிக்கின்றது.
இந்தியாவில் கம்யுனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதும் ரஸ்சியாவில் நடந்ததுபோல், சீனாவில் நடந்தது போல் இந்தியாவிலும் புரட்சி நடந்துவிடும் என புரட்சியாளர்கள் நம்பினார்கள். ஆனால் நீண்டகாலமாக கம்யுனிஸ்ட் கட்சி இருந்தும் எதிர்பார்க்கப்பட்ட புரட்சி நடைபெறவில்லை. விளைவு இந்திய கம்யுனிஸ் கட்சி உடைந்து மாக்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி பிறந்தது. பின்னர் அதில் இருந்து நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. அதுவும் பல கூறுகளாக பின்னர் உடைந்தது. அவ்வாறு உடைந்த கூறுகளில் இருந்துதான் தமிழ்நாட்டில் தமிழ்தேசிய இன விடுதலையை முன்வைத்த அரசியல் பிறந்தது. இந்த அரசியலை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தவர்களான தோழர்கள் தமிழரசன், புலவர் கலியபெருமாள், சுந்தரம் போன்றவர்கள் அதற்கு அவசியமான கம்யுனிஸ்ட் கட்சியையும் விடுதலைப் படையையும் கட்டுவதில் முன்நின்றார்கள். அத்தகைய வரலாற்று பாத்திரத்தை நிறைவேற்றுவதாகவே அவர்கள் வாழ்வு இருந்துள்ளது.
தோழர் சுந்தரம் மாக்சிச லெனிய மாவோயிச சிந்தனைகளை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப்பாதையை மேற்கொண்டார். எனவே தோழர் சந்தரத்தின் மறைவு என்பது உலகில் உள்ள புரட்சியாளர்கள் அனைவருக்கும் இழப்பாகும்.
தோழர் சுந்தரம் தமிழக மக்கள் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெற தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தார். தமிழ்நாடு விடுதலை பெற தமிழ்நாடு விடுதலைப்படையை அமைத்து போராடினார். எனவே தோழர் சுந்தரம் மறைவு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும்.
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்தவர். ஈழத் தமிழர்களுக்கு அதரவாக இந்திய அரசுக்கு எதிராக வெடி குண்டு வீசி எச்சரித்தவர். நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் அதரவை வெளிப்படுத்தியவர். அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை உச்சரிக்க ஈழ ஆதரவுத் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், திருமாவளவன் போன்றவர்கள் தவறலாம் அல்லது தவிர்க்கலாம்.
அதுபோல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொறிப்பதற்கு நெடுமாறன் அய்யா தயங்கலாம்; அல்லது தவிர்க்கலாம்.
ஆனால் தமக்காக குரல் கொடுத்த தோழர் சுந்தரத்தை ஈழத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் தங்கள் மனங்களில் நினைவு கூருவர்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தோழர் சுந்தரத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
தோழர் சுந்தரம் பழகுவதற்கு இனிமையான ஒரு தோழர். அவருடன் பழகிய நினைவுகள் மற்க்க முடியாதவை. தோழராக அவருடைய மரணம் என்பது எனக்கும் ஒரு பேரிழப்பாகவே உணர்கிறேன். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எனது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment