•“மாமனிதர்”களைப் பெற்ற மகராசிகள்!
ஒரு பெண்ணுக்கு பிரசவ வலியைவிடக் கொடுமையானது தான் பெற்ற மகனை பிணமாக பார்ப்பது.
இது எந்தளவு கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தவர்கள் ஈழத் தமிழர்கள். ஏனெனில் ஈழத்தில் பல தாய்மார்கள் தாம் பெற்ற பிள்ளையை பிணமாக கண்டவர்கள்.
தோழர் சுந்தரத்தின் தாயாரும் தன் மகன் மற்றவர்கள் போல் படித்து கடைசிக் காலத்தில் தன்னை கவனிப்பார் என நிச்சயம் நினைத்pருப்பார்.
ஆனால் தன் மகன் போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டான் என்று அறிந்ததும் தன்னைப் பார்க்காவிட்டாலும் எங்கிருந்தாலும் நலமாக இருக்கட்டும் என்றே அந்த தாய் மனது நினைத்திருக்கும்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடம் சிறை வாழ்க்கை. தன் மகனின் இந்த துயர வாழ்க்கையை எந்த தாயாலும் சகித்திருக்க முடியாது.
இருந்தும் தன் மகன் என்றாவது ஒரு நாள் தன்னிடம் திரும்பி வருவான் என்ற அந்த நம்பிக்கையே அந்த தாயை இதுவரை உயிருடன் இருக்க உதவியிருக்கும்.
ஆனால் தனது மகன் பிணமாக வீட்டுக்கு வருவான் என அந்த தாய் நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
ஆம். தோழர் சுந்தரம் பிணமாகவே 10.06.17யன்று தன் முன்னாடி வந்த கொடும் துயரத்தை அந்த தாய் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்தவர் தோழர் தமிழரசனின் தாயார். இவர் தன் வறுமை நிலையிலும் மகனை பொறியல் கல்வி கற்க வைத்தார்.
ஆனால் மகன் தமிழரசனோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மக்களுக்காக போராடுவதற்கு போய்விட்டார்.
ஒருபுறம் தன் மகன் இப்படி போய்விட்டானே என்ற கவலை . மறுபுறம் மகனை தேடி வந்த பொலிசார் கொடுத்த துன்பம்.
இருந்தாலும் அந்த தாய் தன் மகன் தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால் தன் மகன் பொலிசாரினால் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட பிணமாக கொண்டு வந்து தருவார்கள் என அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்கமாட்டார்.
தன் மகன் இறந்ததைக்கூட அந்த தாயால் சகித்திருக்க முடியும். ஆனால் “மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரவாதி” என்ற அவப் பெயருடன் கொடுத்ததை எப்படி அந்த தாயால் தாங்கியிருக்க முடியும்?
தோழர்கள் தமிழரசன் மற்றும் சுந்தரம் ஆகியோர் மாமனிதர்கள் என்பதை இப்போது வரலாறு ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் இந்த மாமனிதர்களைப் பெற்ற மகராசிகளை வரலாறு நினைவில் வைத்துக்கொள்ளுமா?
மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல் போன்று இவர்களுடைய கதையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறுமா?
No comments:
Post a Comment