•தமிழ் முஸ்லிம் இன மக்களின் ஜக்கியம்
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மிக அவசியம்!
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு மிக அவசியம்!
ஒரு நாட்டில் பெரும்பான்மை இனத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக சிறுபான்மை இனம் போராடும்போது இரண்டாவது சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்தின் செல்லப் பிள்ளையாக இருக்கும்- தோழர் லெனின்
ஆம். இலங்கையில் சிங்கள இன ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் இன மக்கள் போராடிய போது முஸ்லிம் இன மக்கள் இலங்கை அரசின் செல்லப் பிள்ளையாக இருந்தது.
முஸ்லிம் இனம் தமிழ் மக்களுடன் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசால் பல அமைச்சு சலுகைகள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமன்றி தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையே கலவரங்களும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.
இதைப் புரிந்துகொண்டு முஸ்லிம் இனத்தை வென்றெடுக்க தமிழ் போராட்ட தலைமைகள் கடந்த காலங்களில் தவறிவிட்டன.
பொது எதிரிக்கு எதிராக ஜக்கியப்படுத்தக்கூடிய சக்திகள் அனைத்தையும் ஜக்கியப்படுத்துவதிலேதான் போராட்டத்தின் வெற்றி தங்கியுள்ளது என்று தோழர் மாசேதுங் கூறினார்.
அதேபோன்று சிங்கள இன ஒடுக்கு முறைக்கு எதிராக ஜக்கியப்படுத்தக்கூடடிய முஸ்லிம் இன சக்தியை ஜக்கியப்படுத்துவதில் தமிழ் சக்திகள் தவறிவிட்டமை போராட்டத்தில் வெற்றி பெறாமைக்கு ஒரு காரணமாகும்.
இலங்கையில் முதல் இனக் கலவரம் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே நடைபெற்றது. தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் சிங்கள இன ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால்தான் தமிழரசுக்கட்சி சார்பாக தந்தை செல்வா சத்தியாக்கிரக போராட்டம் அறிவித்த வேளை கல்முனையில் அதிகளவான முஸ்லிம் மக்கள் அதில் பங்கு பற்றியிருந்தனர்.
அதன்பின்பு தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வேளையிலும் அதிலும் பல முஸ்லிம் இளைஞர்கள் பங்கெடுத்து வீர மரணம் அடைந்துள்ளார்கள்.
தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தமிழீழ தீர்வானது முஸ்லிம் மக்களை மட்டுமல்ல மலையக தமிழ் மக்களையும் வென்றெடுக்க தவறிவிட்டது.
இருந்தபோதும் முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்தை எதிர்க்கவில்லை. ஆரம்ப காலங்களில் பல பங்களிப்புகளை வழங்கியிருந்தனர்.
இருந்தும் பேரினவாதத்தின் சதியை இனங்காண தமிழ் போராட்ட தலைமைகள் தவறியதால தமிழ் முஸ்லிம் ஜக்கியம் ஏற்படாமல் போய்விட்டது.
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் அழுத்கமவில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா மேற்கொண்ட வன்முறையினால் மீண்டும் தமிழ் முஸ்லிம் ஜக்கியம் எற்பட வழிசமைத்தது.
இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து தன்னைத் தோற்கடித்து விட்டதாக தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ச புலம்பியதை யாவரும் அறிவர்.
எனவே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஜக்கியத்தை மகிந்த ராஜபக்ச மட்டுமன்றி இன்றைய ஆட்சியாளரும் விரும்பவில்லை.
இலங்கை ஆட்சியாளர்களின் பங்காளிகளான தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஜக்கியத்தை விரும்புவதில்லை.
ஏனெனில் இவர்கள் மக்களை இனவாதத்தின் மூலம் பிரித்து வைத்து அதன் மூலம் தாங்கள் பதவிகளை எப்போதும் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள்.
இவர்களைவிட முக்கியமான மூன்றாவதாக ஒரு சக்தி உண்டு. அதுதான் இந்திய சக்தி. அதுவும் இன்று இந்த மக்களிடையே பிரிவினையை உருவாக்க முயலுகிறது.
இந்திய உளவுப்படையால் அனுப்பப்பட்ட “ஈழத்து சிவசேனா” வடமாகாணத்தை விட கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவு கவனம் செலுத்துகிறது.
வெகுவிரைவில் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் - முஸ்லிம் இனக் கலவரத்தை உருவாக்க அது முயல்கிறது.
கிழக்கு முhகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஜக்கியப்டாமல் பிரித்து வைத்தால் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்து அதன் வளங்களை சுரண்ட முடியும் என இந்திய அரசு நினைக்கிறது.
அண்மையில் கிழக்குமாகாணத்தில் சம்பூரில் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மூவின மக்களும் ஜக்கியப்பட்டு போராடி தமது நிலத்தைப் பெற்றதை இந்திய அரசு தனக்கு பெரும் அச்சுறுத்தலாக கருதுகிறது.
எனவேதான் அந்த ஜக்கியத்தை குழப்புதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே கலவரங்களை உருவாக்க அது சதி செய்கிறது.
எனவே தமிழ் மக்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் இலங்கை இந்திய அரசுகளின் சதிகளுக்கு பலியாகக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
அதுமட்டுமன்றி, முஸ்லிம் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களில் எமக்கு ஆதரவான முற்போக்கு சக்திகளையும் வென்றெடுக்காதவரை போராட்டத்தில் வெற்றி பெற முடியாது என்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவோ அல்லது அமெரிக்கா மற்றும் லண்டனோ அல்லது ஜ.நா யார் வந்தாலும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் ஆதரவு இன்றி எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment