•மறைந்த தோழர் சுந்தரம் அவர்களுக்கு
ஈழத் தமிழர்கள் சார்பாக செவ் வணக்கம் !
ஈழத் தமிழர்கள் சார்பாக செவ் வணக்கம் !
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்த தோழர் சுந்தரம் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி அறிய கிடைத்துள்ளது.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் 10 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. தோழர்கள் தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றவர்களுடன் ஆரம்பித்த போராட்ட வாழ்க்கை.
தோழர் தமிழரசன் மரணத்திற்கு பின் கட்சியின் தலைமை ஏற்று தளபதி தோழர் லெனின் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டு தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
பல காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் மற்றும் வெடிகுண்டு வழக்குகள் என பல எண்ணற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.
1984ம் ஆண்டளவில் பெரம்பலூருக்கு அருகில் மலையாழப்பட்டி என்னும் இடத்தில் முகாமிட்டிருந்த எமது பேரவை தோழர்களுக்கு மாக்சிய அரசியல் கல்வியை அவர் போதித்தார்.
பின்னர் 1997ம் ஆண்டு 8 வருட சிறை வாழ்வின் பின் நான் விடுதலை ஆகும் தருணத்தில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நான் விமான மூலம் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவதை அறிந்த அவர் எனது பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாக தந்தி கொடுத்திருந்தார்.
இறுதிக் காலங்களில் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். இனி அவர் தொலைபேசி இலக்கம் மட்டுமே இருக்கும் ஆனால் தொடர்பு கொள்ள அவர் இல்லை என்பது மிகவும் கவலை தருகிறது.
தோழர் தமிழரசன் குறித்து நான் எழுதி வரும் நூலுக்கு அவரிடமே அணிந்துரை வாங்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். ஆனால் அவரது மரண செய்தி வரும் என்று கொஞ்சம்கூட நான் எதிர்பார்ககவேயில்லை.
பழகுவதற்கு மிகவும் இனிமையான தோழர். அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்.
அவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
No comments:
Post a Comment