இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த தோழர் தமிழ் முகிலன் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
இந்திய ஆக்கிரமிப்பை உடைத்தெறிவோம்
உடைமையின் விளைபொருள் அதிகாரம். அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்து பிறக்கிறது.
இம்மண்ணில் இதுவரை நடந்த போர்கள் எல்லாம் பொருளியல் சார்ந்தவையே. போர்கள் மட்டமன்று அமைதிப் பேச்சுகளும் பொருளியல் தேவையை நிறைவு செய்வதையே நோக்கமாகக் கொண்டவையே.
இதற்கு நம் கண்முன் கண்ட எடுத்துக்காட்டு தமிழீழப் போர்.
சின்னஞ்சிறு தீவில் உலக வல்லரசுகள் தம் நலனுக்காக விளையாடி விளையாட்டில் இன்று ஈழத்தமிழினம் உலகம் முழுவதும் சிதறிப் போயிருக்கிறது.
தாய்மண்ணிலேயே இருந்தவர்கள் கொத்துக் கொத்தாகச் செத்துப் போயினர். வதைமுகாம்களிலும் பகைமுகாம்களிலும் பரிதவிக்கின்றனர்.
அந்தத் தீவின் அரசியலில் இந்தியத் துணைக்கண்டத்தின் அத்துமீறல் என்பது நரசிம்மப் பல்லவன் காலத்தில் தொடங்குகிறது.
மானவர்மனுக்காக தலையிட்ட நரசிம்மனின் அரசியல் வேட்கை எதுவாக இருக்கும் என்று நாம் அறியவில்லை.
ஆனால் இன்றைய இந்திய அரசின் தலையீடுகள் அனைத்தும் வட இந்தியப் பார்ப்பன-பனியாக் குழுக்களின் நலன் சார்ந்தவையே என்பதை நாம் கண்முன்னே கண்டு வருகின்றோம்.
83ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலையைத் தொடர்ந்து தமிழகத் தமிழர்களில் பலரும் இந்திய அரசு தமிழர்களைக் காக்க இந்தியப் படையை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்திய அரசு வங்காள தேசத்தை உருவாக்கியது போல தமிழீழத்தையும் உருவாக்க வேண்டுமென்று விரும்பினர்.
இந்தியாவிற்கு அடங்கிய தமிழீழத்தை உருவாக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு எழாத போது அக்கோரிக்கைக்கு இந்திய அரசு தலைசாய்க்குமா?
இருக்கின்ற சிங்கள அரசே இந்தியாவின் அடிவருடி அரசுதான் என்ற நிலையில் தமிழர்களின், ஏன் சிங்கள மக்களின் நியாயமான உரிமைக் குரல்களுக்குக் கூட செவிசாய்த்திடாதே இந்திய அரசு.
இது புரியாமல் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை எல்லாம் படையை அனுப்பு என்று கோரிக்கை வைத்தனர்.
ஆனால்,
‘தமிழீழம் விடுதலையடையவது ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும், இந்தியாவிற்கும் பிடித்தமான காரியமல்ல. இலங்கை ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பது இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் இவர்களின் எஜமானர்களான ரஷ்ய சமூக ஏகாதிபத்தியத்திற்கும் அவசியமாகிறது’
என்றும்
‘தமிழ்த் தரகு முதலாளிகள், நிலப்பிரபு உட்பட சிங்கள தரகு முதலாளி நிலப்பிரபு வர்க்கங்களும், அந்நிய ஏகாதிபத்தியங்களுமே தமிழீழ விடுதலையின் எதிரிகள். அவர்களின் பிரதிநிதிகளான ஜெயவர்த்தனே கும்பல், அமெரிக்க ஏகாதிபத்தியம், ஸ்ரீமாவோ கும்பல், இந்திய அரசு, ரஷ்ய ஏகாதிபத்தியம் போன்ற சக்திகளே எதிரிகள். தமிழீழ விடுதலை இலங்கை தமிழ் மக்களின் சொந்த போராட்டத்தின் மூலமே வெற்றி பெற இயலும். தமிழ்நாட்டு மக்களும், இந்திய மக்களும்தான் உண்மையான ஆதரவு தருபவர்கள்’
என்றும் அறிக்கை முன் வைத்து1984 மே மாதம் 5, 6 நாள்களில் பெண்ணாடத்தில் ‘தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு’, ‘இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு’ நடத்தி அம்மாநாட்டின் நிறைவில் முதல் தீர்மானமாக,
பாலஸ்தீன தனிநாடு கோரிக்கையை அங்கீகரித்த இந்திய அரசு ‘தமிழீழத்தை தனிநாடாக’ அங்கீகரிக்க வேண்டும். இந்திய ராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிப்பு செய்ய முனைவதைத் தவிர்க்க வேண்டும்.
என அறிவித்தார் தோழர் தமிழரசன்.
இந்திய அரசு சிங்கள அரசைத் தன் கைப்பாவையாகவே வைத்துக் கொள்ள தமிழீழச் சிக்கலைக் கையாளுகிறது என்பதையும் தம் படையை தமிழீழ மண்ணுக்கு அனுப்ப எண்ணியே அதற்கு ஒரு கருத்தியல் ஆதரவை தமிழர்களிடம் உருவாக்கவே படையை அனுப்பு என்று அரசியல் கட்சிகளை முழங்க வைத்தது என்பதை முன்னறிந்தே இந்திய ஆக்கிரமிப்பைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார் தமிழரசன்.
ஆனாலும் தமிழீழத்திற்கு இந்தியப்படை சென்றது. தமிழர்களைக் கொன்றது. சிங்கள நலனுக்காக இந்தியப் படை வந்தது என்று தமிழர்களும், தமிழர்களைக் காக்க இந்திய ஆக்கிரமிப்பு படை வந்தது என்று சிங்களர்களும் இந்தியப் படையை எதிர்த்தனர்.
ஒப்பந்தம் செய்த இராசீவ்காந்தி சிங்களச் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கிக் கட்டை கொண்டு தாக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது.
ஆனாலும் இந்தியப் படை தாம் எண்ணியதை நிறைவேற்ற இலங்கை மண்ணில் இருந்தது. இன்று தான் நினைத்ததை நடத்தி முடித்து வெற்றிக் களிப்பில் இலங்கையை சுரண்டிக் கொண்டிருக்கிறது.
தோழர் தமிழரசன் முன்னறிந்து சொன்னதற்கு கால் நூற்றாண்டுக்குப் பின் எம் தோழர் பாலன் அவர்களால் வெளியிடப்பட்ட நூல் ‘இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு’.
இலங்கையின் கனிவளங்கள், வணிக வளங்கள், உள் கட்டமைப்பு, நில வழங்கல்கள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் இந்திய அரசு ஏன் இருதரப்பின் எதிர்ப்பிற்குப் பின்னும் இலங்கையில் தலையிடுகிறது என்ற உண்மையை உணர வைத்திருக்கிறார் தோழர் பாலன்.
இலங்கையில் இந்தியாவின் அரசியல் தலையீடு, பொருளியல் தலையீடு, இராணுவத் தலையீடு என்று பகுத்துக் கொண்டு விரிவாகப் பேசுகிறார் தோழர் பாலன்.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் நலன் பறிப்பு, சிறிமாவோ – சாத்திரி ஒப்பந்தம், 71இல் நடந்த சிங்களப் புரட்சியாளர்கள் படுகொலை போன்ற அனைத்திற்கும் காரணம் என்ன என்று விளங்க வைக்கிறது இந்நூல்.
வங்கதேசம் போன்றதொரு அடிமைத் தேசமாகத் தமிழீழம் அமையப்போவதுமில்லை. இன்றைய சிங்கள அரசு இந்தியாவிற்கு எதிராக இருக்கப் போவதுமில்லை.
எனவே தமிழீழத்தை இந்திய அரசின் துணையோடு நிறுவ முடியும் என்று யார் எண்ணினாலும் அவர்களுக்குத் தோல்வியே.
தமிழக மக்களின், இந்தியாவால் ஒடுக்குண்டு கிடக்கும் ஏனைய தேசிய இன மக்களின் ஆதரவோடு தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப் போரே வெற்றியடையும்.
அடுத்தகட்ட ஈழ விடுதலைப்போர் இந்த அரசியல் புரிதலோடு நடைபெறும் என்று நம்புவோம்.
அத்தகைய புரிதலை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த நூலை யாத்த தோழர் பாலன் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.
நன்றி தோழர்.
உழைக்கும் மக்களின் விடுதலைப் போரில் ஒன்றிணைவோம்
No comments:
Post a Comment