•“போராட்டம் இன்பமயமானது. சிறை அதனினும் இன்பமயமானது” – தோழர் செந்தமிழ் குமரன்.
போராட்டம் இன்பமயமானது என்று மாபெரும் ஆசான் கால் மார்க்ஸ் கூறினார்.
“போராட்டம் இன்பமயமானது. சிறை அதனினும் இன்பமயமானது” என்று சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள தமிழ்தேச மக்கள் கட்சி தோழர் செந்தமிழ் குமரன் கூறியுள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள ஒரு தோழா, “சிறை இன்பமயமானது” என்று கூறுவது தமிழக அரசுக்கும் அதன் காவல்துறைக்கும் கொடுத்திருக்கும் மிகப் பெரிய சாட்டையடி.
ஏனெனில் சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் இன உணர்வாளர்களை அடக்கிவிட முடியும் என ஜெயா அம்மையாரின் காவல்துறை கனவு காண்கிறது.
சிறையில் இருந்து விடுதலையாகி வந்துள்ள தோழர் செந்தமிழ்குமரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கைளைத் நான் தெரிவித்தபோது அவர் கூறியதாவது,
“ஏற்கனவே ஈழ அகதிகள் வதைமுகாமாக இருந்ததுதான் தற்போது சிறையாக மாறியுள்ளது. அங்கு போராடிய சித்தரவதைக்குள்ளான பல ஈழ உறவுகளின் நினைவுகள் மனதில் வந்து சென்றது. குறிப்பாக 2010 ல் செங்கல்பட்டு முகாமில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு சம்பவமும் இடமும் அவர்கள் கடிதத்தில் எமக்கு விளித்ததை மனதில் வைத்து தோழர்களிடம் கூறினேன். குறிப்பாக முகாமிலும் சிறையிலும் 8 ஆண்டுகள் வாடிய உங்கள் நினைவுகள் என ஒவ்வொரு நாளையும் போராட்ட உணர்விலேயேக் கழித்தோம்”.
ஆம். தோழர் செந்தமிழ்குமரன் அவர்களின் வரிகள் அவருடைய உணர்வுகளை அழகாக காட்டுகின்றன. ஈழத் தமிழர் மீது அவரும் அவருடைய கட்சியினரும் கொண்டுள்ள உறுதியான ஆதரவைக் காட்டுகின்றன.
இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் தோழர் செந்தமிழ்குமரனும் அவரது தோழர்களும் சிறையில் வாடிய போது அவர்களை விடுதலை செய்யும்படி ஈழத் தமிழ் அமைப்புகள் எவையும் கோரவில்லை.
மாறாக காசிஆனந்தன் போன்றோர் தோழர் செந்தமிழ்குமரனை; போன்ற ஈழ ஆதரவு உணர்வாளர்களை சிறையில் அடைத்த ஜெயா அம்மையார் நலம் வேண்டி அறிக்கை விட்ட அவலம் நிகழ்ந்தது.
இதேவேளை, தோழர் தமிழரசன் பாதையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து மதுரை சிறையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ஜாமீன் விடுதலைகூட மறுக்கப்பட்ட நிலையில் உள்ள ஜந்து தோழர்களையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தோழர் செந்தமிழ் குமரன் உட்பட்ட தமிழ்தேசமக்கள் கட்சி தோழர்களின் உணர்வுகளை பாராட்டி ஈழத் தமிழர்கள் சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒன்றிணைவோம். ஒருமித்து போராடுவோம்.
No comments:
Post a Comment