Saturday, November 30, 2013

“புரட்சிப் புயல்” வைகோ அவர்களுக்கு!

• மதிப்புக்குரிய “புரட்சிப் புயல்” வைகோ அவர்களுக்கு!
ஒரு ஈழத் தமிழன் பணிவுடன் எழுதும் மடல்.

உங்கள் தேர்தல் அரசியலுக்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டு வைக்கலாம். பதவியைப் பிடிப்பதற்கான் ஓட்டு அரசியல் அது என புரிந்து கொள்கிறோம். ஆனால் உங்கள் அரசியல் நலனுக்காக பி.ஜே.பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சி என்றோ அல்லது பி.ஜே.பி பதவிக்கு வந்தால் ஈழம் மலரும் என்றோ எங்களை வைத்து தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பி.ஜே.பி ஆட்சியில் இருந்த போது தமிழீழத்தை பெற்று தரவில்லை. ஏன் இன்றும்கூட அது தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்றோ அல்லது போர்க் குற்றம் என்றோ இது குறித்து மகிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக அக் கட்சி தலைவர்கள் கொழும்பு சென்று மகிந்தவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசு பெற்று வருகின்றனர்.

• நீங்கள் இப்போது அடிக்கடி புகழும் வாஜ்பேயின் பொற்கால ஆட்சியின்போது யாழ்பாணம் புலிகளால் முற்றுகை இடப்பட்டதும் 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்களை அந்த வாஜ்பேய் அரசே காப்பாற்றியது என்பதும் தாங்கள் அறிந்ததே. அப்படியிருக்க அவருடைய ஆட்சியை எப்படி உங்களால் புகழ முடிகிறது?

• அவருடைய ஆட்சிக்காலத்தில் சிங்கள ராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சி கொடுத்தது. அதற்காக அவரது ஆட்சி சிறந்த ஆட்சி என்கிறீர்களா?

• அவருடைய ஆட்சிக்காலத்தில் இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு செய்த பாரிய ஆயுத உதவிக்காகப் பாராட்டுகிறிர்களா? தமிழர்களைக் கொல்ல இந்திய அரசு ஆயுதம் வழங்கிய ஆட்சி எப்படி சிறந்த ஆட்சியாக உங்களால் கருதப்படுகிறது?

• புலிகளின் ஆயுதக் கப்பலை சர்வதேச எல்லைக்குள் வைத்து தாக்கியழித்தமைக்காகப் பாராட்டுகிறீர்களா?

• தமிழ்நாட்டில் பல அகதிகளை புலிகள் என்று பிடித்து சிறையில் அடைத்தார்களே. அதற்காக பாராட்டுகிறீர்களா? அல்லது புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தொடர்ந்து தடை செய்து வந்தமைக்காகப் பாராட்டுகிறீர்களா?

• இன்றும்கூட சிறப்பு அகதிகள் முகாம் இருக்கிறதே. அதையும் மூடாமல் பராமரித்தார்களே. அதற்காகப் பாராட்டுகிறீர்களா?


இத்தகைய தமிழர் விரோத பி.ஜே.பி யை ஆதரிப்பதும் அது ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை செய்யும் என்றும் கூறுவதும் தமிழ் மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல சுத்த அயோக்கியதனமும் ஆகும்.

இறுதியாக உங்களிடம் நாம் கேட்பது என்னவெனில் உங்கள் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு ஈழம் மலராவிட்டாலும் பரவாயில்லை தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்து கொடிய சிறப்பு முகாம்கள் மூடப்படும் என்றாவது உங்களால் உறுதிமொழி தரமுடியுமா?

குறிப்பு- காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டினதும் வெளியுறவுக் கொள்கை ஒன்றுதான். இவையிரண்டும் ஒருபோதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை.

உங்களுக்கோ அல்லது உங்கள் கட்சியினருக்கோ எம்.பி பதவியோ அல்லது அமைச்சுப் பதவியோ வேண்டுமானால் தாராளமாக நீங்கள் பி.ஜே.பி கட்சியுடனும் சேருங்கள். ஆனால் அதற்காக பி.ஜே.பி வந்தால் ஈழம் மலரும் என்ற மாதிரி எங்களை ஏமாற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
அப்பாவித் தமிழன்

No comments:

Post a Comment