Wednesday, July 24, 2013

இந்தியா வளர்கிறது ! வல்லரசாகிறது !!

இந்தியா வளர்கிறது !
வல்லரசாகிறது !!

ஒருபுறம் இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்கிறார்கள். மறுபுறம் அறியாமைகளும் மூட நம்பிக்கைகளும் அரச ஆதரவுடன் அரங்கேற்றப்படுகிறது.

திராவிடக்கட்சியின் பேரால் ஆட்சியில் இருக்கும் ஜெயா அம்மையார் தமிழ்நாடு அரசின் சார்பாக மழை வேண்டி யாகம் செய்கிறார். ஒரு அரசே யாகம் செய்வது எவ்வளவு வெட்கக்கேடானது. இத்தனைக்கும் தமிழ்நாடு பெரியார் பிறந்த மண் மட்டுமல்ல இன்றைய அரசு திராவிடக் கட்சியாம். அதுமட்டுமல்ல இந்தியா மதசார்பற்ற நாடு என்று வேறு பீற்றிக்கொள்கிறார்கள்.

ராக்கட் ஏவுமுன்னர் திருப்பதியில் யாகம் செய்கிறார்கள். விமானம் பறக்கு முன்னர் தேங்காய் உடைத்து பூசை செய்கிறார்கள். இது பகுத்தறிவுக்கு விரோதமானது மட்டுமல்ல இந்த வெற்றிகளுக்காக உழைத்த விஞ்ஞானிகளையும் கேவலப்படுத்துகிறார்கள்.

அண்மையில் கோர்த்னட் யாத்திரையில் பல ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போனார்கள். அவர்களை காப்பாற்ற ஆண்டவன் வரவில்லை. ஆள்பவர்களே வந்தார்கள். ஆனால் முட்டாள் பக்த கோடிகளோ கடவுளே அவர்கள் ரூபத்தில் வந்ததாக வியாக்கியானம் செய்கிறார்கள். என்ன செய்வது?

இதோ கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு மனநோய் உள்ள மனிதன் நிர்வாணமாக செல்கிறான். அவனை சாமி என மக்கள் வழிபடுகிறார்கள். ரோட்டில் ஒரு சாதாரண மனிதன் ஆடையின்றி திரிந்தால் உடனே கைது செய்யும் பொலிஸ் இங்கு ஒரு கூட்டமே திரிவதை பாதுகாப்பு கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. நிர்வாணமாக திரியும் இந்த சாமியை உடனே மருத்துமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உடுப்பும் வழங்க உச்ச நீதிமன்றமாவது முன்வருமா?

ஆளும் வர்க்கம் தனது நன்மைகளுக்காக மக்களின் மூடநம்பிக்கைகளை பயன்படுத்துகிறது. அதனை காட்டிக் காக்கிறது. ஏன் பல கோடி செலவு செய்தும் வளர்த்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குரிய பணிகளை பகுத்தறிவுவாதிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

ஒரு பெரியார் மட்டுமல்ல ஓராயிரம் பெரியாரின் அவசியம் தற்போது உணரப்படுகிறது.

http://www.youtube.com/watch?v=oaxlx7BZ-Zk&feature=share

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார்- சம்பந்தன் தெரிவிப்

• இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கிறார்- சம்பந்தன் தெரிவிப்பு

காட்சி- மகிந்தவின் இரத்தம் தோய்ந்த கரங்களை சம்பந்தன் மகிழ்வுடன் பற்றிக் கொள்கிறார்.

நடிப்பு- கதாநாயகன் மற்றும் வில்லன் டபுள் வேடத்தில் மகிந்த ராஜபக்ச.

நகைச்சுவை- வழக்கம் போல் கோமாளி வேடத்தில் த.வி.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கலக்குகிறார். அடுத்த ஆஸ்கார் விருதிற்கு அனுப்பக்கூடிய சிறந்த நடிப்பு.

எழுத்து இயக்கம்- இந்திய காங்கிரஸ் அரசு

இது சண் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகம் அல்ல. அதையும் தாண்டிய இலங்கை தமிழர்களின் தீர்வு திட்ட நாடகம். பகுதி- 2

தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக வழக்கம்போல் இந்திய காங்கிரஸ் அரசு அரங்கேற்றும் தீர்வுத்திட்ட தொடர் நாடகம்.

யுத்தம் முடிந்து நாலு வருடமாகி விட்டது. இன்னமும் இலங்கை மற்றும் இந்திய சிறையில் உள்ளவர்கள் கூட விடுதலை செய்யப்படவில்லை. அது பற்றி சம்பந்தன் ஜயாவுக்கு எந்த கவலையும் இல்லை.

தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடினார்கள். சிலர் தீக்குளித்து உயிரைக்கூட துறந்தார்களே. அது பற்றியும் சம்பந்தன் ஜயா கவலைப்படப்போவதில்லை. ஏனெனில் இறந்தவர்களோ அல்லது சிறையில் இருப்பவர்களோ அவரது பிள்ளைகள் அல்லவே?

அவரது குடும்பம் இந்தியாவில் சொகுசாக இருக்கிறது. எனவே இந்திய விசுவாசியான அவர் இந்தியாவின் நாடகங்களுக்கு ஒத்துழைக்கிறார். தன்னை நம்பும் தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கிறார். வரலாறு அவரை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.

மங்கை அக்கா! நீங்கள் நீடூழி வாழ்க.

மங்கை அக்கா! நீங்கள் நீடூழி வாழ்க.

கடந்த சனிக்கிழமை லண்டன் மாநகரில் அழகிய தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் மண்டபம் நிறைந்த கூட்டத்தினர் மத்தியில் காலம் சென்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் மங்கையர்கரசி அக்கா அவர்கள் தனது 80வது பிறந்த நாளை மிகுவும் குதூகலத்துடன் கொண்டாடினார்.

அக்கா! உங்களின் இனிமையான குரலில் பாடல்களைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு போராடப் புறப்பட்ட பல இளைஞர்கள் மாண்டுபோய்விட்டார்கள். உங்களை நம்பிய மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் முள்ளிவாயக்காலில் பலியாகிவிட்டார்கள். அந்த கொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டு தமிழகத்தில் பலர் தீக்குளிக்கின்றனர். அந்த ரத்தம் காயுமுன்னர் உங்களுக்கு இப்படி ஒரு ஆடம்பர பிறந்தநாள் விழா தேவைதானா? இது பாதிக்கப்பட்ட மக்கள் பலரின் மனதைப் புண்படுத்தும் என்பதை எப்படி கவனத்தில் கொள்ளாமல் விட்டீர்கள்?

இன்னும்கூட பலர் சிறையில் வாடுகின்றனர். சில முன்னாள் பெண் போராளிகள் வாழ வழியின்றி விபச்சாரம் செய்வதாகக்கூட செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் உங்களுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவைதானா? உங்கள் பிறந்தநாள் செலவை இப்படியான போராளிகளுக்கு உதவி செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்டியிருக்கலாம் அல்லவா?

அக்கா! “சிங்களவனின் தோலை உரித்து செருப்பை தைக்க வேண்டும்” என்று அன்று நீங்கள் பேசிய உணர்ச்சிப் பேச்சைக் கேட்டு போராட வந்த இளைஞர்களில் நானும் ஒருவன். ஆனால் நீங்களோ யுத்தம் முடிந்ததும் நாட்டுக்கு சென்று முதன் முதலாக உங்கள மக்கள் மாண்ட முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை. அல்லது முள்ளிவேலிக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. மாறாக இறந்த சிங்கள பொலிஸ்காரனின் வீட்டுக்கு சென்று அவரைப் பாராட்டியதோடு “சிங்களவர்கள் நல்லவர்கள்” என்று வேற அறிக்கை விட்டீர்கள். இந்த வார்த்தைகளை முன்னரே கூறியிருந்தால் பல தமிழ் இளைஞர்கள் இறக்காமல் தப்பியிருப்பார்களே?

அக்கா! தரப்படுதலுக்கு எதிராக எல்லா மாணவர்களும் போராட வேண்டும் என்று உசுப்பேத்திவிட்டு உங்கள் மகனுக்கு மட்டும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் எடுத்துக்கொடுத்தீர்கள். அதுமட்டுமா 36 இயக்கங்கள் இருந்தும் அது போதாது என்று படித்துக்கொண்டிருந்த உங்கள் மகன் தலைமையில் ஒரு இயக்கம் ஆரம்பித்தீர்கள். அதற்கு மலேசியா எல்லாம் சென்று நிதி சேகரித்தீர்கள். ஆனால் இப்போது ஆயுதப் போராட்டத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?

உங்களை குறை காண வேண்டும் என்பதற்காக இவற்றை நான் எழுதவில்லை. மாறாக ஆடம்பரமான பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்ட வேண்டாம். தமிழ்நாட்டில் பலர் எமக்காக விழாக்களை, கொண்டாட்டங்களை தவிர்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு நல்ல முன் உதாரணத்தை காட்ட வேண்டிய நீங்களோ அது பற்றி அக்கறையின்றி இருப்பது கவலை தருகிறது. எனவேதான் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன். உங்களால் அந்த மக்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தயவுசெய்து அந்த மக்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளாதீர்கள்.

மலையக மக்களின் 150 வருட துயர் நீங்குமா?

 மலையக மக்களின் 150 வருட துயர் நீங்குமா?
• அவர்களுக்கு சொந்தமாக வீடு, காணி கிடைக்குமா?
• அவர்களுக்காக வடக்கு கிழக்கு தமிழர்கள் குரல் கொடுப்பார்களா?

இலங்கையில் மலையகத் தோட்டப்புறங்களில் உள்ள காணிகளை ரகசியமாக வெளியாருக்கு விற்கும் நடவடிக்கையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் இரண்டு ஏக்கர் காணியை தோட்டத் தொழிலாளர்களுக்காக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெருந்தோட்ட மக்களின் நில உரிமைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

வரவு செலவுத் திட்ட உரையின்போது, ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியின்படி மலையகத்திலுள்ள தோட்டக் காணிகள் பங்கிடப்படும்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கே முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் ஒன்றரை நூற்றாண்டுகள் கடந்தும் அவர்களுக்கு சொந்தமாக்கப்படவில்லை .

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான அரசியல்கட்சிகள் அரசாங்கக் கூட்டணியில் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் வன்னியர் இருக்கின்றனர். தேவர் இருக்கின்றனர். நாடார் இருக்கின்றனர். ஆனால் தமிழர்கள் இல்லையே”- ஒரு தமிழ் அறிஞரின் குமுறல்

“தமிழ்நாட்டில் வன்னியர் இருக்கின்றனர். தேவர் இருக்கின்றனர். நாடார் இருக்கின்றனர். ஆனால் தமிழர்கள் இல்லையே”- ஒரு தமிழ் அறிஞரின் குமுறல்

(தமிழ்நாட்டில் இருக்கும் தோழர் ஒருவர் என்னிடம் கேட்ட விடயங்கள் குறித்து நான் அளித்த பதில் கீழே தந்துள்ளேன்.)

“தமிழ்நாட்டில் பார்ப்பான் இருக்கிறான். தேவர் இருக்கிறான். வன்னியன் இருக்கிறான். ஆனால் தமிழன் இல்லையே. இருந்திருந்தால் ஈழத்தமிழனுக்கு தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா?” என ஒரு தமிழ் அறிஞர் (1994ல்) என்னை பொலிஸ் சித்திரவதை செய்து திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது என்னிடம் கூறினார். என் மீது உள்ள பாசத்தில் அவர் இப்படி கூறுகிறார் என அப்போது நான் நினைத்தேன். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது அவர் கூறியது உண்மைதான் என உணர்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் மாணவர்கள் தலைமையில் மக்கள் எல்லோரும் தமிழன் என்ற உணர்வில் ஈழத்தமிழருக்காய் வீரம் மிக்க போராட்டம் நடத்தினர். அதில் சிலர் தீக்குளித்தும் மாண்டுபோனார்கள். அதே தமிழ்நாட்டில் இன்று சாதியின் பேரால் இன்னொரு தமிழனை எரிப்பதை பார்க்கும்போது நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்.

இலங்கையிலும் அதுவும் யாழ்ப்பாணத்தில் சாதி அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது. ஆனால் புலிகள் இருந்த காலத்தில் அது “துப்பாக்கியின் நிழலில் உறங்கி கிடந்தது” என்று சாதீயப் போராட்டத்தை முன்னெடுத்த தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் கூறினார். ஆம் அது உண்மைதான். சாதீ மீண்டும் தன் சுய ரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது.

நீங்கள் கேட்டுக்கொண்ட பிரபாகரன் திருமணத்தை பொறுத்தவரையில் அவருடைய மாமா( மனைவியின் தகப்பனார்) தன்னை இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று 1987களில் தன்னை சந்தித்த தாழ்த்தப்பட்ட மக்கள் குழுவிடம் பிரபாகரன் கூறியுள்ளதை நான் அறிந்திருக்கிறேன். எனவேதான் விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் வகிக்காத அந்த மாமனார் இறந்தபோது அவருக்கு “மாமனிதர்” பட்டம் கொடுத்தபோது அனைவரும் ஆச்சரியத்துடன் விசனப்பட்டனர்.

யாழ் மாவட்டத்தில் சாதீய எதிர்ப்பு போராட்டத்தை தலைமையேற்று நடத்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுட்டிக்காட்டிய மேற்கோளை இங்கு உங்களுக்கு தர விரும்புகிறேன். அது என்ன வெனில் “ஒருபோதும் அடி பணிந்து போகாதே. எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி. அவர்கள் படிப்பனையைப் பெற்றதும் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும்.” (இது அமெரிக்க கறுப்பு இன பாடகர் போல் போப்சனுக்கு அவருடைய சகோதரர் கூறிய புத்திமதி.) இந்த வழிகாட்டல் யாழ்ப்பாணத்தில் பயனளித்தது.

எனவே தேர்தல் பாதையை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகளால் இந்த சாதீயப் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் புரட்சிவாதிகளாலேயே இதை முன்னெடுக்க முடியும். அந்தளவில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதையே பயனளிக்கும் சிறந்த பாதை என நான் கருதுகிறேன்.

இரண்டு பேய்களில் எது சிறந்தது?

இரண்டு பேய்களில் எது சிறந்தது?

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அவர் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் உரையாடுபவர். எனவே இம்முறை உரையாடும்போது மாகாண முதலமைச்சராக மாவை சேனாதிராசாவா அல்லது விக்கினேஸ்வரனா சிறந்தது என வினாவினர். அதற்கு நான் இரண்டு பேய்களில் எது சிறந்தது என்றுகேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்? பேய்களில் நல்ல பேய், கெட்ட பேய் என்று இருக்கா? பேய் என்றால் பேய்தானே என்றேன்.

மாகாணசபை தேர்தல் நடக்குமா என்று தெரியவில்லை. நீதிமன்றம் பேரால் தடையுத்தரவு வாங்க முயற்சி நடப்பதாக அரச மட்டங்களில் செய்தி கசிகிறது. அப்படி ஒருவேளை தேர்தல் நடந்தாலும் யார் முதலமைச்சர் என்பதை அந்த மக்கள்தானே தீர்மானிக்க வேண்டும்.

யாழ் மாகாண முதலமைச்சர் என்பது உயர் சைவ வேளார்கள்தான் வகிக்க வேண்டும் என்று ஏதும் சட்டம் இருக்கா? அல்லது ஏதும் கட்டாயமா? ஏன் ஒரு முஸ்லிம்க்கு வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அவர்களுக்கு இழைத்த பாவத்திற்கு ஒரு பிராயச்சித்தமாக இருக்கும் அல்லவா? அந்த மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை பிறக்கும் அல்லவா!இதனால் இன ஜக்கியம் எற்படுமல்லவா?

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் இருக்கிறார். எனவே வடக்கு முதலமைச்சராக இன்னொரு முஸ்லிம்மிற்கு வழங்க தேவையில்லை எனில் ஏன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவருக்கு வழங்கப்படக்கூடாது? வாக்கு போடுவதற்கும். போராட்டத்தில் அடிபடவும் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் வேண்டும். ஆனால் முதலைமைச்சர் பதவிமட்டும் அவர்களுக்கு வழங்கக்கூடாது எனில் அது என்ன நியாயம்?

மாகாணசபைக்கு ஒரு மேசை, கதிரை வாங்கும் அதிகாரம் கூட இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் கூறினார். அடுத்து கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இருக்கும் ஒரு சில அதிகாரங்களையும் பறிப்பதற்கு மகிந்த கும்பல் துடிக்கிறது. இந் நிலையில் எதற்காக மாவையும் விக்கினேஸ்வரனும் போட்டீ போடுகிறார்கள்? என்னத்தை கிழிக்க போகிறார்கள்? இந்திய அரசை திருப்திப் படுத்த சொந்த மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்.

தொடரும் கறுப்பு வெள்ளை நிற வேற்றுமைகள்!

• தொடரும் கறுப்பு வெள்ளை நிற வேற்றுமைகள்!

“இப் பகையே ஆங்கில தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபன வலிமையையும் மீறி நிற்கும் அதன் இயலாமையின் இரகசியமாகும்.” – காரல் மாக்ஸ்

இலங்கையில் தமிழ் சிங்கள இன வேற்றுமை!
இந்தியாவில் இந்து முஸ்லிம் மத வேற்றுமை!
இங்கிலாந்தில் வெள்ளை கறுப்பு நிற வேற்றுமை!
இந்த நிற மத இன சாதி வேற்றுமைகள் நீங்குமா?
இந்த பூமியில் சமத்துவ சமுதாயம் மலருமா?

இங்கிலாந்து பல்லின மக்கள் கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்று ஆட்சியாளர்களாலும் அதன் ஊதுகுழல்களாலும் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் அங்கு நிலவும் நிற வேற்றுமையானது எல்லாவற்றையும் தாண்டி வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

அண்மையில் இங்கிலாந்தில் ஜோக்சயர் என்னும் இடத்தில் உணவு விடுதி வைத்திருக்கும் கறுப்பு இன பெண்மணி தனது கடைக்கு முன்னால் “ நான் கறுப்பு இனத்தவள்தான் . நல்ல உணவும் நல்ல சுத்தமான இடமும் தேவையானால் எனது கடைக்கு வரவும். நான் உங்களை கடிக்கமாட்டேன”; என எழுதி வைத்ததன் மூலம் இங்கிலாந்தில் தொடரும் நிற வேற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றிய விபரமான செய்தியை அறிய விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

http://www.dailymail.co.uk/news/article-2359316/Yorkshire-cafe-owner-Martha-Renee-Kolleh-puts-sign-warn-customers-Im-black-woman.html


அமெரிக்காவில் ஒரு கறுப்பரான ஒபாமா ஜனாதிபதியாகியும் இன்னமும் அங்கு கறுப்பு இன மக்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. வேற்றுமைகளுக்கு எதிராக கறுப்பு இன மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றனர். அதேபோல் இங்கிலாந்தின் பிரதமராக ஒரு கறுப்பர் வந்தாலும் கூட கறுப்பு இன மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கப்போவதில்லை.

கலைஞரின் இந்த மாற்றம் ஏன்?

கலைஞரின் இந்த மாற்றம் ஏன்?

கலைஞர் எப்போதும் எதிர்கட்சியாக இருக்கும்போது இலங்கை இனப்பிரச்சனைக்கு தமிழீழமே சிறந்த தீர்வு என்பார். ஆனால் ஆளும் கட்சியாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும்போது மத்தியஅரசின் கொள்கையே தனது கொள்கை என்பார். அவ்வேளைகளில் தமிழீழத்தை வலியுறுத்தமாட்டார். ஆனால் முதல் முறையாக தற்போது எதிர்கட்சியாக இருக்கும்போது மகாணசபை தீர்வை அமுல்படுத்தும்படி கோரியுள்ளார்.

தனது “டெசோ” அமைப்பின் மூலம் இதுவரை தமிழீழமே சிறந்த தீர்வு என்று வலியுறுத்தி வந்த அவர் தற்போது தேர்தல் வருகின்ற நிலையிலும் கூட 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும் எனக் கோரியிருப்பது நிச்சயமாக ஆச்சரியமானது. அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது தெரியாவிடினும் அதனைக்கூட அமுல்படுத்த இலங்கை இந்திய அரசுகள் தயார் இல்லை என்பதே அவருக்கு ஏமாற்றம் தரும் பதிலாக இருக்கின்றது.

புலிகள் இருந்தபோது சமாதானத்திற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றார்கள். இப்போது புலிகள் அழிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்பட வில்லை. மாறாக எற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகளில் உள்ள உரிமைகளைக்கூட பறிக்க முயலுகின்றனர். உதாரணமாக மாகாண சபைக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க இலங்கை அரசு முயல்கிறது. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இந்திய அரசு கள்ள மௌனம் சாதிக்கின்றது.

இலங்கையில் தமிழ்மக்கள் நீண்ட காலமாக பாரம்பரியமாக வாழ்ந்து வருவதும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் இலங்கை இந்திய அரசுகள் ஏற்க மறுக்கின்றமையே இதுவரை இப் பிரச்சனை தீர்க்கப்பட முடியாமைக்கான முக்கிய காரணமாகும். இதை முதலில் கலைஞர் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை இந்திய அரசுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே இவ் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சாதி மத மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்.

1983ல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தோழர் அழகன் அவர்களை நினைவு கொள்வோம்.

1983ல் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட
தோழர் அழகன் அவர்களை நினைவு கொள்வோம்.

அழகன் என்று அழைக்கப்பட்ட முருகேசு சந்திரகுமார் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். காட்லிக் கல்லூரியில் கல்வி கற்றவர். படிக்கும்போதே புலிகள் இயக்கத்தில் சேர்ந்தவர். புலிகள் இயக்கம் பிளவு பட்டு புதிய பாதை என்னும் அமைப்பாக இயங்கிய போது அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். புதியபாதை அமைப்பும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி “தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை” என்னும் இயக்கத்தை ஆரம்பித்தவர். பேரவையின் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தவர்.

பேரவை அமைப்பின் பணி காரணமாக இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். 1983ம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் குட்டிமணி தங்கத்துரை போன்றவர்கள் கொல்லப்பட்டபோது தோழர் அழகன் அவர்களும் கொல்லப்பட்டார்.

தோழர் அழகன் கொல்லப்பட்டு இன்றுடன் 30 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவர் விரும்பிய இலட்சியம் இன்னும் வெல்லப்படவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லை.

வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலிகளை செலுத்துவோம்.

தோழர் அழகன் அவர்கள் நினைவாக புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க உறுதி கொள்வோம்.

இளவரசர் பிறந்ததையிட்டு இங்கிலாந்து மக்கள் மகிழ்கிறார்களா?

இளவரசர் பிறந்ததையிட்டு
இங்கிலாந்து மக்கள் மகிழ்கிறார்களா?

மாட்டு தொழுவத்தில் யேசு குமாரன் பிறக்கவில்லை. மாறாக பக்கிங்காம் மாளிகையில் இராச குமாரன் பிறந்துள்ளான். ஆம், இங்கிலாந்து அரச பரம்பரையில் இன்னொரு இளவரசர் பிறந்துள்ளார். இதையிட்டு இங்கிலாந்து மக்கள் பெரும் மகிழ்வு கொண்டிருப்பதாக பி.பி.சி டெலிவிசன் உட்பட பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இவ் முதலாளித்துவ ஊடகங்கள் வழக்கம்போல் உண்மையை மறைத்துவிட்டன.

பிறந்துள்ள இளவரசர் மற்ற சாதாரண மக்கள் போல் வேலைக்கு செல்ல வேண்டும் என பெரும்பாலான மக்கள் தெரிவித்திருக்கும் அபிப்பிராயம் மறைக்கப்பட்டுள்ளது. மக்கள் அரச பரம்பரையை விரும்பவில்லை என்பது பல முறை கருத்து கணிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் முதலாளித்துவத்தைக் காட்டிக்காக்க விரும்பும் ஊடகங்கள் மக்கள் மகிழ்வு கொண்டிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன.

இங்கிலாந்தில் என்றுமில்லாதவாறு வேலையில்லாப் பிரச்சனை தோன்றியுள்ளது. வேலை கிடைத்தாலும் உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்படுகின்றன. அரச சேவைகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. தற்போது அஞ்சல் சேவையும் தனியாருக்கு விற்கப்படவுள்ளது. மத்திய லண்டனில் வசிக்கும் வறிய மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை உதவிப்பணம் நிறுத்தப்படுகிறது. அவ் மக்கள் லண்டனை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர. மத்திய லண்டன் பணக்காரர்களுக்கு மட்டுமே என அரசு வெளிப்படையாகவே அறிவுறுத்துகிறது. இந் நிலையில் இளவரசர் பிறந்ததற்காக மக்கள் எப்படி மகிழ்வு கொள்ள முடியும்?

கடந்த வருடம் ராணியின் பொன்விழா ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் விசனப்பட்டபோது இவ் விழாக்களினால் வியாபாரம் பெருகும் என்று அரசு “ரீல்” விட்டது. ஆனால் இவ் விழாக்களின்போது வழக்கமாக நடக்கும் வியாபாரம் கூட நடக்கவில்லை என வியாபாரிகள் புலம்பினார்கள். ஆனால் அரசு இது குறித்து மூச்சு விடவில்லை.

இங்கிலாந்து மக்களின் நிலை இது என்றால் இலங்கை தமிழர் நிலையே இதைவிட துன்பமானது. ஆனால் சில இலங்கை தமிழர் இதை மறந்து தாம் மகிழ்வு கொள்வதாக தமது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

தற்போது 83ம் ஆண்டு யூலை படுகொலை நினைவு கூரப்படுகிறது. இந்த படுகொலைகளுக்கோ அல்லது இதற்கு பின்னர் நடந்த படுகொலைகளுக்கோ பிரித்தானிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு இவ் பிரித்தானிய மன்னர் ஆட்சியும் ஒரு காரணம். ஏனெனில் சுதந்திரம் வழங்கப்படும்போது தமிழர்களின் கோரிக்கைள் இவ் மன்னர் ஆட்சியினால் பரிசீலிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை இனவெறி அரசினால் பாதிக்கபட்டு அகதியாக வரும் தமிழர்களையும் முழுமையாக எற்கவில்லை. கடந்தவாரம் கூட இரு தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனவே இந் நிலையில் எந்த ஒரு சுயமரியாதை உள்ள தமிழனாலும் இளவரசர் பிறப்பிற்காக மகிழ்வு கொண்டாட முடியாது. மீறி மகிழ்வு தெரிவிப்பவர்கள் தமது இனத்தின் அவல நிலை குறித்து கவலை கொள்ளவில்லை என்றே அரத்தமாகும்.