Saturday, September 28, 2013

தோழர் தமிழரசன்

இன்று தோழர் தமிழரசன் குறித்து பலரும் வெளிப்படையாக ஆதரித்து பேசியும் எழுதியும் வருகின்றனர். 26 வருடங்களின் பின்னர் தமிழகத்தின் பல பாகங்களில் தோழர் தமிழரசன் நினைவு தினம் கொண்டாடப்படுவது உண்மையிலே மிக்க மகிழ்வு தருகிறது. ஆனால் அன்று அப்படி நிலை இருக்க வில்லை. தமிழரசனின் போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள்கூட வெளிப்படையாக ஆதரிக்க தயங்கினார்கள். அந்தளவுக்கு கியூ பிராஞ் பொலிசின் அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் இருந்தன.

தோழர் தமிழரசனின் நெருங்கிய ஆதரவாளர்கள் அவரை காட்டிக் கொடக்கும்படி நெருக்கப்பட்டார்கள். தோழர் தமிழரசன் அடிக்கடி செல்லும் ஒரு ஆதரவாளரை இனங் கண்டு கொண்ட உளவுப்படை பொலிசார் அவரிடம் நஞ்சைக் கொடுத்து அதை சாப்பாட்டில் கலந்து கொடுக்கும்படி வற்புறுத்தினார்கள். இல்லையேல் அவருடைய குடும்பத்தை சின்னா பின்னமாக்குவோம், மனைவியை விபச்சார வழக்கில் கைது செய்வோம், மகளை மான பங்பப்படுத்துவோம் என்றெல்லாம் மிரட்டியிருந்தனர். அந்த ஆதரவாளரும் பயந்து வேறு வழியின்றி சம்மதித்தார்.

வழக்கம்போல் ஒரு நாள் தோழர் தமிழரசன் அந்த ஆதரவாளர் வீட்டுக்கு வருகை தந்தபோது அந்த ஆதரவாளர் சாப்பாட்டில் நஞ்சைக் கலந்து கொடுத்திருக்கிறார். கொடுக்கும்பொது அவரது மனட்சாட்சி உறுத்தியதால் கைகள் நடுங்கியிருக்கிறது. இதை அவதானித்த தோழர் தமிழரசன் ஏதோ விபரீதம் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு தனக்கு பசிக்க வில்லை என்று கூறிவிட்டு சாப்பிடாமல் சென்றுவிட்டார்.

அதேபோல் இன்னொரு முறை வேறொரு ஆதரவாளர் வீட்டுக்கு தமிழரசன் சென்றபோது அவரது வருகை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழரசன் தனி ஆள் தானே . இலகுவாக கைது செயயலாம் என்று நினைத்து ஒரு சப் இன்பெக்டரும் நாலு காவலரும் ஜீப் வண்டியில் சென்றுள்ளனர். இரவு நேரம். தமிழரசன் வெளியில் வரட்டும் கைது செய்யலாம் என நினைத்து வீதியோரத்தில் பதுங்கியிருந்தனர். வெளியே வந்த தமிழரசன் தனது மோட்டார் வண்டியில் ஏறு முன்னர் வழக்கம்போல் தனது சப் மிசின்கன் துப்பாக்கியை சரிபார்த்திருக்கிறார்.

அவர் எப்போது பணயம் செய்யும் போது துப்பாக்கியை சரி பார்ப்பது வழக்கம். (லோட் செய்து லாக்கில் தயார் நிலையில் வைத்திருப்பார்). அவர் சப் மிசின்கன் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்து திடுக்கிட்ட பொலிசார் பயந்து அவரை கைது செய்ய முயற்சிக்காமல் அப்படியே பதுங்கி இருந்துவிட்டனர். எனெனில் அவர்களிடம் ஒரேயொரு துப்பாக்கி அதுவும் 303 ரைபிள் துப்பாக்கியே அப்போது இருந்திருக்கிறது. அடுத்தநாள் தகவல் கொடுத்தவரை “ஏன்டா, அவன் மிசின்கன் வைத்திருப்பதை எங்களுக்கு முன்னரே சொல்லவில்லை. நல்ல காலம். நேற்று எங்களை கொல்லப் பார்த்தியே” என்று செல்லி அடித்தார்களாம்.

சந்தன வீரப்பன் போல் காட்டில் இருந்தால்தான் பொலிசில் இருந்து தப்பிக்க முடியும் என சிலர் என்னிடம் கூறுவதுண்டு. ஆனால் மக்கள் ஆதரவு இருந்தால் மக்கள் மத்தியிலேயே இருக்க முடியும் என்பதற்கு தோழர் தமிழரசன் ஒரு நல்ல உதாரணமாக நான் காட்டுவேன். அவர் மோட்டார் சயிக்கிளில் எப்போதும் துப்பாக்கியுடன் செல்வார். அதற்கு லைசென்ஸ் கிடையாது. அது அவருடைய வண்டியும் கிடையாது. ஒரு பண்ணையாரிடம் பறித்தெடுத்தது. இருந்தும் அவர் இறக்கும்வரை பொலிசில் பிடிபட்டது கிடையாது.

போதும்! மீண்டும் ஒரு முறை எமது சகோதரிகளை கொல்லாதீர்கள்.

போதும்! மீண்டும் ஒரு முறை எமது சகோதரிகளை கொல்லாதீர்கள்.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவகாமி அவர்கனை ஒரு பெண் போராளியாகவே நான் இதுவரை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் இன்னொரு பெண் போராளிகள் குறித்து அவதூறு பேசினார் என்ற செய்தி என்னை அதிர வைத்திருக்கிறது. அவர் எப்படி இவ்வாறு ஆதாரம் இன்றி அவதூறு பொழிய முடிந்தது? ஏற்கனவே எமது சகோதரிகள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது சிவகாமி அவர்களின் பேச்சு அந்த சகோதரிகளின் நொந்த இதயத்தில் வேல் பாச்சியிருக்கிறது. போதும்! இனியும் அவர்களை வேதனைப் படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டக்கொள்கிறேன்.

விடுதலை இயக்கங்களில் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இயக்கங்களிலும் பெண்கள் இணைத்துக கொள்ளப்பட்டார்கள். அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் அரசியல் பணிகளில் மட்டுமல்ல ராணுவ தாக்குதலிலும் பங்கு பற்றினார்கள். அவர்கள் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள். இவ்வாறு பங்கு பற்றிய பெண்கள் சக போராளியாகவே இயக்கங்களிலும் சமூகத்திலும் மதிக்கப்பட்டார்கள். வறிய நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல மிகவும் வசதியான குடும்பங்களில் இருந்தும் பெண்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள்.

முதன் முதலில் நான் அறிந்வரையில் முழு நேர உறுப்பினராக இணைந்து கொண்டவர் ஊர்மிளா என்ற பெண் ஆவார். அதன் பின் புஸ்பராணி என்ற பெண் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட செய்தி பத்திரிகைகள் மூலம் பரவியது. இவரை தொடர்ந்து நிர்மலா அக்கா கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்புறம் அவரை மட்டுநகர் சிறை உடைத்து புலிகள் மீட்டார்கள்.

1983 க்கு பின்பு புளட், ஈபி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் நூற்றுக் கணக்கில் பெண்களை உள்வாங்கினார்கள். ஈ.பி.அர்.எல்.எவ் இன் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் சோபா என்ற பெண் வீர மரணமடைந்தார். இவரே முதன் முதலில் மோதலில் பலியான பெண் ஆவார். இதன் பின்னரே புலிகள் இயக்கம் பெண்களை உள்வாங்கி போராட்டத்தில் பங்கு பெற வைத்தது.

எமது விடுதலைப் போராட்டத்தின் மதிப்பு மிக்க பயன்களில் ஒன்றானது இந்த பெண்களின் பங்களிப்பும் அவர்களது சாதனையும். ஏனென்றால் மிகவும் இறுக்கமான யாழ் சமூக கட்டமைப்பை உடைத்து கொண்டு பெண்கள் போராட்டத்தில் பங்கு பற்றியதுடன் அவர்கள் ஆண்களுக்கு நிகராக பெரும் சாதனைகளையும் நிகழ்த்தினார்கள். இவ்வாறான பெண்கள் அனைத்து இயக்கங்களிலும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் மதிப்புடனும் பேணப்பட்டனர். இதற்கு காரணம் தலைமைகளின் வழிகாட்டல் என்பதிலும் தமிழர்களின் கலாச்சாரம் என்று கூறலாம்.

எந்த தவறுமே நடக்க வில்லை என்று நான் கூறப்போவதில்லை. ஏனெனில் ஒரு சில தவறுகள் நடந்திருக்கின்றன. இது எமது போராட்டத்தில் மட்டுமல்ல நான் அறிந்த பல போராட்ட வரலாறுகளிலும் நடந்திருக்கின்றன. அவற்றை வைத்து அனைத்து பெண்களும் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பது எமது சகோதரிகளை நாங்களே கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும். எனவே இது போன்ற பிதற்றல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்தும் எமது பெண்களை போராட்டத்தில் இணைத்து கொள்வோம். அவர்கள் மாபெரும் சாதனை நிகழ்த்த வழிகாட்டுவோம்.

சிவகாமி அவர்கள் எமது சகோதரிகளை கேவலப்படுத்தவில்லை. மாறாக அவர் தன்னைத்தானே கேவலப்படுத்தியுள்ளார் என்பதை காலம் விரைவில் அவருக்கு உணர்த்தும்.

ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்

ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார் கேட்டுக்கொண்டபடி அவரை மெரினாக் கடற்கரையில் மீன்காட்சியகத்திற்கு அருகில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் என் கைகளை இறுகப் பிடித்தவர் சில நிமிடங்கள் என்னை உற்று நோக்கினார். எதுவும் பேசவில்லை. எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவர் எளிமையானவர் மட்டுமல்ல வழக்கமாக மிகவும் நட்புடனும் சரளமாகவும் பேசுபவர்.

சில நிமிட மௌனத்தின் பின் அவரே பேச்சை ஆரம்பித்தார். “பாலத்திற்கு குண்டு வைப்பது போன்ற செயல் எதுவும் செய்ய வேண்டாம் என்று தமிழரசனிடம் கூறுங்கள். இதனால் இந்திய அரசு குறிப்பாக றோ உளவுப்படை மிகவும் கோபம் அடைந்துள்ளது” என்றார். நான் பதில் எதுவும் கூறாமல் அவர் கூறுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து “ தமிழ்நாட்டு புரட்சிகர அமைப்புகளுக்கு நீங்கள் ராணுவ உதவி எதுவும் செய்ய வேண்டாம். “பேரவை” தான் இந்த அமைப்புகளுக்கு சகல உதவிகளும் செய்கிறது என்றும் இதனால் அதற்கு காரணமான உன்னையும் நெப்போலியனையும் கொல்லும்படி எங்களிடம் றோ உளவுப்படை கேட்டிருக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன். இதற்கு முன்னர் மதுரையில் தமிழீழ தேசிய ராணுவ அமைப்பின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனை சந்தித்த ஒரு றோ அதிகாரி “பாலனிடம் கூறுங்கள். அவன் பட்டசில் (குண்டியில்)சூடு வைப்போம்” என்று கூறியதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். எனவே றோ என் மீது கோபமாக இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் எம்மைக் கொல்வதற்கு அவர்கள் ஏன் ஈரோஸ் இயக்கத்திடம் கேட்க வேண்டும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இறுதியாக பாலகுமார் விடைபெறும் முன்னர் “ உன்னையும் நெப்போலியனையும் கொல்லும் பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஆனால் எமது அமைப்பில் உள்ள எல்லோரையும் நம்ப முடியாது. யாராவது அதை செய்துவிடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். அவர் ஏன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு பேசாமல் நின்றார் என்பது புரிந்தது. நானும் எம் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றி தெரிவித்து கவனமாக இருக்க முயல்கிறேன் என்று கூறினேன்.

அப்போது தோழர் நெப்போலியன் மலையகத்தில் இயக்க பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் உடனடியாக பாலகுமார் தெரிவித்த விடயத்தை அவருக்கு அறிவிக்க முடியவில்லை. மேலும் அவர் மலையகத்தில் நிற்பதால் அவருக்கு எந்தவித ஆபத்தும் இந்திய உளவுப்படையால் நிகழ வாயப்பில்லை என நான் நம்பினேன்.

ஆனால் நாம் எதிர்பார்த்தற்கு மாறாக மலையகத்தில் வைத்து தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார். இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரோஸ் இயக்கத்தின் ராணுவ பிரிவு மூலம் தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார்.

இந்திய புரட்சிகர அமைப்புகளுடன் தொடர்பு வைத்தமைக்காக குறிப்பாக தோழர் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு உதவியமைக்காக எமது தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார். இந்திய உளவுப்படையானது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் கொலைகளை செய்யும் என்பதற்கு தோழர் நெப்போலியன் படுகொலை ஒரு உதாரணமாகும்.

இந்திய அரசு எமது நட்பு சக்தி அல்ல. அது எமது போராட்டத்தை நசுக்கும் ஒரு எதிரி என்று அன்றே நாம் அறிவித்து அதற்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியம் மேற்கொண்டோம். அதனால் எமது தோழர் நெப்போலியனை இழந்தோம். ஆனால் இன்று, நாம் அன்று கூறியது சரியானது என்பதையும் அதற்கான தோழர் நெப்போலியனின் இழப்பு மதிப்பு மிக்கது என்பதையும் உணர்கிறோம். எனவே தொடர்ந்தும் புரட்சிகர சக்திகளின் ஜக்கியத்திற்காக உழைப்போம் என்பதையும் இந்திய அரசுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

(அடுத்த பதிவில் தோழர் நெப்போலியனின் தோழர் தமிழரசனுடான நினைவுகளை பகிர்கிறேன்)

இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன்

• இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன்

தோழர் நெப்போலியன் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். அவரது சொந்த பெயர் மனோகரன். அவர் முதலில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். அங்குதான் அவரது குள்ள உருவத்தையும் துடிப்பான செயற்பாட்டையும் பார்த்து அவருக்கு நெப்போலியன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

புலிகள் இயக்கம் இரண்டாகப் பிரிந்து பதியபாதை என்னும் பெயரில் இயங்கிய பிரிவுடன் தோழர் நெப்போலியன் செயற்பட்டார். பின்னர் புதிய பாதையில் இருந்து பிரிந்து தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தை ஆரம்பித்த தோழர்களில் ஒருவராக இருந்தார்.

“பேரவை” இயக்கம் மேற்கொண்ட சென்ரல்காம்ப் பொலிஸ் நிலைய தாக்குதல், களுவாஞ்சிக்குடி பொலிஸ் மீதான தாக்குதல் மற்றும் மாகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதல் யாவற்றிலும் தோழர் நெப்போலியன் முன் நின்று செயற்பட்டார்.
அவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவேளை இந்திய புரட்சிகர இயக்கங்களுடான உறவை மேற்கொண்டார். குறிப்பாக தோழர் தமிழரசனின் கட்சியினரின் பெண்ணாடம் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான ராணுவ பயிற்சிக்கு எற்பாடு செய்ததும் தோழர் நெப்போலியனே.

டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட போது எமது “பேரவை” இயக்கமும் புலிகளால் தடை செய்யப்பட்டது. தோழர் நெப்போலியன் புலிகளால் தேடப்பட்டதால் அவர் மட்டக்களப்பு சென்று அங்கு இயங்கினார். அங்கும் அவர் வந்தது தெரிந்து கொண்ட புலிகள் அவரைப் பிடிப்பதற்குமுயற்சி செய்தார்கள். எனவே வேறு வழியின்றி அவர் அங்கிருந்து சென்று மலையகத்தில் இயங்கினார்.

மலையகத்தில் மலையக விடுதலை முன்னனி என்ற பெயரில் இளைஞர்களை திரட்டினார். சில பண பறிப்பு நடவடிக்கைகளில் இறங்கினார். அதனால் அவர் பற்றி இலங்கை அரசுக்கு தெரிந்து அவர் மிகவும் கடுமையாக தேடப்பட்டார். இதனால் அவர் மலையகத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.

நாட்டில் நெப்போலியனுக்கு எற்பட்டிருக்கும் நெருக்கடிகளை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் மிகவும் வருந்தினார். கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டில் வந்து தங்களுடன் இருக்கும்படி நெப்போலியனிடம் தெரிவிக்குமாறு அவர் பல தடவை என்னிடம் கோரினார். நெப்போலியன் தோழர் தமிழரசனுடன் நெருங்கிப் பழகியவர். நீண்ட நேரம் பல அரசியல் விடயங்கள் குறித்து விவாதம் செய்தவர். அதுமட்மல்ல தோழர் தமிழரசன் கட்சியினரின் ராணுவ தயாரிப்புகளுக்கு பல உதவிகள் செய்தவர். எனவே நெப்போலியன் தம்முடன் இருந்தால் அது பல வழிகளில் தமக்கு உதவியாக இருக்கும் எனவும் தோழர் தமிழரசன் கருதினார்.

இந் நிலையில் நெப்போலியன் வேறு வழியின்றி இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். எனவே மலையகத்தில் இருந்து கொழும்பு சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை வருவதற்கு நினைத்தார். ஆனால் கொழும்பு செல்லவும் அங்கு தங்கியிருந்து உரிய பயண எற்பாடுகளை செய்யவும் வசதியின்றி இருந்தார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட ஈரோஸ் இயக்கத்தினர் தாங்கள் உதவி செய்வதாகவும் தங்களுடன் வரும்படியும் அழைத்தனர்.

ஈரோஸ் இயக்கத்தால் தமக்கு எந்த ஆபத்தும் வராது என நம்பிய நெப்போலியன் அவர்களது உதவியை பெற்று இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். இதற்குரிய எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு மலையகத்தில் இருந்த தனது சகோதரியை சந்தித்து இந்த விபரங்களை தெரிவித்தள்ளார். அவரது சகோதரி ஈரோஸ் இயக்கத்துடன் செல்ல வேண்டாம் என்றும் தானே கொழும்புக்கு அழைத்து செல்வதாகவும் கேட்டிருக்கிறார். தன்னால் தனது சகோதரிக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று எண்ணிய நெப்போலியன் அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டார்.

நெப்போலியன் இறுதியாக தனது சகோதரியை சந்தித்து தான் ஈரோசுடன் செல்லவிருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் மலையக தோழர்கள் இருவர் நெப்போலியனை கூட்டிச் சென்று ஈரோஸ் இயக்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்ததை பின்னர் என்னிடம் கொழும்பில் உறுதிப்படுத்தினர்.

ஈரோஸ் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோழர் நெப்போலியன் கயிற்றால் கட்டி சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கல்லால் அவரது தலை அடித்து சிதைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் நாம் அறிந்தோம்.

இலங்கை ராணுவம் கொன்ற போராளிகளின் உடல்களை மரியாதை செய்யவில்லை என்று நாம் கூறுகிறோம். ஆனால் மாக்சிய இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஈரோஸ் இயக்கம் ஒரு சக போராளியை கொன்றதுமல்லாமல் உடலை ஆற்றில் வீசி எறிந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?

தோழர் நெப்பொலியன் ஒரு மகத்தான தோழர். அவர் மக்களை நேசித்தார். இறுதிவரை மக்களுக்காகவே போராடினார். ஆனால் இந்திய எதிரியானது சூழ்ச்சி செய்து தனது கைக்கூலி இயக்கமான ஈரோஸ் மூலம் அவரை கொன்றுவிட்டது.

தோழர் நெப்போலியன் சகோதரர் செல்வநாயகம் என்று அழைக்கப்பட்ட மகேந்திரன். அவரும் பேரவை இயக்கத்தில் செயற்பட்டவர். அவர் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்டு இயக்கத்தில் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு டிரைக்டர் வண்டியில் உணவு கொண்டு செல்லும்போது நெடுங்கேணி என்னும் இடத்தில் இந்திய விமான குண்டு வீச்சில் பலியானவர்.

• ஜே.வி.பியும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள். அவற்றால் தமிழ்மக்களுக்கு எந்த பயனும் இல்லை - முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர் ரஞ்சித் தெரிவிப்பு

• ஜே.வி.பியும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சியும் சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள். அவற்றால் தமிழ்மக்களுக்கு எந்த பயனும் இல்லை - முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர் ரஞ்சித் தெரிவிப்பு

கடந்த ஞாயிறு (15.09.2013) யன்று லண்டன் ஈஸ்ட்காமில் தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் உரையாடல் அரங்கு இடம்பெற்றது. காலை 11.30 முதல் மாலை 6.30வரை நடைபெற்றது.

அமர்வு-1 ஆக The Time That Remains என்ற திரைப்படம் காண்பிக்கப்பட்டது.

அமர்வு-2 ஆக மொழிபெயர்ப்பு இலக்கியம் என்ற தலைப்பில் சபேசன் தலைமையில் நடைபெற்றது. சஜீவன் One Hundred years of solitude என்ற மொழிபெயர்பு நாவல் பற்றி தன் கருத்துகளை பகிர்ந்தார். புத்தகத்தை படிக்காமல் அதையும் மேடையில் வெளிப்படையாக பெருமையாக சொல்லி ஆய்வு செய்யும் இன்றைய சில பேச்சாளர்கள் மத்தியில் சஜீவன் தமிழ் புத்தகத்தையும் மட்டுமன்றி ஆங்கில பிரதியையும் முழுமையாக படித்து ஒப்பிட்டு சிறந்த கருத்துகளை வழங்கினார். அவருடைய கருத்துரை அந்த புத்தகத்தை ஒருமுறை படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது. அவர் உரை நிச்சயம் பாராட்டுக்குரியது.

அமர்வு-3 ஆக பேராசிரியர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. அதில் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் “மாகாணசபை தேர்தல்” பற்றி தனது கருத்துகளை பகிர்ந்தார். அடுத்து தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த போஸ் தேர்தலில் தமக்கு(கூட்டமைப்புக்கு) வாக்களிக்குமாறு கோரினார். அதன்பின்பு இலங்கையின் சமகால அரசியல் நிலை பற்றி காதர் உரையாற்றினார். இறுதியாக ஜெர்மனியில் இருந்து வந்த ரஞ்சித் இலங்கையின் சமகால அரசியல் பற்றி உரையாற்றினார்.

ரஞ்தித் லொக்பிலர் சிங்கள இனத்தை சேர்ந்தவர். முன்னர் ஜே.வி.பியில் செயற்பட்டவர். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக தலைமையுடன் எற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து ஒதுங்கியவர். கடந்த 30 ஆண்டுகளாக ஜெர்மனியில் மனித உரிமைச் செயற்பாட்டாளராக செயற்படுகிறார்.

ரஞ்சித் அவர்களிடம் தற்போதைய ஜே.வி.பி யும் அதிலிருந்து பிரிந்த முன்னிலை சோசலிசக் கட்சி பற்றியும் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, இரண்டுமே சிங்கள அடிப்படைவாதக் கட்சிகள்தான். முன்னிலை சோசலிசக்கட்சி தலைவர் குணரட்ணம் ஒரு தமிழராக இருந்தாலும் அவரும் அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார். எனவே இவற்றால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார். இறுதியாக அவர் இந்தியா அமெரிக்கா என யார் வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவின்றி யாராலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இதை தமிழர்கள் உணர்ந்து சிங்கள மக்களுடன் முதலில் பேச வேண்டும் என்றார்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

1983 க்கு முன்னர் பெரும்பாலும் அனைத்து இயக்கங்களும் இந்திய புரட்சிகர சக்திகளுடன் தொடர்புகள் கொண்டிருந்தனர். பின்னர் இந்திய அரசுக்கு அஞ்சி தொடர்புகளை துண்டித்துவிட்டனர் அல்லது வெளிப்படையாக தொடர்பு கொள்வதை தவிர்த்தனர்.

தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசனனின் தலைவர் என கருதப்பட்ட புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,

சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன். அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது. மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்.

நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர். பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தோழர் தமிழரசன் புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து இயக்க தலைவர்களையும் சந்தித்து உதவி பெற முயன்றார். ஆனால் எந்த இயக்க தலைவர்களும் உதவி செய்ய மட்டுமல்ல அவரை சந்திப்பதற்கே மறுத்துவிட்டார்கள். புலிகள் இயக்கம் இறுதிக் காலங்களில் 303 ரைபிள, ரிப்பிட்டர் போன்ற அந்த கால ஆயுதங்களை பாவிக்காமல் புதைத்ததாக அறிகிறோம். ஆகக்குறைந்தது அந்த மண்ணில் புதைத்த ஆயுதங்களையாவது தோழர் தமிழரசனிடம் கொடுத்திருக்கலாம். அவர்கள் தாங்களும் கொடுக்கவில்லை. எங்களையும் கொடுக்கவிவில்லை. ஒரு வேளை தமிழரசன் விரும்பிவாறு ஆயுதங்கள் கொடுத்து உதவி செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமோ என நினைக்க தோன்றுகிறது!

வீரப்பன்

• வீரப்பன்

யானைத்தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை.
சந்தணக்கட்டை கடத்தியபோது கொல்லப்படவில்லை.
தமிழ்நாடு விடுதலையை முன்வைத்த பின்பே
நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

இந்திய உளவுப்படையானது இந்தியாவுக்குள் மட்டுமல்ல இந்தியாவுக்கு வெளியிலும் கொலைகள் செய்கிறது என்பதற்கு தோழர் நெப்போலியன் கொலையை கடந்த பதிவுகளில் சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும் எனவே உளவுப்படைகளும் சட்டப்படியே செயற்படும் என்றும் பலர் அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அமெரிக்க சி.ஜ.ஏ மற்றும் ரஸ்சிய கே.ஜி.பி இஸ்ரவேலின் மொசாட் போன்று மிகவும் மோசமான பயங்கரமான உளவுப்படையாகும்.

இந்த உளவுப்படைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் எவ்வளவு? அவர்களின் செயற்பாடு என்ன? போன்றன குறித்து பாராளுமன்றத்தில் கூட கேட்க முடியாது. அந்தளவிற்கு அவர்களின் அனைத்து செயற்பாடுகளும் இரகசியமாக வைக்கப்படுகிறது. அதிகளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீதி, நியாயம், சட்டம் எது குறித்தும் அக்கறையின்றி மிகக்கொடிய கிரிமினல்களாக வலம் வருகின்றனர்.

வங்கதேச விடுதலையின் போது முக்திபாணி என்ற அமைப்பை உருவாக்கி அதற்கு பயிற்சி ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்தது. பின்னர் வங்கதேசம் விடுதலையடைந்ததும் இந்திய அரசு செய்த முதல் வேலை தான் பயிற்சி கொடுத்த அத்தனை போராளிகளையும் இரகசியமாக கொன்றதுதான். இதனையே புளட் அமைப்பினர் “வங்க தந்த பாடம்” என்று பிரசுரம் அடித்து வெளியிட்டனர். ஆனால் பின்னர் இது இந்திய அரசுக்கு தெரிந்து விட்டது என்றதும் அத்தனை பிரதிகளும் தீயிட்டு அழித்தார்கள். இந்த “வங்க தந்த பாடம்” பிரசுர வெளியீட்டுக்கு உழைத்த சந்தியார் பின்னர் இந்திய உளவுப்படையின் ஆசியுடன் புளட் தலைமைப்பீடத்தினால் சென்னையில் வைத்துக் கொல்லப்பட்டார்.

புலவர் கலியபெருமாள் தன் இறுதிக்காலங்களில் தனது தலைவராக சந்தன வீரப்பன் அவர்களைக் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு சேகுவாரா என்று அழைக்கபட்ட கலியபெருமாள் வீரப்பனை தன் தலைவர் என்று குறிப்பிட்டமைக்கு காரணம் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன் வைத்தமையே.

அதேபோல் வீரப்பன் யானைத் தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை. சந்தணக் கட்டைகளை கடத்தியபோது கொல்லப்படவில்லை. மாறாக தமிழ்நாடு விடுதலையை முன்வைத்தபோதுதான் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார்.

இதிலிருந்து தெரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில் தமிழ் மக்களின் விடுதலைக்காக யார் முயற்சி செய்தாலும் அவர்களை இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் கொன்று அழிப்பதற்கு தயங்காது என்பதே.

இந்திய அரசு ஈழப் போராளிகளுக்கு நிறைய உதவி செய்ததாகவும் ராஜீவ் கொலைக்கு பின்னரே அது உதவிகளை நிறுத்தியதாகவும் இன்றும் கூட சில இந்திய விசுவாசிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. ஆரம்பம் முதலே இந்திய அரசும் அதன் உளவுப் படைகளும் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியே வந்திருக்கின்றது. அதுதான் உண்மை வரலாறு ஆகும்.

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த இப் பெண் வீதியில் செருப்பு அணிந்து நடந்துவிட்டாள் என்பதற்காகவே இவ்வாறு உயர்சாதி இளைஞனால் இழுத்து செல்லப்பட்டு தண்டிக்கப்படுகிறாள்.

• இந்த பெண் பாகிஸ்தானின் கைக்கூலியா? அல்லது

• சீனா அரசின் ஏவல் நாயா? அல்லது

• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கையாளா? அல்லது

• ஏழைகளை சுரண்டும் அம்பானியின் குடும்பத்து பெண்ணா?

எதற்காக இந்த பெண் இவ்வளவு ஆக்கிரோசமாக இழுத்து செல்லப்படுகிறாள்?

அப்படி என்ன தவறு செய்துவிட்டாள் இந்த பெண்?

இந்தியாவில் பிறந்தது இவள் குற்றமா?

பெண்ணாகப் பிறந்தது இவள் குற்றமா? அதுவும்

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தது குற்றமா?

தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த இப் பெண் வீதியில் செருப்பு அணிந்து நடந்துவிட்டாள் என்பதற்காகவே இவ்வாறு உயர்சாதி இளைஞனால் இழுத்து செல்லப்பட்டு தண்டிக்கப்படுகிறாள்.

இந்தியா வளர்ந்து விட்டது. இந்தியா வல்லரசாகிறது என்கிறார்கள். ஆனால் இன்றும் தாழ்த்ப்பட்ட சாதியில் பிறந்தற்காக பெண்கள் தண்டிக்கப்படுவது மாகா வெட்கம் ஆகும்.

நூறு அம்பேத்கார,; நூறு பெரியார் பிறந்து வந்தாலும் இந்த ஆதிக்க சாதி திமிரை அடக்க முடியாது. தீண்டாமை கொடுமைகளை நீக்கவும் முடியாது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் காட்டுகின்றன.

இந்தளவுக்கு தீண்டாமைக் கொடுமைகள் இலங்கையில் இல்லையென்றாலும்கூட இன்றும்கூட அங்கும் தீண்டாமை கொடுமை நிலவுகிறது. இந்த சாதீயம் புலம் பெயர்நாடுகளிலும் நாசூக்காக கடைப்பிடிக்கப்படுவதை நாம் காணலாம்.

லண்டனில் உள்ள கோயிலில் ஒன்றில் பிரசாதம் செய்வதற்கு உதவி செய்ய முனைந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சாதி காரணமாக அனுமதி மறுக்கப்ட்டிருக்கிறார். ஒரு வெள்ளையனையோ அல்லது வேற்று இனத்தவனையோ தம் மகள் மணமுடிக்க சம்மதிக்கும் பெற்றோர் தமிழனில் சாதி குறைந்தவனை மணப்பதற்கு சம்மதிப்பதில்லை. தமிழ்தேசியம் அந்தளவிலேயே இருக்கின்றது என்ற கசப்பான உண்மையைக் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்.

போராட்ட காலங்களில் துப்பாக்கியின் நிழலில் உறங்கிக் கிடந்த சாதீயம் தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது. அது தன் கோர முகத்தை அனைத்து இடங்களிலும் காட்டுகிறது.

1960 களில் யாழ்ப்பாணத்தில் தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்டுகள் தீண்டாமைக்கு எதிராக போராடினார்கள். தற்போது மீண்டும் அத்தகைய புரட்சியாளர்களின் போராட்டங்களை எதிர் நோக்கி வரலாறு காத்திருக்கிறது.

"உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

கத்தார்: "உலகக் கோப்பையும் உயிர்விடும் நேபாளிகளும்"

2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில்.

கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை: இலங்கை உச்சநீதிமன்றம்

மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை: இலங்கை உச்சநீதிமன்றம்

இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றன. மேலும் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அளிக்கப்படுவது என்பது தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்றும், அதிகாரப்பகிர்வு அரசியலுக்கான துவக்கப்புள்ளியாக அது அமையும் என்றும் தமிழர் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

வடமாகாணசபையின் ததேகூ அரசு சந்திக்கும் முக்கிய சவால்
உலக அளவில் ஆர்வத்தை உருவாக்கிய வடமாகாணசபைத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து, அதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மிகப்பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவிருக்கும் பின்னணியில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இலங்கையின் அரசியல் அரங்கில் முக்கிய விவாதங்களைத் தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பெண் ஒரு மாவோஸ்டு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

• இந்த பெண் 2ஜி கோடி ஊழல் செய்யவில்லை.
• இந்த பெண் மீது சொத்து குவிப்பு வழக்கு இல்லை.
• இந்த பெண் ஆச்சிரமம் வைத்திருக்கும் சாமியாரும் இல்லை.
• இவர் சிறுவர் மீது பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை.

எனினும் இந்த பெண் படைகளால் கற்பழிக்கப்ட்டு 
சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்!

இவள் தனக்கு ரி.வி கேட்கவில்லை.
இவள் தனக்கு இலவச அரிசிகூட கேட்கவில்லை.
இவள் கேட்டதெல்லாம் தமது காட்டை
அந்நியருக்கு விற்க வேண்டாம் என்ற ஒன்று மட்டுமே!

தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்தை கனிமவளம் எடுப்பதற்காக வெளிநாட்டு முதலாளிகளுக்கு விற்கவேண்டாம் என்று கோரியதால் இந்தப் பெண் ஒரு மாவோஸ்டு என்று முத்திரை குத்தி படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாள்.

சிரியாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதாக கண்ணீர் சிந்தும் அமெரிக்கா மற்றும் முதலாளித்துவ நாடுகள் இந்தியாவில் இந்த பழங்குடி மக்கள் மீது நடைபெறும் கொலைகள், கற்பழிப்புகள், சொத்துகளை சூறையாடல் என்பன குறித்து ஏன் அக்கறை கொள்வதில்லை?

பாலஸ்தீனத்தில் கல்லெறியும் சிறுவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் இஸ்ரவேல் போல் இந்தியாவில் அப்பாவி பழங்குடி மக்களைக் கொன்றுவிட்டு அவர்களை நக்சலைட் பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது.

இந்திய அரசு காஸ்மீரில் அப்பாவி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இந்திய அரசு பழங்குடி மக்களை கொல்லும்போது நாம் ஏன் என்று கேட்கவில்லை.
இறுதியாக இந்திய அரசு எம்மை கொன்ற போது ஏன் என்று யாருமே கேட்கவில்லை.

இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி முதலில் பஞ்சாப் போராட்டத்தை நசுக்கியது. பின்னர் காஸ்மீர், நாகலாந்து, மணிப்பூர் போன்ற போராட்டங்களை நசுக்கியது. இறுதியாக இலங்கையில் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது. தற்போது பழங்குடி மக்களின் போராட்டத்தை நசுக்க முனைகிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக அனைத்து போராட்ட சக்திகளும் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே இந்திய அரசை தோற்கடிக்க முடியும். இதை உணர்ந்து அனைவரும் ஒன்றினைவோம்.

ஐரோப்பிய பாராளுமன்றில் தொடரும் விவாதங்கள்: சபா.நாவலன் !

ஐரோப்பிய பாராளுமன்றில் தொடரும் விவாதங்கள்: சபா.நாவலன் !

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ibon international என்ற அமைப்பு சுய நிர்ணய உரிமை, மக்கள் விடுதலை மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில் ஆய்வரங்கு ஒன்றை 23.09.2013 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இத்தலைப்பில் மூன்று ஆரம்ப உரையாளர்களும், நான்கு ஆய்வாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். (Cynthia McKinney, Former member, House of Representatives, USA , Dr. Hans Koechler, University of Innsbruck, Austria, Luis Jalandoni, National Democratic Front, Philippines) ஆரம்ப உரையைத் தொடர்ந்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.

ஆய்வுரையின் முதல் பேச்சாளராக ஈழப் போராட்டம் குறித்த ஆய்வை சபா நாவலன் நிகழ்த்தினார். 20 நிமிடங்கள் நீடித்த இந்த ஆய்வில் ஈழப் போராட்டம் இனப்படுகொலையின் முடிவில் வன்னியில் இலங்கை பாசிச அரசால் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது குறித்தும், இன்னும் அந்தப் போராட்டம் தொடரப்பட வேண்டும் என்றும் உலகின் ஏனைய தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்று ஈழப் போராட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏகாதிபத்திய அரசுகள் தமது நலன்களுக்காகப் போராட்டத்தைக் கையகப்படுத்தி அழித்ததை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலிருந்து மீண்டும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் மேலெழும் என அவர் குறிப்பிட்டார்.

இரண்டாவது பேச்சாளரான சிரியாவிலுள்ள குர்தீஷ் கவுன்சிலின் உறுப்பினரான சாலி இஸ்லாம் தனது உரையை நிகழ்த்தினார். சிரியாவில் குர்தீஷ் மக்களின் போராட்டம் குறித்தும் அது எவ்வாறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வெற்றியை நோக்கிச் செல்கிறது என்றும் குறிப்பிட்டார். அதன் பின்னர் பிரஞ்சு மொழியில் உரையாற்றிய ஹம்டன் அல் டமாரி பலஸ்தீனியப் போராட்டத்தை மேற்கு நாடுகள் அங்கீகரித்தது போன்ற தோற்றப்பாட்டை வழங்கினாலும் ஐ.நா போன்ற அமைப்புக்கள் தனி நாடாக ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுக்கும் என்றும் போராட்டங்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டார். மூன்றாவதாகப் பேசிய இகோர் சுலைக்கா அல்பேர்சால் இடது என்ற அமைப்பைச் சேர்ந்தவர். பாஸ்க் மக்கள் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பவர். பாஸ்க் மக்களின் போராட்ட வழிமுறைகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பதாக சூழலுக்கு ஏற்ப மாற்றமடைந்து தொடர்வதாகக் குறிப்பிட்டார்.

இறுதியாக சமாதானத்திற்கான குர்தீஷ் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த ஆன் கிரிஸ்ரின் காவாச் பேசினார். குர்தீஷ் பெண்களின் போராட்டத்தில் பங்களிப்புக் குறித்தும். ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பினுள் பெண்களின் விடுதலை சாத்தியமற்றது என்றும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் ஊடாகவே அது சாதியமாகும் என்றும் குறிப்பிட்டார். 100 பேர் வரையான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுள் இரண்டு ஈழத் தமிழர்களும் கலந்துகொண்டனர். கருத்தரங்கின் முடிவில் பார்வயாளர்கள் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் அரை மணி நேரம் வழங்கப்பட்டது. பலர் தமது போராட்டங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வேளையில் பிரான்சில் இயங்கும் மக்களவையிலிருந்து பார்வையாளராகக் கலந்து கொண்ட திருச்சோதி என்பவர் இலங்கையின் இனப்படுகொலையில் 70 ஆயிரம் மக்கள் உலக நாடுகளின் ஆதரவுடனேயே கொல்லப்பட்டனர் என்றார்.

.

Tuesday, September 10, 2013

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

செங்கொடி பதிகிறது!
செவ்வணக்கம் செலுத்துகிறது!

தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

சோசலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை பலியாக்கும். இது மனித சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலை விதி. பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்

தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.

படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.

தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம்.

• யார் மாமனிதர்கள்? • யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?

• யார் மாமனிதர்கள்?
• யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?

மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ் கூறுகிறார்,

மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது. பெருவாரியான மனிதர்களை மகிழ்ச்சி பெறச் செய்கிற மனிதன்தான் பெரும் மகிழ்ச்சியாளன் என்று அனுபவம் கூறுகிறது.

சுவாமி ஆஸ்ரம்பாபு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்

 சுவாமி பிரேமானந்தா
• சுவாமி நித்தியானந்தா
• சுவாமி சங்கராச்சாரியார் ஆகியோர் வரிசையில் இன்று
• சுவாமி ஆஸ்ரம்பாபு பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மதிப்பு மிக்க சாமியார்களில் ஒருவரான 72 வயதான ஆஸ்ரம்பாபு சாமியார் 11வயது சிறுமியுடன் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சாமியார்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் மக்கள் மனங்களில் இன்னும் மாற்றம் ஏற்படவேயில்லை. மக்களின் அறியாமைகளை பயன்படுத்தும் இந்த சாமியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த சுவாமி நித்தியானந்தா இன்றும் புகழ் மிக்க சாமியாராக டிவி யில் வலம் வருகிறார். அவரது பாலியல் காட்சிகள் யு ரியுப்பில் அதிகளவு பார்க்கப்பட்டது என்ற சாதனையைப் பெற்றுள்ளது. நடிகை சொர்ணமாலாவுடன் இருந்த காஞ்சி பெரியவர் இப்பவும் புகழுடன் வலம் வருகிறார். இவர்கள் இதுவரை தண்டிக்கப்படாதது பல (ஆ)சாமிகளுக்கு தொடர்ந்தும் தவறு செய்யும் தைரியத்தைக் கொடுத்துள்ளது.

மக்கள் விழிப்படைந்தால் மட்டுமே, மக்கள் பகுத்தறிவு பெற்றால் மட்டுமே, மக்கள் மூட நம்பிக்கைகளை ஒதுக்கினால் மட்டுமே சமூகம் முன்னேற முடியும். இவ்வாறான சமூக விரோதிகளை ஒழிக்க முடியும். டில்லியில் ஒரு 16 வயது பையன் மாணவியைக் கற்பழித்துவிட்டான் என்றதும் கொதித்தெழுந்து அவனது ஆணுறுப்பை வெட்டி தண்டனை கொடுக்க வேண்டும் என்று கொக்கரித்தவர்கள் இன்று ஒரு கிழட்டு சாமி 11 வயது சிறுமையை கெடுத்திருப்பது குறித்து மௌனம் சாதிப்பது ஏன்? அந்த கிழட்டு ஆசாமியை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்று ஏன் கோரவில்லை?

ஒரு புறத்தில் இந்தியா வளர்கிறது, வல்லரசாகிறது என்கிறார்கள். இன்னொரு புறத்தில் மக்களின் அறியாமையை பயன்படுத்தி சாமிகள் என்னும் போர்வையில் சமூக விரோதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நிலையில் ஒரு பெரியார் அல்ல ஆயிரம் பெரியார் தோன்றினாலும் இந்தியாவில் பகுத்தறிவு வளருமா என்பது சந்தேகமே!

தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாதே!

• துபாயில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாதே!

• பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயலும் ஜ.நா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்!

பிரித்தானியா தமிழ் அகதிகளை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது. அவுஸ்ரேலியாவும் திருப்பி அனுப்புகிறது. இந்தியாவும் திருப்பி அனுப்ப முயல்கிறது. தற்போது அதே வரிசையில் துபாயில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை திருப்பி அனுப்ப ஜ.நா முயல்கிறது.

இலங்கையில் தற்போது போர் இல்லை என்பது உண்மைதான். தற்போது குண்டு சத்தங்கள் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதெல்லாம் இலங்கையில் அமைதி உள்ளது என்பதன் அர்த்தம் அல்ல. இன்றும்கூட மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜ.நா மனிதஉரிமை தலைவர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு எதேச்சதிகாரமாக நடக்கிறது என இலங்கையில் வைத்து கூறியுள்ளார். ஆனால் அதே ஜ.நா இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது எனக்கூறி துபாயில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை திருப்பி அனுப்ப முயல்கிறது.

“இலங்கை நட்பு நாடு அல்ல என்று அறிவிக்க வேண்டும். இலங்கையில் நடக்கும் மாநாடுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்லக்கூடாது” என்று முதலமைச்சர் ஜெயா அம்மையார் கோருகிறார். அனால் அதேவேளையில் அகதிகள் 3 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவரது அரசு முயற்சி செய்கிறது. இது என்ன நியாயம்?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்ப கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதற்கு மாறாக தமிழக அரசு செயற்படுகிறது. தமிழக அரசின் இந்த இரட்டை வேடத்தை தட்டிக் கேட்க வேண்டிய கலைஞர் இதுபற்றி வாய் திறக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையில் மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள். நியாயம் கேட்போர் அது டாக்டராக இருந்தாலும் “மெண்டல்” எனக்கூறி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மர்ம கொலைகள் தொடருகின்றது. ராணுவத்தால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவது அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. இவ்வாறு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிவையில் அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்புவது மிகவும் தவறானது. வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த கொடுமைகளுக்கு எதிராக , ஜ.நா வின் அநியாயத்திற்கு எதிராக , இந்திய அரசுகளின் தவறுகளுக்கு எதிராக மனிதாபிமான உணர்வுள்ளவர்கள் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்.

அகதிகளை அடைத்து வைக்காதே!
அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்பாதே!