Saturday, September 28, 2013

ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்

ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார் கேட்டுக்கொண்டபடி அவரை மெரினாக் கடற்கரையில் மீன்காட்சியகத்திற்கு அருகில் சந்தித்தேன். என்னைக் கண்டதும் என் கைகளை இறுகப் பிடித்தவர் சில நிமிடங்கள் என்னை உற்று நோக்கினார். எதுவும் பேசவில்லை. எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவர் எளிமையானவர் மட்டுமல்ல வழக்கமாக மிகவும் நட்புடனும் சரளமாகவும் பேசுபவர்.

சில நிமிட மௌனத்தின் பின் அவரே பேச்சை ஆரம்பித்தார். “பாலத்திற்கு குண்டு வைப்பது போன்ற செயல் எதுவும் செய்ய வேண்டாம் என்று தமிழரசனிடம் கூறுங்கள். இதனால் இந்திய அரசு குறிப்பாக றோ உளவுப்படை மிகவும் கோபம் அடைந்துள்ளது” என்றார். நான் பதில் எதுவும் கூறாமல் அவர் கூறுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்து “ தமிழ்நாட்டு புரட்சிகர அமைப்புகளுக்கு நீங்கள் ராணுவ உதவி எதுவும் செய்ய வேண்டாம். “பேரவை” தான் இந்த அமைப்புகளுக்கு சகல உதவிகளும் செய்கிறது என்றும் இதனால் அதற்கு காரணமான உன்னையும் நெப்போலியனையும் கொல்லும்படி எங்களிடம் றோ உளவுப்படை கேட்டிருக்கிறது” என்றார்.

இதைக் கேட்டதும் நான் ஆச்சரியமடைந்தேன். இதற்கு முன்னர் மதுரையில் தமிழீழ தேசிய ராணுவ அமைப்பின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனை சந்தித்த ஒரு றோ அதிகாரி “பாலனிடம் கூறுங்கள். அவன் பட்டசில் (குண்டியில்)சூடு வைப்போம்” என்று கூறியதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். எனவே றோ என் மீது கோபமாக இருக்கிறது என்பது எனக்கு ஆச்சரியமில்லை. ஆனால் எம்மைக் கொல்வதற்கு அவர்கள் ஏன் ஈரோஸ் இயக்கத்திடம் கேட்க வேண்டும் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இறுதியாக பாலகுமார் விடைபெறும் முன்னர் “ உன்னையும் நெப்போலியனையும் கொல்லும் பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஆனால் எமது அமைப்பில் உள்ள எல்லோரையும் நம்ப முடியாது. யாராவது அதை செய்துவிடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என்றார். அவர் ஏன் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு பேசாமல் நின்றார் என்பது புரிந்தது. நானும் எம் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறைக்கு நன்றி தெரிவித்து கவனமாக இருக்க முயல்கிறேன் என்று கூறினேன்.

அப்போது தோழர் நெப்போலியன் மலையகத்தில் இயக்க பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் உடனடியாக பாலகுமார் தெரிவித்த விடயத்தை அவருக்கு அறிவிக்க முடியவில்லை. மேலும் அவர் மலையகத்தில் நிற்பதால் அவருக்கு எந்தவித ஆபத்தும் இந்திய உளவுப்படையால் நிகழ வாயப்பில்லை என நான் நம்பினேன்.

ஆனால் நாம் எதிர்பார்த்தற்கு மாறாக மலையகத்தில் வைத்து தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார். இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரோஸ் இயக்கத்தின் ராணுவ பிரிவு மூலம் தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார்.

இந்திய புரட்சிகர அமைப்புகளுடன் தொடர்பு வைத்தமைக்காக குறிப்பாக தோழர் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படைக்கு உதவியமைக்காக எமது தோழர் நெப்போலியன் கொல்லப்பட்டார். இந்திய உளவுப்படையானது உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் கொலைகளை செய்யும் என்பதற்கு தோழர் நெப்போலியன் படுகொலை ஒரு உதாரணமாகும்.

இந்திய அரசு எமது நட்பு சக்தி அல்ல. அது எமது போராட்டத்தை நசுக்கும் ஒரு எதிரி என்று அன்றே நாம் அறிவித்து அதற்கு எதிராக இந்தியாவில் உள்ள புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியம் மேற்கொண்டோம். அதனால் எமது தோழர் நெப்போலியனை இழந்தோம். ஆனால் இன்று, நாம் அன்று கூறியது சரியானது என்பதையும் அதற்கான தோழர் நெப்போலியனின் இழப்பு மதிப்பு மிக்கது என்பதையும் உணர்கிறோம். எனவே தொடர்ந்தும் புரட்சிகர சக்திகளின் ஜக்கியத்திற்காக உழைப்போம் என்பதையும் இந்திய அரசுக்கு எதிராக உறுதியான போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

(அடுத்த பதிவில் தோழர் நெப்போலியனின் தோழர் தமிழரசனுடான நினைவுகளை பகிர்கிறேன்)

No comments:

Post a Comment