Friday, May 31, 2019

•மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இதற்காகப் போராடி
சிக்காக்கோ வீதிகளில்
இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்"
எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே
எம் கரங்களில் தவளும் "செங்கொடி".
வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன்
இன்று உழைப்பதற்காக வாழ்கிறான்.
மாற்றுவோம் இந்த அவல நிலையை.
உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது.
இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா
இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது.
பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார்.
ஏன் இந்த நிலை?
உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம்.
ஆறு மனி நேர வேலை கேட்போம்
எட்டு மணி நேர உறக்கம் கேட்போம்
பத்து மணி நேர ஓய்வு கேட்போம்.
போராடுவோம் எமக்காக மட்டுமல்ல
எமது அடுத்த சந்ததிக்காகவும்!
•முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம்
•உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம்.
•நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம்
வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்!

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை (05.05.1818)முன்னிட்டு

•மாபெரும் ஆசான் கால்மாக்ஸ் பிறந்தநாளை (05.05.1818)முன்னிட்டு
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை
.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்
.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்கு முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

இஸ்லாமியர் புர்க்கா அணிவதை தடை செய்ய வேண்டும்

இஸ்லாமியர் புர்க்கா அணிவதை தடை செய்ய வேண்டும் எனக் கோருவோர் இந்த சாமிமார் கோமணமாவது கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வருவார்களா?
புர்க்கா அணிந்து வந்து யாரும் குண்டு வைக்கவில்லை. ஆனாலும் அரசு இஸ்லாமியர் புர்க்கா அணிவதை நிறுத்தும்படி நிர்ப்பந்திக்கிறது.
குண்டு வெடிக்கப் போவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, குண்டு வெடித்ததும் புர்க்கா அணிவதை தடுக்க சட்டம் கொண்டு வருகிறது.
அரசாங்கம் நிர்ப்பந்திக்கிறது. மாறாக அறிவுறுத்தும் முறையை பாவிக்க வேண்டும். ஏனெனில் நிர்ப்பந்தம் தோலைத்தான்; தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவை தொடும்.
பேராயர் தனக்கு அரசு தர முன்வந்த குண்டு துளைக்காத வாகனம் தேவையில்லை என்று கூறியிருக்கிறார். நல்ல விடயம். அவரை பாராட்டுவோம்.
அதேபோல் அவர்
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய கடவுள் தேவையில்லை
தண்ணீரில் நடந்து காட்டிய இறைவனும் தேவையில்லை
செங்கடலை இரண்டாக பிளந்த தேவனும் தேவையில்லை
இறந்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த இரட்சகரும் தேவையில்லை
தன் ஆலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்காமல் செயல் இழக்க வைக்கும் கடவுள்தான் தேவை என்று சொல்வாரா?
ஒருபோதும் அவ்வாறு சொல்லமாட்டார். சொன்னால் அவர் பேராயராக இருக்க விடமாட்டார்கள்.
எனவே இனி குண்டு வெடிக்கக்கூடாது என்று அரசு உண்மையில் விரும்பினால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும்.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் பௌத்த, இந்து மற்றும் கிருத்தவ அடிப்படைவாதத்தை ஒழிக்க வேண்டும்.
மத அடிப்படைவாதத்தை சட்டம் போட்டு ஒருபோதும் ஒழிக்க முடியாது. அறிவுறுத்தல் உரையாடல்களை உருவாக்க வேண்டும்.

நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் ஓட்டத்தை நிறுத்திவிட்டால் உலகம் நம்மை பார்ப்பதை நிறுத்திவிடும்.
எனவேதான் நாம் ஓடுவதை நிறுத்துவதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை அரசு கைது செய்திருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை மாணவர்களும் தமிழ் மக்களும் அனுட்டிப்பதை தடுப்பதற்காகவே இதனை அரசு செய்திருக்கிறது.
எனவேதான் பிணையில் வெளிவரமுடியாத பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாணவர்களை கைது செய்திருக்கிறது.
இதில் கேவலம் என்னவென்றால் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை ஆதரித்த எம் தலைவர்கள் அச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.
மக்கள் இவர்களை நம்பும்வரையில் இவர்களும் இத்தகைய “சுத்துமாத்து”களை செய்துகொண்டே இருக்கப் போகிறார்கள்.
சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணத்தை நிறுத்திவிடலாம் என்று நம்புவதைப் போன்று மாணவர்களை கைது செய்துவிட்டால் தமிழ் மக்கள் மீண்டும் எழுந்துவிடுவதை தடுத்துவிட முடியும் என்று அரசு நம்புகிறது.
ஆனால் எந்தளவு அடக்குமுறை இருக்கிறதோ அந்தளவு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும் என்ற வரலாற்று உண்மையை அரசு கவனிக்க மறந்துவிட்டது.
மாணவர்கள் எந்த தற்கொலைதாரிக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை
மாணவர்கள் குண்டு வைத்தவர்களை ஆதரித்து உதவி செய்யவில்லை.
மாணவர்கள் குண்டு வைத்தவர்களுடன் எந்த வியாபாரமும் செய்யவில்லை.
மாணவர்களின் இடத்தில் இருந்து தோட்டா ரவைகளோ வாள்களோ கத்திகளோ எடுக்கப்படவில்லை.
எல்லாவற்றையும்விட, ரத்த ஆறு ஓடும் என்று மாணவர்கள் இதுவரை பேசியதும் இல்லை.
ஆனால் இத்தனையும் செய்த ஹிஸ்புல்லா, ரிசாத் போன்றவர்களை கைது செய்யாத அரசு மாணவர்களை கைது செய்திருக்கிறது
கேட்டால் 2005 ம் ஆண்டு வைத்த பிரபாகரன் படத்திற்கு இப்போது கைது செய்ததாக கூறுகிறது..
சரி அப்படியே பிரபாகரன் படம் வைத்திருந்தாலும் என்ன தவறு?
ரோகண விஜவீராவின் படத்தை விரும்பிய சிங்களவர்கள் வைத்திருக்க முடியும்.
ரோகன விஜயவீராவின் நினைவு நாளை விரும்பிய சிங்களவர்கள் கொண்டாட முடியும்.
ரோகண விஜயவீராவுக்கு சிங்களவர்கள் மாத்தறையில் சிலை வைத்து மரியாதை செய்ய முடியும்.
ஏன் ரோகண விஜயவீராவை புகழ்ந்து திரைப்படம்கூட எடுத்து இலங்கையில் திரையிட முடியும்.
ஆனால் பிரபாகரனை விரும்பும் தமிழ் மாணவர்கள் படம் வைத்திருக்க கூடாது.
இது என்ன நியாயம்?

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது
நீங்கள் மாணவர்களை கைது செய்யலாம். ஆனால் தமிழ் மக்கள் தமக்காக மாண்டவர்களை நினைவு கூர்வதை தடுத்துவிட முடியாது.
தமிழ் மக்கள் மாண்டவர்களை நினைவு கூர்வது அழுது புலம்புவதற்காக அல்ல. மாறாக மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் அப்படியே வீழ்ந்து கிடந்துவிடுமா என்ன?
ஓடாத மானும் போராடாத இனமும் ஒருபோதும் வாழ முடியாது என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.
தமிழ் மக்கள் ஒரு செய்தியை இலங்கை அரசுக்கு சொல்ல விரும்புகிறார்கள். “நீங்கள் எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது”.

• ஒற்றைப் பனை மரம்!

• ஒற்றைப் பனை மரம்!
ஒரு ஈழத் தமிழரால் ஈழப் போராட்டம் பற்றி எடுக்கப்பட்ட ஒரு சினிமா இது. சர்வதேச ரீதியில் பல விருதுகள் பெற்ற ஈழத்து சினிமா என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மரங்களை சுற்றி வரும் காதல் பாட்டுகளோ அல்லது குத்து பாட்டுகளோ இல்லாத சினிமா இது.
வியாபார வெற்றிக்காக எந்த சமரசமும் செய்யப்படவில்லை. இருப்பினும் விருதுகளை மட்டுமன்றி வியாபார ரீதியாக வெற்றியையும் கொடுத்து வருகிறது.
நடிகர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். தொழில் நுட்பங்கள்கூட தென்னிந்திய சினிமாவுக்கு இணையாக இருக்கின்றது. எமக்கு தெரிந்த கதைதான். இருந்தாலும் இறுதிவரை சலிப்பின்றி நகர்கின்றது.
இயக்குநராக புதியவன் வெற்றி பெற்றிருப்பது மட்டுமன்றி இனி வரும் காலங்களில் சிறந்த படங்களை தருவார் என்ற நம்பிக்கைiயும் தருகிறார்.
கலகம் செய்ய துணிந்துவிட்டவனுக்கு உதவி புரிவதே ஒரு இலக்கியத்தின் பணியாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறினார்.
அவர் எழதிய “தாய்” நாவல் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் ஏற்பட்ட பல போராட்டங்களுக்கு உதவி புரிந்தது. இன்றும்கூட உதவி வருகிறது.
ஆனால் “ஒற்றைப்பனை மரம்” இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவி புரியவில்லை.
“ஒற்றைப் பனைமரம்” போராட்டத்தின் நியாயத்தை பேசியதைவிட போராட்டத்தில் விட்ட தவறுகளையே அதிகம் பேசுகிறது.
தவறுகளை திரும்பிப் பார்ப்பது என்பது முன்னோக்கி நடப்பதற்கு உதவுவதாகவே இருக்க வேண்டும்.
ஆனால் ஒற்றைப்பனை மரத்தில் தவறுகளை சுட்டிக்காட்டிய விதம் முன்னோக்கி செல்ல உதவுவதாக அமையவில்லை.
ஒவ்வொரு சொல்லுக்கு பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது என்று லெனின் கூறினார்.
ஒற்றைப்பனை மரத்தின் பின்னரும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது.
இயக்குனர் புதியவன் எமது சமூகத்தின்
• சாதித்தீண்டாமையை எடுத்து காட்டுகிறார்
• பிரதேச வேற்றுமையை சுட்டிக் காட்டுகிறார்
• முஸ்லிம்களை வெளியேற்றியதை காட்டுகிறார்.
• மலையக தமிழரை ஒதுக்கியதைக் காட்டுகிறார்.
• பெண் அடிமைத்தனத்தை காட்டுகிறார்
இவ்வாறு அவர் சுட்டிக் காட்டியது அனைத்தும் உண்மைதான். எதையும் யாரும் மறுக்க முடியாது.
ஆனால் இவையனைத்தையும் தாண்டி இந்த சமூகம்தான் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தியது.
இந்த சமூகம்தான் இந்த போராட்டத்தில் இரண்டு லட்சம் உயிர்களை பலி கொடுத்துள்ளது.
இத்தனை இழப்பிற்கு பின்னரும் “எம்மை சாகடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்க முடியாது” என்று மீண்டும் எழுந்து நிற்பதும் இந்த சமூகம்தான்.
“தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் எம்மை ஒருபோதும் வாங்க முடியாது” என்று கேப்பாப்புலவில் ஒருமித்து போராடுவதும் இந்த சமூகம்தான்.
700 நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களுக்காக கொட்டும் மழையிலும் நடுங்கும் குளிரிலும் வீதியில் உட்கார்ந்து போராடுவதும் இந்த சமூகம்தான்.
சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தானே சிறுவன் பிரதிபன். அவனும் இந்த சமூகம்தான்.
உலகில் எல்லா சமூகத்திலும் இருப்பது போன்று எம் சமூகத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதையும்தாண்டி பெருமைப்படக்கூடிய வீரம் செறிந்த வரலாறும் எமக்கு இருக்கிறது.
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக வேண்டும் என சரியாகவே சொல்லியிருக்கிறார். பெண்கள் ஊர்வலம் போக வேண்டும் எனக் கூறுகிறார்.
700 நாட்களுக்கு மேலாக கேப்பாப்புலவு மக்களும் காணாமல் போனவர்களின் உறவுகளும் ஊர்வலம் போகின்றனர். இதுவரை எந்த தீர்வையும் அவர்களால் பெற முடியவில்லை.
அப்புறம் எந்த அடிப்படையில் அல்லது எந்த நம்பிக்கையில் பெண்களை ஊர்வலம் போகச் சொல்கிறார் இயக்குனர் பதியவன். அதுவும் துப்பாக்கி ஏந்தி போராடிய பெண்ணை கொடி பிடித்து ஊர்வலம் போகச் சொல்கிறார்.
ஒருபுறம் ஆயதப் போராட்டதினால் ஏற்பட்ட தவறுகளை காட்டுகிறார். மறுபுறத்தில் சங்கம் கட்டி ஊர்வலம் போகச் சொல்கிறார்.
இதைத்தான் மகிந்த ராஜபக்சவும் கூறினார். இதைத்தான் சம்பந்தர் சுமந்திரனும் கூறிவருகின்றனர். இதையே புதியவனும் கூறுவது ஆச்சரியம் தருகிறது.
அதுவும் புளட் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த போராளியான புதியவனிடம் இருந்து அப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் ஒரு சினிமா வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
இறுதியாக,
புதியவன் அவர்களே!
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. எனவேதான் போராட்டம் இன்பமயமானது என்கிறார்கள்.

சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?

சிறீயண்ணா நினைவு கூரப்பட வேண்டுமா?
ரெலோ இயக்க தலைவர் சிறீயண்ணா முன்வைத்த தமிழீழம் கைவிடப்பட்டுவிட்டது
ரெலோ இயக்க தலைவர் சிறீயண்ணா முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
ரேலோ இயக்க தலைவர் சிறீயண்ணா நம்பிய இந்திய அரசு அவரையும் கைவிட்டது, ஈழத் தமிழர்களையும் கைவிட்டுவிட்டது.
இந்நிலையில் இப்போது எதற்காக ரெலோ இயக்கம் சிறீயண்ணாவை நினைவு கூர்கிறது?
சிறீயண்ணா தலைமையிலான ரெலோ இயக்கம் தாஸ் உட்பட பல உட்கட்சி போராளிகளை கொன்றதற்காக நினைவு கூருகின்றார்களா?
ஊர்வலமாக சென்ற வடமராட்சி மக்களை கோப்பாயில் வைத்து சுட்டார்களே அதற்காக நினைவு கூருகின்றார்களா?
ஊர்வலமாக வந்த மண்டான் மக்களை மூத்தவினாயகர் கோவிலடியில் வைத்து அடித்து விரட்டினார்களே அதற்காக நினைவு கூர்கிறார்களா?
பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் போன்றவர்களை சுட்டுக்கொன்றமைக்காக நினைவு கூருகின்றார்களா?
சுட்டுக் கொன்ற அதே தமிழரசுக்கட்சியுடன் சேர்ந்து இப்போது எலெக்சன் கேட்கிறார்களே. அதற்காக நினைவு கூர்கிறார்களா?
பல சிறிய இயக்கங்களை தடை செய்து அவர்களின் ஆயுதங்களை பறித்தமைக்காக நினைவு கூருகின்றார்களா?
வன்னியில் NLFT இயக்கதில் இருந்த இரண்டு போராளிகளை பிடித்து சென்று அவர்களைக் கொண்டே கிடங்கு வெட்டி அதில் அவர்களை கொன்று புதைத்தார்களே. அதற்காக நினைவு கூர்கின்றார்களா?
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் அமைப்பிடமிருந்து ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகளை மிரட்டி பறித்தமைக்காக நினைவு கூருகின்றார்களா?
சயிக்கிளுக்காகவும் சில்லறை பணத்திற்காகவும் பல அப்பாவி முஸ்லிம் மக்களை கிழக்கு மாகாணத்தில் கொன்றார்களே. அதற்காக நினைவு கூர்கிறார்களா?
அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் வரும் என்று 1983ல் கூறினார்கள். அதன் பின்பு 35 பொங்கல் வந்துபோய் விட்டது. ஆனால் இவர்கள் கூறிய தமிழீழம் மட்டும் இன்னும் வரவில்லை.
இவர்களை நம்பி சென்ற பல போராளிகள் இனறும்; தெருவில் நிற்கின்றனர்.

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?

•நாம் ஏன் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்?
மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நினைவு கூர வேண்டும்?
இல்லை
அப்படியென்றால் மரணித்தவர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
அவர்கள் எதற்காக போராடி மரணித்தார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
எமக்கான நியாயத்தை உலகம் வழங்கும்வரை எமக்கான தீர்வு கிட்டும்வரை நாம் மரணித்தவர்களை நினைவு கூரவேண்டும்.
ஆம். மரணித்தவர்களை நினைவு கூர்வது அழுது ஒப்பாரி வைப்பதற்காக அல்ல. நாம் மீண்டும் எழுவதற்காகவே.
எழுவோம். முன்பைவிட பலமாக எழுவோம்!

•முகநூலில் விமர்சனம் செய்வது எப்படி?

•முகநூலில் விமர்சனம் செய்வது எப்படி? அல்லது
ஆக்கபூர்வமான உரையாடலை செய்வது எப்படி?
இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே.
சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர்.
எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர்.
அண்மையில் “ ஓ! இயேசுவே, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றுதானே போதித்தீர்கள். ஆனால் இவர்களோ முஸ்லிம்களின் பர்தாவை கழட்டு என்கிறார்களே” என்று ஒரு பதிவில் நான் எழுதியிருந்தேன்.
உடனே மலேசியாவில் இருக்கும் சுமந்திரனின் செம்பு ஒருவர் “ எனது படத்தை போட்டு “சோனியின்ரையை ஊ - - “என்று முகநூலில் எழுதினார்.
நாய் குரைத்து சந்திரன் தேய்வதில்லை. அதுபோல் இந்த நாய் குரைத்து பாலச்சந்திரன் நான் தேய்ந்து விடுவேனா? நிச்சயமாக இல்லை.
இது கடிநாயாக இருந்தால் என்னால் கட்டிப் போட முடியும். ஆனால் இது விசர் நாயாக இருப்பதால் விலத்தித்தான் போக வேண்டியிருக்கு.
அதேபோல் இன்னும் சிலர் இந்த முஸ்லிம் மக்கள் தொடர்பான உரையாடல்களில் “நடுநிலை நக்கி” என்ற சொல்லைப் பாவிக்கிறார்கள்.
இந்த கருத்துக்களில் முற்போக்கான கருத்து பிற்போக்கான கருத்து என்று இரண்டு கருத்துகள் மட்டுமே உண்டு. நடுநிலையான கருத்து என்று ஒன்று இல்லை.
அப்படி தன்னை ஒருவர் “நடுநிலை” என கூறிக்கொள்வார் எனில் அவரும் பிற்போக்கான கருத்தின் மறைமுகமான ஆதரவாளர் என்றே கருத வேண்டும்.
இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் முற்போக்கானவர்களைப் பார்த்து “நடுநிலை நக்கி” என்று கூறுபவர்கள் தங்கள் அறிவின் உயரத்தை அதாவது அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள் என்றே பொருள்.
சரி அப்படியென்றால் முகநூலில் எப்படி விமர்சனம் செய்வது? அல்லது ஆக்கபூர்வமான உரையாடலை எப்படி செய்வது?
இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.