Friday, May 31, 2019

•முகநூலில் விமர்சனம் செய்வது எப்படி?

•முகநூலில் விமர்சனம் செய்வது எப்படி? அல்லது
ஆக்கபூர்வமான உரையாடலை செய்வது எப்படி?
இன்று முகநூலில் உள்ள முக்கிய பிரச்சனை விமர்சனம் செய்வது எப்படி என்பதே.
சிலர் தமது நட்பு சக்திகளை “கிழி கிழி என்று கிழித்து தொங்கவிட்டதாக” பெருமையுடன் எழுதுகின்றனர்.
எதிரியையும் நட்பு சக்திகளையும் எப்படி விமர்சிப்பது என்று தெரியாமலே அப்படி செய்கின்றனர்.
அண்மையில் “ ஓ! இயேசுவே, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றுதானே போதித்தீர்கள். ஆனால் இவர்களோ முஸ்லிம்களின் பர்தாவை கழட்டு என்கிறார்களே” என்று ஒரு பதிவில் நான் எழுதியிருந்தேன்.
உடனே மலேசியாவில் இருக்கும் சுமந்திரனின் செம்பு ஒருவர் “ எனது படத்தை போட்டு “சோனியின்ரையை ஊ - - “என்று முகநூலில் எழுதினார்.
நாய் குரைத்து சந்திரன் தேய்வதில்லை. அதுபோல் இந்த நாய் குரைத்து பாலச்சந்திரன் நான் தேய்ந்து விடுவேனா? நிச்சயமாக இல்லை.
இது கடிநாயாக இருந்தால் என்னால் கட்டிப் போட முடியும். ஆனால் இது விசர் நாயாக இருப்பதால் விலத்தித்தான் போக வேண்டியிருக்கு.
அதேபோல் இன்னும் சிலர் இந்த முஸ்லிம் மக்கள் தொடர்பான உரையாடல்களில் “நடுநிலை நக்கி” என்ற சொல்லைப் பாவிக்கிறார்கள்.
இந்த கருத்துக்களில் முற்போக்கான கருத்து பிற்போக்கான கருத்து என்று இரண்டு கருத்துகள் மட்டுமே உண்டு. நடுநிலையான கருத்து என்று ஒன்று இல்லை.
அப்படி தன்னை ஒருவர் “நடுநிலை” என கூறிக்கொள்வார் எனில் அவரும் பிற்போக்கான கருத்தின் மறைமுகமான ஆதரவாளர் என்றே கருத வேண்டும்.
இந்த உண்மையை அறிந்துகொள்ளாமல் முற்போக்கானவர்களைப் பார்த்து “நடுநிலை நக்கி” என்று கூறுபவர்கள் தங்கள் அறிவின் உயரத்தை அதாவது அறியாமையை வெளிப்படுத்துகிறார்கள் என்றே பொருள்.
சரி அப்படியென்றால் முகநூலில் எப்படி விமர்சனம் செய்வது? அல்லது ஆக்கபூர்வமான உரையாடலை எப்படி செய்வது?
இதற்கு மாபெரும் மார்க்சிய ஆசான் தோழர் மாவோ சேதுங் அவர்கள் எமக்கு தகுந்த வழி காட்டியுள்ளார்.
'எதிரியின் மீதான நம் விமர்சனம் புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும். நட்பு சக்திகளின் மீதான விமர்சனம் பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது எமது இலட்சியமான தமிழின விடுதலைக்கு ஒருபோதும் உதவாது.
நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும். ஆனால் அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்..
எமது உரையாடல்கள் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment