Saturday, May 30, 2015

மே தின வாழ்த்துகள்!

மே தின வாழ்த்துகள்!
“உழைக்கும் மக்கள் இழப்பதற்கு
உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை.- ஆனால்
அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது” - கால் மாக்ஸ்
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனை வழிகாட்டலில்
உழைக்கும் மக்களின் ஜக்கியத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை மேற்கொள்வோம்!
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
எமது புரட்சிகர மேதின வாழ்த்துகள்.

வணக்கம் நணபர்களே!

வணக்கம் நணபர்களே!
கரவெட்டியில் இருக்கும் எனது தாயார் சுகயீனம் காரணமாக இலங்கை சென்று வந்தேன். அதனால் கடந்த 20 நாட்களாக பதிவுகள் எதுவும் போட முடியவில்லை. இதனால் பல நண்பர்கள் மிகவும் அக்கறையுடன் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது பயணம் திடீரெனவும் மிகவும் குறுகியதாகவும் அமைந்ததால் நண்பர்களுக்கு தெரிவிக்கவோ அல்லது குறிப்பாக இலங்கையில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவோ முடியவில்லை. அவர்கள் எனது நிலைமையினை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.
தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகநூல் இன்பாக்ஸ் என பல வழிகளிலும் நலம் விசாரித்த நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வழமைபோல் எனது பதிவுகள் வரும் என கூறிக்கொள்கிறேன்.

லண்டன் கரோ பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு !

• லண்டன் கரோ பகுதியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு !
நேற்றைய தினம் (21.05.15) லண்டன் கரோ பகுதியில் சீலன் அவர்களின் “வெல்வோம் அதற்காக” நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை வழிகாட்டியாக கொண்டு செயற்படும் சீலன் அவர்கள் தனது “புளட்” இயக்க அனுபவங்களை இந் நூலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் பலர் தமது அனுபவங்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் சீலன் அவர்களின் இந் நூல் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
கௌரி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் நித்தியானந்தன், இளையதம்பி தயானந்தா, வேலு, சேனக்க ,சபேசன்,காமினி மற்றும் ஸ்ரான்லி ஆகியோர் உரையாற்றினார்கள்.
தமிழ், சிங்கள,முஸ்லிம் மூவின மக்களும் கலந்துகொண்டதுடன் நிகழ்வும் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்றது சிறப்பு அம்சமாகும்.
சிறுவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றது. அதில் அவர்கள் அர்வமுடன் கலந்து கொண்டார்கள். இதனை ஒழுங்கு செய்த அமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
சீலன் அவர்களின் குடும்பத்தவர்கள் நிகழ்வில் பங்கு பற்றியதோடு அவரது பணிகளுக்கு ஆதரவும் உதவியும் வழங்கி வருவது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
சீலனின் பணிகளை பாராட்டுவதோடு அவருக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்களே உண்மையான தேச பக்தர்கள்

நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர்.
அவர்களே உண்மையான தேச பக்தர்கள்
நக்சலைட்டுக்கள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுக்கள் பயங்கரவாதியோ அல்லது கிரிமினல்களோ அல்லர். ஒருவர் மாவோயிஸ்ட்டு என்பதற்காக கைது செய்வது தவறு என்று கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் “நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர் , அவர்கள் தேச பக்தர்கள்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும் நக்சலைட்டு என்று கைது செய்வதும் அவர்களை பயங்கரவாதிகள் என சுட்டுக்கொல்வதும் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சதீஸ்கரில் தமது நிலங்களை அந்நிய கம்பனிகளுக்கு விற்பதை எதிர்க்கும் ஆதிவாசிகளை நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி கொல்லப்படுகிறார்கள்.
பெண்கள் கூட மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.
ஒருபுறம் நீதிமன்றம் நக்சலைட்டுகள் கிரிமினல்கள் அல்லர் என தீர்ப்பு வழங்கினாலும் மறுபுறம் பொலிசார் நக்சலைட்டுகள் என முத்திரை குத்தி அப்பாவிகளை கொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில்கூட மதுரையில் ஆறு இளைஞர்கள் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஊழல் அரசியல்வாதியான ஜெயா அம்மையார் விடுதலை செய்யப்படுகிறார். ஆனால் மக்களுக்காக போராடும் புரட்சிவாதிகள் அநியாயமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
அயோக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்!
புரட்சிவாதிகளுக்கு இன்னொரு நியாயம்!
இதுதான் இந்திய நியாயம்!

• புறம்போக்கு என்கிற பொதுவுடமை

• புறம்போக்கு என்கிற பொதுவுடமை
சினிமா என்கிற பொழுதுபோக்கு சாதனம் இதுவரையில் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கவே பயன்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் மக்களை அறிவூட்டவும் அதனை பயன்படுத்த முடியும் என்பதை கொஞ்சம் நிரூபித்திருக்கிறது “புறம்போக்கு” என்கிற சினிமா.
மரண தண்டனைக்கு எதிராக மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்து வண்ணம் எடுக்கப்பட்டிருக்கும் இப் படம் தன் நோக்கில் முழு வெற்றியை பெறாவிடினும் ஓரளவு மக்களின் கவனத்தை திசை திருப்பும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே.
சினிமா என்பது இன்று ஒரு பெரிய வியாபாரம். எனவே இப் படமும் தவிர்க முடியாமல் வியாபாரதிற்காக சில சமரசங்களை செய்துள்ளமை புரிந்து கொள்ள முடிகிறது.
கதாபாத்திரங்களுக்கு புரட்சிப் போராளிகளின் பெயரை சுட்டியிருப்பது மட்டுமல்ல படத்தில் மாக்சிய ஆசான்களின் மேற்கோள் வசனங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வர்க்க முரண்பாடுகளை கையில் எடுக்காத எந்த தேசிய விடுதலைப் போராட்டமும் வெற்றி பெற முடியாது என்ற வரிகள் அழுத்தமாக உச்சரிக்கப்பட்டிருக்கிறது.
புரட்சிகர பெயர்களை சுட்டுவதாலோ அல்லது மாக்சிய ஆசான்களின் மேற்கோள்களை உச்சரிப்பதாலோ ஒரு படம் புரட்சிகர சினிமாவாக அமைந்துவிட முடியாது. மாறாக இவை இல்லாமலேயே மக்களின் விடுதலையை பேசுகின்ற படங்கள் எடுக்க முடியும்.
மணி ரத்தினம் போல் ஆளும் வர்க்கத்திற்கு உதவும் படமாக இப்படம் எடுக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதுவும் புரட்சியை ஒருவகையில் கொச்சைப் படுத்தும் படம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
இனி வரும் காலங்களில் மக்களின் பிரச்சனைகளை பேசும் படங்கள் வருவதற்கு இப் படம் உதவும். அந்த வகையில் இதனை வரவேற்கலாம்.

• இதை என்னவென்று விளங்கிக்கொள்வது?

• இதை என்னவென்று விளங்கிக்கொள்வது?
அண்மையில் நடைபெற்ற “நாம்தமிழர்” மாநாட்டில் வழிகாட்டியாக சர்வாதிகாரி கிட்லர் படம் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மீது உலக யுத்தத்தை திணித்தவர் கிட்லர். பாசிசவாதியாக திகழ்ந்தவர் கிட்டலர்.
அவரை ஸ்டாலின் தலைமையில் இரண்டு கோடி மக்களை இழந்து தோற்கடித்தவர்கள் ரஸ்சிய மக்கள்.
இத்தகைய பாசிட் கிட்லரை வழிகாட்டியாக கொள்பவர்களை என்னவென்று அழைப்பது?
தமிழகத்தில் தமிழ் தேசிய விடுதலைக்கு வழிகாட்டியவர் தோழர் தமிழரசன். அவர் படம் வைக்கப்படாமையை என்னவென்று விளங்கிக்கொள்வது?
காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்சாமல் பிரபாகரன் படம் வைத்த “நாம் தமிழர்” கட்சியினருக்கு தோழர் தமிழரசன் படம் வைக்க முடியாமற் போனது ஏன்?
கடந்த வருடம் தோழர் தமிழரசன் தாயாரை மேடையில் ஏற்றி மதிப்பளித்த சீமான் அவர்களுக்கு இம்முறை மாநாட்டில் தமிழரசன் படத்தை வைக்க தோன்றாதது ஏன்?
தோழர் தமிழரசனை நிராகரித்துவிட்டு தமிழ் தேசிய விடுதலையை முன்னெடுக்க முடியுமா?
“நாம் தமிழர்” கட்சியினர் பதில் தருவார்களா?

பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்

• பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்
நாம் தமிழர் மாநாட்டில் தோழர் தமிழரசன் படம் வைக்கப்ட்டுள்ளது. அதனை ஆதாரத்துடன் காட்டியுள்ளனர்.
எனவே அவர் படம் வைக்கப்படவில்லை என நான் எழுதியது தவறு. எனது தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.
தோழர் தமிழரசன் படம் மட்டுமல்ல புலவர் கலியபெருமாள் அவர்களின் படமும் வைத்து மதிப்பளித்துள்ளார்கள்.
இதற்காக “நாம் தமிழர்” கட்சியினரை பாராட்டுகிறேன். இதன் மூலம் இனிவரும் காலங்களில் அனைவரும் தவிர்க்க முடியாமல் தோழர் தமிழரசன் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நிலையினை உருவாக்கியிருக்கின்றனர்.
கிட்லரின் படம் வைத்தமை வருத்தம் அளித்தாலும் அதனை எதிர் வரும் காலங்களில் தவிர்ப்பார்கள் என நம்புகிறேன்.
எனது தவறுக்கு மீண்டும் வருத்தம் தெரிவிப்பதுடன் தோழர் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் படம் வைத்து அவர்களை மதிப்பளித்தமைக்காக “நாம் தமிழர்” கட்சியினரை பாராட்டுகிறேன்.

உணர்ச்சி பூர்வமாக அணுகுவதில் பயன் இல்லை. உணர்வு பூர்வமாக அணுகுவதே பயன் தரும்.

• உணர்ச்சி பூர்வமாக அணுகுவதில் பயன் இல்லை.
உணர்வு பூர்வமாக அணுகுவதே பயன் தரும்.
எமக்கு பணம் தேவையில்லை. தங்கையை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். – வித்தியாவின் சகோதரி
வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்- மகிளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார
வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் - இலங்கை ஆசிரியர்கள் சங்கம்
வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது கொடுமையான சம்பவம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பதன் மூலம் இன்னொரு வித்யாவை உருவாவதை எதிர்காலத்தில் தடுக்க முடியுமா?
இப் பிரச்சனை உணர்ச்சி பூர்வமாக அணுகுவது பயன் தருமா? மாறாக உணர்வுபூர்வமாக அணுகுவது பயன் தருமா?
இந்த கொடுமைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியது வரவேற்கப்பட வேண்டியதே. அதுவும் மூவின மக்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருப்பது ஒரு நல்ல மாற்றம்.
ஜனாதிபதி மைத்திரி யாழ் வந்து வித்யா குடும்பத்தவர்களை சந்தித்து விசேட நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படும் என கூறுமளவுக்கு மக்கள் போராட்டம் அமைந்துள்ளது.
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரச அமைச்சர்கள் கூட வீதியல் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
இன்னனொரு வித்தியா தோன்றாமல் தடுக்க வேண்டிய அரசியல்வாதிகள் ஆக்கபூர்வமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை ஏமாற்ற வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
ஒரு புறத்தில் ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தவர்கள் மறு புறத்தில் வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறும் முரணை பார்க்கிறோம்.
மீண்டும் ஒரு முறை மக்களின் போராட்டம் துரோக அரசியல்வாதிகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.
வித்தியாவின் மக்கள் போராட்டம் கற்று தந்த முக்கிய பாடம் என்னவெனில்
(1) மக்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராட தயங்கமாட்டார்கள்.
(2) போராட்டம் இன்றி மக்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாது.
(3) சரியான தலைமை இல்லையேல் மக்கள் போராட்டம் துரோக தலைமைகளால் மழுங்கடிக்கப்படும்.

• “டெலோ” கம்பனும் வித்தியா கொலையும்

• “டெலோ” கம்பனும் வித்தியா கொலையும்
1984ம் ஆண்டளவில் “டெலோ” அமைப்பின் வடமராட்சி பிரிவு அரசியல் பொறுப்பாளராக கம்பன் என்ற போராளி இருந்தார். (தாஸ் பிரிவு)
அப்போது ஒருநாள் அவர் நெல்லியடி சுப்பையா கடைக்கு முன்னால் உள்ள லைற் போஸ்ற்றில் ஒரு தமிழ் இளைஞரைக் கட்டி வைத்திருந்தார்.
அவ் இளைஞர் ஒரு பெண்னை கற்பழித்துவிட்டார் என்றும் அதற்கு என்ன தண்டனை வழங்கலாம் என்றும் கூடிநின்று வேடிக்கை பார்த்த மக்களிடம் கம்பன் கேட்டார்.
உடனே மக்கள் அனைவரும் “சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று சத்தமாக கூறினார்கள்.
இந்த பதிலை எதிர்பார்த்த கம்பன் உடனே அந்த இளைஞரை சுட்டுக்கொல்ல முயன்றார்.
இதை பார்த்துக்கொண்டிருந்த நான் கம்பனிடம் “கற்பழிக்கப்பட்ட பெண் எங்கே? ஏன் நள்ளிரவில் அந்த பெண் இந்த இளைஞர் அறைக்கு சென்றார்?; இது எல்லாம் விசாரித்தே தண்டனை வழங்க வேண்டும்” என்றேன்.
எனது கூற்றில் இருந்த நியாயத்தை புரிந்த மக்கள் சிலர் எனது கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
தனது நோக்கம் நிறைவேறுவதற்கு நான் தடையாக இருக்கிறேன் என நினைத்த கம்பன் என் அருகில் வந்து தனது மடியில் இருந்த ரிவோல்வரைக் காட்டி “ விமர்சனத்திற்கு என்ன பதில் என்று தெரியும்தானே?” என்று மிரட்டினார்.
வேறு வழியின்றி நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். உடனே அந்த இளைஞன் கம்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
(இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய இரு கொசுறு விடயம் -முதலாவது இதே கம்பன் படிக்கும் காலத்தில் கீரிமலையில் குளிக்க வந்த பெண்களிடம் சேட்டை விட்டு தரும அடி வாங்கியவர். இரண்டாவது சுப்பையா கடை முதலாளி டெலொவுக்கு சாப்பாடு கொடுக்காமல் புலிகளுக்கு கோழிக்கறியும் சோறும் கொடுத்த காரணத்தால் அவரை பழி வாங்குவதற்றகாக அவரது கடைக்கு முன்னால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் யாரையாவது சுட்டு தொங்கவிடுவார்கள் டெலோ அமைப்பினர்)
இன்றும்கூட இதே கம்பன் போன்று சிலர் வித்தியா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோருகிறார்கள். ஆனால் இது எந்த பயனும் தரப்போவதில்லை என்று
நன்கு தெரிந்தும் மக்களை ஏமாற்ற இதுபோன்று நாடகமாடுகிறார்கள்.
மக்கள் இனியும் ஏமாறக்கூடாது. விழிப்புணர்வு பெற வேண்டும்.

• அமைச்சர் விஜயகலா இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?

• அமைச்சர் விஜயகலா இத்தனை நாளும் கோமாவில் இருந்தாரா?
வித்யா கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் விஜய கலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சரண்யா என்ற மாணவி பாலியல் வல்லுறவுக்குள்ளாகி மரணமான போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
தமிழ் மக்களுக்காக ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்ததால் இதனை கவனிக்க மறந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம்.
ஆனால் இவரது ஊரான காரைநகரில் தண்ணீர் எடுக்கச்சென்ற மாணவி கடற்படை வீரரால் கற்பழிக்கப்பட்டபோது அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஏன் இவர் கேட்கவில்லை?
அப்போது இவர் மருத்துவமனையில் “கோமா”வில் இருந்தாரா?
இப்போது அதிகாரம் அமைச்சர் விஜயகலாவின் கையில் இருக்கிறது அல்லவா! அந்த கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை வழங்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவாவது அவர் முனைவாரா?
ஏனெனில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருக்கும்வரை சம்பந்தப்பட்ட வீரர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய மறுத்து வந்தார். இப்போது அமைச்சர் விஜயகலா அதனை செய்வாரா?
அதுமட்டுமல்ல கடந்த வருடம் நெடுங்கேணியில் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்த ராணுவ வீரருக்கு தண்டனை கிடைக்க வழி செய்வாரா?
மன்னாரில் ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குள்ளான மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்வரா?
அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இனி இன்னொரு பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமை நடக்காமல் தடுக்க வேண்டும்.
அதைவிடுத்து மக்களை ஏமாற்ற பத்திரிகைளில் அறிக்கை விடுவதோ அல்லது எதிர்கட்சிகள் போன்று வீதியில் இறங்கி போராடுவதோ எந்த பயனும் தரப் போவதில்லை.
இந்த அரசியல் நாடகங்களை மக்கள் ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துவிட்டார்கள்.