Thursday, June 30, 2016

Gajan Gambler என்பவர் எனது “இலங்கைமீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
லண்டனில் வசித்து வருபவரும,; “தமிழ் சொலிலாடிற்றி” அமைப்பின் செயற்பாட்டாளருமான Gajan Gambler என்பவர் எனது “இலங்கைமீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்
.தோழர் பாலன் எழுதிய இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்னும் நூல், இந்திய ஏகாதிபத்திய அரசும், அதன் தரகு முதலாளிகளும் இணைந்து எவ்வாறெல்லாம் இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றனர் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.
கடந்த காலம் முதல் இன்று வரை இந்தியாவின் முழுமுதல் நோக்கம் தெற்க்காசியா பிராந்தியத்தின் பேட்டை ரவுடியாக உருவாகுவதேயன்றி அயல் நாடுகளுடன் நல்லுறவை பேணி அவற்றின் உள் நாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதல்ல என்பது புலனாகின்றது.
தமது அரசியல, ராணுவ, பொருளாதார செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையை அடிமைப்படுத்தி அதன் மூலம் தமக்கு ஆதாயம் தேடும் இந்தியா ஒரு போதும் தமிழர் நலன்களுக்கு உதவி செய்யப்ப போவதில்லை.
தமது சொந்த இன மக்களான காஸ்மீர், மணிப்பூர் , நாகலாந்து ,அசாம் மக்களின் போராட்டங்களை நசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு தமிழ் மக்களின் போராட்டங்களை அங்கீகரித்து அவர்களுக்கென்று ஒரு தேசம் உருவாக்குவதற்க்கு உதவ முன்வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை ஆதாரங்களோடு முன்வைக்கின்றார் ஆசிரியர்.
மேலும், தமிழர் முஸ்லிம் மற்றும் வேடுவ மக்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் அனைத்து நடவடிக்களையும் இந்தியா இலங்கையின் ஆசியுடன் செய்து வருகின்றது.
சம்பூர் அனல் மின் நிலையம், பலாலி விமானம் நிலைய ஒப்பந்தம், கிழக்கு நிலங்கள்,கனிம வளங்கள் , எண்ணெய் வளங்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படல், மோசடியான மின்சார ஒப்பந்தம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை புனரமைப்பு போன்றவற்றின் பின்னால் மறைந்துள்ள மோசடிகளை தகுந்த தரவுகளுடனும், புள்ளிவிபரங்களுடனும் சுட்டிக் காட்டுகின்றார்.
இதன்மூலம் இந்தியாவின் முக்கிய நோக்கம் இலங்கையின் வளங்களை சுரண்டி, தமது வர்த்தகத்தை விஸ்தரிப்பதே அன்றி தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது அல்ல என்பது புலனாகின்றது.
இந்திய ஏகாதிபத்திய அரசானது, ஆரம்ப கால போராட்ட குழுக்களுக்கு ஆயுதம் வழங்கியது முதல், முள்ளி வாய்க்கால் யுத்தத்திற்க்கு துணை புரிந்தது வரை அனைத்துமே, தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவேயன்றி தமிழ் மக்களிற்க்கு உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்க்காகவல்ல என்பதையும் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தலையீடு பற்றி மெளனம் சாதிக்கும், இந்தியாவின் செல்லப் பிள்ளைகளான சம்மந்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை ஏன் நம்பக்கூடாது என்பதையும்,அதற்க்கான காரணத்தையும் தெளிவாக தோலுரித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.
ஆகவே, இனியும் இந்தியாவை நம்பிக் கொண்டிருக்காமல், புரட்சிகர மற்றும் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளின் துணை கொண்டு இலங்கை மீதான இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் போராட முன்வரவேண்டும் என்ற மார்க்கசியா, லெனினிய பார்வையை முன்வைக்கின்றார் ஆசிரியர்.
இந்தியாவின் கேவலமான, கோர முகத்தை அறிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய மிக முக்கிய நூல் இதுவாகும்.

Kanthi Mathi அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
சென்னையில் வாழ்ந்து வரும் நண்பர் Kanthi Mathi அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு.
வணக்கம் பாலா சார் ,
மார்க்சிய கண்ணோட்டத்தோடு கூடிய உங்கள் பகுப்பாய்வு நூல் நல்லதொரு முயற்சி . இந்தியாவின் ஆக்கிரமிப்பு மனப்பாங்கை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது வரவேற்க தக்கது .
அரசியல் ரீதியாக ,பொருளாதார ரீதியாக , ராணுவ ரீதியாக என பிரித்து பலகோணத்தில் ஆக்கிரமிப்பின் தன்மையை வகைப்படுத்தி உள்ளீர்கள் . கண்டிப்பாக அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் .
என்னுடைய கண்ணோட்டத்தில் :
இன்றைய சமூக அமைப்பில் முதலாளித்துவ சிந்தனையில் அனைத்துமே லாப நோக்கில் மட்டுமே பார்க்கப்படுகிறது தனிநபர் உறவு உட்பட . தன் நாட்டின் மீதான மற்ற நாடுகளின் ஏகாதிபத்திய சுரண்டலை தவிர்க்க முடியாத இந்தியா( உதாரணம் காட் ஒப்பந்தம் , அணு ஆயுத ஒப்பந்தங்கள், மற்றும் பல ஒப்பந்தங்கள்) அதே சுரண்டலை இலங்கையின் மீதான தன் ஆளுமையின் மூலம் வெளிப்படுத்தி சுரண்டிக்கொண்டிருக்கிறது . இது ஒரு அரசாங்கம் தெரிந்தே மக்களுக்கு செய்யும் துரோகம் . ஆனால் மக்களோ உடனடி பாதிப்பு தெரியாதவரை எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை .
தேசிய இனப்போராடடம் :
தன் நாட்டின் தேசிய இனப்போராட்டங்களை அடக்க முனையும் ஒரு அரசாங்கம் எப்படி பக்கத்து நாட்டின் தேசிய இன போராட்டத்தை ஆதரிக்கும் ? சந்தை பொருளாதாரத்தை பலப்படுத்த , எல்லைகளை பலப்படுத்த ,அரசியல் பலத்தை பெருக்க என பல சுயலாபத்துக்காக இப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீடு . ஒருவேளை இந்தியா ஒதுங்கி இருந்தால் இதே லாப நோக்கில் வேறு நாடுகளின் ஆதிக்க சக்திகள் ஆளுமை செலுத்தி இருந்திருக்கும் .
ராஜீவ்காந்தி படுகொலை :
ராஜிவ் அவர்களின் படுகொலை நிகழாவிட்டாலும் இன ஒழிப்பு நிகழ்ந்தே இருக்கும் என்பது உங்கள் கருத்து . இது தனிநபர் படுகொலையன்று .இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்குமான சுமூக மனப்பாங்கை வேரறுக்கும் படுகொலை .
எட்க்கா ஒப்பந்தம் :
இலங்கை மீதான முழு ஆக்கிரமிப்புக்கான இந்த ஒப்பந்தத்தை ஜே வி பி மட்டுமல்ல அங்குள்ள தமிழ் சிங்களர் அனைவரும் இணைந்து எதிர்க்க வேண்டும் . அவர்கள் மட்டுமல்ல இங்குள்ள இந்திய மக்களும் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுக்க முன்வர வேண்டும் .
தவறு எங்கு நடந்தாலும் யார் செய்தாலும் எதிர்க்கும் மனப்பாங்கு என்று மக்களிடையே இயல்பாக வருகிறதோ அன்று தான் மாற்றங்கள் சாத்தியம் .
அதிகபட்ச்சம் எத்தனை பேருக்கு ஒரு அரசாங்கம் மற்ற நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களை அறிவதில் ஆர்வம் இருக்கும் .? அறிந்து கொள்ளவே விரும்பாதவர்கள் எங்கனம் எதிர்ப்பு குரல் கொடுக்க முன் வருவர் ?
மார்க்சியம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம் . மனிதநேயத்தை மையமாக கொண்டு அதற்கு தடையாக இருக்க கூடியவற்றை தகர்த்தெறிந்து அன்பினால் ஆன சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதே மார்க்சிய வழிமுறை.
எல்லோரும் நமக்கென்ன இருக்கும் சுயநல உலகில் உங்களை போல் ஒரு சிலர் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளும் இம்முயற்சிகள் சிறுதுளி பெருவெள்ளமாக வெற்றி பெற்று மாற்றங்கள் சாத்தியமாகட்டும் .
நன்றி 

“இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் கிடைக்குமிட விபரங்கள்.

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

“இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் கிடைக்குமிட விபரங்கள்.
•லண்டனில் பௌசர் புத்தக கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி- 
317 First Floor,
High Street North,
Eastham,
London,
E12 6SL,
கைத் தொலைபேசி- 07817262980
•கனடாவில் முருகன் புத்தக நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
முகவரி-
Murugan Book Stores,
5215 Finch Ave,
E #123 Toronto,
ON,
M1S 0C2
தொலைபேசி- 416 3210285
•இலங்கை, இந்தியா மற்றும் பிரான்ஸ்; நாடுகளில் நூல் கிடைக்குமிட விபரங்கள் விரைவில் அறிய தரப்படும்.
•கீழ்வரும் இணைப்பில் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூலை வாசிக்கலாம்.
•இந் நூலின் PDF பிரதி வேண்டுவோர் என்னுடன் தொடர்பு கொள்ளவும

Sri Raja அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு

பிரான்சில் வாழ்ந்து வரும் நண்பர் Sri Raja அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு.
வணக்கம் தோழா் பாலன்,
உங்களின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூல் படித்தேன்.
அருமையான படைப்பு .இதை உண்மையின் சாட்சிகள் என்றே கூறலாம்.
புள்ளி விவரங்களுடன் மக்களின் அத்தனை பிரச்சனைகளையும் அலசிச் செல்கிறது .
குறிப்பாக இந்தியாவின் பொய் முகத்தை துயிலுருத்திக் காட்டுகிறது.
உங்கள் நூல் இப்பவும் இந்தியாவை நற்பாசையுடன் நம்பியிருக்கும் நம் மக்களின் மாயையை நீக்கும்.
உங்கள் கருத்துப்படி ஓட்டு மொத்த இலங்கை மக்களின் முக்கிய எதிரியே இந்தியாதான் என்பதை உணரும் நாள் வெகுதூரம் இல்லை..

Thamilan Wannimakan என்பவர் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்த தெரிவித்த கருத்துகள் வருமாறு.

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் கிளிநொச்சியில் வாழ்ந்து வரும் Thamilan Wannimakan என்பவர் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்த தெரிவித்த கருத்துகள் வருமாறு. (அவர் வன்னியில் வாழ்ந்து வருவதால் பாதுகாப்பு நலன் கருதி அவரது சொந்த விபரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)
'இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' தோழர் பாலன்
இந்தியாவின் இலங்கைமீதான 'கரிசனைகள்' முற்றுமுழுதான இந்திய பூகோள அரசியல் நலன் சார்ந்தவையே. இதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படவில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. மாறாக இந்தியத் தலையீடு ஈழத்து தமிழ் மக்களுக்கு அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு என்றும் பாதகமாகவே அமையும் என்ற உண்மைநிலையை இந்த நூல் மிகவும் அழுத்தமாக வெளிப்படுத்தி நிற்கிறது.
ஈழத்தமிழருக்கு இந்தியா உதவியிருக்கும் அல்லது உதவும் என்று இன்றும் நம்பும் தமிழருக்கு முகத்தில் அறையும் யதார்த்தங்களை இந்தநூல் முன்னிலைப் படுத்தி நிற்கிறது. அத்துடன் இன்னும் இந்தியாவை நம்புங்கள் என்று நமக்கு போதிப்போரின் முகத் திரைகளும் இங்கு கிழிந்து தொங்குகின்றன.
"இந்தியா ஒருபோதும் தமிழழீத்தை ஆதரிக்காது. இந்திய அரசு போராளிகளுக்கு உதவுவது என்பது இலங்கை முழுவதையும் தனது ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டு வருவதற்கே. பங்களாதேசில் தனது நோக்கம் நிறைவேறியதும் எப்படி தான் பயிற்சி கொடுத்த போராளிகளை அழித்ததோ அதேபோன்று இலங்கையிலும் தனது நோக்கம் நிறைவேறியதும் ஈழப் போராளிகளை இந்திய அரசு அழிக்கும்!" என்ற தமிழரசனுடைய பார்வை மிகத் தெளிவானதே.
தமிழரசனுடைய இந்த கூற்றை ஈழப் போராளி அமைப்புகள் ஏற்றிருந்தால் இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பைத் தவிர்த்திருக்க முடியயும் . முள்ளிவாய்க்கால் அழிவைக் கூட தடுத்திருக்கலாம் என நூலாசிரியர் குறிப்பிடுவது அவரிடமிருந்து இது தொடர்பான தெளிவான விளக்கமொன்றை கோர நிர்ப்பந்திக்கிறது.
பஞ்சசீலக் கொள்கை தொடர்பாக ஆசிரியர் குறிப்பிடும் போது சீனப் பிரதமர் சூஎன்லாய் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை சூஎன்லாய் நேரு ஆகியவரினது பிரேரணையாக பாண்டுங் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது என்றும் அதனை இந்தியா அந்த மண்டபத்திலேயே மீறிவிடத்தையும் சுட்டி காட்டுகிறார்.
இந்த இடத்தில் ஆசிரியர் சீனா தொடர்பில் ஏதும் கூறாது விட்டிருப்பது 'ஆக்கிரமிப்பு' தொடர்பான பார்வையை சீனா தொடர்பில் மட்டுப் படுத்திக் கொண்டாரா என நினைக்கத் தோன்றுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் அடைப்படை அம்சமே 'ஒரு நாட்டின் தனித்துவ கௌரவத்தையும் அரசாங்க அதிகாரத்தையும் மற்ற நாடுகள் மதிக்க வேண்டும். எந்த நாடும்பிறநாட்டைஆக்கிரமிக்கத்தாக்கக்கூடாது.'என்பதுதான்.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும்சந்தர்ப்பத்திலேயே(1954) சீனாவின்ஆக்கிரமிப்புக்குள் திபெத் அகப்பட்டிருந்தது. இன்னும் ஆக்கிரமிப்புத் தொடர்கிறது.
இந்த நூல் பொதுவாக அயல் நாடுகளில் இந்தியாவின் தலையீடு பற்றியும் குறிப்பாக 'இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு' பற்றியும் பேசுகிறது.
இருந்த போதிலும் இன்றைய உலகளாவிய ரீதியில் காணப்படும் பூகோள அரசியல் நிலைமைகளை பற்றி பேசாது விட்டிருப்பது ஒரு தொடர்புநிலை தொய்வு போல தெரிகிறது.
அதுபோல இலங்கையில் இந்தியாவின் ஆக்கிரமிப்புப் பற்றி விலாவாரியாக விபரிக்கும் இந்த நூலில் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகளின் தலையீடு பற்றியும் குறிப்பாக அமெரிக்காஇ சீனா பற்றியும் சுருக்கமாகவேனும் ஆராயப் பட்டிருக்க வேண்டும். இலங்கையில் அந்நிய நாடுகளின் தலையீடுகள் ஒன்றுடன் ஒரு தொடர்புபட்டவையே.
இந்தியாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கு ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி இந்தியத் தமிழரும் பலியாக்கப் படுகின்றனர். தமிழ் நாட்டு மீனவர்களில் 600 இற்கும் மேற்பட்டோரை சிறி லங்கா படைகள் படுகொலை செய்துள்ளன. இருந்தும் இந்திய அரசு இன்றுவரை அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்திய அரசு விரும்பியிருந்தால் எப்போதோ இதற்கு முடிவுகட்டியிருக்க முடியும்.
ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இலங்கைமேல் வேண்டிய நேரத்தில் தனது அழுத்தத்தை அல்லது ஆக்கிரமிப்பை பிரயோகிக்க ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த விரும்புகிறது.
இந்தியாவின் பலாலி விமான நிலைய கரிசனை தொடர்பாக பலர் கொண்டிருக்கும் 'அவிவிருத்தி' நப்பாசையில் நூலாசிரியர் மண்ணள்ளிப் போடுகிறார். பலாலி விமானநிலையம் ஒரு சர்வதேச விமான நிலையமாக மாற்றமடைய இந்தியா இடமளியாது என்ற உண்மை இந்தியாவின் நிபந்தனைகளில் இருந்து தெளிவாகிறது.
அத்துடன் விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் நிரந்தரமாக பறிபோகவிருக்கும் 1இ500 குடும்பங்களின் காணிகள் பறிபோகும் ஆபத்து நிலையும் இங்கு சுட்டிக்காட்டப் படுகிறது.
இந்த பலாலி விமான நிலைய அபிவிருத்தி என்பதில் மறைந்து கிடக்கும் பாதகமான நிலமைபற்றி தமிழ் அரசியல்வாதிகள் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்கள் கதிரை சுகமே கதியென்று கிடக்கிறார்கள். மேலும் மேலும் இது தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகள் எதிலும் யாரும் ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில் இந்தநூல் அது பற்றி நிறைய விடையங்களைப் பேசுகிறது. இதன் மூலம் மறைக்கப்படுகின்ற பல விடையங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
அடுத்து இந்தியாவிற்கு கிழக்கில் தாரைவார்க்கப் பட்டுள்ள 675 சதுர கி.மீ பரப்புள்ள தமிழர் நிலம் பற்றி குறிப்பிடப் படுகிறது. இது பற்றி எம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம். இது பற்றி யாராவது கவனத்தில் கொள்கிறார்களா?
இதேபோல் தமிழரின் பாரம்பரிய நிலப்பகுதியான சாம்பூர் அனல் மின்நிலையத்திற்காக மக்களினதும் சுற்றுச் சூழலியலாளர்களினதும் எதிர்ப்பை மீறி இந்தியாவுக்கு வழங்கப் பட்டுள்ளது.
நிலக்கரியால் இயக்கப்படும் இந்த மின்நிலையத்தால் ஏற்படும் மிக ஆபத்தான சூழலியல் பாதிப்புகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப் பட்டுள்ளது.
இந்த மின்நிலையத்தால் இந்தியாவிற்கோ அல்லது இலங்கைக்கோ பொருண்மிய இலாபம் ஏதும் இல்லை என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. அவ்வாறாயின் அவை அடையும் இலாபம் என்ன என்பதே இங்குள்ள கேள்வி. இந்தியாவின் பூகோள அரசியல் நலன் மற்றும் சிறிலங்காவின் தமிழ் தேசிய இனவெதிர்ப்புக் கொள்கை என்பவையே இதற்கான பதிலாக அமையமுடியும்.
இது போலவே மன்னார் வளைகுடாவில் நடைபெறும் “எண்ணெய் அகழ்வு” தொடர்பான இந்தியாவின் செயற்பாடடையும் நாங்கள் நோக்க வேண்டும். இன்னும் மன்னார் வளைகுடாவில் பொருளதார இலாப நிலையைப் பெறுவதற்குரிய எண்ணெய்வளம் இருப்பது உறுதி செய்யப்படாத நிலையில் அந்த பரப்பில் இந்தியா காலூன்றுகிறது.
மேலும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீழ் இயக்க நடவடிக்கை என்பது யாழ் குடாநாட்டின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு மிகமோசமான
நடவடிக்கையே. முற்று முழுதாக பாதிக்கப் படைப்பு போவது தமிழர்களே.
இவ்வாறு சிறிலங்கா அரசின் உதவியுடன் நடக்கும் இந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பற்றி இலங்கையின் அரசியல் வாதிகளோ அல்லது அமைப்புகளோ வாய்திறந்தாக தகவல் இல்லை.
இவைதொடர்பில் பேசவேண்டியஇஎதிர்த்துப் போராடவேண்டிய தமிழ் அரசியல் வாதிகள் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பினர் கண்ணமூடிஇ கைகட்டிஇ வாய்பொத்தி நிற்கிறார்கள்.
இந்த நூலில் ஏராளமான தகவல்களை நூலாசிரியர் பகிர்ந்து கொள்கிறார். இவ்வாறான ஒரு நூலை வெளியிடும் போது தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்கள் தொடர்பாக உசாத்துணை குறிப்புகளைக் கொடுப்பது மிகப் பயனுள்ளது அவசியமானதும் கூட.
இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியத் தூதரகங்கள் பற்றிய விடயமும் அவசியம் கருத்தில் கொள்ளப் படவேண்டியதே. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதராகச் செயட்பாடுகள் தமிழருக்கு உதவும் அல்லது நன்மை பயக்கும் ஒன்றாக இல்லை. இந்த இந்தியத் தூதராகச் செயட்பாடுகள் சிறிலங்கா அரசுக்கு துணை செய்பவையாகவே உள்ளன.
அத்துடன் தமிழர் கலாசார பண்பாட்டு விடையங்களிலும் அவர்களின் மேலான விடுதலை உணர்விலும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய விடயங்களையும் இந்த தூதரகம் மறைமுகமாக முன்னெடுப்பதாக தெரிகிறது.
இன்றைய நிலையில் இந்தியாவின் ஈழத்து தமிழர்களுக்கு எதிரான பெரும் அச்சுறுத்தல் இந்த இந்தியத் தூதரகம்.
எந்த பௌதீக வளங்களை ஒரு தேசிய இனம் இழப்பினும் அதனை மீளவும் தன்னகப் படுத்திக் கொள்ள முடியும் ஆனால் தனது மொழி பண்பாடு கலாசார கூறுகளை அதற்கு மேலாக அதன் விடுதலை உணர்வை அந்த இனம் இழந்தால் அதனை மீடடெடுப்பது மிகமிகச் சிரமம். ஆதிக்க சக்திகள் இவற்றை அழிப்பதில் அல்லது நீர்த்துப் போகச்செய்வதில் மிக முனைப்புக் காட்டி நிற்கின்றன.
' இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு' என்ற இந்த நூல் காலத்தின் தேவையாகும்.
-- வன்னிமகன் --

செந்தமிழினி பிரபாகரன் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கனடாவில் வாழ்ந்து வரும் செந்தமிழினி பிரபாகரன் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு
பாலன் தோழர் எழுதிய "இலங்கை மீதான இந்திய வல்லாதிக்கம்" நூல் சொல்வதென்ன?
இந்தியா ஈழத்தமிழர்க்கு நட்பு நாடா?
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நன்மை செய்யுமா?
இந்தியா இலங்கை வாழ் தமிழ் சிங்கள மக்களுக்கு நன்மை செய்யுமா?
இந்திய ஆக்கிரமிப்பு படை மூலம் மட்டுமா இந்தியா இலங்கை தீவில் ஆக்கிரமிப்பை செய்தது?
இன்றைய இந்தியாவின் இலங்கை மீதான பார்வை எத்தகையது?
இலங்கை மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பும் இலங்கை தீவின் வளங்கள் மீதான இந்தியாவின் சுரண்டல்களும் பற்றிய அவசியமான அவசரமான விழிப்புணர்வு வரவேண்டியது ஏன் காலத்தின் கட்டாயமாக உள்ளது?
இன்று இலங்கை தீவு எந்த எந்தவகைகளில் இந்தியாவிடம் தன்னை இழந்து பறிபோய் இருக்கின்றது?
காலம் காலமாக வந்த சிங்கள தமிழ் தலைவர்கள் எப்படி இந்தியாவிடம் இலங்கை மண்ணையும் ஈழ மக்கள் வாழ்வையும் விலை பேசி அடகு வைத்தார்கள்?
இன்று இலங்கையில் சிங்கள, தமிழ் பிரதேச மக்கள் கொள்ள வேண்டிய அவசியமான இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வினதும் போராட்டங்களினதும் தேவைகள் என்ன?
இன்று பாராமுகமாக இருந்தால் இலங்கை தீவு இந்தியாவின் 30 வது மாநிலமாக விரைவில் மாறிவிடும் அபாயம் நிலவும் என எதன் அடிப்படையில் இலங்கை மக்கள் அச்சப்பட வேண்டும்?
இது போல் ஓராயிரம் கேள்விகளுக்கு காலத்திற்கு ஏற்ற பதில்களை கொண்டிருக்கின்றது பாலன் தோழரின் "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" நூல்.
காலத்தின் இன்றியமையாத விழிப்புணர்வின் தேவையை வலியுறுத்தும் இந்த நூல் அனைத்து தமிழக மற்றும் இலங்கை மக்களும் படிக்க வேண்டியது.
மெல்ல மெல்ல புற்றெடுக்கும் இந்திய ஆதிக்கத்தின் வேர்களை அறுத்தெறியாது போனால் விரைவில் இந்தியா என்ற பெரும் முதலை இலங்கையை தனது 30 வது மாநிலமாக விழுங்கி விடும் என்பது உறுதி.
இந்தியா தனது அண்டை அயல் தேசங்களின் மீது செலுத்தும் ஆதிக்கங்கள் பற்றி அறியாது போனால் பறிபோகும் தேசங்களை மீட்டெடுக்க முடியாது. எதிரியின் முகம் அறியாமல் போராடும் போராட்டங்கள் வெற்றியை தரப் போவதில்லை.
இந்த நூலை படிக்கும் பொழுது சுட்டி காட்டப்படும் சுட்டெரிக்கும் உண்மைகள் அச்சமூட்டுகின்றன.
அறியாமையில் இலங்கையில் இன முரண்களுக்குள் மோதிக் கொண்டு இருக்கும் சிங்கள தமிழ் மக்கள் தம்மை அறியாமலே பேட்டை ரவுடியாக திகழும் இந்தியாவிடம் தமது மண்ணையும் வளங்களையும் இழந்து கொண்டு இருக்கின்றனர் என்ற அச்சமூட்டும் உண்மைகள் புரிகையில் இன்றைய இலங்கை வாழ் மக்களின் விழிப்புணர்வின் தேவைகள் உணரப்படுகின்றன.
அறிந்து கொள்ள நிறைந்த விடயங்களை குறைந்த பக்கங்களில் கொண்டிருக்கும் செறிந்த ஆவண விழிப்புணர்வு சிறுபிரசுர நூலாக இருக்கும் இந்நூலில் தமிழீழ தமிழக தமிழ் மக்களின் விடுதலைக்காக அயராமல் குரல் கொடுத்து வருபவரும் இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் நாட்டின் விடுதலைக்காக போராடும் அவசியத்தை தமிழக மக்களுக்கு வலியுறுத்தி பேசியும், எழுதியும், செயல்பட்டு தமிழ் நாட்டு விடுதலைக்காக போராடிய தோழர் தமிழரசன் பாதையில் போராடி வரும் உணர்வாளருமான தமிழ் தேச மக்கள் கடசியின் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன் அவர்கள் முன்னுரை எழுதி இருக்கின்றார் என்பதும் தனி சிறப்பாகும்.
காலத்தின் தேவையுணர்ந்து வெளிவந்திருக்கும் அரிய இந்த படைப்பை அனைத்து தமிழ் மக்களும் வாங்கிப் படிக்க முன்வாருங்கள்

கௌதம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழமையுடன் தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
தமிழ்நாடு திருச்சியில் இருக்கும் கௌதம் அவர்கள் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தோழமையுடன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இந்தியா மீதான இலங்கை ஆக்கிரமிப்பு நூல்
பெரியாரின் கூற்றைப்போல் வரலாற்றில் இந்தியா என்ற நாடு இருந்ததில்லை இனி இருக்கபோவதுமில்லை….
இலங்கையை எந்த அளவு அரசியல் ரீதியாகவும்,பொருளாதார ரீதியாகவும்,ராணுவரீதியாகவும் அடிமைபடுத்தி ஆக்கிரமித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களுடனும்,கடந்தகால நிகழ்வுகளை வரிசை படுத்தி உண்மையை உரக்க சொல்லும் நூல்….
இந்தியா ஒரு காலனியாதிக்க சந்தை நாடு ..முதலாளிகளின் லாபத்திற்க்காக தன் சொந்த நாட்டு மக்களையே கொலை செய்த ,செய்து கொண்டு இருக்கின்ற ஒரு கொலைகார நாடு இது இலங்கை தமிழ் மக்களுக்கு என்றுமே உண்மையாக உதவியதுமில்லை,உதவபோவதுமில்லை என்பதை கூறுகிறது இது …..
அது மட்டும் இல்லாமல் இந்தியா என்கிற பேட்டை ரவுடி தன்னை ஒரு வல்லரசாக காட்ட வேண்டும் என்பதற்க்காக பூடான்,சிக்கிம்,பங்காளதேஷ்,சீனா,பாகிஸ்தான், போன்றவற்றை தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவர செய்த அட்டூழியங்களை பட்டியளிடுகிறது….
முக்கியமாக இலங்கையில் இந்தியா அமைதிப்படையை அனுப்பி இந்திய ராணுவம் ,சிங்கள ராணுவத்தை விட அதிகமான உயிர்களை கொன்று ,பெண்களை பாலியல் சித்திரவதை செய்து அட்டூழியம் செய்ததை சொல்கிறது….
மேலும் விடுதலைபுலிகளையும்,சில புரட்சி குழுக்களையும் அழிதொழிக்க இந்தியா முக்கிய பங்கு வகித்ததையும்,அதன் பின்னர் பல முதலாளிகள் இலங்கையில் உள் நுழைந்ததையும்,தமிழ் மக்களின் நிலத்தை பிடுங்கி இந்திய தரகு முதலாளிகளுக்கு கொடுத்தது,விமான நிலையம் அமைக்க மக்களை விரட்டியடித்தது,அனல் மின் திட்டம் அனைவரின் எதிர்ப்பையும் மீறி வன்முறையாக அங்கே வைத்தது,பின்னர் மீனவர் பிரச்சனையை சமரசம் காணாமல் பெரு முதலாளியின் லாபத்திற்க்காக அதை கண்டும் காணாமல் வேண்டுமெனே அட்டூழியம் செய்வது,இலங்கையில் கல்வி,மருத்துவம்,பொருளாதாரம் என அனைத்து வகையிலும் இந்திய தரகு முதலாளிகளின் துணையோடு அடிமை படுத்தி வைத்திருப்பது என்று அடுக்கி கொண்டே செல்லலாம்..
இத்ற்க்கெல்லாம் பிரதான எதிரி முதலாளித்துவ ஏகாதிபத்தியம்….என்ற உண்மையை மறைத்து இன வெறியை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்ற விசயங்களை பற்றி பாமர மக்களை சிந்திக்க விடாமல் இலங்கையை தனது கட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவர செயல் பட்டு வருகிறது…..இரண்டு அரசுகளும்…..
இதை புரிந்து கொள்ள மார்க்சிய அரசியல் கண்ணோட்டம் தேவை…
இந்த சிறு வெளியீடு உண்மையான மனித நேயம் பொது அக்கறை உள்ள அனைவரும் படித்து….புரட்சி ஒன்றே தீர்வு….அது இலங்கை இந்தியாவின் பிடிவில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதானாலும் சரி …….காஷ்மீர்,மணிப்பூர்,நாகாலந்து,தமிழ்நாடு எதுவாயினும் சரி இந்திய என்னும் தரகு முதலாளியிடம் இருந்து தன்னை விடுவிக்க ஒரு பொதுவுடைமை புரட்சி மூலம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மூலமே தன்னை பாதுகாத்து கொள்ள முடியும் என்பதை விளக்குகிறது….
.இலங்கை மக்களின் கடந்தகால வீரம்மிக்க போரட்டத்தின் வழியே உண்மையான எதிரியை இனங்கண்டு முறியடிக்க உதவும் சிந்தனை ……..
இந்த சிறு வெளியீடு இலங்கையில் உள்ள அனைவரும் தமிழ்நாட்டு மக்களும்,உலகில் உள்ள தமிழ் மக்களும் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய நூல்
இலங்கை தமிழர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் தெரிந்து கொள்ளபட வேண்டிய நூல்
ஏனெனில் இந்தியாவின் கோர முகத்தை உணர்ந்து இந்தியா ஒரு போதும் உதவாது என்ற கருத்தை திண்ணமாக வலியுறுத்தும் நூல்…
இன்னும் பல அரிய கருத்துக்கள் உண்மைகள் அடங்கிய நூல்…..
இவை காலத்தின் கட்டாயம்….
இந்த நூலை எழுதி கொண்டுவந்ததற்க்காக மிக்க நன்றி பாலன் தோழர் அவர்களே…

சுதாகரன் சுதர்சன் என்பவர் தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
இலங்கையில் மட்டக்கிளப்பைச் சேர்ந்த நண்பர் சுதாகரன் சுதர்சன் என்பவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வணக்கம் பாலன் தோழர் !
தங்கள் இரு நூல்கள் என் கரம் கிடைத்தது. லண்டனில் வாழும் சகோதரி ஒருவரின் உதவியுன் சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாம் என்ற நூலும், இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூலும் டுபாயில் பெற்றுக்கொண்டேன்.
அதில் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூலானது படித்து முடித்து விட்டேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் தாண்டி இந்தியா இலங்கை மீது கொண்ட கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஜதார்த்தமாக கூறியுள்ளீர்கள்.
அதனை வெறுமனே புத்தகமாக படித்தால் போதாது உணர்ந்து படிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்திய போக்கும் அதற்கு நலிந்து போகும் சிறிலங்கா அரசின் நெகிழ் தன்மையும் இந்த நூலில் தெளிவாகிறது.
காலம் காலமாக நாம் அடிமைப்பட்ட சமூகம் என்பதை உணர்ந்து அதனை சாதகமாக பயன்படுத்தி தன் உள்ளே எமை இழுத்து தன்னில் ஒரு மாநிலமாக மாற்றும் முயற்சி எப்போதும் நடை பெறுகின்றது என்பதை உணர வைத்திருக்கிறது இந்த நூல்.
நன்றிகள்

பாக்கிஸ்தான் அகதிகளுக்கு ஒரு நியாயம்! ஈழ தமிழ் அகதிகளுக்கு இன்னொரு நியாயம்!! இதுதான் இந்திய மோடி அரசின் நியாயம்!!!

•பாக்கிஸ்தான் அகதிகளுக்கு ஒரு நியாயம்!
ஈழ தமிழ் அகதிகளுக்கு இன்னொரு நியாயம்!!
இதுதான் இந்திய மோடி அரசின் நியாயம்!!!
பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அகதியாக வந்த இந்துக்களுக்கு ஆகஸ்ட் 15ல் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுமார்35 வருடங்களாக தமிழகத்தில் 3லட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக இருந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயா அம்மையார் உட்பட அனைத்து தமிழக தலைவர்களும் கோரி வருகிறார்கள்.
ஆனால் இந்திய அரசு ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுத்து வருகின்ற அதேவேளை பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்குகின்றது.
ஈழ அகதிகளும் இந்துக்கள்தானே. அப்படியென்றால் ஏன் அவர்களுக்கு இந்திய குடியுரிமை மறுக்கப்படுகிறது?
இந்துவாக இருந்தாலும் தமிழன் என்பதால்தானே ஈழ அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது.
இனியாவது தமிழக தமிழர்கள் இதனை உணர்ந்து கொள்வார்களா?
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று கூறும் ஈழ தமிழ்த் தலைவர்கள் இதை உணர்ந்து கொள்வார்களா?
இந்து தமிழீழம் கோரினால் இந்தியா உதவும் என்று கூறிய கவிஞர் காசி அனந்தன் இதற்கு என்ன கூறப்போகிறார்?
இன்னுமாடா இவங்களை உலகம் நம்புது?

ஜீவன் நவதோயம் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
கொழும்பில் இருக்கும் நண்பர் ஜீவன் நவதோயம் அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
இந்தியா இலங்கை தமிழர்கள் மீது தாம் அளவு கடந்த கரிசனை வைத்திருப்பதாக உலகையும் தமிழ் நாட்டு தமிழர்களையும் நம்பவைத்து தனது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக சிங்களவர்களையும் தமிழர்களையும் ஒரு பகடைக்காய்களாக வைத்து இந்தியா தனது நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை செய்துகொண்டு வருவதை மிக அருமையாக கூறி இந்தியாவின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளீர்கள்.
இந்தியா நம்மை கைவிடாது என்ற கருத்தை உடையவர்களுக்கு ''இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் சிறந்த தெளிவை கொடுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
உங்களது ஆழமான சமூக அக்கறையுடைய சிந்தனைகளின் ஊடாக இதைப்போன்ற நல்ல பல படைப்புகளை தர வாழ்த்துக்கள்.

கீரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
டென்மாhக் நாட்டில் இருக்கும் நண்பர் கீரன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்கள் எழுதிய "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு "
புத்தகத்தை வாசிக்க கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
என் இனத்தின் நிலையை நினைத்து வேதனையும் அடைகின்றேன்
முதலில் தோழர் பாலன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்
நாம் தேசம் விட்டு வாழ்ந்தாலும் எம் தேசத்தை மறவாது
எம் மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளையும் அரசியல் தந்திரங்களையும்
ஆராய்ந்து அறிந்து அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற பற்று பாராட்டுக்குரியது
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு புத்தகம் வியப்பை ஏற்படுத்தியது
ஒரு புத்தகத்தை வாசிக்கும் வேலை இடையில் சற்று சோர்வு ஏற்படுவது வளமை
ஆனால் இந்த நூல் சோர்வின்றி வியப்பையும் ஆச்சரியத்தையும் என் நாட்டின் இனத்தின் இன்றைய நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உச்சாகத்தை ஏற்படுத்தியது.
இலங்கை ஒரு தனி நாடாக தலை நிமிர்ந்து நிக்க வேண்டும் என்று அன்றைய அரசியல் வாதிகள் எண்ணியிருந்தால் 1954ம் ஆண்டு நடத்தப்படட பாண்டுங் மாநாட்டில் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த சேர் ஜோன் கொத்தலாவெல விடம் நேரு கேட்ட கேள்வியே போதுமானது விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருக்க ( தமிழ் அமைப்புக்களும்)
எம் இன விடுதலைக்காக அன்று ஆயுதம் ஏந்திய குழுக்கள் மத்தியில்
தோழர் தமிழரசன் தோழர் மனோகரன் தோழர் சண்முகதாசன் போன்றவர்களின் ஆலோசனைகள் எடுபடாது போனது கவலைக்குரிய விடயமாக உள்ளது.
பலாலி விமான நிலையமும் சம்பூர் அனல்மின் நிலையம் இவைகள் நல்லது தானே என்றெண்ணிய மனதிற்கு இதனால் மக்களுக்கு ஏற்படும் விளைவுகளையும் இந்திய அரசின் தந்திரங்களையும் வாசித்து அறிந்த போது வியப்பை ஏற்படுத்துகின்றது.
தற்போதைய தமிழின தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
ஜயா சம்மந்தன் மாவை சேனாதிராசா சுமந்திரன் செல்வம் அடைக்கலநாதன்
ஆகியோரின் கருத்துக்கள் இந்திய கை கூலி என்பதையும் தமிழினத்தின் துரோகிகள் என்பதையும் வெளிப்படுத்துகின்றது .
விவசாய நிலங்கள் தொடங்கி கல்வி மருத்துவம் என்று சகல வளங்களுக்குள்ளும் கால் பதித்து இருக்கும், இருக்க நினைக்கும் இந்தியாவையும் அதற்கு விலை போகும் எம் அரசில் தலைவர்களையும் ( தமிழன துரோகிகளையும்) எம் இனத்துக்கு அடையாளம் காட்டும் தோழர் பாலன் அவர்களின் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு புத்தகம் சகல தமிழ் அமைப்புக்களுக்கும் தமிழ் மன்றங்களுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கிடைக்க பெற்றால் மிகுந்த நன்மை எம் இனத்திற்கு கிடைக்க வாய்ப்புண்டு.
நன்றி தோழர் எம் இனத்தின் மீதுள்ள பற்றும் உங்கள் பணியும் தொடரட்டும்.
அன்புடன் சி. கீரன்

யோகராசா குரு அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
19 hrs
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரத்தில் இருக்கும் நண்பர் யோகராசா குரு அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்த கருத்துகள் வருமாறு,
வாழ்த்துக்கள் பாலன் தோழரே.
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நூல் சிறிய நூல் என்றாலும் அதில் நிறைய உண்மைகளை வெளிகொண்டு வந்திருக்கிறீர்கள்.
இந்த நூலை தமிழர்கள் மட்டுமின்றி ஒற்று மொத்த இலங்கை மக்களும் இந்த நூலை படித்து சிந்திக்க வேண்டிய மட்டுமின்றி கண்டிப்பாக இந்திய ஆதிக்க சக்திய விரட்டி அடிகனும் அனைத்து இலங்கைகுடி மக்களும் சேர்ந்தே.
நன்றி

தோழர் திருப்பூர் குணா அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
19 hrs
இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் தோழர் திருப்பூர் குணா அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்களுக்கு புரட்சிகர வணக்கங்கள்.
உங்களது "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" என்ற நூலைப் படித்தேன்.
இலங்கையில் இந்திய முதலாளிகளின் மூலதன ஆதிக்கத்தை ஆதாரங்களோடு அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
மறுக்க முடியாத ஆதரங்களோடு எழுதியுள்ள உங்களை ஆரத்தழுவுகிறேன்.
நாடுகளுக்கிடையிலான உறவுகள் என்பது அவைகளின் அரசியல் - பொருளாதார நலனிலிருந்தே உருவாகுகிறது என்பதை நாம் உரக்கச் சொல்லவேண்டிய காலமிது.
ஏனென்றால் நடுத்தர வர்க்கத்தின் நல்லெண்ண அரசியலே இன்றைக்கு கோலோச்சுகிறது.
இந்த பாழாய்ப்போன நடுத்தர வர்க்கங்கள் “போர், இன அழிப்பு, ஒடுக்குமுறை” என அனைத்தையும் “தனிமனித விருப்பு, வெறுப்பு” ஆகியவற்றின் காரணமாகவே நடப்பதாக சித்தரித்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் சீரழிக்கிறது.
ஈழ இன அழிப்பையும் இப்படித்தான் நமது பரிதாபத்திற்குரிய நடுத்தர வர்க்கங்கள் சித்தரிக்கின்றன.
அதனால் நம்மவர்கள் "ராஜபக்சே ஒழிக! சோனியா காந்தி ஒழிக! கருணாநிதி ஒழிக! செயலலிதா ஒழிக!" என முழக்கங்களை வைக்கிறார்களேத் தவிர இந்த அரசியல்வாதிகளின் எசமானர்களான முதலாளிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை.
இந்த முட்டாள்களின் கேலிக்கூத்தான அரசியலற்ற அரசியல் நடவடிக்கைகளை உங்களது நூல் நிச்சயம் தோலுரிக்கும்.
நல்லது! நீங்கள் இங்கு ஈழப் பிரச்சினையை சிங்கள மக்களும், ஈழ மக்களும் இணைந்தே எதிர்கொள்ள வேண்டுமென தீர்வளிக்கிறீர்கள்.
அதனை தோழர்கள் "தமிழரசன் மற்றும் சண்முகதாசனின்" கண்ணோட்டங்களின் மூலம் உணர்த்துகிறீர்கள்.
ஆம், உண்மைதான். ஏகாதிபத்தியங்களும், அவற்றின் பேட்டை ரவுடிகளான துணை ஏகாதிபத்தியங்களும் கூட்டு சேர்ந்துகொண்டு பின்தங்கிய நாடுகளை கொள்ளையடிக்க அந்நாடுகளின் மக்களை கூண்டோடு அழிக்கும் பயங்கரவாத போர்களை நடத்திக் கொண்டிருக்கும் காலம் இது.
இங்கு ஒரு தேசிய இனம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள் மட்டும் இந்த “கூட்டு அரசப் பயங்கரவாதத்தை” முறியடிக்க முடியாது.
அதனால் அரக்க பலத்தோடு போர்களை நடத்திக்கொண்டிருக்கும் “ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவற்றின் பேட்டை ரவுடிகளான துணை ஏகாதிபத்தியங்களின் கூட்டை” முறியடிக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் நாடுகள் அல்லது தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதைத்தவிர வேறு வழியில்லை.
ஆனால், இந்த ஒற்றுமையை கட்டமைக்கிறப் பணி முழுவதையும் “கூட்டு அரசப் பயங்கரவாதத்தை” மக்கள் யுத்தம் மூலம் “தனியாக” எதிர்கொண்டு நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் ஒரு அமைப்பின் தலையில் சுமத்துவது சரியா? இல்லவே இல்லை.
இந்தப்பணி உலகம் முழுவதுமுள்ள மக்கள் இயக்கங்களின் கடமையாகும்.
இன்னும் சொல்வதென்றால், சொந்த நாட்டில் பெரிய நெருக்கடிகள் எதுவும் இல்லாமல், குறைந்த அளவு சுதந்திரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேசவாதிகளின், அமைப்புகளின் கடமையாகும்.
நமது கெட்டகாலம், அப்படியான செயல் புரிகிற அமைப்புகள் எனக்குத் தெரிந்து எங்கேயும் இல்லை.
ஈழப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் போராடுகிற அம்மக்களுக்கு பிற சமூகங்களின் ஆதரவையும், ஒற்றுமையையும் பெற்று தருகின்ற இன்றியமையாதப் பணியானது “சிங்கள உழைக்கும் மக்களின் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் இயக்கங்கள்” ஆகியவற்றை சார்ந்தது என்றே கருதுகின்றேன்.
ஈழத்தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் என்னவாக இருந்தபோதிலும், அது சிங்கள மக்களின் ஆதரவோடே நடத்தப்படுகிறது.
சிங்கள மக்கள் “சிங்களப் பேரினவாதத்திற்கு” பலியாகி ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை அங்கீகரிக்கிறார்கள்.
அவர்களை பேரினவாதத்திலிருந்து மீட்கவும், ஈழத்தமிழ் மக்களோடு ஒருங்கிணைய வைக்கவுமான அரசியல் கடமையை நிச்சயமாக சிங்கள உழைக்கும் மக்களின் இயக்கங்களே செய்ய முடியும்; செய்ய வேண்டும்.
அடுத்து தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் இயக்கங்களின் கடமையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
இலங்கை என்ற ஒருங்கிணைந்த சந்தைக்காகவே ஈழத்தமிழ் சமூகத்தின் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த சந்தையை அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட பலநாடுகள் பங்கு போட்டுக்கொண்டாலும் இந்தியா கூடுதல் பங்கை எடுத்துக்கொள்வதை அந்நாடுகள் அங்கீகரிக்கவே செய்கின்றன.
காரணம், இந்தியா மட்டும்தான் இலங்கைக்குள் அரசியல் சதுரங்கம் ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தனது எல்லைக்குள் இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு அரசியல் உணர்வைப் பயன்படுத்தி சிங்கள ஆளும்வர்க்கங்களை மிரட்டி பணிய வைக்கிற வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.
ஆகையால்தான் இலங்கை மீதான ஆக்கிரமிப்புகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது.
ஆகவே ஈழ விடுதலையாக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலையாக இருந்தாலும் சரி அது இந்தியாவின் ஆக்கிரமிப்பை அகற்றுவதிலிருந்தே தொடங்குகிறது.
இந்தியாவின் ஆக்கிரமிப்பை ஈழ மக்கள் மட்டுமோ அல்லது சிங்கள மக்களும் சேர்வதால் மட்டுமோ முறியடிக்க முடியாது.
அதற்கு இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய மற்றும் பழங்குடி மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
இந்தியா தனது முதலாளிகளின் நலனுக்காக இலங்கை உட்பட சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாதென்ற எதிர்ப்பு குரல் இந்தியாவுக்குள் பலமாக எழ வேண்டும்.
இதை தமிழ்நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்கள் முன்னெடுத்து இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்களோடு இணைந்து விரிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் இயக்கங்களுக்கு இருக்கிற இன்னுமொரு கடமைக்காகவும் இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
ஈழ மக்களுக்கும், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் போராட்டத்தின்போது பின்வாங்குவதற்கான தளம் அவசியம் வேண்டும். தமிழ்நாடு அதற்கான பொருத்தமுடையதாகும்.
ஆகவே, போராளிகள் இங்கு வந்து அரசியல் தஞ்சம் புகவும், சர்வதேச ஆதரவைத் திரட்டவுமான வாய்ப்புகளை தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் இயக்கங்கள்தான் உருவாக்கித் தர வேண்டும்.
இறுதியாக ஒன்று தோழரே!
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமல்ல; சிங்கள மக்களும் அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தொணி உங்களது நூலில் தென்படுகிறது.
இது சிங்கள மக்களும் ஒரு அரசியல் மாற்றத்திற்கான தேவையோடு இருப்பதாகவும், இலங்கையில் இப்போது “தமிழர், சிங்களர் இணைந்து ஒன்றுபட்டப் புரட்சியை” நடத்துவது சாத்தியம் என்பது போலவும் நினைக்க வைக்கிறது.
சிங்கள மக்கள் சொர்க்கத்தில் இல்லைதான். ஆனால் அவர்கள் தமிழர்களை விட கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்புகளில் கூடுதல் சலுகைகளை அடைகிறார்கள்.
இந்த சிறப்பு சலுகைகள் கண்டிப்பாக அவர்களை பிற்போக்கு அரசியல் அதிகாரத்தை ஆதரிக்கவே தூண்டுகிறது.
எனவே, சிங்களர்களுக்கு உடனடியாக அரசியல் மாற்றம் தேவையில்லை என்பதே என் கருத்து.
இந்த நிலையில் ஈழத்தமிழர்களோடு சிங்களர்களும் இணைந்த ஒன்றுபட்டப் புரட்சியா, அல்லது ஈழத்தமிழர் விடுதலைக்கு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதா என்பதில் நாம் தெளிவடைய வேண்டும் என்றே நினைக்கிறேன்.
இதுகுறித்து அடுத்தடுத்து உங்களது எழுத்துகள் தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு மீண்டும் எனது புரட்சிகர வணக்கங்களையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
தோழமையுடன்
திருப்பூர் குணா

•தமிழ் மக்கள் போராடுகிறார்கள! தமிழ் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள்!!

•தமிழ் மக்கள் போராடுகிறார்கள!
தமிழ் தலைவர்கள் துரோகம் செய்கிறார்கள்!!
தடைசெய்யப்பட்ட கிளாஸ்டர் கொத்துக் குண்டுகளை இலங்கை அரசு பயன்படுத்தியுள்ளது என்றும் இதனை விசாரிக்க வேண்டும் என்றும் லண்டன் கார்டியன் பத்திரிகை கோரியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னையிலும் மதுரையிலும் தமிழக மக்கள் போராடுகிறார்கள்.
பல புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்கள் ஜ.நா வாசலில் ஊர்வலம் போகிறார்கள்.
ஆனால் தமிழ் தலைவர்கள் மாவை சேனாதிராசாவும் சரவணபவனும் ஜனாதிபதியுடன் கேக் வெட்டி மகிழ்கிறார்கள்
சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் அரச தலைவர்களுடன் விருந்து உண்ணுகிறார்கள்
பாதர் இமானுவேல் அடிகளார் இலங்கை அமைச்சா மங்களவுடன்; கை குலுக்கி அறையில் இரகசியம் பேசுகிறார்.
இலங்கை அரசோ இவர்களைப் பயன்படுத்தி காலம் கடத்துகிறது. தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றுகிறது.
இந்த தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள்
ஆம். இவர்கள் தெரிந்தே இத் தவறுகளை செய்கிறார்கள்!
இது மறக்க முடியாதது மட்டுமல்ல மன்னிக்கவும் முடியாதது!