Thursday, June 30, 2016

தோழர் திருப்பூர் குணா அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள்

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு
19 hrs
இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் தோழர் திருப்பூர் குணா அவர்கள் எனது “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல் குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் அவர்களுக்கு புரட்சிகர வணக்கங்கள்.
உங்களது "இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு" என்ற நூலைப் படித்தேன்.
இலங்கையில் இந்திய முதலாளிகளின் மூலதன ஆதிக்கத்தை ஆதாரங்களோடு அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
மறுக்க முடியாத ஆதரங்களோடு எழுதியுள்ள உங்களை ஆரத்தழுவுகிறேன்.
நாடுகளுக்கிடையிலான உறவுகள் என்பது அவைகளின் அரசியல் - பொருளாதார நலனிலிருந்தே உருவாகுகிறது என்பதை நாம் உரக்கச் சொல்லவேண்டிய காலமிது.
ஏனென்றால் நடுத்தர வர்க்கத்தின் நல்லெண்ண அரசியலே இன்றைக்கு கோலோச்சுகிறது.
இந்த பாழாய்ப்போன நடுத்தர வர்க்கங்கள் “போர், இன அழிப்பு, ஒடுக்குமுறை” என அனைத்தையும் “தனிமனித விருப்பு, வெறுப்பு” ஆகியவற்றின் காரணமாகவே நடப்பதாக சித்தரித்து அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் சீரழிக்கிறது.
ஈழ இன அழிப்பையும் இப்படித்தான் நமது பரிதாபத்திற்குரிய நடுத்தர வர்க்கங்கள் சித்தரிக்கின்றன.
அதனால் நம்மவர்கள் "ராஜபக்சே ஒழிக! சோனியா காந்தி ஒழிக! கருணாநிதி ஒழிக! செயலலிதா ஒழிக!" என முழக்கங்களை வைக்கிறார்களேத் தவிர இந்த அரசியல்வாதிகளின் எசமானர்களான முதலாளிகள் குறித்து கவலைப்படுவதே இல்லை.
இந்த முட்டாள்களின் கேலிக்கூத்தான அரசியலற்ற அரசியல் நடவடிக்கைகளை உங்களது நூல் நிச்சயம் தோலுரிக்கும்.
நல்லது! நீங்கள் இங்கு ஈழப் பிரச்சினையை சிங்கள மக்களும், ஈழ மக்களும் இணைந்தே எதிர்கொள்ள வேண்டுமென தீர்வளிக்கிறீர்கள்.
அதனை தோழர்கள் "தமிழரசன் மற்றும் சண்முகதாசனின்" கண்ணோட்டங்களின் மூலம் உணர்த்துகிறீர்கள்.
ஆம், உண்மைதான். ஏகாதிபத்தியங்களும், அவற்றின் பேட்டை ரவுடிகளான துணை ஏகாதிபத்தியங்களும் கூட்டு சேர்ந்துகொண்டு பின்தங்கிய நாடுகளை கொள்ளையடிக்க அந்நாடுகளின் மக்களை கூண்டோடு அழிக்கும் பயங்கரவாத போர்களை நடத்திக் கொண்டிருக்கும் காலம் இது.
இங்கு ஒரு தேசிய இனம் அல்லது ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள் மட்டும் இந்த “கூட்டு அரசப் பயங்கரவாதத்தை” முறியடிக்க முடியாது.
அதனால் அரக்க பலத்தோடு போர்களை நடத்திக்கொண்டிருக்கும் “ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவற்றின் பேட்டை ரவுடிகளான துணை ஏகாதிபத்தியங்களின் கூட்டை” முறியடிக்க ஒடுக்குமுறைக்குள்ளாகும் நாடுகள் அல்லது தேசிய இனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதைத்தவிர வேறு வழியில்லை.
ஆனால், இந்த ஒற்றுமையை கட்டமைக்கிறப் பணி முழுவதையும் “கூட்டு அரசப் பயங்கரவாதத்தை” மக்கள் யுத்தம் மூலம் “தனியாக” எதிர்கொண்டு நெருக்கடிகளில் சிக்கியிருக்கும் ஒரு அமைப்பின் தலையில் சுமத்துவது சரியா? இல்லவே இல்லை.
இந்தப்பணி உலகம் முழுவதுமுள்ள மக்கள் இயக்கங்களின் கடமையாகும்.
இன்னும் சொல்வதென்றால், சொந்த நாட்டில் பெரிய நெருக்கடிகள் எதுவும் இல்லாமல், குறைந்த அளவு சுதந்திரத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேசவாதிகளின், அமைப்புகளின் கடமையாகும்.
நமது கெட்டகாலம், அப்படியான செயல் புரிகிற அமைப்புகள் எனக்குத் தெரிந்து எங்கேயும் இல்லை.
ஈழப் பிரச்சினையை எடுத்துக்கொண்டால் போராடுகிற அம்மக்களுக்கு பிற சமூகங்களின் ஆதரவையும், ஒற்றுமையையும் பெற்று தருகின்ற இன்றியமையாதப் பணியானது “சிங்கள உழைக்கும் மக்களின் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் இயக்கங்கள்” ஆகியவற்றை சார்ந்தது என்றே கருதுகின்றேன்.
ஈழத்தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறைகள் என்னவாக இருந்தபோதிலும், அது சிங்கள மக்களின் ஆதரவோடே நடத்தப்படுகிறது.
சிங்கள மக்கள் “சிங்களப் பேரினவாதத்திற்கு” பலியாகி ஈழத்தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையை அங்கீகரிக்கிறார்கள்.
அவர்களை பேரினவாதத்திலிருந்து மீட்கவும், ஈழத்தமிழ் மக்களோடு ஒருங்கிணைய வைக்கவுமான அரசியல் கடமையை நிச்சயமாக சிங்கள உழைக்கும் மக்களின் இயக்கங்களே செய்ய முடியும்; செய்ய வேண்டும்.
அடுத்து தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் இயக்கங்களின் கடமையை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.
இலங்கை என்ற ஒருங்கிணைந்த சந்தைக்காகவே ஈழத்தமிழ் சமூகத்தின் மீது ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த சந்தையை அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட பலநாடுகள் பங்கு போட்டுக்கொண்டாலும் இந்தியா கூடுதல் பங்கை எடுத்துக்கொள்வதை அந்நாடுகள் அங்கீகரிக்கவே செய்கின்றன.
காரணம், இந்தியா மட்டும்தான் இலங்கைக்குள் அரசியல் சதுரங்கம் ஆடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
தனது எல்லைக்குள் இருக்கும் தமிழ்நாட்டு மக்களின் ஈழ ஆதரவு அரசியல் உணர்வைப் பயன்படுத்தி சிங்கள ஆளும்வர்க்கங்களை மிரட்டி பணிய வைக்கிற வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.
ஆகையால்தான் இலங்கை மீதான ஆக்கிரமிப்புகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது.
ஆகவே ஈழ விடுதலையாக இருந்தாலும் சரி, ஒட்டுமொத்த இலங்கையின் விடுதலையாக இருந்தாலும் சரி அது இந்தியாவின் ஆக்கிரமிப்பை அகற்றுவதிலிருந்தே தொடங்குகிறது.
இந்தியாவின் ஆக்கிரமிப்பை ஈழ மக்கள் மட்டுமோ அல்லது சிங்கள மக்களும் சேர்வதால் மட்டுமோ முறியடிக்க முடியாது.
அதற்கு இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய மற்றும் பழங்குடி மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
இந்தியா தனது முதலாளிகளின் நலனுக்காக இலங்கை உட்பட சிறிய நாடுகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாதென்ற எதிர்ப்பு குரல் இந்தியாவுக்குள் பலமாக எழ வேண்டும்.
இதை தமிழ்நாட்டிலுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்கள் முன்னெடுத்து இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்களோடு இணைந்து விரிவுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் இயக்கங்களுக்கு இருக்கிற இன்னுமொரு கடமைக்காகவும் இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் இயக்கங்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
ஈழ மக்களுக்கும், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் போராட்டத்தின்போது பின்வாங்குவதற்கான தளம் அவசியம் வேண்டும். தமிழ்நாடு அதற்கான பொருத்தமுடையதாகும்.
ஆகவே, போராளிகள் இங்கு வந்து அரசியல் தஞ்சம் புகவும், சர்வதேச ஆதரவைத் திரட்டவுமான வாய்ப்புகளை தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் இயக்கங்கள்தான் உருவாக்கித் தர வேண்டும்.
இறுதியாக ஒன்று தோழரே!
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை மட்டுமல்ல; சிங்கள மக்களும் அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற தொணி உங்களது நூலில் தென்படுகிறது.
இது சிங்கள மக்களும் ஒரு அரசியல் மாற்றத்திற்கான தேவையோடு இருப்பதாகவும், இலங்கையில் இப்போது “தமிழர், சிங்களர் இணைந்து ஒன்றுபட்டப் புரட்சியை” நடத்துவது சாத்தியம் என்பது போலவும் நினைக்க வைக்கிறது.
சிங்கள மக்கள் சொர்க்கத்தில் இல்லைதான். ஆனால் அவர்கள் தமிழர்களை விட கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்புகளில் கூடுதல் சலுகைகளை அடைகிறார்கள்.
இந்த சிறப்பு சலுகைகள் கண்டிப்பாக அவர்களை பிற்போக்கு அரசியல் அதிகாரத்தை ஆதரிக்கவே தூண்டுகிறது.
எனவே, சிங்களர்களுக்கு உடனடியாக அரசியல் மாற்றம் தேவையில்லை என்பதே என் கருத்து.
இந்த நிலையில் ஈழத்தமிழர்களோடு சிங்களர்களும் இணைந்த ஒன்றுபட்டப் புரட்சியா, அல்லது ஈழத்தமிழர் விடுதலைக்கு சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதா என்பதில் நாம் தெளிவடைய வேண்டும் என்றே நினைக்கிறேன்.
இதுகுறித்து அடுத்தடுத்து உங்களது எழுத்துகள் தெளிவுபடுத்தும் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கு மீண்டும் எனது புரட்சிகர வணக்கங்களையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
தோழமையுடன்
திருப்பூர் குணா

No comments:

Post a Comment