Wednesday, June 22, 2016

•ஓ! பேரறிவாளனே! எங்களை மன்னித்துவிடு!

•ஓ! பேரறிவாளனே!
எங்களை மன்னித்துவிடு!
(ஒரு அப்பாவி ஈழத் தமிழனின் புலம்பல்)
நீ உன் சாதிக்கு ஆதரவளித்திருந்தால் இந் நேரம் அவர்கள் உன்னை சிறையில் இருந்து விடுதலை செய்வித்திருப்பார்கள்.
நீ எதாவது ஒரு மதத்தை பின்பற்றியிருந்தால்கூட இந் நேரம் அவர்கள் உன்னை விடுதலை செய்வித்திருப்பார்கள்.
நீ எதாவது ஒரு ஆளும் கட்சியில் சேர சம்மதித்திருந்தால் இந் நேரம் அவர்கள் உன்னை விடுவித்து எம்.எல்.ஏ ஆக்கியிருப்பார்கள்.
நீ தமிழ் இன உணர்வில் ஈழத் தமிழர்களை ஆதரித்தமையினால்தானே உன் மீது வழக்கு போட்டார்கள்.
அந்த உணர்வில் நீ தொடர்ந்தும் இருப்பதால்தானே உன்னை இப்பவும் விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.
நீ எமக்காக உன் இளமைக் காலத்தைiயே தொலைத்துவிட்டாய். உன் வளமான வாழ்வையே இழந்து விட்டாய்.
உன் தாயார் உன் விடுதலைக்காக 25 வருடங்கள் நடந்து நடந்து களைத்தவிட்டார்.
ஆனால் நம் தலைவர்களோ நன்றி மறந்து இருக்கின்றனர். தங்கள் பிள்ளைக்கு இப்படி ஒரு நிலை வந்திருந்தால் மௌனமாக இருந்திருப்பார்களா?
ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் விருந்து உண்டு மகிழ்கிறார்கள். ஆனால் அவ் வேளைகளில் உன் விடுதலை குறித்து குரல் கொடுக்க ஏனோ அவர்களுக்கு மனம் வருகுதில்லை.
சோனியா காந்தியை சந்தித்து அவர் கண்களில் இரக்கத்தைக் கண்டதாக கூறுகிறார்கள். அவர்களும் சோனியாவிடம் உன் விடுதலைக்காக இரங்கும்படி கோரவில்லை.
நீ எமக்காக சிறையில் வாடுகிறாய். ஆனால் எம்மவர்கள் சினிமா நடிகர்களை வரவழைத்து “மானாட மயிலாட” நடத்தி மகிழ்கிறார்கள்.
நீ எமக்காக உன் இளமையையே தொலைத்து விட்டாய். ஆனால் எமது பெண்கள் அனிருத்துடன் 100 டாலர் டிக்கட் எடுத்து போட்டோ எடுக்க ஓடித் திரிகிறார்கள்.
நீ உன் வழக்கு செலவிற்கு பணம் இன்றி தவிக்கின்றாய். ஆனால் எமது முதலாளிகள் நடிகர் சங்கம் கட்டிடம் கட்ட நிதி அள்ளிக் கொடுக்கிறார்கள்.
ஓ! பேரறிவாளனே, என்னை மன்னித்தவிடு. உனக்காக 25 வருடங்கள் புலம்புவதைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்ய முடியவில்லையே.
உன்னை அவர்கள் விடுதலை செய்தால் மகிழ்ச்சி. விடுதலை செய்யாவிட்டால் பெரு மகிழ்ச்சி. ஏனெனில் அவர்கள் முழு தமிழகமும் விடுதலை செய்ய வழி செய்கிறார்கள்.
நாம் மீண்டும் எழுவோம். அடுத்தமுறை எமது அடி முன்னரைவிட பலமாக இருக்கும். அது உன்னை மட்டுமல்ல தமிழ்நாட்டையும் விடுதலை செய்யும். இது உறுதி.

No comments:

Post a Comment