Wednesday, June 22, 2016

•ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியுமா?

•ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியுமா?
ஜரோப்பிய ஒன்றியதில் இருந்து பிரிட்டன் பிரிவது தொடர்பான தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. நாளை மாலை இது குறித்த முடிவு தெரிந்துவிடும்.
ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியக்கூடாது என்று முதலாளிகளின் நலன் பேணும் பழமைவாத கன்சவேர்ட்டிக் கட்சி கூறுகிறது.
பிரிட்டன் பிரியக்கூடாது என்று தொழிலாளர் நலன் பேணுவதாக கூறும் லேபர் கட்சியும் கூறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும்; பிரிட்டன் பிரியக்கூடாது என்று கூறுகிறார். அவர் மட்டுமல்ல இலங்கை அமைச்சர்கள் சிலரும் கூட பிரிட்டன் பிரியக்கூடாது என்று லண்டன் வந்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
பிரிட்டன் பிரிந்தாலும் சரி ,பிரியாவிட்டாலும் சரி இலங்கைக்கு ஆயுதம் வழங்குவார்கள்தானே. அப்படியிருக்க எதற்காக இலங்கை அமைச்சர்கள் அக்கறை காட்டுகிறார்கள்?
ஜரோப்பிய ஒன்றியத்தில் பெரிய பலம் மிக்க நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை பிரிட்டன் தாராளமாக பிரிந்து போகலாம் என்று கூறிவிட்டன.
பிரிட்டன் சில மேலதிக சலுகைகள் பெறுவதற்காக இவ்வாறு நாடகம் போடுவதாக அந் நாடுகள் கருதுகின்றன.
இன்று பிரிட்டனில் , கல்வி கட்டணம் அதிகரிக்கப்பட்மையினால் படிக்க முடியவில்லை. படித்தாலும் வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. வேலை பெற்றாலும் போதிய சம்பளம் பெற முடியவில்லை.
வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. விலைவாசி அதிகரிக்கிறது. அந்தளவிற்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இதனால் மக்களின் வருமானத்திற்கும் செலவிற்குமான இடைவெளி அதிகரிக்கிறது.
மகாராணிக்கு ஒவ்வொரு வருடமும் உதவி தொகை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் வெட்டப்படுகிறது. மக்களால் சமாளிக்க முடியவில்லை.
பெரும் முதலாளித்துவ நாடான பிரிட்டனில் பல்லாயிரம் மக்கள் வீடு இன்றி வீதியில் படுத்து உறங்குகிறார்கள். தமது கோயிலில் வழங்கப்படும் அன்னதான உணவிற்கு அண்மைக் காலங்களில் அதிகளவான மக்கள் வருவதாக சீக்கிய கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். ஆனால் தற்போது அதிக அளவினான பிச்சகை;காரர்களை லண்டன் வீதிகளில் காணமுடிகின்றது.
இது முதலாளித்துவ நெருக்கடியின் விளைவு ஆகும். இது இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் உள்ள நிலமையாகும்.
இதனை மக்கள் உணரக்கூடாது என்பதற்காக மக்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக ஒவ்வொரு முதலாளித்து அரசும் ஒவ்வொரு செயலை செய்கிறது.
இலங்கை அரசு இனவாதத்தைக் கடைப்பிடிப்பது போல் , இந்திய அரசு மதவாத்தைக் கடைப்பிடிப்பது போல் இங்கிலாந்து அரசு அகதிகளையும் கிழக்கு ஜரோப்பிய குடியேறிகளையும் காட்டுகின்றது.
லண்டனில் உள்ள தமிழ் பிரமுகர் ஒருவர் “பிரிட்டன் பிரிந்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதிக்கப்படும்” என்று எழுதி வருகிறார்.
ஏன் திடீரென்று இவருக்கு தொழிலாளர்கள் மீது அக்கறை வருகிறது என்று விசாரித்துப் பார்த்தால் அவருக்கு இரண்டு வீடுகள் இருக்கிறது என்றும் பிரிட்டன் பிரிந்தால் வீடுகள் விலை குறைந்து மோகேஜ் கடன் கட்ட முடியாமல் வீடுகளை கைவிட வேண்டிவரும் என்று அச்சம் கொண்டே அவர் அவ்வாறு எழுதுவதாக அறிய வருகிறது.
அதேபோல் இன்னொரு தமிழ் பிரமுகர். அவர் 3 வருடத்தில் எட்டு வீடுகள் வாங்கியுள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாக தூக்கமே வருவதில்iயாம் பிறசர் கூடிவிட்டதாம். பிரிட்டன் பிரியக்கூடாது என்று கடவுளுக்கு நேர்த்திக்கடன் வைத்திருக்கிறாராம்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல் எமது தமிழ் பிரமுகர்கள் சிலர் இவ்வாறு நடந்துகொண்டாலும் பிரிட்டனின் பெரும்பான்மையான மக்களைப் பொறுத்தவரையில் எல்லா முடிவும் ஒன்றுதான்.
ஏனெனில் பிரிட்டன் சேர்ந்திருந்தாலும் சரி அல்லது பிரிந்து போனாலும் சரி உழைக்கும் மக்களைப் பொறுத்தவரையில் போராடாமல் எந்த சலுகையும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை.
இதை உணர்ந்து கொண்டதால்தான் அந்த மக்கள் இந்த தேர்தல் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment