Sunday, April 30, 2017

•சிறைவாசி நளினி முருகன் எழுதிய நூல் குறித்து

•சிறைவாசி நளினி முருகன் எழுதிய நூல் குறித்து
நீண்டகால சிறைவாசியான நளினி எழுதிய “ராஜீவ் கொலை- மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்” என்னும் நூல் வெளிவந்துள்ளது.
600 பக்கம் கொண்ட இந் நூல் எழுத்தாக்கம் தொகுப்பு பா. ஏகலைவன். வைகோ, திருமாவளவன், சீமான், கௌத்தூர் மணி,திருச்சி வேலுசாமி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், வழக்கறிஞர் புகழேந்தி மற்றும் முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் ஆகியோர் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஜ புலனாய்வு அமைப்பை கிழி கிழி என்று கிழித்து தொங்க விட்டிருக்கிறார் நளினி இந்த நூலில்.
உண்மையில் சிபிஜ இன் முகத்திரையை அவர் நன்கு தோலுரித்து அம்பலப்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மத்திய அரசின் கீழ் உள்ள சிபிஜ புலனாய்வு அமைப்பே இந்தளவு மோசமாக நடந்து கொள்கிறது எனில் தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள கியூ பிரிவு புலனாய்வு அமைப்பு எந்தளவு மோசமாக நடந்து கொள்ளும் என்பதை ஊகிக்க வைக்கிறது இந்த நூல்.
25 வருட சிறைவாசம். அதில் அவர் அனுபவித்த கொடுமைகளும் சித்திரவதைகளும் வலிகள் நிறைந்தவை. படிக்கும்போது கண்ணீரை வரவழைக்கின்றன.
நளினி விரைவில் விடுதலை பெற வேண்டும். மீதி இருக்கும் சொற்ப காலத்தையாவது அவர் தன் கணவர் மற்றும் பிள்ளையுடன் சந்தோசமாக கழிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது நான் மதுரை மத்திய சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது மதுரை சிறை கண்காணிப்பாளர் ராஜ்குமார் முன்னிலையில் சிபிஜ அதிகாரி, ஜபி அதிகாரி, கியு பிரிவு அதிகாரி, என ஆறு அதிகாரிகள் என்னை விசாரணை செய்தனர்.
நானும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தபடியால் ராஜீவ் குண்டு வெடிப்பு பற்றி எனக்கு ஏதும் தெரியுமா என்று அறிவதற்காக இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டார்கள் என நம்புகிறேன்.
விசாரணையின் போது சிவராசன், தானு ஆகியோரது படங்களை காட்டி இவர்களை தெரியுமா எனக் கேட்டார்கள். நான் எனக்கு தெரியவில்லை என்று பதில் கூறியிருந்தபோதும் சிவராசனை எங்கோ பார்த்த ஒரு உணர்வு வந்தது.
இந்திய ராணுவம் இலங்கையில் தமிழ் மக்கள் மீது அழிவுகளை மேற்கொண்ட போது அவற்றை கட்டுரைகளாக எழுதி இந்திய புரட்சி சஞ்சிகைகளான கேடயம், மனஓசை புதிய ஜனநாயகம் புதிய கலாச்சாரம் போன்றவற்றில் வெளிவரச் செய்தேன். அத்துடன் அச் சஞ்சிகைகளை இரகசியமாக இறக்குமதி செய்து கரவெட்டியில் எமது நூல் நிலையத்தில் மக்கள் படிப்பதற்கு வைத்து வந்தேன்.
இதனைப் படிப்பதற்காக பருத்தித்துறை வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் இருந்து எல்லாம் இளைஞர்கள் வந்தார்கள். அவ்வாறு ஒருநாள் ரகு என்ற புலிப் போராளி ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவரை கூட்டி வந்தவர் எனது ஊரைச் சேர்ந்த முகுந்தன் என்ற புலிப் போராளி. ( இந்த முகுந்தன்தான் பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா கொலை முயற்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்)
என்னை பார்க்க வந்த அதே ரகுதான் போட்டோவில் இருந்த சிவராசன் என்பதை உடனே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஏனெனில் போட்டோவில் அவர் குர்தா அணிந்து ஒரு இந்தியர் போல் காட்சியளித்தார்.
அடுத்து அந்த அதிகாரிகள் ராஜீவ் கொலை பற்றி என்ன நினைக்கிறாய் என என்னிடம் கேட்டார்கள். அதற்கு “ஒரு ஈழத் தமிழனாக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன”; என்று பதில் கொடுத்தேன். இதைக் கேட்டதும் அவர்களுக்கு ஒருபுறம் கோபம். இன்னொருபுறம் ஆச்சரியமாக “ஏன்?” என்று கேட்டார்கள்.
“நான் மூன்று தடவை இந்திய ராணுவத்திடம் பூவரசம் கட்டையால் அடி வாங்கியிருக்கிறேன். அதேபோல் இந்திய ராணுவத்தால் ஏதோ ஒருவழியில் பாதிக்கப்படாத ஒரு தமிழன் இருக்க முடியாது. எனவேதான் பாதிக்கப்பட்ட அத்தனை தமிழர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்” என்றேன்.
எனது பதிலைக் கேட்ட கண்காணிப்பாளர் ராஜ்குமார் “ ராஜீவ் காந்தி செய்த மிகப் பெரிய தவறு இதுதான் “ என்று கூறினார். மற்ற அதிகாரிகள் மௌனமாக தலையை குனிந்த வண்ணம் இருந்தனர்.
இங்கு எனது வருத்தம் என்னவெனில் அணிந்துரை எழுதிய தலைவர்களும் சரி, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் சரி எவருமே ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தை அனுப்பி பல்லாயிரம் அப்பாவி தமிழர்களை கொன்ற அரசியலை பேசவில்லை என்பதே.
இலங்கையில் இந்திய ராணுவத்தால் பல்லாயிரம் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி வழங்கியிருந்தால்,
இலங்கையில் பல அப்பாவி தமிழ் பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்தமைக்கு நியாயம் வழங்கப்பட்டிருந்தால்,
இலங்கையில் தமிழ் மக்களின் கோடிக் கணக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்கள் இந்திய ராணுவத்தால் சேதமாக்கப்பட்டமைக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தால் ,
ராஜீவ் கொலை நடந்திருக்காது என்ற உண்மையை யாரும் எடுத்துக்கூறவில்லையே.
தன்னை சந்திக்க வந்த பிரியங்கா தனது தந்தை நல்லவர் என்றும் அவரை ஏன் அநியாயமாக கொன்றீர்கள் என்றும் கவலையுடன் கேட்டதாக நளினி எழுதுகிறார். அப்போதாவது “உங்கள் தந்தையால் இலங்கையில் பல பெண்கள் தங்கள் கணவரை, பிள்ளைகளை இழந்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று நளினி சொல்லியிருக்கலாம்.
ராஜீவ் கொலை என்பது ஒரு அரசியல் கொலை. அதனால் இன உணர்வாளர்களை கைது செய்து தண்டனை வழங்கியது இந்திய அரசு. எனவேதான் அவர்களை காப்பாற்ற வேண்டியது தமது கடமை என தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இவ்வாறு கருதியதால்தான் செங்கொடி போன்றவர்கள் தமது உயிரைக் கொடுத்து எழுவர் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
மரண தண்டனையில் இருந்து இவர்களை காப்பாற்றியது தமிழ் மக்களே. இனி இவர்களை சிறையில் இருந்து விடுவிக்கப்போவதும் தமிழ் மக்களே.
எனவே எந்தளவு விரைவாக மக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த முடியுமோ அந்தளவு விரைவாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்.

இலங்கை அரசே! தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!

இலங்கை அரசே!
தோழர் தேவதாசனை உடனே விடுதலை செய்!
நீண்டகால அரசியல் செயற்பாட்டாளரும, சமூக விடுதலையில் அக்கறை கொண்டவருமான தோழர் தேவதாசன் அவர்களை உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
புலிகளுக்கு உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ல் தேவதாசன் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு 20 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புலிகளின் தளபதியாக இருந்த கருணா தண்டிக்கப்படவில்லை.
புலிகளுக்டகு ஆயுதம் வாங்கி கொடுத்த கே.பி தண்டிக்கப்படவில்லை.
ஆனால் புலிகளுக்கு அடைக்கலம் வழங்கினார் என்று தேவதாசனுக்கு 20 வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தளபதிகளுக்கு விடுதலை. ஆதரவு கொடுத்தவர்களுக்கு தண்டனை. இதுதான் அரசின் புனர்வாழ்வு கொள்கையா? அல்லது இதுதான் நல்லாட்சி அரசின் நல்லிணக்கமா?
தோழர் தேவதாசன் அவர்கள் தன்மீதான வழக்கை விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பல முறை உண்ணாவிரதம் நிகழ்த்தியுள்ளார்.
தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஒத்துக்கொள்ள இவர் முன்வந்தபோதும்கூட அரசு வேண்டுமென்றே இவரது வழக்கை விசாரணை செய்யாமல் இதுவரை இழுத்தடித்து வந்தது.
உண்மையில் தோழர் தேவதாசனுக்கு வழங்கப்ட்டுள்ள தண்டனை என்பது அவரது குற்றத்திற்காக வழங்கப்டவில்லை. மாறாக அவர் கொண்டுள்ள இடதுசாரி அரசியலுக்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார்.
1979களில் வாசுதேவநாணயக்காரவை கரவெட்டிக்கு அழைத்து வந்து கருத்தரங்கு நடத்தியவர். ஆனால் இப்போது வாசுதேவா இவரின் விடுதலைக்கு குரல் கொடுக்காமல் இருக்கிறார்.
தேவதாசனுக்கு இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன தலைவர் பதவியை பெற்றுக் கொடுத்தவர்கள் ஜே.வி.பி யினர். அவர்களின் தமிழ் உறுப்பினர் சந்திரசேகர் இவரின் நெருங்கிய நணபர். அவர் கூட ஏன் மௌனமாக இருக்கிறார் என்று புரியவில்லை.
புதிய ஜனநாயக்கட்சி மற்றும் சிறீதுங்காவின் சோசலிசக் கட்சிகளின் சார்பாக வடபகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் தேவதாசன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தளவு பிரபல்யம் மிக்க ஒருவருக்கே இந்த கதி என்றால் பிரபல்யம் அற்ற அப்பாவிகளின் கதி என்ன?
தன்னைக் கொல்ல வந்தவரையே மன்னித்து விடுதலை செய்தவர் என்று பெயர் வாங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தேவதாசனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
தண்டனை பெற்றவர்களையே ஜனாபதி மன்னித்து விடுதலை செய்ய முடியும். வழக்கில் உள்ளவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை என்று இதுவரை கூறினார்கள்.
அப்படியென்றால் தற்போது தேவதாசன் தண்டனை பெற்ற கைதியாகவே உள்ளார். அவரை உடனே மன்னித்து விடுதலை செய்ய ஜனாதிபதி முன்வருவாரா?
குற்றம் பரிந்த ராணுவம் இன்னும் தண்டிக்கப்படவில்லை. ராணுவத்தை தண்டிக்கமாட்டோம் என்று இலங்கை அரசு கூறிவரும் நிலையிலும் அதுக்கு மேலும் 2 வருட அவகாசம் ஜ.நா வழங்குகிறது.
ஆனால் தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் மீது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
இது என்ன நியாயம் என்று கேட்டால் இதுதான் நல்லிணக்கம் என்று சம்பந்தர் அய்யா கூறுகிறார். இதுதான் நல்லாட்சி என்று சுமந்திரன் சொல்கிறார்.
தோழர் தேவதாசன் உட்பட அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் குரல் கொடுப்போம்!

•சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் பற்றி

•சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் பற்றி
நியூசிலாந்தில் வசித்து வரும் மனிதவுரிமை செயற்பாட்;டாளரான N.மாலதி அவர்கள் சிறப்புமுகாம் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை EPW என்னும் சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.
1990ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஈழ அகதிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் இச் சிறப்புமுகாம்கள் குறித்து பிரபல இந்திய சஞ்சிகை பிரசுரம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக தமிழ் சஞ்சிகைகளே சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து மௌனம் காத்து வரும் நிலையில் பிரபல ஆங்கில சஞ்சிகை இதனை பிரசுரித்து வட இந்தியர்களும் இதனை அறிய வைத்துள்ளது.
அதுமட்டுமன்றி மாலதி அவர்கள் இந்திய சிறைவாசிகளின் நலனுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலமும் இச் சிறப்புமுகாம் விடயத்தை முன்னெடுக்க முயற்சி செய்து வருகிறார்.
தமிழ் மக்களின் ஆதரவை மட்டுமல்ல பரந்துபட்ட இந்திய மக்களின் ஆதரவை திரட்டுவதன் மூலமே இக் கொடிய சிறப்புமுகாமை மூட முடியும்.
அவ்வாறு இந்திய மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு மாலதி அவர்களின் இவ் முயற்சிகள் பெரிதும் பயன் அளிக்கும் என நம்புகிறோம்.
நீண்டகாலமாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் மாலதி அவர்களுக்கு எமது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
மாலதி அவர்கள் எழுதிய ஆங்கில கட்டுரையை கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.

•தமிழ் மக்களை நேசித்த தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தோழர் அஜித் ரூபசிங்காவுக்கு புரட்சிகர அஞ்சலிகள்.

•தமிழ் மக்களை நேசித்த
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த
தோழர் அஜித் ரூபசிங்காவுக்கு புரட்சிகர அஞ்சலிகள்.
தோழர் சண்முகதாசன் மறைவையடுத்து இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுசெயலாளராக இருந்துவந்த தோழர் அஜித் ரூபசிங்கா 03.04.2017 யன்று காலமானார்.
தமிழ் மக்களை நேசித்த , தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த தோழர் அஜித் ரூபசிங்காவின் மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் ஒரு இழப்பாகும்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறுதிவரை மாவோயிச சிந்தனைகளை உறுதியாக பின்பற்றி வந்த தோழர் அஜித் ரூபசிங்கா அவர்களுக்கு எமது புரட்சிகர அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
1990 ம் ஆண்டுகளில் தோழர் சண்முகதாசன் வீட்டுக்கு சென்றபோது தோழர் சண்முகதாசன் மூலம் தோழர் அஜித் ரூபசிங்காவின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அப்போது அவருடன் அதிகம் உரையாட முடியவில்லை.
அமெரிக்காவில் கல்வி கற்றவர். அவர் விரும்பியிருந்தால் நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் தான் நேசித்த கொள்கையில் உறுதியாக இருந்தார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இறுதிவரை மாவோயிஸ்ட்டாகவே வாழ்ந்தார்.
தமிழ் மக்கள் நல்லதொரு நண்பனை இழந்துள்ளனர்.
புரட்சி இயக்கம் நல்லதொரு தோழனை இழந்துள்ளது.

•“எட்கா” ஒப்பந்தம் செய்ய துடிக்கும் பிரதமர்களுக்கு தமிழ் அகதிகள் குறித்து பேச அக்கறை இல்லை!

•“எட்கா” ஒப்பந்தம் செய்ய துடிக்கும் பிரதமர்களுக்கு
தமிழ் அகதிகள் குறித்து பேச அக்கறை இல்லை!
இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவதற்கு முன்னர் எட்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்காக பிரதமர் ரணில் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
எட்கா ஒப்பந்தத்திற்கு இலங்கை மக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் எதிர்ப்பை மீறி ஒப்பந்தம் செய்வதற்கு பிரதமர் ரணில் முயற்சி செய்கிறார்.
ரணில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இந்த எட்கா ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தார். தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தத்தை செய்ய மாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் அவர் தான் கூறியதற்கு மாறாக தற்போது அந்த எட்கா ஒப்பந்தத்தை மக்கள் விருப்பத்திற்கு எதிராக நிறைவேற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.
அத்துடன் இந்திய பிரதமர் மோடி “எட்கா” ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை மீது கடும் அழுத்தங்களை பிரயோகித்து வருகிறார்.
இதேவேளை பொள்ளாச்சி அகதி முகாமில் இருந்து 2 தமிழ் அகதிகள் இலங்கைக்கு தப்பியதாகவும் தப்ப முயன்ற மேலும் 5 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் அகதிகள் 33 வருடமாக தமிழ்நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் கல்லூரியில்கூட படிப்பதற்கு அனுமதி இல்லை.
எனவே தமிழ்நாட்டில் வாழ முடியாத அகதிகள் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அதற்கும் இந்திய அரசு அவர்களை அனுமதிப்பதில்லை.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு தமிழ் அகதிகளை வாழ வைக்கவில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் திரும்பிச் செல்லவும் விடாமல் வதைக்கிறது.
இந்தக் கொடுமைகள் குறித்து குரல் கொடுக்க வேண்டிய தமிழ் தலைவர்களோ மௌனமாக இருக்கின்றனர்.
இந்திய பிரதமரும் இலங்கை பிரதமரும் எட்கா ஒப்பந்தம் செய்வதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்காக பல தடவைகள் சந்தித்து பேசுகின்றனர்.
ஆனால் 33 வருடமாக அகதியாக வாழும் 2 லட்சம் தமிழ் அகதிகள் குறித்து இந்த பிரதமர்களால் ஒருமுறைகூட பேச அக்கறை கொள்ளவில்லை.

•சிரியாவுக்கு ஒரு நியாயம் இலங்கைக்கு இன்னொரு நியாயம் இதுதான் வல்லரசுகளின் நியாயம்?

•சிரியாவுக்கு ஒரு நியாயம்
இலங்கைக்கு இன்னொரு நியாயம்
இதுதான் வல்லரசுகளின் நியாயம்?
சிரிய அரசு மேற்கொண்ட இரசாயண தாக்குதல் கண்டிக்கத்தக்கது. ஆனால் அதைக் கண்டித்த வல்லரசுகள் இலங்கையின் இரசாயண தாக்குதலை கண்டிக்காதது என்ன நியாயம்?
இறுதியுத்தத்தின்போது இலங்கை அரசு அப்பாவி மக்கள்மீது இரசாயண தாக்குதல் மேற்கொண்டமை பல சாட்சியங்களினூடாக நிரூபிக்கப்ட்டுள்ளது.
ஆனால் இலங்கையின் இரசாயண தாக்குதலை கண்டிக்காதது மட்டுமல்ல இலங்கை அரசுக்கு மேலும் 2 வருட அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமது ராணுவத்தை தாம் ஒருபோதும் விசாரிக்கமாட்டோம் என இலங்கை ஜனாதிபதி பிரதமர் எல்லோரும் உறுதியாக கூறிவரும் நிலையில் 2 வருட அவகாசம் கொடுப்பது எதற்காக?
ஒரேவிடயத்தில் வல்லரசு நாடுகள் இலங்கைக்கு ஒரு நியாயமும் சிரியாவுக்கு இன்னொரு நியாயமும் காட்டுகின்றன.
ஒருவேளை முள்ளிவாய்க்காலில் எண்ணெய் கிணறு இருந்திருக்குமேயானால் வல்லரசுகளின் நியாயம் வேறு விதமாக இருந்திருக்குமோ?

நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர்மோடியால் தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதா?

•நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர்மோடியால்
தமிழக விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியாதா?
நடிகை கௌதமி , நடிகை கஜோல் என நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடியால் போராடும் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை.
இந்தியா விவசாய நாடு என்கிறார்கள். ஆனால் இந்திய பிரதமர் முதலாளிகளை சந்திக்க காட்டும் ஆர்வத்தை விவசாயிகளை சந்திக்க காட்டுவதில்லை.
முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் இந்திய பிரதமர் மோடி வரட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்.
கடந்த 140 ஆண்டுகளில் மிகப் பெரிய வறட்சியை தமிழகம் சந்தித்துள்ளது. 90% வீதமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்னர். 300 விவசாயிகள் இதனால் தற்கொலை செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகளவான வறட்சியை சந்தித்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனாலேயே வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரண நிதியாக 62138 கோடி ரூபாவை தமிழக அரசு கோரியிருந்தது.
ஆனால் இந்திய அரசு 2014 கோடி ரூபாவை மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. அதாவது தமிழ்நாடு கோரிய நிதியில் வெறும் 3% வீதம் மட்டுமே இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.
வருடந்தோறும் தமிழகத்தில் இருந்து 85 ஆயிரம் கோடி ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு வரட்சி நிவாரண நிதியாக வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாவையே தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
தமிழக எம்.பி கள் 50 பேர் ஒன்று சேர்ந்து சென்றபோதும் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை.
தற்போது போராடும் தமிழக விவசாயிகளை சந்திக்குவும் அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
பிரதமரால் சந்திக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. போராடும் விவசாயிகளை பொலிசார் மூலம் அடித்து விரட்டுவது என்ன நியாயம்?
பாஜ.க மோடியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் மன்மோகன்சிங்காக இருந்தாலும் சரி தமிழக மக்களின் உணர்வுகளை ஒருபோதும் மதிபபதில்லை. எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிளர்ந்தெழுந்தது போல் விவசாயிகளுக்காகவும் தமிழ் மக்கள் கிளர்ந்தேழ வேண்டும்.
வெடிக்கட்டும் மக்கள் போராட்டம்!

•சிரிய குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் எனில் தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா?

•சிரிய குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் எனில்
தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா?
சிரிய நாட்டில் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியால் சிரிய நாட்டின் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரிய நாட்டுக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்றும் அவர்கள் மீது ரசாயண தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தமிழ் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியபோது மௌனமாக இருந்த அமெரிக்கா இன்று சிரிய குழந்தைகள் மீதான தாக்குதலை கண்டிப்பது ஏன்?
சிரிய நாட்டுக் குழந்தைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் தமிழ்க் குழந்தைகள் சாத்தானின் குழந்தைகளா? அதனால்தான் அமெரிக்கா தமிழ் குழந்தைகள் கொல்லப்பட்டதை கவனிக்கவில்லையா?
ரசாயண தாக்குதல் நடத்தியதை சிரிய அரசு மறுத்துள்ளது. சிரிய அரசு தாக்குதல் நடத்தியது இன்னும் நிரூபிக்கப்டவில்லை. ஆனால் அதற்குள் அவசரமாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆனால் இலங்கைஅரசு தமிழ் குழந்தைகள் மீது ரசாயண தாக்குதல் நடத்தியது சாட்சியங்கள் மூலம் ஜ.நா வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இலங்கை அரசு கேட்காமலே அமெரிக்கா 2 வருட அவகாசம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
சிரியாவுக்கு ஒரு நியாயம். இலங்கைக்கு இன்னொரு நியாயம். இதுதான் அமெரிக்க நியாயமா?
ஒருபுறம் சிரிய நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதை தடை செய்துவிட்டு மறுபுறம் சிரிய குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா நிலீக் கண்ணீர் வடிக்கிறது.
அமெரிக்காவின் இந்த இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாமல், அமெரிக்கா தமிழர்களுக்கு நீதி பெற்று தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
அமெரிக்காவில் வசித்து வரும் நாடுகடந்த தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், தமிழ் மக்களுக்காக இந்த நியாயத்தை அமெரிக்காவிடம் கேட்பாரா?

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை

பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை"
லண்டனில் கறோ என்னும் இடத்தில் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் மாலை 8 மணிவரை "லண்டன் தமிழர் சந்தை" இடம்பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் வர்த்தக நிறுவனங்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வு பிரித்தானிய வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம்.
இது தமிழ் வர்த்தகர்களை பிரித்தானிய மற்றும் சர்வதேச அரங்கில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக உருவாக்குவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது
தமிழ் இனத்திற்கு தன்னால் இயன்ற சேவைகளை செய்ய வேண்டும் என்னும் உண்மையான நோக்கம் கொண்ட திருவாசகம் என்பவர் தலைமையில் இவ் அமைப்பு செயற்படுகின்றது.
ஒருபுறம் வர்த்தக நிறுவனங்களின் பிரச்சாரம். இன்னொருபுறம் கலை நிகழ்வுகள். இடையில் சிற்றுண்டிகள் என ஒரு திருவிழா போல் இருந்தது.
பல தமிழ் நிறுவனங்களையும் பல்லாயிரம் தமிழர்களையும் இரு நாட்கள் ஓரிடத்தில் கூட வைத்ததில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது உண்மைதான்.
ஆனால் லைக்கா போன்ற பெரிய புகழ் பெற்ற நிறுவனங்களையும் இதில் இணைத்திருந்தால் சாதனையாக அமைந்திருக்கும்.
அடுத்த வருடம் இன்னும் பல நிறுவனங்களை இணைக்க முயல்வதோடு அவற்றின் மூலம் தமிழ் மக்கள் பயன் பெறும் வகையில் செய்ய வேண்டும்.
தற்போதைய மண்டபம் அதிக மக்களையும் அதிக வர்த்தக நிறுவனங்களையும் கொள்ளும் வசதி குறைவாக இருக்கிறது. அடுத்த வருடம் இதைவிட பெரிய மண்டபத்தை ஒழுங்கு செய்வது நல்லது.
சில ஆலோசனைகள்,
(1) நிகழ்வின் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த பயன்கள் விபரத்தை மக்களுக்கு அறிய தரவேண்டும்.
(2) நிகழ்வு குறித்த மக்களின் விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகளை பெற வேண்டும்.
(3) இந்திய மற்றும் சிங்கப்பூர் மலேசிய தமிழர்களையும் உள்ளடக்கிய “லண்டன் தமிழர் சந்தை” நடத்தப்பட வேண்டும்.
(4) தமிழ் வர்த்தக நிறுவனங்களில் தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
(5) தமிழ் வர்த்தகர்கள் தேவையான உதவிகள் ஆலோசனைகள் பெறுவதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.

•தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்!
தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார்.
இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார்.
1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது.
இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது.
தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது ஈழத் தமிழர்களுக்கு தனது ஆதரவை எப்போதும் உறுதியாக காட்டி வந்திருக்கிறது.
அது தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரி 1986ல் மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தது.
பின்னர் இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது.
அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர்.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார்.
இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது.
அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை.
தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே.
.இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
தோழர் மாறன் நினைவை போற்றுவோம்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்.

விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட கோமணத்துடன் விட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல்!

•விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட
கோமணத்துடன் விட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல்!
தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகைகளையும் அம்பானி முதலாளியின் மனைவிகளையும் சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடிக்கு போராடும் விவசாயிகளை சந்திக்க நேரம் கிடைக்கவில்லையாம்.
விவசாயிகளை சந்திக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் தலைநகரில் அவர்களை நிர்வாணமாக ஓட விட்ட கொடுமையை அல்லவா அவர் செய்திருக்கிறார்.
விவசாயிகளை நிர்வாணமாக ஓடவிட்ட இந்திய அரசைவிட விவசாயிகளை கோமணத்துடன் ஊர்வலம் போகவிட்ட இலங்கை அரசு எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.
•தமிழக மீனவனை சுட்டுக் கொன்றாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக விவசாயி தற்கொலை செய்தாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக தொழிலாளி ஆந்திராவில் கொலை செய்யப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக லாரி டிறைவர் கர்நாடகாவில் நிர்வாணமாக்கப்பட்டு அடித்து விரட்டப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•தமிழக வியாபாரி கேரளாவில் சுடுநீர் ஊற்றி கொலை செய்யப்பட்டாலும் இந்திய அரசுக்கு அக்கறை இல்லை.
•இந்திய அரசின் அக்கறை எல்லாம் வருடம்தோறும் 85 ஆயிரம் கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்வது மட்டுமே.
தமிழக விவசாயிகளே!
நீங்கள் மண்டை ஓட்டி ஏந்தி போராடினீர்கள். மோடி திரும்பிப் பார்க்கவில்லை.
நீங்கள் வீதியில் உருண்டு மன்றாடினீர்கள். மோடி திரும்பி பார்க்கவில்லை.
நீங்கள் கோமணத்துடன் நின்றீர்கள். மோடி திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனால் ஒரேயொரு முறை தமிழ்நாடு தனிநாடு ஆகும் என்று கூறிப்பாருங்கள். மோடி நிர்வாணமாக உங்கள் பின்னால் ஓடிவருவார்!

•தமிழக விவசாயிகளின் போராட்டம் தமிழர்களுக்கு கற்று தரும் பாடம் என்ன?

•தமிழக விவசாயிகளின் போராட்டம்
தமிழர்களுக்கு கற்று தரும் பாடம் என்ன?
பிரதமர் அணிந்திருந்த துப்பட்டாவை ஒரு பெண் இணையம் மூலம் கேட்ட போது உடனே அதனை அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி.
ஆனால் 29 நாட்களாக பிரதமர் வாசலில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை இந்த பிரதமருக்கு.
ஏனெனில் துப்பட்டா கேட்ட பெண் தமிழர் இல்லை. உடனே துப்பட்டா அனுப்பி வைத்தார். ஆனால் விவசாயிகள் தமிழர்கள் என்பதால் அவர் அக்கறை காட்டவில்லை.
குல்புஜன் யாதவ் என்பவர் பாகிஸ்தானில் உளவு மற்றும் நாச வேலைகளில் ஈடுபட்டமைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடனே, அவர் இந்திய குடிமகன் என்று அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அம்மையார் அக்கறை காட்டியுள்ளார்.
ஆனால் இதுவரை 600 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில்கூட மீனவர் பிரிட்டோ கொல்லப்பட்டுள்ளார். ஒருமுறைகூட இந்திய அரசு சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் இந்திய குடிமகன் என்று அக்கறை கொள்ளவில்லை.
குல்புஜன் யாதவ் தூக்கில் இடப்பட்டால் பலூச்சிஸ்தானை தனிநாடாக இந்தியா அறிவிக்கும் என்று சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். ஆனால் 600 தமிழக மீனவர்கள் கொல்லப்ட்டபோது தமிழீழத்தை தனிநாடாக இந்தியா அங்கீகரிக்கும் என்று ஒருமுறைகூட இந்த சுப்பிரமணியசுவாமி கூறவில்லை.
ஏனெனில் குல்புஜன் யாதவ் தமிழர் இல்லை. எனவே அவர் நலனில் இந்திய அரசு அக்கறை காட்டுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்கள்; தமிழர் என்பதால் இந்திய அரசு அக்கறை காட்டவில்லை.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று இந்திய அரசு கூறுகிறது. ஆனால் இதே இந்திய அரசுதான் அண்மையில் முதலாளி மல்லையாவின் 9000 கோடி ரூபா கடனை தள்ளுபடி செய்துள்ளது.
ஏனெனில் மல்லையா தமிழர் இல்லை. எனவே அவருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் தமிழர்கள் என்பதால் கடன் தள்ளுபடி செய்ய மறுக்கப்படுகிறது.
தமிழக விவசாயிகளின் நிர்வாணப் போராட்டத்ததால் இந்தியாவுக்கு அவமானம் என்று எச்.ராஜா கூறுகிறார்.
நிர்வாண சாமிகளை தேடிச் சென்று பிரதமர் வணங்கிறார், நிர்வாண சாமிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா?
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால் தான் தமிழக விவசாயிகள் நிர்வாணமாக போராட வேண்டிய நிலை உள்ளது.
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால்தான் 600 தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற பின்பும்கூட தமிழர்கள் மௌனமாக இருக்க வேண்டியுள்ளது.
தமிழர்கள் இந்தியர்களாக இருப்பதால்தான் வருடம்தோறும் 85 அயிரம் கோடி ரூபா வரியாக இந்திய அரசுக்கு தமிழகம் கட்ட வேண்டியிருக்கிறது.
தமிழர்கள்தான் தம்மை இந்தியர்களான நினைக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தமிழர்களை இந்தியர்களாக ஒருபோதும் கருதவில்லை.
எனவே தற்போது தமிழர் முன் உள்ள கேள்வி என்னவெனில்,
இந்தியர்களாக அடிமைகளாக இருக்கப்போகிறீர்களா? அல்லது
தனித் தமிழ்நாட்டில் சுதந்திரமாக இருக்கப்போகிறீர்களா?

•தமிழக காவல்துறை மக்களின் நண்பன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது!

•தமிழக காவல்துறை மக்களின் நண்பன் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது!
தமிழக காவல்துறையானது தமிழக அரசின் ஏவல்நாய் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.
அது தனது வீரத்தை அப்பாவி மக்கள்மீது காட்டி வருகிறது. அதுபுரியாமல் காவல்துறை மக்களின் நண்பன் என்று சிலர் நம்பி வருகின்றனர்.
தமிழக காவல்துறையானது,
தமிழக மீனவன் பிரிட்டோ இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக லாரி டிறைவர் கர்நாடகாவில் நிர்வாணமாக்கி தாக்கப்ட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக வியாபாரி கேரளாவில் சுடுநீர் ஊற்றி கொல்லப்பட்டபோது காட்டாத வீரத்தை
தமிழக கூலித் தொழிலாளர்களை மரம் கடத்தினார்கள் என்று பொய்கூறி ஆந்திராவில் சுட்டுக்கொன்றபோது காட்டாத வீரத்தை
மதுக்கடைக்கு எதிராக போராடும் தமிழக பெண்களுக்கு எதிராக காட்டுகிறார்கள்.
நேற்று ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அமைதி வழியில் போராடிய மாணவர்களையும் பெண்களையும் தாக்கினார்கள்.
இன்று மதுக்கடைக்கு எதிராக போராடும் அப்பாவி பெண்களை தாக்குகிறார்கள்.
நாளை இதேபோல் தமிழ் மக்களையே இந்த காவல்துறை தாக்கப் போகிறது.
இடையிடையே சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அப்பாவி அகதிகளையும் தாக்கி தனது வீரத்தை வெளிப்படுத்தி வருகிறது தமிழக காவல்துறை.
தமிழ் மக்களை தாக்கும் இந்த ஏவல்துறை ஒருபோதும் தமிழ் மக்களின் நண்பன் கிடையாது என்பதை இனியாவது தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.