Thursday, August 29, 2013

சீமானுக்கு திருமண வாழ்த்துகள்!

சீமானுக்கு திருமண வாழ்த்துகள்!

சீமானின் திருமணம் குறித்து எற்கனவே நான் அறிந்திருந்தாலும் இது குறித்து உத்தியோகபூர்வமான அறிவித்தல் வந்த பின்பே எனது கருத்துக்களை தெரிவிப்பது முறையானது என்று கருதியதால் இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்தேன்.

ஆரம்பகாலங்களில் “ஆசீர்” என்று அழைக்கப்பட்ட சார்ல்ஸ் அல்லது சீலன் என்பவர் குண்டு காயத்திற்கு சிகிச்சை பெற மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (1982களில்) அங்கு கடமைபுரிந்த தாதி (நர்ஸ்) ஒருவரை விரும்பினார். இருவருக்கும் காதல் பிறந்தது. ஆனால் இதை அறிந்த தலைவர் பிரபாகரன் “நாம் போராளிகள். எங்களுக்கு இந்த காதல், கீதல் எல்லாம் இருக்கக்கூடாது” என கண்டிப்புடன் கூறி சார்ல்ஸ்சை பூரண நலம் பெற முன்னரே பாதியில் நாட்டுக்கு திருப்பி அனுப்பினார். ஆனால் அதே தலைவர் பிரபாகரன் பின்னர் மதிவதனியைக் காதல் செய்ததும் அவருக்கு பிறந்த முதல் குழந்தைக்கு சார்ல்ஸ் என பெயர் வைத்ததும் அனைவரும் அறிந்ததே.

அதே போன்று திருமணம் செய்யாமல் தமிழீழ போராட்டம் நடத்தப் போகிறேன் என கூறிவந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பின்னர் ஒரு ஈழத் தமிழ் பெண்ணை அதுவும் ஒரு விதவைப் பெண்ணை திருமணம் செய்து வாழ்வு கொடுக்கப் போவதாகக் கூறினார். இதற்காக அவருடன் கூட இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டு இந்த விபரங்களை கூறி சீமானுக்கு ஒரு நல்ல ஈழ தமிழ் பெண் பார்த்து தருமாறு கேட்டார். அதற்கு நான் இவ்வாறு வாழ்வு கொடுத்து (தியாகம் செய்யும்) திருமணங்கள் நான் அறிந்தவரையில் வெற்றியளிக்கவில்லை என்றும் தமிழ்நாட்டிலேயே அவருடைய கொள்கைக்கு ஏற்ற ஒரு பெண்ணை காதல் செய்து மணம் புரியுமாறு ஆலோசனை கூறினேன்.

நான் குறிப்பிட்டது போன்று சீமான் அவர்கள் ஒரு தமிழ்நாட்டு பெண்ணை காதல் செய்து மணம் புரிய இருப்பதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேவேளை, மறைந்த அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனுடன் இருந்த அலெக்ஸ் என்பவரின் விதவை மனைவியான கயல்விழி என்பவரை திருமணம் செய்வதாக கூறி தமிழ்நாட்டிற்கு அழைத்து தன்னுடன் கூட வைத்திருந்துவிட்டு தற்போது அந்த பெண்ணை சீமான் ஏமாற்றிவிட்டதாக சிலர் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் உறவினர்களோ இது பற்றி எதுவும் கூறியதாக நான் அறியவில்லை. எனவே இதை என்னால் நம்ப முடியவில்லை. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. இது சீமான் மீது பொறாமை கொண்டவர்களின் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தியாகவும் இருக்கலாம். எனவே இதனை ஆரம்பத்திலேயே மறுப்பது சீமானுக்கு நல்லது. ஏனெனில் சீமான் மீது பல ஈழத் தமிழர்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆதலினால் இந்த செய்தி குறித்து சீமான் அவர்களோ அல்லது அவருடைய ஆதரவாளர்களோ உண்மையை வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கயல்விழி மற்றும் சீமான் தொடர்பாக எனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் செய்தியை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=560877330639617&id=100001520667093&refid=8&_ft_=qid.5910709838357491456%3Amf_story_key.5879835537953486803&_rdr#s_858666aa7edc4d21e64fab3ab42a4e9f

செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சார்பாக கேட்கிறோம்!

செஞ்சோலையில் கொல்லப்பட்ட சிறுவர்கள் சார்பாக கேட்கிறோம்!

இன்று இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோரே

இந்திய ஆதரவுடன் நடந்த இந்த கொலைகளுக்கு நியாயம் சொல்வீரா?

அந்த சிறுவர்கள் கையில் துப்பாக்கி இல்லை. அவர்கள் வயிற்றில் வெடிகுண்டுகள் கட்டியிருக்கவில்லை. இருந்தாலும் விமானம் மூலம் குண்டுகள் வீசிக் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டு அகஸ்டு 14ம் திகதி செஞ்சோலையில் இலங்கை இராணுவம் 16 குண்டுகளை வீசி 52 சிறுவர்கள் உட்பட 62 பேர்களை படுகொலை செய்தது.

இன்று சிரியாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக நீலிக் கண்ணீர் வடிப்போர் அன்று இந்த குழந்தைகள் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தது ஏன்?

இன்று சிரியாவில் இரசாயணக் குண்டுகள் பாவிக்கப்படுவதாக கண்டிக்கும் மனித உரிமை அமைப்புகள் எல்லாம் அன்று தமிழர்கள் மீது இரசாயண குண்டுகள் வீசப்பட்டபோது ஏன் கண்டிக்கவில்லை?

தமிழர் பிரதேசத்தில் எண்ணெய் கிணறுகள் இல்லாதபடியால்தானா இவர்கள் கருத்து தெரிவிக்வில்லை? அல்லது தமிழர்கள் மனிதர்களே அல்ல என்று நினைத்தா மௌனமாக இருந்தார்கள்?

குஜராத்தில் மாடு கொல்லப்படுவதாக கண்ணிர் வடிக்கும் மோடியின் பா.ஜ.க வன்னியில் மக்கள் அதுவும் அவர்களின் இந்துமத மக்கள் கொல்லப்படும்போது என் கண்டிக்கவில்லை. ஈழத் தமிழன் ஒரு மாட்டைவிடவா கேவலமானவன்?

இன்று இந்தியாவில் சுதந்திர தினத்தை கொண்டாடுவோரிடம் தயவாக கேட்கிறோம். உங்கள் இந்திய அரசின் ஆதரவுடன் நடந்த இந்த கொலைகளுக்கு என்ன நியாயம் வழங்கப் போகிறீர்கள்? எங்களை அழித்து எங்கள் சாம்பல்மேட்டில் நின்று கொண்டாட்டம் நடத்தவா நீங்கள் சுதந்திரம் பெற்றீர்கள்?

தூ ... வெட்கம்!
 — with Suppiah Pancharatnam.

• வன்னியில் 3 பிள்ளைகளின் தாய் இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு!

• வன்னியில் 3 பிள்ளைகளின் தாய் இலங்கை ராணுவத்தால் கற்பழிப்பு!
• தமிழ் பகுதியில் தொடரும் ராணுவ அட்டூழியங்கள்!
• லண்டனில் பல ஆயிரம் பவுண்ஸ் செலவில் தமிழுக்கு மாநாடு!

வன்னியில் பூநகரிப் பிரதேசத்தில் 38 வயதான, மூன்று பிள்ளைகளின் தாயார் இலங்கை ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டுள்ளார். மயங்கிய நிலையில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்ட்டிருக்கும் இத் தமிழ்பெண்ணை பார்வையிடுவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்குகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த மாதம் வன்னியில் நெடுங்கேணி என்னும் இடத்தில் பள்ளி சிறுமி ஒருவர் இலங்கை ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டார். இதனை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் அரசு வேறு வழியின்றி ஒரு ராணுவ வீரர் மேல் வழக்கு போட்டிருக்கிறது.

யுத்த காலத்தில் கூட இந்தளவு கற்பழிப்பு ஆபத்துகள் வன்னியில் இருந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு தற்போது அதிகரித்து வருகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவதாலே ராணுவம் இந்தளவு தூரம் அக்கிரமாக நடந்து கொள்கிறது.

அரசியல்வாதிகள் எல்லாம் பதவிக்காக ஓட்டுப் பொறுக்கும் இந்த நேரத்தில் கூட ராணுவம் இந்தளவு அராஜகம் செய்கிறது எனில் தேர்தல் முடிய இன்னும் அக்கிரமாக நடந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

ஜ.நா மனிதவுரிமை செயலர் நவநீதம்பிள்ளை விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார். அவர் ஒரு பெண். எனவே இலங்கையில் தமிழ் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு இன்மை குறித்து அவர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோருகிறேன். இது குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் உணர்வுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

வன்னியில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் சாப்பாட்டுக்கு வழியின்றி கிணற்றில் வீசிக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் புலத்தில் உள்ள சிலர் அது பற்றி அக்கறையின்றி பல ஆயிரம் பவுண்ஸ் செலவில் தமிழுக்கு மாநாடு நடத்துகிறார்கள். வன்னியில் மக்கள் சாகும்பொது அது பற்றி அக்கறையின்றி கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துகிறார் என்று விமர்சித்தவர்கள் இன்று தாங்கள் அதே தவறை கொஞ்சம் கூட வெட்கம் இன்றி செய்கிறார்கள்.

வன்னி மக்களே!
இந்த பாவிகளை மன்னிப்பீர்களாக!

லண்டனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

லண்டனில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

• சிங்கள மக்களை எதிரியாக பார்க்கத் தேவையில்லை.

• தமிழீழ தீர்வு கோரவில்லை. மாறாக ஜக்கிய இலங்கைக்குள்
ஒரு தீர்வை கோருகிறோம்
.
• சிங்க கொடி ஏந்தியதை தவறாக நினைக்கவில்லை.

• தாயகத்தில் உள்ள மக்கள் எங்களையே நம்புகின்றனர். எனவே அவர்களுக்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுக்க விரும்புகிறோம்.

லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் ஈஸ்ட்காம் பகுதியில் இன்று (17.08.2013) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி முதல் 9.00 மணிவரை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு ஆரம்பமான கூட்டம் மாலை 8 மணிக்கு முன்னரே முடிவடைந்துவிட்டது. சுமார் 30 பேர் அளவில் சமூகமளித்திருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் ரெலோ இயக்க லண்டன் கிளைப் பொறுப்பாளர் சம்பந்தன் பேசினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு உரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழ் மக்கள் ஒருமித்து தமிழ்தேசிய கூட்டமைக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையேல் அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவு ஏற்படும் என எச்சரித்தார்.

பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பேசினார். அவர் தனது உரையில் கூட்டத்தில் உள்ளவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முன்னர் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் தான் என்ன சொன்னாலும் மக்கள் மறு பேச்சின்றி எற்றுக்கொள்வார்கள் என நினைத்தார். ஆனால் அவரின் ஏமாற்றை உணர்ந்த இளைஞர்கள் ஒரு கட்டத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பை வழங்கினார்கள். அதுபோல் புலிகளின் அழிவிற்கு பின்பு இனி தமிழ் மக்கள் தான் என்ன கூறினாலும் எற்றுக் கொள்வார்கள் என சம்பந்தர் நம்பினார். ஆனால் அவருக்கு முதன் முதலாக லண்டனில் கடும் எதிர்ப்பு இன்று காட்டப்பட்டிருக்கிறது.

சம்பந்தரின் வாழ்நாளில் இவ்வளவு எதிர்ப்பை ஒருபோதும் சந்தித்திருக்கமாட்டார். இனி அவர் லண்டனுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ விஜயம் செய்வாரா என்பதும் சந்தேகமே. அந்தளவிற்கு கூச்சல் குழப்பத்துடன் கூட்டம் அரைகுறையில் முடிந்தவிட்டது. ஒரு மூத்த தலைவர் இந்தளவு தூரம் அவமானப்பட்டிருப்புது வருத்தமே. இருப்பினும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மக்கள் எதிர்ப்பை என்றோ ஒரு நாள் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்.

(1)சிங்கள மக்களை எதிரியாக பார்க்க வேண்டியதில்லை என்கிறார் சம்பந்தர். தமிழ் அமைர்கள் வாய் திற்க்காமல் மௌனமாக இருக்க சில சிங்கள அமைச்சர்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவாக மாகாணசபை திருத்தத்திற்கு எதிராக குரல் கொடுப்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் இதே அமைச்சர்கள் தமிழ் மக்கள் கொல்லப்படும் போது மௌனமாக ஆதரித்தவர்கள். இன்றும்கூட தமிழ்மக்களின் சயநிர்ணய உரிமையை மறுப்பவர்கள். இவர்கள் அரசில் தமது சில விருப்பங்களை நிறைவேற்ற மாகாணசபை விடயத்தை பாவிக்கிறார்கயேயொழிய உண்மையாக தமிழ் மக்கள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல.

(2) தமிழீழ தீர்வை கைவிட்டு ஜக்கிய இலங்கைக்குள் தீர்வை கோருவதாயின் முதலில் இது குறித்து புலத்தில் உள்ளவர்களுக்கும் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் சம்பந்தர் விளக்க வேண்டும். அதைவிடுத்து தமிழ்நாட்டில் மாணவர்கள் தமிழீழத்திற்காக தீக்குளிக்கும்போது சம்பந்தர் ஜக்கிய இலங்கைக்குள் தீர்வைக் கோருவது அந்த மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

(3) சம்பந்தரின் குடும்பம் இந்தியாவில் உள்ளது. எனவே அவர் இந்தியாவை மீறி செயற்பட முடியாது. ஆனால் அதற்காக இந்தியா அதுவும் மன்மோன்சிங் உறுதி தந்திருக்கிறார் என லண்டனில் வந்து கூறுவது நகைப்பிற்கு இடமானது. 1977ல் இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று கூறி நம்பவைத்தது போல் இன்றும் இந்தியா வரும் என கூறி நம்ப வைக்க முயல்கிறார். அவரின் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

இறுதியாக சம்பந்தர் ஜயாவுக்கு ஒரு வேண்டுகோள்!

மக்கள் வெறும் மந்தைகள் அல்ல. நீங்கள் நீண்டகாலம் மேயப்பனாகவும் இருக்க முடியாது. தயவு செய்து இனியாவது மக்களுக்கு துரோகம் செய்யாது மக்களின் நலன்களுக்காக போராட முயற்சி செய்யவும். இல்லையேல் வரலாற்றில் அமிர்தலிங்கம் எப்படி குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டாரோ அதுபோல் நீங்களும் தூக்கி யெறிப்படுவீர்கள்.

• லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள கால்மாக்ஸ் சமாதி

• லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்துள்ள கால்மாக்ஸ் சமாதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.08.2013)யன்று லண்டனில் கைகேட் மயானத்தில் அமைந்திருக்கும் காரல் மாக்ஸ் சமாதிக்கு சென்றிருந்தேன். கனடாவில் இருந்து வந்திருந்த எனது நண்பர் பார்க்க விரும்பியதால் அவரை அழைத்துச் சென்றேன். நான் ஏற்கனவே பல முறை சென்றிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட ஆட்கள் இல்லாமல் அந்த மயானம் இருந்ததில்லை. அண்மைக்காலமாக மாக்ஸ் சமாதியை பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை நான் அவதானித்தேன்.

இம்முறை நானும் நண்பரும் சென்றிருந்த வேளை பின்லாந்தில் இருந்து வந்த ஒரு தாயும் மகளும் மாக்ஸ் சமாதியை அதிக நேரம் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். எனது நண்பர் ஆச்சரியத்தில் அவர்களிடம் “மாக்சியம் காலாவதியாகி விட்டது. மாக்ஸ்ற்கு செல்வாக்கு இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் எதற்காக அங்கிருந்து இங்கு வந்து பார்வையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அந்த தாய் “அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாக்சை மக்கள் மனங்களில் இருந்து அவர்களால் ஒருபோதும் நீக்க முடிவதில்லை” என்றார்.

மாக்ஸ் உண்மையாக புதைக்கப்பட்ட இடம் சுமார் 50 அடி தூரம் தள்ளி உள்ளே இருக்கிறது. பார்வையாளர்களின் வசதிக்காக தற்போதைய சமாதி பாதையோரமாக கட்டப்பட்டிருக்கிறது. இந்த சமாதிக்கும் சில சமூக விரோதிகளால் 1960களில் வெடிகுண்டு வீசப்பட்டது. ஆனால் சமாதிக்கு சிறிது சேதமே ஏற்பட்டதால் அது பின்னர் புனரமைப்பு செய்து பார்வையாளருக்கு விடப்பட்டுள்ளது.

கால்மாக்ஸ் புதைக்கப்பட்டபோது வெறும் 16 பேரே வந்திருந்தனர். ஆனால் அதன் பின் பல தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். அதிக மக்களை கவர்ந்த தத்துவவாதியாக இன்றும் கால்மாக்ஸே விளங்குவதாக பி.பி.சி எடுத்;த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

• பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் ஆளும் கன்சவேட்டிக் கட்சியை பகிஸ்கரிக்க வேண்டும் -சாரா எல்டிறிஜ்

• பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் ஆளும் கன்சவேட்டிக் கட்சியை பகிஸ்கரிக்க வேண்டும் -சாரா எல்டிறிஜ்

பிரிட்டன் அரசு யுத்த காலத்தில் மட்டுமல்ல தற்போதும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் கூட்டங்களிலும் பங்கு பற்றுகிறது. அது பிரிட்டன் வாழ் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. எனவே தமிழ் மக்கள் ஆளும்கட்சியான கன்சவேட்டிக் கட்சியை பகிஸ்கரிக்க வேண்டும். அவர்களுக்கு வாக்கு போடக்கூடாது. ஒரு பென்னி பணம் கூட வழங்க்கக்கூடாது என்று தமிழ் மக்கள் ஆதரவு செயற்பாட்டாளரான தோழர் சாரா எல்டிறிஸ் அவர்கள் கூறியுள்ளார். அவர் வழங்கிய பேட்டியை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம

http://www.youtube.com/watch?v=3U4Pu8I5x0o#t=22

• மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

• மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும, ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
- தோழர் சண்முகதாசன்

ஆளும்கட்சியை ஒரு தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்ற போதிலும் எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை ஒரு தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு போதிக்கின்றன. எனவே நடைபெற இருக்கும் மாகாணசபைத் தேர்தலை பகிஸ்கரிப்போம்.

தோழர்களே!

மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்.!

ஜெயா அம்மையார் அவர்களே! சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை “மாடுகள்” என்று அறிவிக்கவும்.

ஜெயா அம்மையார் அவர்களே!

சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை “மாடுகள்” என்று அறிவிக்கவும்.

அதனால் குஜராத் மோடி யாவது தனது அரசியலுக்காக “மாடுகளை துன்புறுத்தாதீர்” என கோருவார்
.
“புளுகிராஸ்” அமைப்பாவது சிறப்புமுகாம் சென்று மாடுகளை (அகதிகளை) கண்காணிக்கும்!

இந்தியாவில் மிருகங்களை துன்புறுத்தக் கூடாது என மிருகவதைச் சட்டம் உள்ளது. யாராவது மிருகங்களை துன்புறுத்துகிறார்களா என அவதானிக்க புளுகிராஸ் போன்ற அமைப்புகள் உண்டு. அதையும்விட சில தொண்டர் அமைப்புகளும் இருக்கின்றன. இன்னும் சொன்னால் இதற்காக சில நடிகைகள் நாய்க்குட்டிகளுடன்கூட போஸ் கொடுத்து விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் துன்புறுத்தப்படுவதை தடுப்பதற்கு ஒரு சட்டம் இல்லை. கண்காணிப்பதற்கு ஒரு அமைப்பு கூட இல்லை. ஏனெனில் ஈழத் தமிழ் அகதி என்பவன் மனிதன் அல்ல. அவன் மிருகத்தைக் விடக் கேவலமானவன் என்றே ஜெயா அரசு கருதுகிறது.

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யுமாறு பலர் பல வடிவங்களில் போராடி விட்டனர். ஆனால் ஜெயா அம்மையாரின் செவிட்டு காதில் அது இன்னும் விழவில்லை. அதேவேளை அவர் இலங்கை அரசு நட்பு நாடு அல்லவாம். அங்கு நடைபெறும் மாநாட்டுக்கு பிரதமர் போகக்கூடாதாம் என்று கடித விளையாட்டு காட்டுகிறார். அவர் உண்மையில் இலங்கை தமிழ் மக்கள் மீது இரக்கம் உள்ளவராயின் முதலில் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது அவர்களை மனிதர்களாக மதித்து சட்டப்படியாவது பராமரிக்கவும். இல்லையேல் ஜெயா அம்மையாரும் மகிந்த ராஜபக்சவின் உறவினரே என்றுதான் தமிழர்கள் கருதவேண்டியிருக்கும்.

அமெரிக்காவில் நிறவேற்றுமை ஒழிந்து கறுப்பர்கள் விடுதலை பெறுவது எப்போது

• உலகிற்கு ஜனநாயகத்தை போதிப்பதாக கூறும் அமெரிக்கா தனது நாட்டில் கறுப்பர்களுக்கு எப்போது ஜனநாயகத்தை வழங்கப் போகிறது?

• அமெரிக்காவில் நிறவேற்றுமை ஒழிந்து கறுப்பர்கள் விடுதலை பெறுவது எப்போது?

• கறுப்பரான ஒபாமா ஜனதிபதியாக இருக்கும் அமெரிக்காவில் இன்னமும் கறுப்பர் அச்சத்துடனே வாழ்கின்றனர்!

அமெரிக்காவில் கறுப்பின இளைஞர்கள் பலர் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக 18 மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரேவொன் மார்ட்டின் என்ற இளைஞனின் தாய் கூறுகிறார்.

அமெரிக்க சிவில் உரிமை செயற்பாட்டாளர் மார்ட்டின் லூதர் கிங் நடத்திய நகர ஊர்வலத்தின் 50வது ஆண்டு நிறைவாக இன்று சனிக்கிழமை வாஷிங்டன் நகரில் நடக்கவுள்ள பேரணியிலும் சப்ரினா ஃபுல்டோன் உரையாற்றுகிறார்.

17 வயதான இளைஞன் ட்ரேவொன் மார்ட்டினை துப்பாக்கியால் சுட்ட ஜோர்ஜ் சிம்மர்மன் கடந்த மாதம் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தமை குறிப்பிடத்தக்கது.

Saturday, August 10, 2013

கனடா வாழ் தமிழ் மக்களே

கனடா வாழ் தமிழ் மக்களே!

உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா அவர்களின் ஆட்டம் கண்டு கழித்தோம். இதை வன்னியில் பசியால் மடியும் குழந்தைகளுக்கு காணிக்கையாக்கிறோம். இந்த ஆட்டத்தைப் பார்த்து அந்த குழந்தைகள் வயிறு நிறையும் என நம்புகிறோம்.

அடுத்த முறையும் அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய தவறிவிடாதீர்கள். அப்பதான் அவர் தென்னிந்திய கலைஞர்களுடன் மட்டுமல்ல அமெரிக்க கொலிவூட் கலைஞர்களுடனும் ஆட்டம் போட்டு தன் மக்கள் சேவையை திறம்பட செய்வார்.

ஒரு சிறந்த சேவையுணர்வுள்ள ராதிகா பெண்மணியைத் தெரிவு செய்த உங்கள் ஜனநாயக கடமையை பாராட்டுகிறோம். மெச்சுகிறோம்.

ராதிகாவின் ஆட்டத்தை பார்க்கத் தவறியவர்கள் கீழ்வரும் இணைப்பில் பார்த்து மகிழுங்கள்.
https://www.youtube-nocookie.com/embed/e7qkfuUOYJ0?rel=0

Noam Chomsky

நோம் சோம்கி (வயது -84) என்பவர் உலகின் மிகச் சிறந்த புத்திஜீவிகளில் ஒருவர். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவ பேராசிரியாக கடமையாற்றுகிறார். யுத்தம், அரசியல, மனித உரிமைகள் தொடர்பாக 100 ற்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இலங்கை சிறை மற்றும் தமிழ்நாட்டு சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாதது குறித்து கேட்டபோது அவர் என்னிடம் தெரிவித்த கருத்து வருமாறு,

The terrible crimes committed against Tamils by Sri Lankan forces, particularly in the late stages of the conflict, passed with little notice in the West, and the same is true of the continuing crimes in the detention camps for Sri Lankan Tamils. It is long past time for these atrocities to be recognized and ended, for the victims to be rescued, and for the guilty to be brought to justice.

I’ve signed petitions on these terrible matters before, and would do so again.

Noam Chomsky

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பேராசிரியர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார். ஆனால் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் நமது கட்சிகளோ அல்லது வேட்பாளர்களோ இதுவரை இது குறித்து ஒரு வார்த்தை பேசாதது எமக்கு மட்டுமல்ல அந்த அடைத்து வைக்கப்பட்ட கைதிகளின் உறவினர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

மாவட்டம் தோறும் “டெசோ” கூட்டம் நடத்தும் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி கோராதது அவரது இலங்கைத் தமிழர் மீதான அனுதாபம் குறித்து சந்தேகம் கொள்ள வைக்கின்றது. கொழும்பில் காமன்வெல்த் கூட்டத்தில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று கோரும் தமிழக அரசியல்வாதிகள் முதலில் தமிழ்நாட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரட்டும்.

லண்டன் வந்த எழுத்தாளர் சல்மா அவர்களிடம் இந்த சிறப்பு முகாம் கைதிகளின் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தேன். அவர் தான் தலைவர் கலைஞருடன் பேசி நிச்சயம் வழி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தார். இதுவரை அவரிடமிருந்து இது குறித்து எந்த செய்தியும் வரவில்லை. ஏமாற்றமாக இருக்கிறது.

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கழிந்து விட்டன. இன்னும்கூட சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் தளபதிகள் கே.பி, கருணா, தமிழினி போன்றோர் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை இதுதான் மகிந்த சிந்தனையோ?

தான் வென்றால் மகிந்தவுடன் இணக்க அரசியல் செய்வேன் என்று கூறும் முதலமைச்சர் வேட்பாளர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் கூட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து பேசாதது ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

• இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இலங்கை தமிழ் அகதி எழுதும் மடல்

• இசைஞானி இளையராஜா அவர்களுக்கு
இலங்கை தமிழ் அகதி எழுதும் மடல்

அறிவிப்பு- லைக்கா மற்றும் ஜய்ங்கரன் முதலாளிகளின் எற்பாட்டில் எதிர்வரும் 24.08.2013 யன்று லண்டனில் இளையராசா கச்சேரி நடைபெற உள்ளது. டீக்கட் விலை- 20000ரூபா, 30000ரூபா, 50000 ரூபா.

அய்யா!

கடந்த வாரம்தான் கலைஞர் டிவியின் மானாட மயிலாட ஆட்டம் நடந்து முடிந்தது. அதற்குள் அடுத்த மாதம் உங்கள் கச்சேரி நடக்க இருக்கிறது என்று அறிவிப்பு வந்துள்ளது. இதனால் எமது நிலையை விளக்க வேறு வழியின்றி இந்த மடலை எழுதுகிறேன்.

நீங்கள் திரையிசைப் பாடல்களை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர். அதுமட்மல்ல எமது சநதோசம,; துக்கம் அனைத்திலும் இசையாக இருப்பவரும் நீங்களே. அதனால்தான் உங்களை இசைஞானி என்கிறோம். எனவே முதலில்; உங்களுக்கு இலங்கை தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் இலங்கை தமிழர்களின் துன்பங்களை அறிந்தவர் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உங்கள் ஆதரவையும் வழங்கிவருபவர் . அதுகுறித்து நாம் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும் நீங்களும் வறிய நிலையில் இருந்து வந்தது மட்டுமல்ல அதை மறவாது இருப்பவர் என்றும் அறிந்துள்ளேன். ஆரம்பத்தில் நீங்கள் கம்யுனிஸ்ட் கட்சி கூட்டங்களில் பாடியிருப்பதாகவும் கூறியிருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு எமது கஸ்டத்தை விளக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன்.

உங்களுக்கு தேவையான இன்னும் சொல்லப்போனால் தேவைக்கு அதிகமான பணத்தை நீங்கள் நம்பும் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க அகதிகளின் பணத்தைப் பறித்துதான் வாழ வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என நம்புகிறேன். உங்களுடைய இசையை நாம் ரசிக்க வேண்டும் என்பதற்காகவே கடல் கடந்து வந்து கச்சேரி செய்கிறீர்கள் என நம்புகிறேன்.

லைக்கா மொபைல் மற்றும் அய்ங்கரன் போன்ற எம் இனத்து முதலாளிகள் தமிழ் இனம் எக் கேடு கெட்டாலும் பரவாயில்லை. தாங்கள் அட்டைகள் போல் உறிஞ்சி கொழுக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவர்கள். ஆனால் மிகுந்த கடவுள் நம்பிக்கையும் வறிய மக்கள் மற்றும் அகதிகள் மீது உண்மையாக அன்பு கொண்டவர் என்று அறியப்படும் நீங்கள் எப்படி அவர்கள் செய்யும் இந்த அநியாயத்திற்கு சம்மதித்தீர்கள்.

வன்னியில் எமது மக்கள் கஸ்டப்படும்போது, பட்டினியால் எமது குழந்தைகள் சாகும்போது இங்கிலாந்தில் நம்மவர்கள் ஆயிரக்கணக்கான ரூபா டிக்கட் எடுத்து கச்சேரி பார்த்தால் அதை சரித்திரம் எப்படி பதிவு செய்து கொள்ளும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா?

உங்களை கச்சேரி செய்ய வேண்டாம் என நான் கேட்கவில்லை. தாராளமாக செய்யுங்கள். ஆனால் இதில் சேரும் பணம் யாவும் தாயகத்தில் கஸ்டப்படும் மக்களுக்கு வழங்கப்படும் என கூறுங்கள். இப்படி அறிவிப்பு செய்தால் அகதிகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் மகிழ்வார்கள். அதுமட்டுமல்ல இனிவருபவர்களுக்கு இது ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் அமையும் அல்லவா?

உங்களுடைய கச்சேரியை குழப்புவது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால் இங்கிலாந்தில் இசைஞானியின் கச்சேரியை இலங்கை தமிழ் அகதிகள் குழப்பினார்கள் என்ற அவச் சொல் உங்களுக்கு வந்தவிடக்கூடாது என்றே கவலைப் படுகிறேன். எனவே எமது உணர்வுகளை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லாம் மகிழ்வுறும் வண்ணம் அறிவித்தல் கொடுங்கள். உங்கள் இனிய செய்தியை எதிர்பார்த்து இருக்கும்

ஒரு அப்பாவி தமிழ் அகதி.

• மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த குழந்தையின் போட்டோ சமர்ப்பணம்

• ஒரு இறந்த தாயிடமிருந்து பால் குடிக்க முயலும் ஒரு குழந்தையின் படத்தை பிரசுரித்து பதிவு ஒன்று போட்டிருந்தேன். அந்த படம் இலங்கையில் எடுக்கப்படவில்லை, மியான்மரில் எடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டதால் தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அந்தபதிவையும் நீக்கியிருந்தேன். ஆனால் பல நண்பரகள்; அந்த பதிவு எழுப்பும் கேள்வி நியாயமானது என்றும் அதனை மீண்டும் பதிவு செய்யும்படி கேட்கிறார்கள். எனவே அவர்களுக்காக மீண்டும் அதனை பதிவு செய்கிறேன்.

• மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த குழந்தையின் போட்டோ சமர்ப்பணம்

மாகாணசபைத் தேர்தல் நடக்கலாம். பாராளுமன்ற தேர்தல் நடக்கலாம். ஏன் ஜனாதிபதி தேர்த்தல் கூட நடக்கலாம். ஓவ்வொரு தேர்தலிலும் இனப்பிரச்சனைக்கு தீர்வு தருவதாக வாக்குறுதிகள் தரலாம்.

கலைஞர் அறிக்கை விடுவார். ஜெயா அம்மையார் கடிதம் எழுதுவார். மலையாளி தூதுவர் டில்லியில் இருந்து வந்து ராஜபக்சவுடன் விருந்துண்ணி செல்வார். உடனே “இந்தியா மிரட்டியுள்ளது” என்று அறிக்கைவிட்டு சம்பந்தன் மகிழ்வார்.

பூமி சுழருகிறதோ இல்லையோ ஆனால் பல வருடங்களாக இந்த சுழற்சியே இலங்கை தமிழர்களுக்கு நடந்து வருகிறது. எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை.

இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள். இந்த குழந்தை செய்த பாவம் என்ன? இதன் தாய் தமிழ் மொழி பேசியதைத் தவிர வேறு என்ன பாவம் செய்தது?

உலகில் இதைவிடக் கொடுமை உண்டா? இந்த கொடுமைக்கு என்னதான் தீர்வு? ஓ நியாயன்மாரே உரத்து கேட்கிறோம,; உங்கள் காது என்ன செவிடா? நாங்கள் கேட்பது ஏன் உங்கள் காதில் விழுவதில்லை? நாங்கள் என்ன கேட்க யாரும் இல்லாப் பரதேசிகளா?

மாகாணசபை வேட்பாளர்களே!

தேர்தலில் போட்டியிட உங்களுக்கு ஆயிரம் நியாயம் இருக்கலாம். ஆனால் இந்த குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு ஒரு நியாயம் கூறுங்கள்!

மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சி தமிழின விரோத கட்சியா?

மார்க்சிய கம்யுனிஸ்ட் கட்சி தமிழின விரோத கட்சியா?

பா.ஜ.க வும் காங்கரசும் இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவை. அவை தமிழின விரோத கட்சிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியையும் அவ்வாறு கூறலாமா?

நான் இவ்வாறு கேட்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் சிலருக்கு எரிச்சலாகவும் இருக்கலாம். ஆனால் தயவு செய்து உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியாவில் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நக்சல்பாரி இயக்கங்களையே புரட்சிகர இயக்கங்களாக கருதுகிறேன். பாராளுமன்ற பாதையை தேர்ந்தெடுத்து புரட்சியைக் காட்டிக்கொடுத்த மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியை ஒரு திரிபுவாதக் கட்சியாகவே பார்க்கிறேன்.

மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் அதன் கொள்கைகளும் புரட்சிக்கு விரோதமான திரிபுவாத்தை முன்வைக்கின்றன. ஆனால் அதில் இருக்கும் லட்சக் கணக்கான உறுப்பினர்கள் பாட்டாளிகள். நாம் வென்றெடுக்கப்பட வேண்டிய தோழர்கள்.

தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்பதற்காக மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி ஒரு தமிழின விரோதக் கட்சி எனக் குறிப்பிடுவதாயின் அது தவறு ஆகும். ஏனெனில் இலங்கையிலே தமிழீழத்தை முன்வைத்த பல தமிழ் கட்சிகளே இன்று தமிழீழத்தை கைவிட்டு விட்டன.

தமிழர்களின் அதிக ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளரான விக்கினேஸ்வரன் அவர்கள் தான் தமிழீழத்தை கைவிட்டுவிட்டதாகவும் ஜக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்விற்கு முயற்சி செய்யப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனை தமிழகத்தில் தமிழீழ விரும்பிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு நியாயமான நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமாயின் அது இந்திய இலங்கை புரட்சிகர சக்திகளின் ஜக்கியமான போராட்டத்தின் மூலமே சாத்தியமாகும் என்று நான் கருதுகிறேன். ஆனால் இன்றைய நிலையில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி ஏன் சர்வதேச ரீதியிலும்கூட புரட்சிகர சக்திகள் மிகவும் பலவீனமான நிலையிலே உள்ளனர்.

எனவே இன்றைய நிலையில் இலங்கை தமிழர்கள் ஒரு சுயாட்சி தீர்வைப் பெறுவதற்கு மாநிலக் கட்சிகளான தி;மு.க வினாலோ அல்லது அ.தி.மு.க வினாலோ எந்த விதத்திலும் உதவ முடியாது. அவர்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி அவர்களால் மத்திய அரசை நிர்பந்திக்க கூடிய பலம் இல்லை என்பதே உண்மை. ஆனால் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி முனைந்தால் இதனை சாதிக்க முடியும்.

மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சி ஒரு அகில இந்திய கட்சி மட்டுமல்ல அவர்களால் மத்திய அரசிலும் ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும். அதுமட்டுமல்ல அவர்களால் இலங்கையிலும் ஜே.வி.பி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் மத்தியிலும்; தமது செல்வாக்கை செலுத்த முடியும். சர்வதேச ரீதியிலும் கியூபா வெனிசுலா மற்றும் வடகொரியா நாடுகளையும் தமக்கு ஆதரவாக திருப்ப முடியும். இன்று உலகில் மிகப்பெரிய கம்யுனிஸ்ட் கட்சிகளில் மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியும் ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நான் மதுரை சிறையில் (1991)அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது மாக்சிய கம்யுனிஸ்ட் கடசியை சேர்ந்த ஆயுள்சிறைவாசி புரட்சி மணி என்பவர் நிறைய உதவி புரிந்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு காவலர் அவரும் மாக்சிய கம்யுனிச கட்சியை சேர்ந்தவர். அவர் எமக்கு ஆதரவாக இருந்ததுடன் பல உதவிகளை இரகசியமாக செய்தவர். அவருடைய ஏற்பாட்டில் மதுரை மாக்சியகட்சி சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் என்னை வந்து பார்வையிட்டார். இலங்கை பிரச்சனை பற்றி அவர்களின் கட்சி நிலைப்பாடு குறித்து நான் முன்வைத்த விமர்சனங்களை எழுத்து வடிவில் பெற்று இப்போதைய தலைவரும் அப்போதைய தத்தவ பொறுப்பாளருமாகிய காரத் அவர்களுக்கு அனுப்பிவைத்தார். சிறையில் தமது கட்சி பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் கிடைக்க வழி செய்தார். துரதிருஸ்டவசமாக சிறையில் இருந்து சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்ட பின்பு அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது.

எனவே மாக்சிய கம்யுனிஸ்ட் கட்சியை தமிழின விரோதியாக கருதுவோர் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை பிரச்சனையில் ஒரு தீர்வு கிடைக்க மாக்சிய கம்யுனிஸட் கட்சியை நிர்ப்பந்திப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும் என கருதுகிறேன். இதன் மூலமே அதில் இருக்கும் தோழர்களை வென்றெடுக்க முடியும்.

மது ஒழிப்பிற்காக போராடிய மாணவர்கள் கைது

• மது ஒழிப்பிற்காக போராடிய மாணவர்கள் கைது.
• மருத்துவமனையிலும் தொடரும் உண்ணாவிரதம்

நந்தினி உட்பட போராடிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை அந்த மாணவர்கள் தொடர்கின்றனர். அகிம்சை வழியில் போராடிய அம் மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்த காவல்துறையையும் அதற்கு உத்தரவு வழங்கிய தமிழக அரசையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

உண்ணாவிரத போராட்டங்கள் தீர்வு தராது என்ற நிலையிலும் அதனை மேற்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலும் இம் மாணவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

ஆயுதம் ஏந்திப் போராடினால் பயங்கரவாதிகள் என்று அரசு முத்திரை குத்தும். அகிம்சை வழியில் போராடினால் கைது செய்து சிறையில் அடைக்கும். இதுதான் மத்திய மாநில அரசுகளின் வாடிக்கை.

ஆயிரக்கணக்கில் அரசியல் கட்சிகள் இருந்தும் மது ஒழிப்பிற்காக மாணவர்கள் வீதியில் இறங்க வேண்டி இருக்கின்றது என்றால் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் பதவிக்காக அலைபவர்களேயொழிய மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்பது நிரூபனமாகிறது.

உண்ணாவிரதம் இருந்தாலோ அல்லது மதுக்கடைகளை முற்றுகையிட்டாலோ இந்த அரசு கவலைப்படாது. ஆனால் இந்த மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் கைவைத்தால் அடுத்த நிமிடமே இந்த அரசுகள் ஓடிவரும். ஏனென்றால் இந்த மது ஆலைகளின் பங்குதாரர்கள் இந்த அரசியல்வாதிகளே.

மதுவை ஒழிக்க விரும்புவோர் கை வைக்க வேண்டிய இடம் மதுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளே.

• லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

• லைக்கா மொபைல் முதலாளி அல்லி ராஜாவுக்கு சமர்ப்பணம்!

லண்டன் மாநகரில் “மானாட மயிலாட”வை வெற்றிகரமாக நடத்தி இலங்கை தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருப்பதாக பெருமைப்படும் முதலாளி அல்லி ராஜாவுக்கு பட்டினியால் வாழ வழியின்றி கிணற்றில் வீசி கொல்லப்பட்ட இந்த குழந்தைகளின் போட்டோவை சமர்ப்பிக்கிறேன். இதைப் பார்த்தாவது அவர் உணர்வு பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தாயகத்தில் போராட்டம் நடந்த போது அதைக் காட்டி புலத்தில் அகதி அந்தஸ்து பெற்ற நம்மவர்கள் இன்று அதே தாயகத்தில் மக்கள் கஸ்டப்படும்போது அதை மறந்து புலத்தில் வீண் ஆடம்பர கேளிக்கைகள் செய்வது அவசியம்தானா எனக் கேட்க தோன்றுகிறது.

வன்னியில் பிறந்த லைக்கா மொபைல் முதலாளி இன்று அதே வன்னியில் பட்டினியால் மக்கள் தற்கொலை செய்யும் போது லண்டனில் “மானாட மயிலாட” நடத்துவது தேவைதானா? வன்னியில் உணவின்றி குழந்தைகள் சாகும்போது அதையிட்டு கவலை கொள்ளாது தனது குழந்தையின் பிறந்தநாளுக்கு பிரதம விருந்தினராக நடிகர் சிம்புவை அழைக்க வேண்டுமா?

வன்னியில் முன்னாள் பெண் பொராளிகள சிலர் உணவுக்காக தமது கற்பையே விற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது குறித்து கவலை கொள்ளாது “மானாட மயிலாட” மேடையில் நடிகைகளின் புகழ்ச்சியைப் பெறுவது தேவைதானா? ஆல்லது அவ்வாறு புகழ்ச்சி பெறுவதில் என்ன பெருமை இருக்கிறது?

லண்டனில் மிகப் பெரிய வெம்பிளி அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கலைஞரின் “மானா மயிலாட” நடந்துள்ளது. இதற்கான அனைத்து செலவையும் ஏற்று உதவியவர் இந்த முதலாளி அல்லிராஜா என்று மேடையேறிய அனைத்து நடிகர் நடிகையரும் நன்றி தெரிவித்தனர். இது குறித்து இலங்கைத் தமிழரான அல்லி ராஜா அவர்கள் பெருமைப்படலாம். ஆனால் அவரது இந்த செயல் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனையும் வெட்கி தலை குனிய வைத்துள்ளது.

கீழே கிணற்றில் பசியால் இறந்துள்ள வன்னி குழந்தைகளை பார்த்தாவது தயவு செய்து உணர்வு பெறுங்கள்.

•EDUTEC

•EDUTEC

லண்டனில் இலாப நோக்கற்ற ஒரு சேவை நிறுவனம்.
தமிழ் மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு

நான் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அடித்தளமிட்டு தந்த நிறுவனம்.
என்னைப்போல் பல தமிழர்கள் பயன் பெற்ற நிறுவனம் என்பது மிகையல்ல.

ஆசிரியர்கள் கணேசலிங்கம, சிவகுமார் போன்றவர்களின் அயராத
உழைப்பினால் உயர்ந்து நிற்கும் உன்னதமான நிறுவனம்.

• தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

• தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி

மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாசிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்னிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.

தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.

ஜே.வி.பி தலைவர் சோமவம்ச அவர்களுக்கு!

ஜே.வி.பி தலைவர் சோமவம்ச அவர்களுக்கு!

தோழர் ராமலிங்கம் சந்திரசேகர் மூலம் ஜே.வி.பி யின் “தேசியப் பிரச்சனை தீர்ப்பதற்கான அணுகுமுறை” அறிக்கை கிடைக்கப் பெற்றேன். ஏனக்கு அந்த அறிக்கை அனுப்பியமைக்கும் மற்றும் தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்டு அறிக்கை வெளியிட்டமைக்கும் என் நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிக்கை பற்றி எனது கருத்தை தெரிவிப்பதற்கு முன்னர் கருத்தை தெரிவிப்பதற்கான எனது தகுதியை பற்றிக் கூறிவிடுவது நல்லது என நம்புகிறேன். நான் இதுவரை தமிழீழ கோரிக்கையை ஆதரித்தவன் அல்ல. ஜக்கிய இலங்கைக்குள் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க விரும்புபவன். ஜே.வி.பியுடன் தொடர்பு வைத்து ஜக்கியத்திற்கு முயன்றதால் 1987 வெலிக்கடை சிறைவாசலில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டு இராணுவத்தால் கொல்லப்பட்ட எனது தோழர்கள் பாஸ்கரன், டிஸ்கோ போன்றவர்கள் பேரால் உங்களிடம் கேட்கிறேன்.

ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சி அல்ல என்பது உண்மைதான். அதனால் ஒரு தமிழனின் நிழலுக்குக் கூட தீங்கு இழைக்கப்படவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் புலிகளை அழிக்க ஜே.வி.பி யுத்தத்திற்கு வழங்கிய ஆதரவு 40 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலைக்கும் காரணமாக இருந்துள்ளது என்பதையும் தமிழ் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு சம உரிமை உள்ளதாக உங்கள் அறிக்கையில் எவ்வளவுதான் சொல்ல முனைந்தாலும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாதவரை அவர்கள் உங்களை நம்பப்போவதுமில்லை. உங்களை எற்றுக்கொள்ளப் போவதுமில்லை.

உங்களுக்கு நான் சொல்வதை விட உங்கள் முன்னாள் தலைவர் தோழர் சண்முகதாசன் கூறிய பின்வரும் வார்த்தைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

“தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடராக ஒரு நிலப்பரப்பில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம் என்ற உண்மையையும் அவர்களுக்கு சுய நிர்ணயத்திற்கான உரிமை உண்டு என்பதையும் ஏற்க மறுக்கின்றமையே இன நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியாமல் இருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்த உரிமை ஏற்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டாலொழிய இன்றைய தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதுவுமே இருக்க முடியாது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர்தான் அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள் ஒரு தனிநாட்டை அமைப்பதற்காக அச் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அதை தமிழ் பேசும் மக்களின் மொழி வழிப் பிரதேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட ஒரு சமஸ்டியாகவோ அல்லது பூரண பிரதேச சுயாட்சியாகவோ பிரயோகிக்கும்படி கேட்டுக் கொள்வதற்கான அருகதையைக் கொண்டிருக்க முடியும்.”

எனவே தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அதன் மூலம் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தைக் கட்டத் தவறினால் அது எதிரிகளான இலங்கை, இந்திய அரசுகளுக்கு செய்யும் உதவியாகவே இருக்கும். எனவே வரலாறு ஜே.வி.பியை ஒரு எதிர் புரட்சிகர சக்தியாகவே இனங் கண்டு கொள்ளும்.

• தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!