Saturday, August 10, 2013

• 1982ல் நீதிமன்றில் குட்டிமணி கூறிய வார்த்தைகள்,

• 1982ல் நீதிமன்றில் குட்டிமணி கூறிய வார்த்தைகள்,

"நாங்கள் இனவாதிகள் அல்லர். நாம் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் நமது போராட்டத்தில் சிங்கள மக்களை அன்புடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நியாயமான போராட்டங்களின்போது நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம். அவ்வாறே நமது விடுதலைப் போராட்டத்துக்குச் சிங்கள மக்கள் ஆதரவு தரவேண்டும். அடுத்தவரின் சுதந்திரம் தொடர்பில் அக்கறையற்ற மனிதன் தனது சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்றான். நமக்கு ஏற்பட்ட அதே நிலை, வேறொரு நாளில் முழு இலங்கை மக்களுக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிரவு வதைமுகாம் ஹம்பந்தொட்டைக்குக் கொண்டுசெல்லப் படலாம். குருநகர் வதைமுகாம், குருணாகலைக்கு எடுத்துச் செல்லப் படலாம். இன்று அவற்றில் சித்திரவதைகளை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன்று சிங்கள இளைஞர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிவரலாம்"

(குட்டிமணி - 1982 நீதிமன்றத்தில்)


மேற்கண்ட வார்த்தைகளை கூறியதற்காகவே குட்டிமணி கொல்லப்பட்டு அவர் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு புத்தரின் காலடியில் வீசப்பட்டது. ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் 1989ல் பலித்தது . ஆம் , அம்பாந்தோட்டை, குருநாகல் மட்டுமல்ல பல சிங்களப் பகுதிகளில் இலங்கை இராணுவ முகாம் நிறுவப்பட்டது. அதில் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். சுமார் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் 40ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது உலகம் எப்படி கண்மூடி மௌனமாக இருந்ததோ அதே போன்று 60ஆயிரம் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போதும் உலகம் ஏன் என்று கேட்கவில்லை. கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. கொல்லப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.

1972ல் 2 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்டு ஜே.வி.பி கிளர்ச்சி அடக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 1989ல் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இந்திய அரசின் உதவியுடனே அழிக்கப்பட்டனர். அதன் பின்னர் 2009ல் 40 ஆயிரம் தமிழர்களும் இந்திய அரசின் உதவியுடனே கொல்லப்பட்டனர். இலங்கை கொலைகார அரசுகள் கொல்லுவதற்கு உதவி செய்வதுடன் அவை சர்வதேசத்தில் எந்த நெருக்கடிக்கும் முகம் கொடுக்காமல் காப்பாற்றி வருவதும் இந்திய அரசே.

தமிழ் சிங்கள மக்களின் எந்த ஒரு போராட்டத்தையும் நசுக்க உதவி வரும் இந்திய அரசு ஒரு எதிரி என்பதை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இனங்கண்டு கொள்ளாதவரை வெற்றி பெறப் போவதில்லை. இந்திய விரிவாதிக்கத்திற்கு சாவு மணி அடிப்பது என்பது ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அப்பாவி சிங்கள மக்களை கொன்றால்தான் ஆயுதம் தருவோம் என்று கூறியதோடு அவ்வாறு சிங்கள மக்களைக் கொன்ற இயக்கங்களுக்கு ஆயுதம் வழங்கியது இந்திய உளவு துறை. சிங்கள மக்கள் சகோதரர்கள் என்றும் அவர்கள் அல்ல இலங்கை அரசே தமது எதிரி என்று கூறிய இயக்கங்கள் இந்திய உளவு நிறுவனத்தின் வற்புறுத்தலுக்கு இணங்க சிங்கள மக்களைக் கொன்றது வேதனையான விடயமே. ஆனால் பின்னாளில் இவ் சம்பவங்களைக் காட்டியே இப் போராளி இயக்கங்களை “பயங்கரவாத இயக்கங்கள்” என இந்திய அரசு முத்திரை குத்தியது. அப்போதுதான் இந்திய அரசின் நயவஞ்சக சூழ்ச்சியை போராளிகள் உணர்ந்து கொண்டனர்.

இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment