Friday, September 27, 2019

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?

•இவர்கள் ஏன் நடக்கிறார்கள்?
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொலிடேக்கு நல்லூர் திருவிழாவுக்கு சென்று வந்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடுமபத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது
இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவா செல்கிறார்கள்.
உண்மையில் ஜ.நா வில் கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ ஜெனிவா சென்றிருக்கலாம்.
ஆனால் இவர்களோ பிரான்சில் இருந்து நடந்து ஜெனிவா செல்கிறார்கள். இன்று 5வது நாளாக நடந்து கொண்டிருக்கிறார்கள்.
வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் செல்கிறார்கள். இதன் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகிறார்கள்.
மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து செயற்படுகிறார்கள்.
சரியான பாதையில்தாhன் நடக்கிறார்கள். எனவே அவர்கள் தமக்குரிய இலக்கை மக்கள் ஆதரவுடன் அடைவார்கள்.

காஸ்மீரில் இயல்பு வாழ்க்கை நடக்கிறது

காஸ்மீரில் இயல்பு வாழ்க்கை நடக்கிறது
காஸ்மீரில் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்
என்று இந்திய அரசு தினமும் சொல்கிறது
ஆனால் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்ட
இக் காஸ்மீர் சிறுமியின் படம்
உண்மை என்ன என்பதை நன்கு உணர்த்துகிறது.
இந்த வலி எந்தளவு கொடுமையானது என்பதை அறிவோம்
ஏனெனில் இதை நாமும் அனுபவித்திருக்கிறோம் அல்லவா!

இந்த அகதிச் சிறுமிக்கு இந்திய அரசு இரக்கம் காட்டுமா?

இந்த அகதிச் சிறுமிக்கு
இந்திய அரசு இரக்கம் காட்டுமா?
இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.
இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.
இவர் ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வருகின்றார். அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதையடுத்து அக்டோபர் 21ம் திகதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
அதில் பங்குபற்றினால் நிச்சயம் பதக்கம் பெற்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்ப்பார்.
ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர் அமெரிக்கா செல்வதற்கான இந்திய அரசின் அனுமதியும் கடவுச் சீட்டும் பெற முடியாமல் உள்ளது.
இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.
இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.
இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாக இருந்தால் உடனடியாக குடியுரிமை வழங்கி தமது நாட்டுக்கு பதக்கம் பெறுவார்கள்.
ஆனால் இந்த சிறுமி அகதியாக அதுவும் தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இந்திய அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. தமிழ்நாடு அரசும்கூட அக்கறைகாட்ட மறுக்கிறது.
இச் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வழக்கு போட்டு நீதி பெறவோ எந்த வசதியும் அற்ற ஒரு குடும்பம் ஆகும்.
யாராவது மனிதாபிமானம் உள்ளவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தால் மட்டுமே ஏதும் நடக்கக் கூடும்.
இல்லையேல் ஒரு சிறுமியின் கனவு அகதி என்பதற்காக கருகி விடும் நிலையே இருக்கிறது.
தமிழ்நாட்டில் உணர்வுள்ள தமிழர்கள் யாராவது இச் சிறுமிக்கு இரக்கம் காட்டுவார்களா?

ஈழத் தமிழர்கள் ஏன் தோழர் தமிழரசரன நினைவு கூரவேண்டும்?

•ஈழத் தமிழர்கள்
ஏன் தோழர் தமிழரசரன நினைவு கூரவேண்டும்?
செப்-1, இன்று தோழர் தமிழரசனின் 32 வது நினைவு தினம் ஆகும்.
•அவர் தமிழ் தேசியத்தை முன்வைத்தார்
•அவர் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பினார்.
•அவர் அதற்காக தமிழ்நாடு விடுதலைப்படையை கட்டினார்.
•அவர் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
•அவர் மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனைகளை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார்.
அதனால்தான் தமிழகம் எங்கும் அவர் மக்களால் இன்று நினைவு கூரப்படுகிறார்.
தமிழக மக்கள் நினைவு கூர்வது சரி. ஆனால் ஈழத் தமிழர்கள் ஏன் அவரை நினைவு கூரவேண்டும்?
முதலாவது, அவர் ஒருவர் மட்டுமே இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி மருதையாற்று பாலத்திற்கு குண்டு வைத்தார்.
இரண்டாவது, இந்திய அரசு ஈழத் தமிழருக்கு நண்பன் இல்லை. அது ஒரு எதிரி என்று அவர் உறுதியாக கூறினார்.
மூன்றாவது, தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் என்று கூறியது மட்டுமன்றி அதற்காக தானே முன்வந்தார்.
நான்காவது, ஈழப் போராளிகள் தமிழக தலைவர்களை நம்புவது தவறு. அவர்கள் தமிழக மக்களை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜந்தாவது, தமிழக மக்களும் அடிமையாக இருக்கிறார்கள். அவர்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும் என்றார்.
இவ்வாறு தோழர் தமிழரசன் தவிர வேறு யாரும் கூறியது கிடையாது. எனவேதான் ஈழத் தமிழருக்கு உறுதியாக ஆதரவு தந்த அவரை ஈழத் தமிழர் நினைவு கூர வேண்டும் என்கிறோம்.
ஆனால் இந்திய அரசின் விசுவாசியான சிலர் அவரை கொலைகாரன் என்கிறார்கள்.
இங்கு வருத்தத்திற்குரிய விடயம் என்னவெனில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக அவர் குண்டு வைத்ததால்தான் அவர் மீது இக் கொலைகாரன் என்ற பட்டம் சூட்டப்பட்டது.
இதுகூடத் தெரியாமல் நன்றி கெட்டத்தனமாக சிலர் விமர்சிப்பது வேதனையாக இருக்கிறது.
ஆனாலும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் வருகையை தடுக்க முடியாது என்பதுபோல் எத்தனை அவதூறுகள் செய்தாலும் தோழர் தமிழரசன் புகழ் மங்கிவிடாது.

• மக்களிடம் செல்வது பயன் அற்றதா?

• மக்களிடம் செல்வது பயன் அற்றதா?
ஜெனிவாவில் கோஷம் போடுவதால் தீர்வு வந்துவிடுமா? அல்லது ஜெனிவாவுக்கு நடந்து செல்வதால் என்ன பயன்? என்று சிலர் கேட்கின்றனர்.
உண்மைதான். தீர்வு வந்துவிடப் போவதில்லைதான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது.
வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது.
ஆனால்,
அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ,
ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ
2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் அதரவு உதவியாக இருந்ததோ
அதேபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய தீர்வுபெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம்.
அதைத்தான் ஜெனிவாவில் ஒன்றுகூடும் எமது மக்கள் செய்கிறார்கள். இனியும் செய்வார்கள்.
பிரான்சில் இருந்து நடை பயணம், லண்டனில் பிரதமர் மாளிகை முன்; ஆர்ப்பாட்டம் மற்றும் கனடாவில் கவனயீர்ப்பு பேரணி என உலகெங்கும் மக்களை சந்திக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள்.
அதனால்தான் இலங்கை அரசு அச்சம் கொள்கிறது. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அது முயற்சி செய்கிறது.
தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டம் தானாக மங்கிவிடும் என இலங்கை ஆட்சியாளர்கள் நினைத்தார்கள்.
ஆனால் தமிழர்கள் தாமாகவே இந்தளவு விரைவாக திருப்பி எழும்புவார்கள் என அவர்கள் நினைத்திருக்கவில்லை.
தமிழன் திருப்பி எழும்புவது ஆச்சரியம் இல்லை. அவன் எழும்பாவிட்டால்தான் ஆச்சரியம். ஏனெனில் அவன் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரன் அல்லவா!
குறிப்பு – கீழே உள்ள படம் கடந்த வாரம் காணமல்போன உறவுகளுக்காக லண்டனில் தமிழர்கள் ஒன்று கூடியபோது எடுக்கப்பட்டது.

•யார் இவர்? இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்?

•யார் இவர்?
இவரை நாம் ஏன் நினைவு கூர வேண்டும்?
இவர் வியட்நாம் தந்தை என அழைக்கப்படும் ஹோ சிமின். இன்று அவரின் நினைவு தினம் ஆகும். (02.09.1969)
பிரான்ஸ் அமெரிக்க வல்லரசுகளுக்கு எதிராக 20 வருடங்களுக்கு மேலாக போராடி வியட்நாமை விடுதலை பெற வைத்தவர்.
சரி. இவரை தமிழர்கள் ஏன் நினைவு கூர வேண்டும்?
(1) எந்தப் பெரிய வல்லரசாக இருந்தாலும் ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாது என்ற உண்மையை உலகிற்கு காட்டியவர் இவர்.
(2) தேர்தல் பாதை மூலம் வியட்நாமை விடுவிக்க முடியும் என இவர் மக்களை ஏமாற்றவில்லை. மாறாக மக்களை திரட்டி ஆயுதப் போராட்ட பாதை மூலமே வெற்றி பெற்றார்.
(3) மிக முக்கியமாக வெற்றி பெற்ற பின்பு இவரிடம் உங்களின் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காமல் மக்களிடம் கூறினேன். மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார்.
இந்தியா என்ற பெரிய நாட்டை ஈழத் தமிழர்கள் எதிர்க்க முடியாது என்பவர்கள்,
தேர்தல் பாதை மூலம் தமிழருக்கு தீர்வு பெற முடியும் என்பவர்கள்
அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு பொய் அறிக்கை விடுபவர்கள்
படிக்க வேண்டிய வரலாறு ஹோ சிமின் வரலாறு ஆகும்.

செய்தி – 72 வயதாகிறது. திகார் சிறையில் அடைத்து விடாதீர்கள் - சிதம்பரம் கெஞ்சல்.

செய்தி – 72 வயதாகிறது. திகார் சிறையில் அடைத்து விடாதீர்கள் - சிதம்பரம் கெஞ்சல்.
தான் பணத்தை மட்டுமல்ல தன் உடலையும் பல தடவை சிதம்பரத்திற்கு லஞ்சமாக வழங்கினேன் என்று பெண் ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆனால் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் சிதம்பரம் தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சியுள்ளார்.
தன்னை சிறையில் அடைக்க வேண்டாம் என்பதற்கு காரணமாக தனக்கு 72 வயதாகிறது என்று கூறியுள்ளார்.
ஆனால் இதே சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது சாய்பாபா என்ற மனிதவுரிமைவாதியை சிறையில் அடைத்திருந்தார்.
சாய்பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்தபோதும் அவரை விடுதலை செய்யாது பல பொய் வழக்ககளை போட்டு சிறையில் அடைத்து வைத்தவர் இந்த சிதம்பரம்.
இத்தனைக்கும் சாய்பாபா டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் மட்டுமல்ல அவர் ஒரு உடல் ஊனமுற்றவர்.
மற்றவர்களின் உதவியின்றி நடமாட முடியாத சாய்பாபாவை இரக்கமின்றி சிறையில் அடைத்த சிதம்பரம் இன்று தனக்கு இருக்கம் காட்டுமாறு கோருகிறார்.
சரி. இதைப் படிக்கும் சிலர் சாய்பாபா ஒரு நக்சலைட் ஆதரவாளர். எனவே அவரை அடைத்தது சரி என்று நினைக்க கூடும்.
அப்படி நினைப்பவர்களுக்கு இன்னொருவரின் கதையை கூறுகிறேன். அந்த இன்னொருவர் வைகோ. அவரும் சிதம்பரம் போன்று வயதான அரசியல்வாதிதான்.
அண்மையில் அவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தபோது தனக்கு வயதாகிறது என்று அவர் கெஞ்சவில்லை.
மாறாக, தான் குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு ஒருபோதும் கோரவில்லை. எனவே தனக்கு அதிக பட்ச தண்டனையை வழங்குமாறு கோரினார்.
உண்மைதான். வைகோ மீது யார் எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் அவரது சிறைவாழ்க்கை குறித்து எவருமே விமர்சிக்க முடியாது.
பொதுவாக அரசியல்வாதிகள் சிறைக்கு வந்தால் அவர்களுக்கு தனி அறை வழங்கப்படும். அல்லது சிறை மருத்தவமனையிலாவது வைக்கப்படுவார்கள்.
ஆனால் வைகோ எப்போது சிறைவைக்கப்பட்டாலும் சிறையில் உள்ள மற்ற சிறைவாசிகளுடனே தங்குவார்.
சிறைவாசிகளுக்க வழங்கப்படும் உணவையே மற்ற சிறைவாசிகளுடன் சேர்ந்து உண்ணுவார்.
தன்னைப் பார்வையிட வருவோர் தரும் பழம் பிஸ்கட்டுகளைக்கூட சிறையில் உள்ளவர்களிடம் கொடுத்துவிடுவார்.
சிறைவாசிகளுடன் சேர்ந்து கைப்பந்தாட்டம்கூட விளையாடுவார். அதுமட்டுமல்ல சிறைவாசிகள் சினிமாப்படம் பார்ப்பதற்கும் வழி சமைப்பார்.
இதனால் வைகோ சிறைக்கு கொண்டு வரப்படுகின்றார் என்றால் சிறையில் இருக்கும் அத்தனை சிறைவாசிகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.
நான் மதுரை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது அங்கிருந்த சிறைவாசிகளே இதனை என்னிடம் கூறினார்கள்.

•பிள்ளையார் ஊர்வலம்

•பிள்ளையார் ஊர்வலம்
முதலில் பம்பாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார்கள்
இனி இதனை யாழ் இந்திய தூதர் யாழ்ப்பாணத்திற்கும் விரைவில் கொண்டு வந்துவிடுவார்.
ஏன் இது? என்று கேட்டால் நம்ம முருகன் சுவாமியின்; அண்ணன்தானே பிள்ளையார். அவருக்கு ஊர்வலம் வைப்பது தவறில்லையே என்கிறார்கள்.
சரி அப்ப தம்பி முருகனின் சூரன்போர் ஏன் பம்பாயில் நடத்துவதில்லை என்று கேட்டால்
அது வந்து ....... .... இழுக்கிறார்கள். பதில் சொல்வதில்லை.
ஏன் உங்கள் வட இந்திய கோயில்களில் முருகன் சுவாமி இல்லை?

மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும்

•மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும்
என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அடுத்த சந்ததியினர்!
புலத்தில் இருக்கும் வயதான நாலுபேர்தான் கத்திக் கொண்டிருக்கிறார்கள்
அடுத்த சந்ததியினர் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள்
இவ்வாறு சொல்பவர்களுக்கு தகுந்த பதிலை அடுத்த சந்தியினரான இளையவர்கள் கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதில் ஆச்சரியம் இல்லை. எனெனில் என்னதான் வசதியான வாழ்வு கிடைத்தாலும் தங்களின் வேர்கள் குறித்த தேடல்களை நடத்த வேண்டிய தேவை இந்த இளையவர்களுக்கு ஏற்படுகிறது.
தமது வேர்களை தேடி அறியும் இந்த இளையவர்கள் தமக்கான அங்கீகாரத்திற்காக குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
அதனால் அவர்கள் உலகத்திடம் உலகத்திற்கு புரியும் மொழியில் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
இது மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இந்திய அரசுக்கு எதிராக

•இந்திய அரசுக்கு எதிராக
லண்டனில் நடைபெறும் காஷ்மீர் மக்களின் போராட்டங்கள்!
காஷ்மீர் அமைதியாக இருக்கிறது. காஷ்மீர் மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று ஒருபறம் இந்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் மறுபுறத்தில் இந்திய அரசுக்கு எதிரான காஷ்மீர் மக்களின் உலகளாவிய போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
காஷ்மீர் மக்களுடன் காலிஸ்தான் கோரும் சீக்கிய மக்களும் ஒன்றிணைந்து போராடுகிறார்கள்.
அவர்களுடைய இப் போராட்டத்திற்கு பல்வேறு இன மக்களும் தமது ஆதரவை வழங்க ஆரம்பித்துள்ளனர்.
இப் போராட்டங்கள் இந்திய அரசுக்கு எதிராக போராட முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு தருகிறது.

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

•ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
இந்தியாவில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுகிறார்கள். இலங்கையில் அடுத்த மாதம் (05.10.19) கொண்டாடப்படும்; என நினைக்கிறேன். ஆனால் எமது ஆசிரியர்களை ஒவ்வொருநாளும் நாம் கொண்டாட முடியும்.
மாதா பிதா குரு தெய்வம் என்று
பெற்றவர்களுக்கு அடுத்து
கடவுளுக்கும் மேலாக
ஆசிரியர்களை மதிப்பதும்
எம் தமிழ் இனம் மட்டுமே!
பொதுவாக ஆசிரியர்கள்
பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்
ஆனால் ஈழத்தில் ஆசிரியர்கள்
பாதுகாப்பும் கொடுப்பார்கள்.
தன் உயிர் போனாலும் பரவாயில்லை
தம் மாணவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்
என்று நினைக்கும் அசிரியர்களைப் பெற்றதால்தான்
எம் தமிழ் இனம் மீண்டும் கல்வியில் தலைநிமிர்கிறது.
பாடசாலை பகிஸ்கரிப்பு செய்து
பருத்தித்துறை பொலிசில் பிடிபட்டபோது
ஓடி வந்து எம்மை மீட்ட
காட்லிகல்லூரி அதிபரை மறக்க முடியுமா?
பாடசாலையில் இருந்து அப்படியே
இயக்கத்திற்கு சென்றுவிட்ட மாணவர்களின்
சயிக்கிளை எடுத்துச் சென்று வீடுகளில்
ஒப்படைத்ததோடு, பெற்றோருக்கு ஆறுதலும் கூறிய
அந்த ஆசிரியர்களையும் மறக்க முடியுமா?
தமிழ் ஆசிரியர்களின் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால்
தமிழ் மக்களின் போராட்டம் இந்தளவு வளர்ந்திருக்குமா?

•ரஸ்சியாவுக்கு கப்பல் விடும் மோடி அரசு தலைமன்னாருக்கு கப்பல் விட தயங்குவது ஏன்?

•ரஸ்சியாவுக்கு கப்பல் விடும் மோடி அரசு
தலைமன்னாருக்கு கப்பல் விட தயங்குவது ஏன்?
ரஸ்சியாவுக்கு விஜயம் சென்றிருக்கும் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவுக்கும் ரஸ்சியாவுக்கும் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேவேளை ஈழத் தமிழர் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் மற்றும் விமான சேவை ஆரம்பிக்கப்படும் என்று 2015ல் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதை நினைவூட்ட விரும்புகிறோம்.
அதன்படி அடுத்த மாதம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் அரம்பிக்கப்படவுள்ளன.
ஆனால் இந்த விமான சேவைகள் தமிழ்நாட்டின் எந்த விமான நிலையங்களுக்கும் இல்லை. மாறாக பெங்களு+ர் ஜதராபாத் போன்ற இடங்களுக்கே உண்டு.
ஆக இந்த சேவைகள் ஈழத்தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்படவில்லை. தமிழக தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்படவில்லை என்று புரிகிறது.
சரி. பரவாயில்லை. அதேவேளை தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்க இந்திய அரசு ஏன் தயங்குகிறது?
இரண்டு துறைமுகங்களும் தயாராக இருக்கின்றன. தேவையான கப்பலும் தயாராக இருக்கிறது. இந்த சேவையை நடத்த நிறுவனமும் தயாராக இருக்கிறது. ஆனால் இந்திய அரசின் “அனுமதி” என்ற ஒற்றைச் சொல்லுக்காகவே யாவும் காத்துக் கிடக்கின்றது.
இந்த கப்பல் சேவை நடக்குமாயின்
(1) ஈழஅகதிகள் இலகுவாக தாயகம் திரும்ப முடியும்
(2) அகதிகள் அதிகளவு பொருட்களை தம்முடன் எடுத்து வரமுடியும்.
(3) சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்ல முடியும்.
(4) இதனால் தலைமன்னார் ராமேஸ்வரத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.
(5) தமிழகத்து நூல்கள் மற்றும் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
(6) வெறும் இரண்டு மணி நேர பயணம் மட்டுமே இது. மிகவும் மலிவான பயணமும் கூட.
யுத்தம் நடந்த காலத்தில் இலங்கை அரசு இந்த சேவையை நிறுத்தி வைத்தது. ஆனால் இப்போது இலங்கை அரசு அனுமதி வழங்கிவிட்டது.
ஆனால் ஈழத் தமிழருக்கு உதவுவேன் என்று கூறும் இந்திய அரசு அனுமதி வழங்க தயங்குகிறது.
இந்திய அரசிடம் இதைக் கேட்க வேண்டிய எமது தலைவர்களோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்.
என்ன செய்வது?
குறிப்பு – கீழே சம்பந்தர் ஐயாவின் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் 3 படங்கள் தந்துள்ளேன். இதில் உங்களுக்கு பிடித்த உறக்கம் எது ? ஏன்? என்று கூறுங்கள் நண்பர்களே! ( இது ஒரு ரிலாக்ஸ் விளையாட்டு)