Friday, September 27, 2019

•தமக்கு ஆதரவளிப்போரின் பல்லைப்பிடிங்கிப் பார்க்கும்

•தமக்கு ஆதரவளிப்போரின் பல்லைப்பிடிங்கிப் பார்க்கும்
முட்டாள்தனமான இனமாக ஈழத் தமிழர் இருக்க முடியாது!
பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என்பது பிரச்சனை இல்லை. மாறாக அது எலி பிடிக்கிறதா என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம்.
அதேபோல் ஈழத் தமிழராகிய எமக்கு யார் ஆதரவளிக்கிறார்கள் என்பதல்ல, மாறாக அவர்கள் உண்மையாகவே ஆதரவளிக்கிறார்களா என்பதே கவனிக்க வேண்டிய விடயம்.
ஏனெனில் நாம் மூழ்கிக் கொண்டிருக்கும் இனமாக இருக்கிறோம். நாம் பிடித்துக் கரைசேர ஏதாவது தடி கம்பு கண்ணில் படாதா என தேடுகிறோம்.
இந்த நிலையில் சீமான், திருமுருகன்காந்தி, வேல்முருகன், ராமதாஸ், வைகோ போன்றவர்கள் தாங்களாகவே முன்வந்து எம்மை ஆதரிக்கின்றார்கள்.
அவர்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி எம்மை ஆதரிக்கிறார்கள். ஆனாலும் எம்மில் சிலர் இவர்களுக்கு எதிராக கருத்துகள் பகிருகின்றனர்.
உலகில் யாருமே எம்மை ஆதரிக்க முன்வராத நிலையில் ஆதரவு தெரிவிக்கும் இந்த ஒரு சிலரையும் பல்லைப் பிடுங்கி பார்க்கும் முட்டாள் இனமாக நாம் இருக்கிறோம்.
பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் அரபாத் அவர்கள் இந்தியாவின் ஆதரவை பெற்றுக் கொண்டார். அவர் இந்தியாவில் தேசிய இனங்களை அடக்கும் இந்திய அரசின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்று கூறவில்லை.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டலோ நிறவெறிக்கு எதிராக போராடிய போது உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றார். அதனால்தான் அவரால் நிறவெறியில் இருந்து தென்னாபிரிக்காவை விடுதலை செய்ய முடிந்தது.
ஆனால் ஈழத் தமிழராகிய நாம் எமக்கான ஆதரவைப் பெருக்குவதற்கு மாறாக இருக்கும் ஆதரவையும் பல்லைப் பிடுங்கிப் பார்த்து துரத்தும் முட்டாள்களாக இருக்கிறோம்.
நாம் உண்மையில் விடுதலை பெற வேண்டுமாயில் முதலில் எம் மத்தியில் இருக்கும் இந்த முட்டாள்தனத்தை நீக்க வேண்டும்.
குறிப்பு – நாம் கூறும் விடயங்கள் எல்லா நேரமும் முன்னால் இருப்பவருக்கு புரியும் என்று இல்லை. ஏனெனில் சில வேளைகளில் எம் முன்னால் இருப்பது எருமை மாடாகவும் இருக்கலாம்.
அண்மையில் லண்டனில் இருக்கும் ஒருவர் நான் சீமானை எதிர்பதில்லை என்று குற்றம்சாட்டினார். சீமானைவிட அதிக ஆதரவை அவர் பெற்றுத் தந்தால் நாம் வேண்டாம் என்றா கூறிவிடப் போகிறோம்?
ஆனால் இது அவருக்கு புரியவில்லை. அதற்காக அவரை எருமை மாடு என்று நான் குறிப்பிடுவதாக யாரும் கருத வேண்டாம்.

No comments:

Post a Comment