Friday, September 27, 2019

•திமுக தலைமையை ஏன் ஈழத் தமிழர்களால் விரும்ப முடியவில்லை?

•திமுக தலைமையை
ஏன் ஈழத் தமிழர்களால் விரும்ப முடியவில்லை?
முள்ளிவாய்க்கால் அழிவை கலைஞர் தடுக்கவில்லை. அதனால்தான் ஈழத் தமிழர்கள் கலைஞரை வெறுக்கிறார்கள் என சிலர் நினைக்கிறார்கள்.
அது தவறு. கலைஞர் விரும்பியிருந்தாலும் முள்ளிவாய்க்கால் அழிவை தடுக்கும் அதிகாரம் அவரிடம் இல்லை என்பது ஈழத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
உண்மையில் ஆரம்பத்தில் ஈழத் தமிழர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒரு தமிழக தலைவர் கலைஞர் கருணாநிதி மட்டுமே.
ஏனெனில் 1956ம் ஆண்டு முதல் ஈழத்தில் தமிழன் தாக்கப்படும்போதெல்லாம் தமிழகத்தில் இருந்து வரும் முதல் குரல் கலைஞரது குரலே.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கும்போதெல்லாம் கலைஞர் வானொலியில் உரையாற்றும்போது இறுதியாக “ ஈழத் தமிழருக்காக திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்” என்று ஒரு வரி கூறுவார்.
அந்த ஒரு வரியை கேட்பதற்காக ஈழத் தமிழர்களாகிய நாம் ரேடியோ பெட்டிக்கு அருகில் காத்துக் கொண்டிருந்த காலமும் ஒன்று இருந்தது.
அதனால்தான் முள்ளிவாய்க்கால் அவலம் நடக்கும்போதும் கலைஞர் ஏதாவது அற்புதம் நிகழ்த்துவார் என்று ஈழத் தமிழர்கள் உரிமையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இதேபோல் ஒரு நிலை பங்களாதேஸ் பிரச்சனையின் போது மேற்கு வங்க முதல்வருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்க முதல்வருக்கும் அயல் நாட்டுப் பிரச்சனையில் தலையிட அதிகாரம் இல்லைத்தான்.
அவர் காங்கிரஸ் கட்சி முதல்வர்தான். ஆனாலும் தனது கட்சிப் பிரதமரான இந்திரா காந்தியிடம் தைரியமாக கூறினார் “ இந்திய ராணுவத்தை நீங்கள் அனுப்பாவிட்டால் எனது பொலிசை நான் பங்களாதேசுக்குள் அனுப்புவேன்” என்றார்.
அவர் இவ்வாறு மிரட்டியதால்தான் இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பினார் என்று நான் இங்கு கூற வரவில்லை. மாறாக ஒரே கட்சியாக இருந்தாலும் அவர் தைரியமாக தனது மக்களுக்காக மத்திய அரசை எதிர்த்தார் என்பதையே சுட்டி காட்டுகிறேன்.
அதேபோல் கலைஞரும் மத்திய அரசை எதிர்ப்பார் என்று தமிழ் மக்கள் நம்பியவேளை அவரோ தனக் வாரிசுகளுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதிலேயே அக்கறை காட்டினார்.
அதுமட்டுமல்ல சோனியா அம்மையாரின் விருப்பத்திற்கு ஏற்ப ஈழத் தமிழருக்காக தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியையும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி அடக்கினார்.
கலைஞரின் குடும்பத்தில் ஈழத் தமிழருடன் அதிக தொடர்புகளை பேணி வருபவர் அவரது மகள் கனிமொழியே. புலிகளின் அரசியல் பிரிவினர் இவர் மூலமாகவே இந்திய அரசுடன் தொடர்பு கொண்டு முள்ளிவாய்க்காலில் சரணடைந்தனர்.
இவருடைய ஏற்பாட்டில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டனர். அக் கொலைகள் தொடர்பாக கனிமொழி இதுவரை ஒரு வார்த்தைகூட தெரிவிக்கவில்லை.
யுத்தம் முடிந்ததும் கனிமொழி இலங்கைக்கு வந்தார். தன்னை நம்பி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை ஏன் கொன்றீர்கள் என்று அவர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்கவில்லை. மாறாக அவரது ரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கி பரிசுகள் பெற்றுச் சென்றார்.
2009ல் வந்து சென்றவர். இப்போது மீண்டும் 2019ல் கொழும்பு வந்துள்ளார். இம்முறை வந்தது அரசியல் பயணம் இல்லை. தனிப்பட்ட பயணம் என்கிறார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள வந்ததாக கூறுகின்றார். திருமண நிகழ்வில் ஜனாதிபதி , பிரதமர் அமைச்சர்களுடனும் உரையாடியிருக்கிறார்.
காணாமல் போனவர்களின் உறவுகள் இரண்டு வருடமாக வீதியில் உட்கார்ந்து போராடுகிறார்கள். அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றாவிட்டாலும் குறைந்த பட்சம் அவர்களுக்காக ஒரு வார்த்தையாவது பிரதமரிடம் பேச வேண்டும் என்றுகூட கனிமொழிக்கு தோன்றவில்லை.
பரவாயில்லை. ஈழத் தமிழருக்காக பேசினால் இலங்கையில் செய்திருக்கும் தமது வியாபார முதலீடுகளுக்கு பாதிப்பு வரும் என கனிமொழி நினைக்க கூடும்.
கனிமொழி, பாலு, கார்த்தி சிதம்பரம் போன்றவர்கள் கொழும்பில் செய்திருக்கும் பல கோடி ரூபா முதலீடுகளுக்கும் இலங்கை அரசுக்கான அவர்களது ஆதரவிற்கும் இருக்கும் தொடர்பு தமிழக தமிழர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஈழத் தமிழர்கள் நன்கு அறிவார்கள்.
கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் விடுவிக்கும்படி கனிமொழி கோரியதாக செய்திகள் கூறுகின்றன. நல்ல விடயம். கூடவே ஈழத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படி கேட்டிருக்கலாம். ஏனோ அவ்வாறு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை?
ஆனால் கனிமொழி ஒரு விடயத்தை கட்டாயம் கேட்க வேண்டும். அவரது தந்தை கலைஞரால் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் பல ஈழத் தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களையாவது விடுதலை செய்யும்படி அவர் இந்திய அரசிடம் கோர வேண்டும். கோருவாரா?

No comments:

Post a Comment