Friday, September 27, 2019

இந்திய பிரதமர் மோடியும் ஈழத் தமிழர் பிரச்சனையும்

இந்திய பிரதமர் மோடியும் ஈழத் தமிழர் பிரச்சனையும்
- தோழர் பாலன்

“அவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது
அவர்கள் கையில் பைபிள் இருந்தது
எமது கையில் எம் நாடு இருந்தது
இப்போது எமது கையில் பைபிள் இருக்கிறது
அவர்கள் கையில் எமது நாடு இருக்கிறது” என்றான் ஒரு ஆப்பிரிக்க கவிஞன். அதுபோல் இப்போது இந்திய பிரதமர் மோடி அவர்கள் தனது கையில் இந்துமதத்தை கொண்டுவந்து இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை செய்ய முயல்கிறார்.

இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்பது நேரு பிரதமராக இருந்த காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அதன்பின்னர் ராஜீவ்காந்தி இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் ஆக்கிரமிப்பை செய்தார். இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு என்பது தொடர்ந்;து கொண்டேதான் இருக்கிறது.

அதேபோல் யார் பிரதமராக வந்தாலும் டில்லிக்கு காவடி தூக்குவதையே தமது வாடிக்கையாக ஈழத் தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன. மோடி பிரதமராக வந்த பின்பு டீல்லிக்கு காவடி தூக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பாக அதன் தலைவர் சம்பந்தன் அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை டில்லிக்கு காவடி தூக்கியே கழித்துள்ளார்.
அவர் இந்திய அரசுக்கு  பூரண விசுவாசியாக இருந்துள்ளாரே யொழிய
தனக்கு ஓட்டு போட்ட தமிழ் மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.
இன்று யாழ் குடாநாட்டில் என்றுமில்லாதவாறு வறட்சி. குடாநாட்டு மக்களுக்கு குடி நீர்ப்பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த தலைவர்களால் இரணைமடு குளத்தில் நீர் பெற்று கொடுக்க முடியவில்லை. அது குறித்தும் அவர்களுக்கு ஒருவித அக்கறையும் இல்லை. சிறையில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களை பார்வையிட பெற்றோர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை இறந்த பின்பு ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கலாம் என்று அரசு பெற்றேர்களுக்கு ஆணவமாக பதில் கொடுக்கிறது. இதற்காக குரல் கொடுக்க இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை ராணுவம் சிறுமிகளைக்கூட பாலியல் வல்லுறவு செய்கிறது. பாதுகாப்பு இன்றி மக்கள் அல்லல் படுகின்றனர். இதற்காக சாதாரண மக்களே ராணுவத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அதில் பங்கெடுக்கக்கூட இந்த தலைவர்களுக்கு விரும்பம் வரவில்லை.ஆனால் எப்போது பார்த்தாலும் டில்லிக்கு விஜயம் செய்வதும், இந்திய அரசை தொடர்ந்தும் நம்பிக்கை நட்சத்திரமாக காட்டுவதுமென மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கின்றனர்.

தமது குடும்பத்தை இந்தியாவில் தங்கவைப்பதற்கும் அந்த குடும்பத்தை வாரம்தோறும் சென்று பார்ப்பதற்கு விசா பெறுவதற்காகவும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்திய பல்கலைக்கழகத்தில் சீட்டு பெறவும் இந்திய அரசிமிருந்து இரகசியமாக பணம் பெறுவதற்காகவும் தொடர்ந்து சொந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வரும் இந்த தலைவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்களது இந்திய விசுவாசம் இலங்கை தமிழர்களுக்கு இதுவரை எதையும் சாதிக்கவில்லை. இனியும் எதையும் சாதிக்கப் போவதில்லை. இவர்களால் தமக்கு சில சலுகைகளைப் பெறுவதை தவிர தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.

தமிழ்த்; தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் பகுதிகளில் எவ்வித எதிர்ப்பும் இன்றி இந்திய ஆக்கிரமிப்பை செய்ய முடியும் என இந்திய அரசு நம்பியிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு சாவுமணி அடித்தது சம்பூர் மக்களின் போராட்டம். தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்கள் மட்டுமன்றி வேடுவ இன மக்களும் ஒன்று சேர்ந்து போராடி சம்பூரில் இருந்து இந்திய ஆக்கிரமிப்பை விரட்டியடித்தார்கள். அதன்பின்பே இந்த மக்களின் ஒற்றுமையை குலைக்காவிடின் தனது ஆக்கிரமிப்பு யாவும் இழக்க வேண்டி வந்துவிடும் என்று இந்திய அரசு அஞ்சியது. அதனால் இந்த மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக இந்திய அரசு கையில் எடுத்த ஆயுதமே இந்துமதம்.

இந்திய உளவுப்படையானது இந்தியாவில் இருந்த தனது முகவரான ஈழத்தமிழர் சச்சிதானந்தம் என்பவரை “ஈழத்து சிவசேனை” என்னும் பெயருடன் இறக்கியது. அவரும் இந்திய உளவுப்படையின் விருப்பப்படி முதலில் மூதூர் பகுதிகளில் இந்து முஸ்லிம் மதத்தவரிடையே பிரிவினைகளை வளர்த்தார். ஆனால் பின்னர் மன்னாரில் கிருத்தவ இந்து மத தமிழரிடையே மோதல்களை உருவாக்க ஆரம்பித்தவிட்டார். எந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆசீர்வாதத்துடன் அவர் வந்தாரோ அதே  கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுமந்திரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை இப்போது கூற ஆரம்பித்து விட்டார். ஒருபுறம் யாழ் இந்திய தூதர் கோயில் புனரமைப்பு என பணம் கொடுக்கிறார். இந்தியாவில் இருந்து சாமிகளை வரவழைத்து இந்துமத மாநாடு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறார். மறுபுறம் சிவசேனை சச்சிதானந்தம் இந்து மதத்தின் பேரால் தமிழ் மக்களிடையே மோதல்களை உருவாக்கிறார்.

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் அதன் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா, ஜனாதிபதி மைத்திரி சிறிசேனா, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சா எல்லோரும் பௌத்தர்களாக இருந்தாலும் அடிக்கடி இந்தியாவுக்கு விஜயம் செய்து திருப்பதி இந்துக் கடவுளை வணங்குகின்றனர். ஆனால் இதே சிங்கள தலைவர்கள் இலங்கையில் தமிழ் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகளைக் கட்டுகிறார்கள். வடக்கு கிழக்கு முழுவதும் 2000 புத்த சிலைகளை நிறுவுவதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளனர். இதுகுறித்து மோடியின் யாழ் இந்திய தூதரோ அல்லது சிவசேனை சச்சிதானந்தமோ வாய் திறப்பதில்லை. மாறாக  இனவாத பௌத்த துறவிகளுடன் சேர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக கலவரங்களை உருவாக்குகின்றனர்.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஆபத்து என்னவெனில் தமது ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தவதற்காக மோடிஅரசு எந்த மட்டத்திற்கும் இறங்க தயாராகிவிட்டது என்பதே. கடந்த வருடம் இலங்கை ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவை கொல்ல முயற்சி ஒன்று நடந்தது. இந்த கொலை முயற்சியை செய்தவர்கள் இந்திய உளவுப்படையே என்று ஜனாதிபதி குற்றம் சாட்டியிருந்தார். இருந்தும் அவ் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர் ஓரிரு வாரங்களில் விடுதலை செய்யப்பட்டார். இந்திய அரசின் செல்வாக்கு காரணமாக இந்த வழக்கே மூடப்பட்டு விட்டது. அடுத்து உலகமே அதிர்ந்த குண்டு வெடிப்பு இலங்கையில் ஈஸ்டர் தினத்தில்; நடந்தது. அவ் வழக்கின் விசாரணையில் வெளிவரும் பல செய்திகள் இந்திய உளவுப்படையின் மீதே சந்தேகத்தை தருகின்றன. எனவே இந்த விசாரணைகளும் இந்திய அரசின் செல்வாக்கு காரணமாக விரைவில் மூடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடந்த மோடியின் ஆட்சிக்காலத்தில் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்சுமா சுவராஜ் . அப்போது அடிக்கடி தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் டில்லிக்கு சென்று அவரை சந்தித்தார்கள். ஒவ்வொருமுறையும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப் போகின்றது என்று இந்த தலைவர்கள் கூறிவந்தனர். இப்போது அந்த ஸ்சுமா சுவராஜ் அம்மையாரும் மரணமடைந்துவிட்டார். ஆனால் இவர்கள் கூறிய தீர்வு இன்னும் வரவில்லை. இம்முறை மீண்டும் மோடி பிரதமர் ஆனதும் மீண்டும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போகின்றது என்ற கதைகளை பரப்ப ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்றவகையில் மோடி அவர்களும் பதவி ஏற்பதற்கு முன்னர் மாலைதீவு வழியாக இலங்கைக்கும் 2 மணிநேர விசிட் அடித்தார். அப்போது இந்த தமிழ் தலைவர்களை இரண்டு நிமிடங்கள் சந்தித்து டில்லிக்கு வாருங்கள் விரிவாக பேசுவோம் என்று அழைப்பு விடுத்தார். இலவு காத்த கிளிகள் போன்று இந்த தலைவர்கள் மோடியின் அழைப்பு வரும் விமானம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் காஷ்மிர் முதல் தமிழ்நாடுவரை அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் மோடி அடக்கி வருகிறார். ஆனால் இந்தியாவில் தேசிய இனங்களை அடக்கும் மோடி இலங்கையில் தமிழ் தேசிய இனத்திற்கு விடுதலை பெற்று தருவார் என்று இந்த தலைவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதைவிடக் கொடுமை என்னவெனில் இந்துத் தமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று காசிஆனந்தன் போன்ற தலைவர்கள் நம்பி வருகின்றனர். மோடி பிரதமராக இருக்கும்வரை இந்த கொடுமைகள் இருக்கத்தான் போகின்றது. ஆனாலும் இந்திய மக்கள் மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் விரைவில் இந்த இந்துத்துவா மோடியை விரைவில் பதவியில் இருந்து விரட்டுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

No comments:

Post a Comment