Sunday, April 30, 2017

•மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் கல் எறிந்து பீரங்கிகளை தகர்ப்பார்கள் - பிடல் காஸ்ரோ

•மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால்
கல் எறிந்து பீரங்கிகளை தகர்ப்பார்கள் - பிடல் காஸ்ரோ
உலகில் நான்காவது மிகப் பெரிய ராணுவம் இந்திய ராணுவம் என்கிறார்கள்.
அந்த இந்திய ராணுவத்தை காஸ்மீர் மாணவிகள் கல் எறிந்து விரட்டியுள்ளார்கள்.
ஆம். மக்கள் போராடுவது என்று முடிவு எடுத்துவிட்டால் அது பாலஸ்தீனமாக இருந்தாலும் சரி அல்லது காஸ்மீராக இருந்தாலும் சரி எந்த பெரிய ராணுவம் முன் நின்றாலும் அஞ்ச மாட்டார்கள். கல்லால் எறிந்தே விரட்டியடிப்பார்கள்.
பாலஸ்தீனத்தில் சிறுவர்கள் இஸ்ரேலிய ராணுவத்தை கல் எறிந்து விரட்டிய போது ஆகா இதுவன்றோ சுதந்திர போராட்டம் என்று பாராட்டியவர்கள் காஸ்மீரில் மாணவிகள் கல் எறியும்போது அவர்களை தீவிரவாதிகள் என்கிறார்கள்.
கல் எறியும் மாணவிகளை தீவிரவாதிகள் என்று அழைக்கும் எச்.ராஜாவின் காவிக் கும்பல் கையில் கத்தி வாளுடன் அலைகிறது.
காஸ்மீர் பிரச்சனை என்பது வெறும் முஸ்லிம் பிரச்சனை என்றோ அல்லது எல்லை தாண்டிய பாகிஸ்தான் பயங்கரவாதம் என்றோ திசை திருப்புவது தவறு.
மாறாக அது அடக்கப்பட்ட காஸ்மீர் தேசிய இனத்தின் அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் என்பதே சரியானது.
இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் எந்தளவு நியாயம் உண்டோ அதைவிட அதிகளவு நியாயம் காஸ்மீர் மக்களின் போராட்டத்தில் உண்டு.
ஆனால் ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் சிலர் காஸ்மீர் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க மறுக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்திய அரசின் ஆதரவு தமக்கு வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழ் தலைவர்கள் பலர் காஸ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்க தயங்குகிறார்கள்.
ஆனால் காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் ஈழத் தமிழர்கள் தங்களை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு காஸ்மீர் மக்களின் முழு ஆதரவு உண்டு என்று கூறியிருக்கிறார்.
பொது எதிரியான இந்திய அரசுக்கு எதிராக காஸ்மீர் மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்துபோராட வேண்டும். இதன் மூலமே இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும்.

No comments:

Post a Comment