Sunday, April 30, 2017

மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.

•மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை.
•மக்கள் அமைதியை விரும்பினாலும் அரசு விடுவதில்லை.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 60 நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
கேப்பாப்பிலவு மக்கள் 51வது நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
பன்னங்கட்டி மக்கள் 34 நாட்களாக் போராடிக் கொண்டிருக்கிருக்கிறார்கள்.
முள்ளிக்குளத்தில் மக்கள் 31 நாட்களாக் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மறிசுக்கட்டியில் முஸ்லிம் மக்கள் 27 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் 45 நாட்களாகவும்,
மட்டக்களப்பில் 51 நாட்களாகவும்
திருகோணமலையில் 42 நாட்களாகவும்
அம்பாறையில் 45 நாட்களாகவும்; நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மக்கள் எப்போதும் அமைதியாக வாழ விரும்புபவர்கள். ஆனால் அரசு அவர்கள் மீது போராட்டத்தை திணிக்கிறது.
ஈழத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல மாதக் கணக்கில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உலகில் எல்லா இன மக்களும் வாழ்வதற்காக போராடுவார்கள். ஆனால் இலங்கையில் மட்டும் தமிழ் இனம் போராடுவதற்காக வாழ்கிறதோ என எண்ணும் அளவிற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
அடக்குமுறை இருக்குமட்டும் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்.
ஒடுக்குமுறை இருக்குமட்டும் அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்.
ஆக்கிரமிப்பு இருக்கும்வரை அதற்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும்
அதனால்தான் இலங்கையில்,
சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தமது விடுதலைக்காக போராடுகிறார்கள்.
நிலம் பறிக்கப்பட்டவர்கள் தமது நிலத்தை மீட்க போராடுகிறார்கள்.
இடம் பெயர்ந்தவர்கள் தமது மீள் குடியேற்றத்திற்காக போராடுகிறார்கள்.
காணாமல் போனவர்களின் உறவுகள் கண்டு பிடிக்குமாறு போராடுகிறார்கள்
இனப் படுகொலைக்கு எதிராக விசாரணை கோரி போராடுகிறார்கள்
யுத்தம் முடிந்து 7 வருடங்களாகி விட்டது. இன்னும்
சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படவில்லை
காணாமல்போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
மக்களின் சொந்த நிலங்கள் திருப்பி அளிக்கப்படவில்லை
எனவேதான் மக்கள் வேறு வழியின்றி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள்மீது போராட்டத்தை அரசு திணித்துள்ளது.
மக்களின் போராட்டம் நியாயமானது, அவசியமானது என்பதால்தான் உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஆதரவு நல்கிக் கொண்டிருக்கின்றனர்.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக தனிமனிதன் போராடினால் அவனை சமூகவிரோதி என்றும் கூட்டமாக போராடினால் தீவிரவாதிகள் என்றோ அல்லது பயங்கரவாதிகள் என்றோ அரசு முத்திரை குத்துகிறது.
அரசு ஒருபுறம் மக்கள்மீது அடக்குமுறையை புரிந்துகொண்டு மறுபுறத்தில் அதற்கு எதிராக போராடும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கிறது.
யுத்தம் முடிந்தால் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள். ஆனால் அவர்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் மாதக் கணக்கில் போராட்டம் நடத்த வைத்துள்ளார்கள்.
இந்த உண்மையை நாம் சுட்டிக்காட்டினால் லண்டனில் இருந்துகொண்டு போராட்டத்தை தூண்டிவிடுவதாக எம்மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
இந்த மக்கள் விரோத சக்திகளை தூக்கியெறியாதவரையில் மக்கள் ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது.

No comments:

Post a Comment