Friday, May 31, 2019

• புலவரை நினைவில் கொள்வோம்!

• புலவரை நினைவில் கொள்வோம்!
தோழர் புலவர் கலியபெருமாள் அவர்களின் 12 வது நினைவு தினம் 16.05.2019 ஆகும்.
புலவர் கலியபெருமாள் மாக்சிச லெனினிச மாவோயிச தத்துவ வழிகாட்டலில் புரட்சியை முன்னெடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதனால் அவரை மட்டுமன்றி அவரது மனைவி பிள்ளைகள் உறவினர்கள் பலரையும்கூட கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது தமிழக காவல்துறை. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் ஒரு முழு குடும்பத்தையே சிறையில் அடைக்கப்பட்டது என்றால் அது புலவர் குடும்பம் ஒன்று மட்டுமே. அதேபோல் நான் அறிந்தவரையில் தமிழகத்தில் பொலிஸ் தடையை மீறி மக்களே ஒன்றுதிரண்டு சென்று வயலில் விதைத்து அறுவடை செய்து கொடுத்ததும் புலவருக்கு மட்டுமே. தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை புலவர் வாழ்க்கையில் நாம் காணலாம்.
முதல் முறையாக எனது தோழர்களை அழைத்துக்கொண்டு புலவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எமது தோழர்கள் மார்க்சிச அரசியல் வகுப்புகள் எடுப்பதற்குரிய ஏற்பாட்டின்படி அவர்களை அழைத்துச் சென்றேன். புலவர் வீட்டிலேயே அனைவரும் தங்கினோம். எமக்கு மூன்று வேளைகளும் உணவு தயாரித்து தந்துகொண்டிருந்தனர் புலவரின் மனைவியும் மகள் மற்றும் மருமகள்மார். எங்கள் தோழர்களுக்கு பிடிக்கும் என்று புட்டு , இடியப்பம் செய்து தந்தது மட்டுமன்றி அவற்றுக்கு சம்பல், சொதி என்பனகூட எமது தோழர்களிடமே கேட்டு கேட்டு சமைத்து தந்ததை மறக்க முடியாது. அதுவும் புலவரின் மகள் கண்ணகி திருமணத்திற்கு முதல்நாள்கூட எமக்கு அக்கறையாக சாப்பாடு செய்து தந்ததையோ அல்லது திருமணத்திற்காக சென்னை செல்வதற்காக ரயில்நியைத்தில் அவர் நின்றபொழுதிலும் தன் தாயாரிடம் “சிரமம் பாராமல் தோழர்களுக்கு புட்டு செய்து கொடுங்க அம்மா” என்று கூறியதையோ எப்படி எம்மால் மறந்துவிட முடியும்?
இறுதிவரை ஈழத் தமிழரை உறுதியாக ஆதரித்த ஒரு தோழர். அவரை ஈழத் தமிழர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள்.
புலவர் குறித்து நான் எழுதிய கட்டுரையை; கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம்.

No comments:

Post a Comment