Friday, May 31, 2019

நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் ஓட்டத்தை நிறுத்திவிட்டால் உலகம் நம்மை பார்ப்பதை நிறுத்திவிடும்.
எனவேதான் நாம் ஓடுவதை நிறுத்துவதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை அரசு கைது செய்திருக்கிறது.
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை மாணவர்களும் தமிழ் மக்களும் அனுட்டிப்பதை தடுப்பதற்காகவே இதனை அரசு செய்திருக்கிறது.
எனவேதான் பிணையில் வெளிவரமுடியாத பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாணவர்களை கைது செய்திருக்கிறது.
இதில் கேவலம் என்னவென்றால் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்தை ஆதரித்த எம் தலைவர்கள் அச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.
மக்கள் இவர்களை நம்பும்வரையில் இவர்களும் இத்தகைய “சுத்துமாத்து”களை செய்துகொண்டே இருக்கப் போகிறார்கள்.
சீப்பை ஒளித்துவிட்டால் கலியாணத்தை நிறுத்திவிடலாம் என்று நம்புவதைப் போன்று மாணவர்களை கைது செய்துவிட்டால் தமிழ் மக்கள் மீண்டும் எழுந்துவிடுவதை தடுத்துவிட முடியும் என்று அரசு நம்புகிறது.
ஆனால் எந்தளவு அடக்குமுறை இருக்கிறதோ அந்தளவு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டமும் இருக்கும் என்ற வரலாற்று உண்மையை அரசு கவனிக்க மறந்துவிட்டது.
மாணவர்கள் எந்த தற்கொலைதாரிக்கும் அடைக்கலம் கொடுக்கவில்லை
மாணவர்கள் குண்டு வைத்தவர்களை ஆதரித்து உதவி செய்யவில்லை.
மாணவர்கள் குண்டு வைத்தவர்களுடன் எந்த வியாபாரமும் செய்யவில்லை.
மாணவர்களின் இடத்தில் இருந்து தோட்டா ரவைகளோ வாள்களோ கத்திகளோ எடுக்கப்படவில்லை.
எல்லாவற்றையும்விட, ரத்த ஆறு ஓடும் என்று மாணவர்கள் இதுவரை பேசியதும் இல்லை.
ஆனால் இத்தனையும் செய்த ஹிஸ்புல்லா, ரிசாத் போன்றவர்களை கைது செய்யாத அரசு மாணவர்களை கைது செய்திருக்கிறது
கேட்டால் 2005 ம் ஆண்டு வைத்த பிரபாகரன் படத்திற்கு இப்போது கைது செய்ததாக கூறுகிறது..
சரி அப்படியே பிரபாகரன் படம் வைத்திருந்தாலும் என்ன தவறு?
ரோகண விஜவீராவின் படத்தை விரும்பிய சிங்களவர்கள் வைத்திருக்க முடியும்.
ரோகன விஜயவீராவின் நினைவு நாளை விரும்பிய சிங்களவர்கள் கொண்டாட முடியும்.
ரோகண விஜயவீராவுக்கு சிங்களவர்கள் மாத்தறையில் சிலை வைத்து மரியாதை செய்ய முடியும்.
ஏன் ரோகண விஜயவீராவை புகழ்ந்து திரைப்படம்கூட எடுத்து இலங்கையில் திரையிட முடியும்.
ஆனால் பிரபாகரனை விரும்பும் தமிழ் மாணவர்கள் படம் வைத்திருக்க கூடாது.
இது என்ன நியாயம்?

No comments:

Post a Comment