Saturday, September 28, 2013

இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன்

• இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்ட தோழர் நெப்போலியன்

தோழர் நெப்போலியன் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். அவரது சொந்த பெயர் மனோகரன். அவர் முதலில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். அங்குதான் அவரது குள்ள உருவத்தையும் துடிப்பான செயற்பாட்டையும் பார்த்து அவருக்கு நெப்போலியன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

புலிகள் இயக்கம் இரண்டாகப் பிரிந்து பதியபாதை என்னும் பெயரில் இயங்கிய பிரிவுடன் தோழர் நெப்போலியன் செயற்பட்டார். பின்னர் புதிய பாதையில் இருந்து பிரிந்து தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் இயக்கத்தை ஆரம்பித்த தோழர்களில் ஒருவராக இருந்தார்.

“பேரவை” இயக்கம் மேற்கொண்ட சென்ரல்காம்ப் பொலிஸ் நிலைய தாக்குதல், களுவாஞ்சிக்குடி பொலிஸ் மீதான தாக்குதல் மற்றும் மாகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதல் யாவற்றிலும் தோழர் நெப்போலியன் முன் நின்று செயற்பட்டார்.
அவர் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவேளை இந்திய புரட்சிகர இயக்கங்களுடான உறவை மேற்கொண்டார். குறிப்பாக தோழர் தமிழரசனின் கட்சியினரின் பெண்ணாடம் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான ராணுவ பயிற்சிக்கு எற்பாடு செய்ததும் தோழர் நெப்போலியனே.

டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட போது எமது “பேரவை” இயக்கமும் புலிகளால் தடை செய்யப்பட்டது. தோழர் நெப்போலியன் புலிகளால் தேடப்பட்டதால் அவர் மட்டக்களப்பு சென்று அங்கு இயங்கினார். அங்கும் அவர் வந்தது தெரிந்து கொண்ட புலிகள் அவரைப் பிடிப்பதற்குமுயற்சி செய்தார்கள். எனவே வேறு வழியின்றி அவர் அங்கிருந்து சென்று மலையகத்தில் இயங்கினார்.

மலையகத்தில் மலையக விடுதலை முன்னனி என்ற பெயரில் இளைஞர்களை திரட்டினார். சில பண பறிப்பு நடவடிக்கைகளில் இறங்கினார். அதனால் அவர் பற்றி இலங்கை அரசுக்கு தெரிந்து அவர் மிகவும் கடுமையாக தேடப்பட்டார். இதனால் அவர் மலையகத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.

நாட்டில் நெப்போலியனுக்கு எற்பட்டிருக்கும் நெருக்கடிகளை அறிந்துகொண்ட தோழர் தமிழரசன் மிகவும் வருந்தினார். கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டில் வந்து தங்களுடன் இருக்கும்படி நெப்போலியனிடம் தெரிவிக்குமாறு அவர் பல தடவை என்னிடம் கோரினார். நெப்போலியன் தோழர் தமிழரசனுடன் நெருங்கிப் பழகியவர். நீண்ட நேரம் பல அரசியல் விடயங்கள் குறித்து விவாதம் செய்தவர். அதுமட்மல்ல தோழர் தமிழரசன் கட்சியினரின் ராணுவ தயாரிப்புகளுக்கு பல உதவிகள் செய்தவர். எனவே நெப்போலியன் தம்முடன் இருந்தால் அது பல வழிகளில் தமக்கு உதவியாக இருக்கும் எனவும் தோழர் தமிழரசன் கருதினார்.

இந் நிலையில் நெப்போலியன் வேறு வழியின்றி இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். எனவே மலையகத்தில் இருந்து கொழும்பு சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை வருவதற்கு நினைத்தார். ஆனால் கொழும்பு செல்லவும் அங்கு தங்கியிருந்து உரிய பயண எற்பாடுகளை செய்யவும் வசதியின்றி இருந்தார். இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட ஈரோஸ் இயக்கத்தினர் தாங்கள் உதவி செய்வதாகவும் தங்களுடன் வரும்படியும் அழைத்தனர்.

ஈரோஸ் இயக்கத்தால் தமக்கு எந்த ஆபத்தும் வராது என நம்பிய நெப்போலியன் அவர்களது உதவியை பெற்று இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். இதற்குரிய எல்லா ஒழுங்குகளையும் செய்துவிட்டு மலையகத்தில் இருந்த தனது சகோதரியை சந்தித்து இந்த விபரங்களை தெரிவித்தள்ளார். அவரது சகோதரி ஈரோஸ் இயக்கத்துடன் செல்ல வேண்டாம் என்றும் தானே கொழும்புக்கு அழைத்து செல்வதாகவும் கேட்டிருக்கிறார். தன்னால் தனது சகோதரிக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்று எண்ணிய நெப்போலியன் அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டார்.

நெப்போலியன் இறுதியாக தனது சகோதரியை சந்தித்து தான் ஈரோசுடன் செல்லவிருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் மலையக தோழர்கள் இருவர் நெப்போலியனை கூட்டிச் சென்று ஈரோஸ் இயக்க உறுப்பினர்களிடம் ஒப்படைத்ததை பின்னர் என்னிடம் கொழும்பில் உறுதிப்படுத்தினர்.

ஈரோஸ் உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட தோழர் நெப்போலியன் கயிற்றால் கட்டி சித்திரவதை செய்யப்பட்டதாகவும் கல்லால் அவரது தலை அடித்து சிதைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் பின்னர் அவரது உடல் ஆற்றில் வீசப்பட்டதாகவும் நாம் அறிந்தோம்.

இலங்கை ராணுவம் கொன்ற போராளிகளின் உடல்களை மரியாதை செய்யவில்லை என்று நாம் கூறுகிறோம். ஆனால் மாக்சிய இயக்கம் என்று அழைக்கப்பட்ட ஈரோஸ் இயக்கம் ஒரு சக போராளியை கொன்றதுமல்லாமல் உடலை ஆற்றில் வீசி எறிந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?

தோழர் நெப்பொலியன் ஒரு மகத்தான தோழர். அவர் மக்களை நேசித்தார். இறுதிவரை மக்களுக்காகவே போராடினார். ஆனால் இந்திய எதிரியானது சூழ்ச்சி செய்து தனது கைக்கூலி இயக்கமான ஈரோஸ் மூலம் அவரை கொன்றுவிட்டது.

தோழர் நெப்போலியன் சகோதரர் செல்வநாயகம் என்று அழைக்கப்பட்ட மகேந்திரன். அவரும் பேரவை இயக்கத்தில் செயற்பட்டவர். அவர் பல்கலைக்கழக படிப்பை பாதியில் கைவிட்டு இயக்கத்தில் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு டிரைக்டர் வண்டியில் உணவு கொண்டு செல்லும்போது நெடுங்கேணி என்னும் இடத்தில் இந்திய விமான குண்டு வீச்சில் பலியானவர்.

No comments:

Post a Comment