Tuesday, September 10, 2013

தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாதே!

• துபாயில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பாதே!

• பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயலும் ஜ.நா தீர்மானத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்!

பிரித்தானியா தமிழ் அகதிகளை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்புகிறது. அவுஸ்ரேலியாவும் திருப்பி அனுப்புகிறது. இந்தியாவும் திருப்பி அனுப்ப முயல்கிறது. தற்போது அதே வரிசையில் துபாயில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை திருப்பி அனுப்ப ஜ.நா முயல்கிறது.

இலங்கையில் தற்போது போர் இல்லை என்பது உண்மைதான். தற்போது குண்டு சத்தங்கள் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் இதெல்லாம் இலங்கையில் அமைதி உள்ளது என்பதன் அர்த்தம் அல்ல. இன்றும்கூட மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜ.நா மனிதஉரிமை தலைவர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு எதேச்சதிகாரமாக நடக்கிறது என இலங்கையில் வைத்து கூறியுள்ளார். ஆனால் அதே ஜ.நா இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது எனக்கூறி துபாயில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை திருப்பி அனுப்ப முயல்கிறது.

“இலங்கை நட்பு நாடு அல்ல என்று அறிவிக்க வேண்டும். இலங்கையில் நடக்கும் மாநாடுக்கு பிரதமர் மன்மோகன்சிங் செல்லக்கூடாது” என்று முதலமைச்சர் ஜெயா அம்மையார் கோருகிறார். அனால் அதேவேளையில் அகதிகள் 3 பேரை பலவந்தமாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப அவரது அரசு முயற்சி செய்கிறது. இது என்ன நியாயம்?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்ப கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அதற்கு மாறாக தமிழக அரசு செயற்படுகிறது. தமிழக அரசின் இந்த இரட்டை வேடத்தை தட்டிக் கேட்க வேண்டிய கலைஞர் இதுபற்றி வாய் திறக்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையில் மனித உரிமைக்காக குரல் கொடுப்போர் வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள். நியாயம் கேட்போர் அது டாக்டராக இருந்தாலும் “மெண்டல்” எனக்கூறி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மர்ம கொலைகள் தொடருகின்றது. ராணுவத்தால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாவது அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன. இவ்வாறு ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிவையில் அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்புவது மிகவும் தவறானது. வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த கொடுமைகளுக்கு எதிராக , ஜ.நா வின் அநியாயத்திற்கு எதிராக , இந்திய அரசுகளின் தவறுகளுக்கு எதிராக மனிதாபிமான உணர்வுள்ளவர்கள் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும்.

அகதிகளை அடைத்து வைக்காதே!
அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்பாதே!

No comments:

Post a Comment