Wednesday, July 24, 2013

கலைஞரின் இந்த மாற்றம் ஏன்?

கலைஞரின் இந்த மாற்றம் ஏன்?

கலைஞர் எப்போதும் எதிர்கட்சியாக இருக்கும்போது இலங்கை இனப்பிரச்சனைக்கு தமிழீழமே சிறந்த தீர்வு என்பார். ஆனால் ஆளும் கட்சியாக ஆட்சிக்கட்டிலில் இருக்கும்போது மத்தியஅரசின் கொள்கையே தனது கொள்கை என்பார். அவ்வேளைகளில் தமிழீழத்தை வலியுறுத்தமாட்டார். ஆனால் முதல் முறையாக தற்போது எதிர்கட்சியாக இருக்கும்போது மகாணசபை தீர்வை அமுல்படுத்தும்படி கோரியுள்ளார்.

தனது “டெசோ” அமைப்பின் மூலம் இதுவரை தமிழீழமே சிறந்த தீர்வு என்று வலியுறுத்தி வந்த அவர் தற்போது தேர்தல் வருகின்ற நிலையிலும் கூட 13வது திருத்த சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும் எனக் கோரியிருப்பது நிச்சயமாக ஆச்சரியமானது. அவர் ஏன் அவ்வாறு கோரினார் என்பது தெரியாவிடினும் அதனைக்கூட அமுல்படுத்த இலங்கை இந்திய அரசுகள் தயார் இல்லை என்பதே அவருக்கு ஏமாற்றம் தரும் பதிலாக இருக்கின்றது.

புலிகள் இருந்தபோது சமாதானத்திற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்றார்கள். இப்போது புலிகள் அழிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்பட வில்லை. மாறாக எற்கனவே வழங்கப்பட்ட தீர்வுகளில் உள்ள உரிமைகளைக்கூட பறிக்க முயலுகின்றனர். உதாரணமாக மாகாண சபைக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க இலங்கை அரசு முயல்கிறது. இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இந்திய அரசு கள்ள மௌனம் சாதிக்கின்றது.

இலங்கையில் தமிழ்மக்கள் நீண்ட காலமாக பாரம்பரியமாக வாழ்ந்து வருவதும் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் இலங்கை இந்திய அரசுகள் ஏற்க மறுக்கின்றமையே இதுவரை இப் பிரச்சனை தீர்க்கப்பட முடியாமைக்கான முக்கிய காரணமாகும். இதை முதலில் கலைஞர் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை இந்திய அரசுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. எனவே இவ் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதானது சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சாதி மத மொழி வேறுபாடுகளின்றி புரட்சிகர சக்திகளை ஒன்று திரட்டுவதை வேண்டி நிற்கும் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகும்.

No comments:

Post a Comment