Wednesday, July 24, 2013

இளவரசர் பிறந்ததையிட்டு இங்கிலாந்து மக்கள் மகிழ்கிறார்களா?

இளவரசர் பிறந்ததையிட்டு
இங்கிலாந்து மக்கள் மகிழ்கிறார்களா?

மாட்டு தொழுவத்தில் யேசு குமாரன் பிறக்கவில்லை. மாறாக பக்கிங்காம் மாளிகையில் இராச குமாரன் பிறந்துள்ளான். ஆம், இங்கிலாந்து அரச பரம்பரையில் இன்னொரு இளவரசர் பிறந்துள்ளார். இதையிட்டு இங்கிலாந்து மக்கள் பெரும் மகிழ்வு கொண்டிருப்பதாக பி.பி.சி டெலிவிசன் உட்பட பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. ஆனால் இவ் முதலாளித்துவ ஊடகங்கள் வழக்கம்போல் உண்மையை மறைத்துவிட்டன.

பிறந்துள்ள இளவரசர் மற்ற சாதாரண மக்கள் போல் வேலைக்கு செல்ல வேண்டும் என பெரும்பாலான மக்கள் தெரிவித்திருக்கும் அபிப்பிராயம் மறைக்கப்பட்டுள்ளது. மக்கள் அரச பரம்பரையை விரும்பவில்லை என்பது பல முறை கருத்து கணிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இருந்தும் முதலாளித்துவத்தைக் காட்டிக்காக்க விரும்பும் ஊடகங்கள் மக்கள் மகிழ்வு கொண்டிருப்பதாக செய்திகளை வெளியிடுகின்றன.

இங்கிலாந்தில் என்றுமில்லாதவாறு வேலையில்லாப் பிரச்சனை தோன்றியுள்ளது. வேலை கிடைத்தாலும் உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் நிறுத்தப்படுகின்றன. அரச சேவைகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. தற்போது அஞ்சல் சேவையும் தனியாருக்கு விற்கப்படவுள்ளது. மத்திய லண்டனில் வசிக்கும் வறிய மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை உதவிப்பணம் நிறுத்தப்படுகிறது. அவ் மக்கள் லண்டனை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர. மத்திய லண்டன் பணக்காரர்களுக்கு மட்டுமே என அரசு வெளிப்படையாகவே அறிவுறுத்துகிறது. இந் நிலையில் இளவரசர் பிறந்ததற்காக மக்கள் எப்படி மகிழ்வு கொள்ள முடியும்?

கடந்த வருடம் ராணியின் பொன்விழா ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் விசனப்பட்டபோது இவ் விழாக்களினால் வியாபாரம் பெருகும் என்று அரசு “ரீல்” விட்டது. ஆனால் இவ் விழாக்களின்போது வழக்கமாக நடக்கும் வியாபாரம் கூட நடக்கவில்லை என வியாபாரிகள் புலம்பினார்கள். ஆனால் அரசு இது குறித்து மூச்சு விடவில்லை.

இங்கிலாந்து மக்களின் நிலை இது என்றால் இலங்கை தமிழர் நிலையே இதைவிட துன்பமானது. ஆனால் சில இலங்கை தமிழர் இதை மறந்து தாம் மகிழ்வு கொள்வதாக தமது அடிமை விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

தற்போது 83ம் ஆண்டு யூலை படுகொலை நினைவு கூரப்படுகிறது. இந்த படுகொலைகளுக்கோ அல்லது இதற்கு பின்னர் நடந்த படுகொலைகளுக்கோ பிரித்தானிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்படுவதற்கு இவ் பிரித்தானிய மன்னர் ஆட்சியும் ஒரு காரணம். ஏனெனில் சுதந்திரம் வழங்கப்படும்போது தமிழர்களின் கோரிக்கைள் இவ் மன்னர் ஆட்சியினால் பரிசீலிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை இனவெறி அரசினால் பாதிக்கபட்டு அகதியாக வரும் தமிழர்களையும் முழுமையாக எற்கவில்லை. கடந்தவாரம் கூட இரு தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

எனவே இந் நிலையில் எந்த ஒரு சுயமரியாதை உள்ள தமிழனாலும் இளவரசர் பிறப்பிற்காக மகிழ்வு கொண்டாட முடியாது. மீறி மகிழ்வு தெரிவிப்பவர்கள் தமது இனத்தின் அவல நிலை குறித்து கவலை கொள்ளவில்லை என்றே அரத்தமாகும்.

No comments:

Post a Comment